கிருஸ்தவ மன்னிப்புக் கோரல் : பாசாங்கும் பம்மாத்தும்

This entry is part [part not set] of 23 in the series 20020602_Issue

ஜான் ஈ ஹில்


(செக்யூலர் ஹ்யூமனிஸ்ட் மலர் 15 இதழ் 3)

கிருஸ்தவ மதப் போக்கில் இப்போதைய போக்கு மன்னிப்புக் கோருவது. சமரசம் தேடி நடைப்பயணம் மேற்கொள்கிறார்கள். 1700 வருடங்களாக சர்ச் நிகழ்த்திய எண்ணற்ற படுகொலைகள், அடக்குமுறை, சித்திரவதையை எல்லாம், உதட்டளவில் ஒரு மன்னிப்புக் கேட்டுவிட்டால் எல்லாம் காற்றில் கலந்து மறைட்ந்து விடும் என்பது இவர்களின் எதிர்பார்ப்புப் போல. சமீபத்திய மன்னிப்பு முஸ்லீம்களை நோக்கி. மத்திய காலத்தில் புனித நிலம் என்று கிறுஸ்தவர்கள் கருதிய நிலத்தை மீட்டெடுக்க முஸ்லீம்களுடன் நடத்திய சிலுவைப் போருக்கானது. பொதுவாக கத்தோலிக்க மதம் தான் இப்படி மன்னிப்புக் கேட்பதையும் தவறுகளை ஒப்புக் கொள்வதையும் வழமையாய்க் கொண்டுள்ளது. இப்போது மற்ற கிறுஸ்தவப் பிரிவுகளும் இப்படி மன்னிப்புக் கேட்க ஆரம்பித்து விட்டன.

கடந்த காலத்தின் தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்பது பாராட்டத் தக்கது தான் எனினும், இப்படி மன்னிப்புக் கோருகிறவர்கள் , மனிதகுலம் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு , கிருஸ்தவம் தம்முடைய மதக் கோட்பாடுகளை மற்றவர்கள் மீது திணித்ததை மறந்துவிடவேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இதில் பிரசினை என்னவென்றால் இப்படி மன்னிப்புக் கேட்கும் போது, இதற்கான தவறை மற்றவர்கள் மீது சார்த்திவிட்டு, இவர்கள் ஒதுங்கிக் கொள்கிறார்கள். தாமாக முன்வந்து இந்தத் தவறுகளுக்குப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்குப் பதில், இப்படிப் பட்ட தவறுகள் இனி நடக்காமல் பொறுப்பு மேற்கொள்ள வேண்டிய இவர்கள், தெய்வீக நிர்வாகத்தில் ஏற்பட்ட கோளாறுதான் இந்த சோகச் சரிதத்தின் காரணம் என்கிறார்கள்.

மூன்று நொண்டிச் சாக்குகள் முக்கியமாய்ச் சொல்லப் படுகின்றன : 1. இப்படிக் குற்றம் புரிந்தவர்கள் உண்மையான ஆகமத்தின் கோட்பாடுகளை மறந்துவிட்டு, சுய நலத்திற்காக இவற்றைத் திரித்துக் கூறினார்கள் என்பது. 2. சைத்தான் தான் கடவுளின் பெயரினைப் பயன்படுத்தி இப்படி பாவச் செயல்களுக்குக் காரணம் ஆனான் என்பது. 3. அவர்கள் உண்மையான கிருஸ்தவர்கள் அல்ல என்பது. இந்த மூன்று சாக்குகளும் பெரும்பொய்.

இப்படிக் குற்றம் புரிந்தவர்கள் வேத ஆகமத்தின் உண்மையான கருத்தினாலும், செயல்களினாலும் வழிகாட்டப் பட்டவர்களாய்த் தம்மை உணர்ந்தது மட்டுமல்ல, தம் கொடுஞ்செயல்கள் நேர்மையும், மதிப்பும், உண்மையான நீதியும் கொண்டவை என்று விவிலியத்தை மேற்கோள்காட்டி நம்பினார்கள். விவிலியத்தில் சொல்லப் பட்டதை முழுக்கப் பின்பற்றும் முறையில், தீர்க்கமாய் , தெய்வத்தின் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டி, இந்த பூமியைச் சுத்திகரிக்கும் பொருட்டு, நாத்திகர்களையும், கேள்வி கேட்பவர்களையும், விக்கிரக வழிபாட்டாளர்களையும், அறிவினைப் பரப்புபவர்களையும் வேட்டையாடினார்கள்.

சைத்தானின் செயல் இதுவெனில், கடவுளின் திருச்சபையைப் பயன்படுத்தி சைத்தான் பெற்ற பெருவெற்றி இதுவெனக்காண வேண்டும். இப்படி நகைப்புக்கிடமான – விசித்திரமான ஒரு காரணத்தைக் காட்டித் தம் செயல்களை நியாயப் படுத்த கிருஸ்தவர்களால் மட்டுமே முடியும். சைத்தான் இது போன்று மீண்டும் செய்யமாட்டான் என்பது எப்படி நிச்சயம் ? இந்த மன்னிப்புக் கேட்பது சைத்தான் அல்ல என்று நமக்கு எப்படித் தெரியும் ? இந்த மாதிரி ஒரு காரணத்தைச் சொன்னதற்காகவே திருச்சபை மீண்டும் மன்னிப்புக் கோர வேண்டும்.

இப்படி அட்டூழியம் பண்ணியவர்கள் உண்மையான கிருஸ்தவர்கள் இல்லை என்பது கேலிக்கூத்தான ஒரு வாதம். இப்படிப் பட்ட வாதம் மீண்டும் மீண்டும் எழுகிறது. இந்த கேலிக் கூத்து சரியென்றால் , தெய்வ நிந்தனை இன்று குற்றமல்ல, கடவுள் நம்பிக்கையின்மை குற்றமல்ல, சூனியக்காரர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்வதும் சட்டப் படி குற்றமல்ல. இவை குற்றமெனச் சட்டம் ஏற்பட்டால், கருணை கொண்ட கிருஸ்தவம் மீண்டும் கொடூர முகத்தை மேற்கொண்டு, புனித நீதி வழங்கும் விசாரணைகளை மேற்கொள்ளும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். ஈரான், ஆஃகானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளி நடைபெறும் அக்கிரமங்களைப் பார்க்கும் போது, இப்படி மீண்டும் இந்த உலகில் நடக்காது என்று நம்ப முடியாது. வலதுசாரி கிருஸ்தவ இயக்கங்களும் அச்சம் தருபவையே. இவர்கள் தாமே சரியான கிருஸ்தவ வழியில் செல்கிறோம் என்று நம்புகிறார்கள். இது ஒரே குழப்பமானது. உண்மையான் கிருஸ்தவர்கள், போலியான கிருஸ்தவர்கள் என்று இரண்டு சாரார் இருக்கிறார்கள் போலிருக்கிறது. இந்தப் பிரிவினை பற்றிச் சொல்பவர்கள் தான் உண்மையான கிருஸ்தவர்கள் போலும்.

பல ‘உண்மையான் ‘ கிருஸ்தவர்கள் திருச்சபையின் பழைய குற்றங்களை இப்போதும் குற்றமென ஒப்புக் கொள்வதில்லை என்பதைப் பார்க்கும் போது, இந்த பிரிவு எப்போதும் இருக்கும் என்று தோன்றுகிறது.இதனாலேயே, நிபந்தனையற்ற, திட்டவட்டமான ஒரு மன்னிப்புக் கோரலை , எல்லா கிருஸ்தவர்களும் இணைந்து நமக்கு அளிக்கப் போவதில்லை. இந்த இழிசெயல்களைக் கண்டனம் செய்ய இவர்கள் ஒன்றுபடவில்லையெனில், மக்களைக் கொன்று குவித்த செயலையும் கூட தம் நம்பிக்கையை முன்னிறுத்தி நியாயப் படுத்தும் முறையில் உள்ள இவர்கள் இருக்கும் வரையில், மன்னிப்புக் கேட்பவர்கள் தான் உண்மையான் கிருஸ்தவர்கள் என்று எப்படி நாம் உணர முடியும் ?

பொதுமக்களின் மனங்களையும் இதயங்களையும் ஆக்கிரமித்து அவர்களை மேலாதிக்கம் செய்வதற்காக இதுவரை செய்த காரியங்களில் சிலவற்றைப் பார்ப்போம்

அலெக்ஸாண்டிரியா நகரத்தின் மாபெரும் நூலகத்தை கி.பி 390இல் அழித்து, பழங்காலத்திய புத்தகங்களையும், ஓலைகளையும் எரித்தது. பழங்கால வரலாற்றை பயில்வதற்கு மாபெரும் ஈடு செய்ய முடியாத இழப்பு இது. இப்போதுதான் இருண்ட யுகம் ஆரம்பிக்கிறது.

கிரிஸ்தவரல்லாத மக்களின் மீது ஒடுக்குமுறையும், கிரிஸ்தவம் இல்லாத மதங்கள் மீது அடக்குமுறையும் ஆரம்ப சர்ச்சால் ஆரம்பிக்கப் படுகிறது. கிபி 325லிருந்து 900 வரை. இதன் பலிகடாக்களின் எண்ணிக்கை தெரியவரவில்லை. 5000த்திலிருந்து 50000 வரை இருக்கலாம்.

கிபி. 1095-1300 வரை சிலுவைப்போர்கள். குடியானவர்களின் சிலுவைப்போர்களிலிருந்து ஆரம்பித்து, அப்பாவிகளின் படுகொலைவரை மொத்தம் 9 சிலுவைப்போர்கள். இதில் குழந்தைகளின் சிலுவைப்போரும் சேர்த்தி. ‘Dieu Le Volt ‘ (God wills it). ‘கடவுள் இதையே விரும்புகிறார் ‘ என்ற கோஷத்துடன் ஆயிரமாயிரம் மக்கள் இதனால் கொல்லப்பட்டார்கள்.

கிபி.350லிருந்து 1945வரை தொடர்ச்சியாக அடிக்கடி யூதர்கள் கிரிஸ்தவர்களால் கொல்லப்பட்டார்கள். பல கோடிப்பேர் இறந்தார்கள்.

புனித விசாரணைகள் (Inquisitions), கிபி 1200லிருந்து 1500 வரை. இதனால் கொல்லப்பட்ட மனிதர்களின் மொத்த எண்ணிக்கை அளவிட முடியாதது. பலகோடி இருக்கலாம். (யாருடைய கணக்கை எடுத்துக்கொள்கிறோம் என்பதைப்பொறுத்து). ஆண்கள், பெண்கள், குழந்தைகள். பெரும்பாலானவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு பிறகு எரித்தோ தூக்கிலிடப்பட்டோ கொல்லப்பட்டார்கள்.

சூனியக்காரிகள் கொலைகள் (Witch Hunts) 1500-1780. பல ஆயிரக்கணக்கானவர்கள் இதில் பலியானார்கள். பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள் , வயதானவர்களும், அங்கஹீனமானவர்களும். இதில் பெரும்பாலானவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு பின்னர் எரித்தோ தூக்கில் தொங்கவிடப்பட்டோ கொலை செய்யப்பட்டார்கள்.

அமெரிக்க அடிமைத்தனம். 1500-1865. 50 மில்லியன் மக்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள்.

இனவெறி/பெண்களுக்கு உரிமை மறுத்தலும். அதிரடிக் கும்பல்கள் (lynch mobs), வெறுப்புக் குழுக்கள், பயமுறுத்துதல் ஆகியவை, 1865இலிருந்து இன்றுவரை.

இவையெல்லாவற்றுக்கும் நிறையவே திருச்சபை வருந்த வேண்டும்.

இந்த கிரிஸ்தவர்கள் உண்மையிலேயே வருந்துபவர்களாகவும், மன்னிப்புக் கேட்பவர்களாகவும் இருந்தால், இவர்கள் தங்களது சர்ச்சின் அனைத்து சொத்தையும், பணத்தையும், தங்கத்தையும், வெள்ளியையும், ஆபரணங்களையும், கலைப்படைப்புக்களையும் திருப்பித்தந்துவிட வேண்டும் என வற்புறுத்தவேண்டும். அல்லது, இந்த படுகொலைகளால் பாதிக்கப்பட்டவர்களின் சந்ததியினருக்கு நஷ்ட ஈடாக பணத்தை தரவேண்டும். உண்மையில், இவர்களது பலிகடாக்களிடமிருந்து திருடியதால் தான், சர்ச் இப்போதைக்கு இருப்பது போன்று பணக்காரத்தனமாகவும், சக்திவாய்ந்ததாகவும் ஆகி இருக்கிறது. உண்மையான கிரிஸ்தவர்கள் பைபிளின் இந்தக் கொள்கையை உணர்ந்து, தங்களால் பலியிடப்பட்டவர்களுக்கு தகுந்த நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் என இந்த உண்மையான கிரிஸ்தவர்கள் கேட்டுக்கொள்ளவேண்டும்.

நாம் மன்னித்து விடவேண்டும். அதுதான் சரியானதும் கூட. ஆனால், கிரிஸ்தவ சமூகம் இப்படி சும்மா சாக்குக்களைச் சொல்லி மற்றவர்கள் மீது பழி போடுவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு செய்ததற்கான பொறுப்பை தம் தோள்கள் மீது மேற்கொண்டு, தங்களது மதத்தின் வரலாற்றுச் சுமையாக அதனைச் சுமக்க வேண்டும். இப்படிப்பட்ட கொடூரங்கள், ஒரு கையை வீசி உதறிவிட்டு, சில போலி வெற்று வார்த்தைகளை, இது மிகவும் வருந்தத்தக்கது என்று சொல்லிவிட்டு நகர்ந்து சென்றுவிடமுடியாத கொடூரங்கள். ஹோலோகாஸ்ட் (யூத இனப்படுகொலை) போல, மதத்தின் பெயரால் எத்தனை உயிர்கள் எடுக்கப்பட்டன என்பதை எப்போதும் மறக்கக்கூடாது. அதே போல, சர்ச் தன்னுடைய ரத்தம் தோய்ந்த வரலாற்றை, புதிய மத ஒழுங்கு என்ற பெயரிலோ, புதிய மனசாட்சி என்ற பலிபீடத்தின் கீழோ புதைத்துவிட அனுமதிக்கக்கூடாது. நாம் மன்னிக்க வேண்டும், ஆனால் ஒரு போதும், அவர்களை மறந்துவிட அனுமதிக்கக்கூடாது.

ஜான் ஹில் அவர்கள் இன்லாண்ட் ஃப்ரீ தாட் சொஸைட்டியின் உறுப்பினர்

**

Christian Apologies Empty and Hollow: John Hill is a member of the Inland Northwest Freethought Society.

The following article is from the Secular Humanist Bulletin, Volume 15, Number 3.

Series Navigation

ஜான் ஈ ஹில்

ஜான் ஈ ஹில்