சிகாகோவில் தமிழ் மாநாடு : மறுபடியும் பழமைக்குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவோம்.

This entry is part [part not set] of 22 in the series 20020714_Issue

குறும்புக் குகநாதன்


சிகாகோவில் 2002ம் ஆண்டு, சூலை 4,, 5, 6 தேதிகளில் தமிழ் மாநாடு இனிதே நடந்தேறியது. குஷ்பூ, சத்யராஜ் சகிதம் பி சுசீலா, டி எம் எஸ் குழுவினரும், கனடாவின் ‘அக்னி ‘ இசைக் குழுவினரும் (சராசரி வயது 15) டி கே எஸ் கலைவாணனும், வைகோவும், சர:ளா ராஜகோபாலனின் ‘சிலப்பதிகாரம் ‘ இசை நாடகமும் என்று பலசுவைக் கலை நிகழச்சிகளும் என்று கலவையாய் ஒரு நிகழ்ச்சி. பல்வேறு சுவை கொண்டவர்களைத் திருப்திப் படுத்த வேண்டியது முக்கியம் என்று கருதுவது தவறில்லை தான்.

எதிர்பார்த்த அளவு மக்கள் வரவில்லை என்று தான் சொல்லவேண்டும். நிகழ்ச்சி அமைப்புகளில் எல்லாத் தமிழ் மக்களையும் அணைத்துச் செல்லாவண்ணம் ஒரு சாய்வு இருந்தது இதற்குக் காரனமாய் இருந்திருக்கலாம்.

ஒரு விஷயத்தில் இவர்களை மிக மிகப் பாராட்ட வேண்டும். எல்லா நிகழ்ச்சிகளும் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி குறிப்பிட்ட நேரத்தில் முடிந்தது. அறிவிக்கப் படாத நிகழ்ச்சிகள் தவிர்க்கப் பட்டன. இது தமிழ் விழாக்களிலிருந்து முற்றும் மாறுபட்ட ஒன்று. வழக்கமாய் நேரத்திற்கு ஆரம்பிக்காமல், பத்து நிமிட நிகழ்ச்சிகள் அரைமணி நேரத்திற்கு நீண்டு, மைக்கைப் பிடித்தவர்கள் ‘உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன் ‘ என்று வழவழவென்று பேசுவது தவிர்க்கப் பட்டது. அழைக்கப் பட்டவர்களும், அறிவிக்கப் பட்டவர்களும் மட்டுமே பேசினார்கள்.

மாட்சிமை விருது இருவருக்கு வழங்கப் பட்டது. இந்த மாட்சிமை விருது வழங்குவதற்கு என்ன வழிமுறைகள் உள்ளன, எல்லா தமிழ்ச்சங்கங்களிலிருந்தும் யோசனைகள் தருவிக்கப் பட்டனவா அல்லது சும்மாவேனும் யாரோ ஒருவர் இந்த ஆளுக்குக் கொடுக்கலாம் என்று யோசனை தெரிவித்து அதன் படி ‘கொடுத்தால் போச்சு ‘ என்று கொடுக்கப் பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெருங்கவிக்கோ என்று தன்னை அழைத்துக் கொள்ளும் வா மு சேதுராமன் என்பவருக்கு ஏன் கொடுக்கப் பட்டது ? இவர் தமிழுக்குச் செய்த பங்களிப்பு என்ன ? அசலான புலமை இவருக்கு உண்டா ? தமிழ் வாழ்க என்று ஆயிரம் தடவை இம்போசிஷன் எழுதிவிட்டால் அவருக்கு மாட்சிமை பரிசு கொடுத்து விடலாமா ? என்ன மாட்சிமைச் செயலை இவர் செய்தார் ? அமெரிக்கா வந்திருந்த போது கண்ணில் பட்டவர்கள் மீதெல்லாம் வெண்பா எழுதிச் சிறப்புச் செய்ததற்குப் (காக்கா பிடித்ததற்கு என்றும் சொல்லலாம்) பிரதி பலன் போலும் இது.

மதிவாணனுக்கு ஏன் கொடுக்கப் பட்டது ? இவர் தேவநேயப் பாவாணரின் மாணவராம். திறமையான புலமையெனில் அது சான்றுகளைத் தேடி நிறுவுகிற பாரபட்சமற்ற ஒரு முறையில் இயங்க வேண்டும். இவர் சிந்து சமவெளி நாகரிகம் தமிழ்ப் பண்பாடே என்று நிறுவும் ஒரு நூலை எழுதியுள்ளார். சிந்துசமவெளி நாகரிகம் பற்றி நடந்த அனைத்து ஆய்வுகளும் மீள் ஆய்வு செய்யப் பட்டல்லவா இந்த முடிவை எய்தியிருக்க வேண்டும் ? இந்த ஆய்வுக்கு உலக ஆய்வாளர்கள் நடுவில் என்ன மரியாதை இருக்கிறது ? ஏற்கனவே நவரத்ன ராஜாராம் என்பவர் இப்படி ஆய்வு செய்து, ஹரப்பாவின் முத்திரைகளில் குதிரை உண்டு எனவே ஆரிய நாகரிகம் தான் அது என்று ஆர் எஸ் எஸ் காரர்களுக்கு வெறியேற்றியதற்காக, ஆய்வுலகில் பெரிதும் விமர்சிக்ப்பட்டார். மதிவாணன் புத்தகத்தை அப்படிக் கூட யாரும் விமர்சிக்க முன்வரவில்லை. இதற்குப் பெயர் ஆய்வா ? ஆய்வு என்பது அடையப் போகும் முடிவுகளைக் கையில் வைத்துக் கொண்டு அதற்கேற்ப தம் ஆய்வுகளைக் கத்தரிப்பதா ? இப்படிப்பட்ட ஆய்வுக் கேலிக்கூத்துகளுக்கு மரியாதை தருகிற ஆட்கள் உலகிலேயே தமிழில் தான் இருக்கிறார்கள். இப்படிப் பட்ட ஆட்களால் , தமிழில் மற்றவர்களால் செய்யப் படும் சீரிய ஆய்வுகளுக்குக் கூட மரியாதை இல்லாமல் போய்விடுகிறது. தமிழ் ஆய்வா சரி அப்படித் தான் இருக்கும் என்ற ஒரு மெத்தனத்தை , உலகின் ஆய்வாளர்களிடையே தோற்றுவிக்க இது ஒரு காரணமாகி விடுகிறது.

தமிழுக்கு இது போன்ற ஆய்வுகளும் , இவர் போன்ற தமிழை வளர்க்கிற ஆட்களும் தேவையில்லை. தமிழ் மொழியில் மிகச் சிறப்பான ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வெறுமே தமிழுக்கு ஜே போட்டுவிட்டு குப்பைகளை எழுதிவிட்டு விருது வாங்குபவர்கள் அல்ல.

சிலப்பதிகாரம் நாட்டிய நாடகம் நடைபெற்றது. முரளிதரன், சரளா ராஜகோபாலன் இயக்கத்தில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது இந்த நாட்டிய நாடகம். அமைப்பும் நடனமுறைகளும் சிறப்பாகத் தான் இருந்தன. கண்ணகி சிலை அகற்றப் பட்டதிற்கு கண்டனம் தெரிவிக்கும் முறையில் இந்த சிலப்பதிகார நாடகம் தேர்வு செய்யப் பட்டிருக்கவெண்டும். ஆனால் நாட்டிய நாடகம் பழைய பாணியில் தான் இருந்தது.

வழக்குரைஞர் அருள் மொழி பேசினார். ( பெண்ணுரிமைப் பேரொளியாம் – பட்டங்கள் வாரி வழங்கத்தயாராய் உள்ள தமிழ்நாட்டில் கேட்கவா வேண்டும் ?) அவருக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு தேவநேயப் பாவாணரும் பெண்ணியமும் என்பதாகும். நல்ல வேளையாக, பாவாணர் பெண்ணுரிமைக் காவலர் என்றெல்லாம் பொய் பேசத் தயாரில்லை அருள்மொழி. ஆனால் பாவாணர் தமிழின் தொன்மையை நிறுவினார் அதனால் பாராட்டத் தக்கவர் என்று பேசினார். ஞாபகமாக பார்ப்பனர்களையும், குஜராத்திகளையும், மார்வாடிகளையும் திட்டினார். கன்னடர்களையும், தெலுங்கர்களையும் வம்புக்கு இழுக்கவில்லை. காரணம் இருக்கிறது. இவருடைய குருநாதர் வீரமணியின் அபிமான நட்சத்திரம் ஜெயலலிதா ஆயிற்றே. அதில்லாமல் வைகோ இந்த மாநாட்டில் பேச அழைக்கப் பட்டிருந்தார். Soft Targets என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் பிராமணர்களும், மார்வாடிகளும் தாக்குதலுக்கும் விமர்சிக்கவும் மிக மிகச் சுலபமான குறியீடுகள். ஆனால் இந்தப் போலிப் புரட்சியாளர்கள் தலித் மக்களுக்குக் குரல் கொடுக்க வேண்டி தேவர் , வன்னியர் போன்றவர்கள் தலித் மக்கள் மீது செலுத்தும் அநீதியைக் கண்டால் மட்டும் வாய்மூடி மெளனியாகிவிடுவார்கள். பெண்ணுரிமைப் பேரொளிக்கு பெண் விடுதலையின் அடிப்படையே புரியவில்லை என்பது வருந்தத்தக்க விஷயம். பெண்ணுரிமையும், இனவாதமும் ஒன்றுக்கொன்று எதிரானவை. இனவாதி பெண்விடுதலைப் போராளி ஆக முடியாது. இனவாதமும் , பெண்ணியமும் ஒன்றுக்கொன்று முரணானவை. நான் பெண்விடுதலை வேண்டுகிறேன் என்று சொல்லிக் கொண்டு கூடவே இனவாதத்தின் விஷத்தைப் பரப்புகிறவர்கள் பொய்யர்களே. எல்லா இனவெறியர்களுக்கும் தம்முடைய இனவாதம் நியாயமானதாகத் தான் தோன்றும். ஹிட்லரின் எழுச்சி கூட ஆரிய-ஜெர்மானிய இன எழுச்சியைச் சார்ந்ததே.

கா சிவத்தம்பி பேசினார். உடல் நிலைக் குறைவையும் கூடப் பொருட்படுத்தாது தம்முடைய கருத்துகளை மக்களுடன் பகிர்ந்து கொண்டார் சிவத்தம்பி. இந்த மாநாட்டின் உருப்படியான விஷயம் என்று இதைத்தான் சொல்லவேண்டும். வீரதீர முழக்கங்களிடையே, ஆய்வுப் பொறுப்பு மிக்க பேச்சு சிவத்தம்பியுடையது. காலந்தோறும் தமிழ் இலக்கியமும் வாழ்வும் ஒன்றுக்கொன்று பிணைந்திருந்ததனை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி வள்ளலாரை மறு பார்வை பார்க்க வேண்டும் என்று இந்தப் பேச்சுக் கோரியது.

அரிஸ்டாடில் என்ற இளைஞர் ‘உலகமயமாதலில் தமிழ் நாடு ‘ என்று சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். உலக மயமாக்கும் பொறுப்பை மானில அரசுகள் மேற்கொள்ளும் போது மற்ற மானிலங்களுடன் போட்டி போடுவதற்காக, தம்முடைய மானிலத்தின் குறைந்தபட்ச சம்பளம், தொழிலாளர் உரிமை, மாசுப் பரப்புதல் போன்றவற்றில் கவன் செலுத்தாமல் இருப்பதன் தீமையை விளக்கினார்.

பி சுசீலா, டி எம் செளந்தர்ராஜன் பாட்டுகள் பழைய பாட்டுகள் என்றால் புதிய பாடல்கள் அக்னி குழுவினரால் வழங்கப்பட்டன. சத்யராஜ் நடிகர் என்ற பந்தா இல்லாமல் சரளமாய்த் தன்னைத் தானே பரிகசிக்கும் படி , தன்னுடைய வழுக்கையை கிண்டல் செய்தவாறு, மக்களுடன் கலந்து பழகினார். குஷ்பூ வந்தது ஏன் என்று தெரியவில்லை. இந்த அம்மாவுக்க்ப் பாவம் தன் குழந்தையைப் பார்த்துக் கொள்ளவே நேரம் போதவில்லை.

ராஜராஜ சோழன் நாடகம் போன்ற நாடகங்களைத் தாண்டி, நிஜ நாடக இயக்கம், வீதி நாடகங்கள், பெண்குரல்களைப் பிரதிபலிக்கும் நாடகங்கள், பரீக்ஷா குழுவினரின் நாடகங்கள், யதார்த்த நாடகங்கள் என்று 30 வருடமாய் தமிழில் நடந்துவரும் எண்ணற்ற முயற்சிகளைப் பற்றிய அறியாமை தான் இந்த நாடகத்தில் வெளிப்பட்டது. சிறப்பான நடிப்பும், வசன உச்சரிப்பும் இருந்தது என்றாலும், சரித்திரத்தைத் திரிக்கும் முயற்சி தான் இது. ராஜ ராஜ சோழன் காலத்தில் ‘சுய நிர்ணய உரிமை ‘ என்ற வார்த்தைத் தொடர் எல்லாம் இருந்த பிரமையை ஏன் இவர்கள் உண்டு பண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை. டி கே எஸ் கலைவாணனின் இசைப் பயிற்சி சிறப்பானது. அதை அடிப்படையாய்க் கொண்டு இப்படி நவீனத்துவமற்ற ஆக்கங்களை அவர் தவிர்க்க வேண்டும்.

நவீன உலகில் தமிழ் மற்றும் தமிழனின் இடத்தை உறுதி செய்யும் பொறுப்புள்ள அமெரிக்கத் தமிழர்கள் , தாம் தமிழ் நாட்டில் கொண்டிருந்த தவறான பார்வைகளையே உலகு முழுக்கப் பரப்பிக் கொண்டிருப்பது வருத்தமும் கோபமும் அளிக்கிறது.

***

Series Navigation

குறும்புக் குகநாதன்

குறும்புக் குகநாதன்