மாத்தா-ஹரி – அத்தியாயம் 16

This entry is part [part not set] of 27 in the series 20070628_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா



பவானி கடந்த மூன்று ஆண்டுகளாக தனக்கென்று ஓர் அலுவலகத்தைத் திறந்துகொண்டு, வழக்கறிஞர் தொழிலிற் தீவிரமாக இறங்கியிருந்தாள். அலுவலகம் வீட்டிலேயே இருந்தது. முற்றத்திற்குச் செல்லும் வழியில் வலப்புறம் இருந்த சிறிய அறையை ஒழுங்குசெய்துகொண்டு உட்கார்ந்துவிட்டாள். பள்ளி, கல்லூரி படிப்பு, பின்னர் சட்டப் படிப்பு என எல்லாவற்றிற்கும் அவளைத் தயார் செய்தது இந்த அறைதான். ஒரு மூத்த வழக்குரைஞரிடம், தொழில் அனுபவமும் பெற்று எங்கே அலுவலகத்தை வைத்துக்கொள்ளலாம் என யோசித்தபோது, பாட்டி:இங்கேயே வைத்துக்கொள் இதுதான் உனக்கு ராசியான இடம், என்றாள். பவானிக்கு ராசி, என்பதைவிட, முதற் காரணம் பொருளாதார சூழல்; சமீபகாலமாகப் புதுச்சேரியில் ஓர் இடத்தை வாடகைக்குப் பிடிப்பதென்றால் அத்தனை சுலபம் இல்லை. நகரில், வெளியூர் ஆசாமிகள் குவிந்துவிட்டார்கள் எனப் பிறர் கூறியபோது அதைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டாள், அது உண்மை என்பது வெகுசீக்கிரத்தில் புரிந்தது. நாட்டின் பிறபகுதிகளைப் போலவே புதுச்சேரியிலும் ‘நல்லது கெட்டது’ எதையும் வியாபாரம் செய்யலாம். இந்தியாவின் அத்தனை மாநில மக்களும் இங்கே வருகிறார்கள். நான்கைந்து ஆண்டுகள்வரை கேட்பாரற்றுக் கிடந்த வீதிகளிற்கூட பத்துமாத வாடகையை முன்பணமாகக் கேட்கிறார்கள், கணிசமானத் தொகையை வாடகையாக எதிர்பார்க்கிறார்கள். பிறகு எல்லா வழக்கறிஞர்களையும் போலவே கட்சிக்காரர்களை பயமுறுத்தும் வகையிலும், நம்பிக்கையை ஊட்டவும்; சட்டப்புத்தகங்களை, சட்ட சம்பந்தமான இதழ்களைக் கண்ணாடி அலமாரி ஒன்றில் வரிசைப்படுத்தவேண்டும். தீரயோசித்ததில் வீட்டிலேயே தனது அலுவலகத்தை வைத்துக்கொள்வது பலவிதத்தில் சௌகரியம் என்று புரிந்தது. அவ்வப்போது எட்டிப்பார்த்து பேத்தியின் நலன் விசாரிக்கும் பாட்டியின் கரிசனமும், மணக்கமணக்கப் போட்டுத்தருகிற காப்பியும், கூடுதல் வசதிகள்.

அதிகம் கண்களை உறுத்தாத எளிமையான பருத்திவகைப் புடவை; அதற்குத் தோதாக ஒர் இரவிக்கை; நெற்றியில் இரு புருவங்களுக்கும் மத்தியில் பொட்டு என்று பேருக்கு ஒரு புள்ளி – பார்க்கிறவர்கள் கண்ணுக்கு அத்தனை எளிதாக தெரியாது; நான்குகிராமில் ஒரு தங்கச்சங்கிலி; அதை மறைத்துக்கொண்டு வெள்ளைநிறக் கழுத்துப்பட்டை; தோளில் கறுப்பு அங்கி; அன்றைய வழக்குச் சம்பந்தமான ஆவணங்கள் என சரியாகப் பத்து மணிக்கு, இருசக்கர வாகனத்தில் புறப்பட்டாகவேண்டும், புறப்பட்டுவிடுவாள். வ.உ.சி. வீதியில் இருக்கும் அவளுடைய வீட்டிற்கும், லால்பகதூர் சாலையில், கடற்கரையை ஒட்டியிருக்கிற நீதிமன்றத்திற்கும் இடையில் ஒரு பத்து நிமிட பயணம். ஆரம்பத்தில் ரிக்ஷா, ரிக்ஷாஓட்டுபவர் திடீரென்று இறந்துபோனதும், இருசக்கர வாகனம் என்றாயிற்று. நீதிமன்ற கட்டிடத்தின் பக்கவாட்டில் நிழலாகப் பார்த்து வாகனத்தை நிறுத்திவிட்டு, பின்னர் உள்ளே நுழைவாள், நேராக கீழ் வளாகத்தில் இருக்கும், வழக்குரைஞர்களின் பொது ஓய்வு அறைக்குச்சென்று, சீனியர் வந்திருந்தால் அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு, ஒரு சில விநாடிகள் அவருடன் உரையாடுவாள். பின்னர் குடும்ப நீதிமன்றத்திற்குச் செல்வாள். தனது வழக்கெதுவும் இல்லாத நாட்களில், சீனியர் எங்கே இருக்கிறார் என்று அவரது குமாஸ்தாவிடமோ, அவரிடம் தொழில் பயிலும் வழக்குரைஞர்களிடமோ விசாரித்து, அங்கு சென்று அவர் எப்படி வாதாடுகிறார் என்று பார்ப்பாள், மனதிற் பதித்ததை வீட்டில் கையேடு ஒன்றில் குறித்து வைப்பாள்- பக்கத்திலேயே, அந்த வாதத்தில் தனக்குள்ள கருத்து, குழப்பமென்றால், மறுநாள் மாலை சீனியர் நாராயனன் அலுவலகத்திற்கு நேரில் சென்று தெளிவுபடுத்திக்கொள்வாள்.

“அம்மா, எங்க வீட்டுக்காரர் குடிச்சுட்டுவந்து என்னை அடிக்கிறார், செத்த வந்து அந்த ஆளை இன்னாண்ணு கேளுங்கம்மா”, என்று நாள் தவறாமல் புலம்பும், தெரு முனையில் குடியிருந்த பெண்மணியொருத்தி, திடீரென ஒருநாள் தற்கொலை செய்துகொண்டது, பவானியை வெகுவாகப் பாதித்திருந்தது. பிறகு சின்னகடை பகுதியில் சைக்கிள் கடை வைத்திருந்த எதிர்வீட்டுக்காரர். அவரது மனைவி பவானி குடும்பத்தோடு மிக நெருக்கமாக இருந்தவள். அக்காள் அக்காளென்று பவானியின் அம்மாவிடம் உறவுகொண்டாடிக்கொண்டு, தனது பிரச்சினைகள் என்றில்லை, தெருவில் நடக்கிற அத்தனை பிரச்சினைகளையும், ஒப்புவித்துவிட்டுப் போவாள். வெகுகாலம் பிள்ளை இல்லாமலிமருந்து, கடைசியில் பவானி அம்மா முழுகாமலிருந்தபோதே அவளும் உண்டாகி இருந்தாள். பிரசவங்கள்கூட ஒரு ஜனவரி மாதத்தில் ஒருவார இடைவெளியில் அடுத்தடுத்து நிகழ்ந்தன. அந்த அம்மாவுக்குப் பையன், இங்கே பவானி. “எம்பிள்ளைக்குத்தான் பவானியை கட்டப்போகிறேன்”, என வாய்சலிக்காமல் சொல்வாள். பவானியை மருமகளே என்றுதான் வாய் நிறைய அழைப்பாள். அவளுடையப் பையன் தவழ்ந்ததோடு சரி, எழுந்து நடக்கவில்லை, பார்க்காத வைத்தியமில்லை, போகாத கோவிலில்லை. பெண்மணிக்கு எந்நேரமும் மகனைப்பற்றிய வேதனைகள். அவளுடைய கணவருக்குப் பையனின் கவலைகளோடு, கடன் தொல்லையும் சேர்ந்துகொண்டது, திடீரென்று ஒருநாள் மார்வலி என்றார். உள்ளூரில் பிரசித்திபெற்ற தனியார் மருத்துவ மனையில் சேர்த்தார்கள். அம்மமருத்துவர், ஸ்டெதாஸ்கோப் அணிந்து குணப்படுத்திச் சம்மாதித்ததைவிட, அப்பாவி நோயாளிகளிடம் கொள்ளைஅடித்து சம்பாதித்தது அதிகம்.. கையிருப்பைக் மருத்துவர் கையில் கொடுத்துவிட்டு, அந்த அதிர்ச்சியில் சைக்கிள் கடைகாரர் பரலோகம் போய்ச் சேர்ந்தார். எங்கிருந்தோ ஒரு பெண்மணி அந்த வீட்டிற்குச் சொந்தம் கொண்டாடிக்கொண்டு வந்து சேர்ந்தாள். அவருடைய முதல் மனைவி என்றாள். நீதிமன்றத்திற்குப் பிரச்சினைபோனது. எதிர்வீட்டிலிருந்த பெண்மணியோ “எனக்கு திருவந்திபுரம் பெருமாள் கோவிலில் வைத்துத் தாலிகட்டினார்”, என்று சத்தியம் செய்தாள். இந்து திருமணச் சட்டம், ‘திருவந்திபுரம் பெருமாள்’ சந்நதியில் நடந்த திருமணத்தைவிட, உறவுகள், ஊர்மக்கள் முன்னிலையில் நடந்த ‘எங்கிருந்தோ வந்த பெண்மணியின்’ தாலிக்குப் ‘சக்தி’ அதிகம் என்றது. இரண்டு நாட்கள் கழித்து, எதிர்வீட்டுப்பெண்மணி, தனது ஊனமுற்ற பிள்ளையை இடுப்பிலும், தலையில் மூட்டைமுடிச்சுகளுமாகப் புறப்பட்டுபோனபோது, இவர்களால் வேடிக்கைமட்டுமே பார்க்க முடிந்தது.

திருமதி. சுதா இராமலிங்கம் சென்னையிற் பிரபல வழக்குரைஞர், பவானிக்கு அநேக விஷயங்களில் முன் மாதிரி என்று சொல்லவேண்டும். சட்டம் படிக்கிறபோது, எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் ‘யாதுமாகி நின்றாய்'(1) என்ற தலைப்பில் எழுதி ‘தாகம்’ வெளியிட்டிருந்த கட்டுரைதொகுப்பு ஒன்றினை வாசிக்க நேர்ந்தது. அதிலொன்று ‘சுதா இராமலிங்கத்தைப்’ பற்றியது: அவரது சுயவரலாறு, போராட்டகுணம், அகில இந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் பொறுப்பான உறுப்பினராகவும், மக்கள் உரிமை இயக்கத்தின்(2) முன்னணித் தொண்டராகவும் செய்யும் பணிகள், பெண் வழக்கறிஞராக இருந்துகொண்டு சமுதாய பூர்வமாக பெண்களுக்கு நீதிக்கிடைக்க பாடுபடும் மனம், குறிப்பாக, ‘சமுதாயத்தில் மிகவும் பின்தள்ளப்பட்டவள்- ஒடுக்கபட்டவள் பெண்தான்- அவள்தான் ‘தலித்’ என்ற சுதா ராமலிங்கத்தின் கூற்று இவளை ஈர்த்தது. மறுநாளே அவரை தொலைபேசியில் பிடித்தாள், “மேடம், நான் சட்டக்கல்லூரி மாணவி, இறுதியாண்டு படிக்கிறேன், உங்களைச் சந்திக்க வேண்டுமே”, எனத் தனக்கிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்திக்கொண்டாள். ஒரு நாள் முழுதும் அவரோடு இருந்து, பிரம்மித்தாள். சட்டம் படித்து முடித்து பட்டம் பெற்றவுடன் தாமதிக்கவில்லை, அவரிடமே பயிற்சியாளராகவே சேர்ந்தாள். பவானிக்குச் சென்னையில் இருப்பதால் நேர்ந்த சங்கடங்களை புரிந்தவராக, அவளை மூத்த வழக்கறிஞர் நாராயணனிடம் பயிற்சி பெற புதுச்சேரிக்கு அனுப்பிவைத்தாள். இன்றைக்கும் வழக்கென்று இல்லை, சொந்தப் பிரச்சினைகள் என்றால், அவளுக்கு மேடம் நினைவுதான் வருகிறது, தொடர்பு கொள்வதுண்டு. சில தினங்களுக்கு முன்பு வழக்கொன்றிற்காக வந்திருந்த பெண்மணியை, ஏதோ ஒருவித மனநிலையில் வெருட்டி இருந்தாள். போகிறபோக்கில், அப்பெண்மணி தன்னை மேடம் சுதா இராமலிங்கம் அனுப்பியதாகக் கூறி இருந்தாள். அவள் முகவரியைக் கேட்டுப் பெற்று மீண்டும் அலுவலத்திற்கு வரச் சொல்லி இருந்தாள்.

பத்மா இரண்டுமுறை போன் செய்ததாகப் பாட்டிக் கூறினாள். அவளைத் தவிர்ப்பது தற்போதைக்கு நல்லதென்று தோன்றியது. தேவையற்ற மன அழுத்தங்களிலிருந்து தப்பிக்க முடியும். தேவசகாயத்திடமிருந்து விடுதலை பெறுவது அத்தனை சுலபமில்லைபோலத் தோன்றியது. எல்லா சராசாரிப் பெண்களைப்போலவே, இவள் பெண்ணுடலுக்கும் ஓர் ஆணுடல் தேவையோ? இயற்கை நியதிக்கு தானும் இணங்கித்தான் போகவேண்டுமா? பிரமசரியத்தைக் கடைபிடிக்கிற பெண்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். இருக்கலாம்., சமுதாயத்தின் ஏளனப்பார்வையிலிருந்தும், விஷமத்தனமான மதிப்பீடுகளிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துகொள்ள அவர்களது பொருளாதாரமும், சமுதாயப் படிநிலை உயர்தகுதியும் கவசமாக அப்பெண்களுக்கு உதவுகின்றன. நடுத்தர வர்க்கத்து பெண்ணாய்ப் பிறந்தவள், ஒரு சுபயோக சுபதினத்தில், காதலித்தோ அல்லது காதலிக்காமலேயோ, கல்லுடனோ அல்லது புல்லுடனோ, குறைந்தபட்சம் மாலை மாற்றிக்கொள்ளவேண்டும், எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம், தான் மலடி அல்லவென்று நிரூபித்தாகவேண்டும், பிறகு அவனுடைய விருப்பத்திற்கென்று சமைக்கவேண்டும், அவனது விருப்பத்திற்கென்று சினிமாவுக்குப் போகவேண்டும், அவனது விருப்பத்திற்கு நண்பர்களை உபசரிக்கவேண்டும், அவனது விருப்பத்திற்கு படுக்கவேண்டும், நல்லவேளை அவனுடைய விருப்பத்தைக்கேட்டுத்தான் மனைவியானவள் டாய்லெட் போகவேண்டுமென்ற கட்டாயம் எதுவுமில்லை. கணவன் மனைவிக்குமான அப்படியான உரையாடலொன்றை கற்பனை செய்துபார்க்க, சிரிப்பு வந்தது – சிரித்தாள்.

– என்ன ஆச்சு? என்னிடத்தில் சொல்லேன்.. நானும் சேர்ந்து சிரிக்கிறேன்- எட்டிப்பார்த்த பாட்டி கேட்டாள்

– ஒன்றுமில்லை பாட்டி- என்றவள், அடக்க முடியாமல் மீண்டும் சிரித்தாள்

– சரி… யாரோ வரணும் என்று சொன்னாயே வந்தார்களா?

– இன்னும் இல்லைப் பாட்டி அவர்களைத்தான். எதிர்பார்க்கிறேன், மாலை ஆறு அல்லது ஆறரை மணிக்கெல்லாம் வந்துவிடுவதாகச் சொன்னார்கள். சுவர்க்கடிகாரத்தைப் பார்க்க மாலை ஆறரை மணி.

அறைவாசலில் நிழலாடியது. பவானிக்கு வியப்பு. நடுத்தர வயதுப் பெண்மணியும், குழைந்தையுடன் இளம் பெண்ணொருத்தியும் நின்றிருந்தார்கள். மூன்றவதாக தேவசகாயம்.

– வணக்கம்மா.. நீங்க வரச்சொன்னீங்கன்னு சொன்னாங்க, அதுதான் பெண்ணை அழைத்துக்கொண்டு வந்தேன்.

– வணக்கம் வாங்க உட்காருங்க- என்ற பவானி, தேவசகாயத்தைப் பார்த்தாள்- அப்பார்வையில், உள்ள கேள்வியைப் புரிந்து கொண்டவன்போல,

– இவங்க எனக்குத் தெரிஞ்ச குடும்பம். ஒரே தெருவில், இருக்கிறோம்.. ஆரம்பத்துலேயிருந்து என்ன நடந்ததென்று தெரியும். ஒரு பெண்வக்கீல் வீட்டுக்குப் போகணுமென்று சொன்னப்போ நீங்களாக இருக்குமென்று நினைக்கவில்லை. காலையில் பேரையும் முகவரியையும் சொன்னப்போதான் புரிஞ்சுது, நான் வரவில்லை என்று சொன்னேன், இவங்கக் கேட்கவில்லை.

– ஏம்மா, சொல்லவேண்டியதை ஓரளவு புரியும்படியா சொல்வீங்க இல்லை. உங்களால் முடியாதென்றால், வழக்கில் சம்பத்தப் பட்ட உங்க பெண் இருக்கிறாங்க, மூன்றாவதா ஒருத்தர் வேணுமா?

– எம்பொண்ணுக்கு அவ்வளவு கெட்டித்தனமிருந்தா, ஏனிப்படிப் பிள்ளையை சுமந்துகொண்டு நிற்கிறாள், நாந்தான் தேவா தம்பியைத் துணைக்கு அழைத்து வந்தேன்.

– மிஸ் பவானி, உங்களுக்கு விருப்பமில்லைன்னா நான் புறப்படறேன்.

– பரவாயில்லை உட்காருங்கள். ஆனால் நீங்கள் குறுக்கிடாமல் அமைதியாக இருக்கவேண்டும். அதைத்தான் எதிர்பார்க்கிறேன். மருத்துவருக்கும், வழக்கறிஞருக்கும் சம்பந்தப்பட்டவங்கதான் பிரச்சினையை தெளிவுபடுத்த முடியும். மற்றபடி உங்களைப் புண்படுத்தனும் என்பதற்காக இதைச் சொல்லலை. உட்காருங்க.

தேவசகாயம் அப்பெண்களுக்கு அருகில் காலியாகவிருந்த நாற்காலியில் அமர்ந்தான். பவானி வெள்ளைத் தாளும் பேனாவுமாய்த் தயாரானதும், வயதான பெண்மணி சொல்லத் தொடங்கினாள்.

– எனக்குப் பேரு காமாட்சிம்மா, சின்னக்கடைகிட்ட ஜீவானந்தம் வீதியிலே வீடு. ரோடியர் மில்லில் வேலை. புள்ளை ஒண்ணு, பொண்ணு ஒண்ணு, இவதான் மூத்தவ. நல்லாதான் படிக்கவச்சேன். ஏன் பொல்லாத நேரம். இன்றைக்கு இந்த நிலைமை…

– அழாதம்மா, அழாமச் சொல்லுங்க..

– இவள் பேரு சிவகாமி. பத்தாம் வகுப்பில் பெயிலாகிவிட்டாள், சும்மா இருக்கிறாளே என்று டைப்பிங் கிளாஸ¤க்கு அனுப்பி வைத்தேன். அப்போதுதான் அவனைப் பார்த்திருக்கிறாள். அவன் வேற சாதிப்பையன், காலேஜ்ல படிச்சிருந்திருக்கான், நல்ல வசதியுங்கூட. ரங்கப்பிள்ளைத் தெருவில் சொந்தமா ஏதோ கடை வச்சிருக்கானாம். கடைக்கு வரப்போக இருந்தவன், பக்கத்துல டைப் அடிக்க வந்த இவளைப் பார்த்திருக்கிறான். அடிக்கடி இவளிடம் தொந்தரவு கொடுத்திருக்கான். இந்தச் சனியனும் அவன் வார்த்தையில் மயங்கி, கூப்பிட்ட இடமெல்லாம் போயிருக்கு. பாவிப் பையன் கர்ப்பமாக்கிட்டான். எனக்கு மட்டும் கொஞ்ச நாளாகவே சந்தேகம் இருந்துச்சு. இந்த ராட்சசியைக் கேட்கிறேன். ஆமாம் என்கிறாள். அந்தப் பிள்ளையை வீட்டுக்குக் கூட்டிவா பேசணும் என்றேன். ஒவ்வொரு நாளும் சாக்குப்போக்குச் சொல்லிக்கொண்டுவந்திருக்கிறான். ஏதாவது காரணத்தை சொல்வான்போல, இந்தக்கோட்டானும் அப்படியே நம்பிக்கொண்டிருந்திருக்கிறது.

– இங்கே பாருங்கம்மா. உங்கள் வேதனை எனக்குப் புரிகிறது, அதற்காக மூச்சுக்கு முந்நூறுதரம், பெண்ணைத் திட்டிக்கொண்டிருப்பதில் எந்தப் பிரயோசனமுமில்லை. வீட்டில் இதைவிடக் கூடுதலாக வார்த்தைகளை உபயோகிப்பீர்களா? ம்..

பவானி தொடர்ந்து பேசமுடியாமல் எதோ தடுத்தது. தேவசகாயத்தினுடைய கண்கள் தன்னையே கவனித்துக் கொண்டிருப்பது போல நினைப்பு. தொடர்ந்து, ‘முகத்தைத் திருத்தமாக வைத்திருக்கிறேனா, காலையில் பாட்டி சொன்ன கரும்பச்சைப் புடவையேயே கட்டிக்கொண்டிருந்திருக்கலாமோ?’ என அவளிடத்தில் முளைத்த கேள்விகளுக்குப் பதிகளில்லை. அவனைத் தவிர்க்க நினைக்கிறாள்.. முடியவில்லை. கல்வி, வயது, துணிச்சல், மனோதிடமென்று, இவளை நிறுத்த உபயோகம் கண்ட தூண்களை, அசைத்துப் பார்க்கிறான். இவளால் தடுக்க இயலவில்லை. இதற்கு முன் இளைஞர்கள் வந்ததில்லையா? எதிரே அமர்ந்ததில்லையா? இதே தேவசகாயத்திடம் பலமுறை நேராகவேப் பேசி இருக்கிறாளே.

– அம்மா… அந்தப் பையனுடைய சிநேகிதண்ணு இந்தப்பிள்ளையைச் சொன்னாங்க. எங்க தெருவிலேதான் இருக்குது

வந்திருந்த பெண்மணிக்கு, இவள் மனதைப் படிக்கத் தெரிந்திருக்குமோ, அன்றைக்குத் துணிக்கடையில் இவள் முகமறிந்து ஒரு புடவையைதேர்வு செய்து எடுத்து விரித்தானே, விற்பனையாளன் அவன்போல. ‘அவனைப் பார் அவனைப்பார்” என்ற மனதின் கட்டளைக்கு நொடியில் பணிந்தாள். எதிரே இருந்த பெண்மணி, அவள் மகள், அந்தப் பெண் சுமந்திருந்த குழந்தை மறைந்துபோனார்கள். மரத்தை மறைத்தது மாமத யானை. ஒரே ஒரு கணம் கண்களை அனுமதித்தாள், காத்திருந்தவன்போல தலையை உயர்த்துகிறான். இருவர் பார்வையும் ஒருநொடி முட்டிக்கொண்டது, அவன் ஜெயித்துவிட்டவன்போல மெல்ல புன்னகைக்கிறான்.

– அம்மா மேலே சொல்லட்டுங்களா? – மீண்டும் பெண்மணி

கட்சிக்காரர்களை வைத்துக்கொண்டு, அசட்டுத்தனமாக தன் மனதை அலையவிடுவதை உணர்ந்த மாத்திரத்தில் அதிர்ச்சி. தன்னைத் தானே கடிந்துகொண்டாள்.

– ம்.. சொல்லுங்கம்மா

– இந்தப் பிள்ளையை அந்தப் பையனின் சினேகிதன் என்று சொன்னாள். ஒரு நாள் இவளை அழைத்துக்கொண்டுபோய் பார்த்தேன். ரொம்ப நல்ல பிள்ளையா தெரிந்தது. எங்க வேதனைகளை சொன்னேன், பயப்படாதீங்கம்மா.. அவங்க இரண்டுபேருக்கும் கல்யாணம் செய்து வைக்க நானாச்சு என்று ஆறுதல் சொல்லிச்சு. அந்தப் பையனைப் பார்த்து பேசியதில் திருமணத்திற்கு சம்மதித்தானாம். ஆனால் வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் நடக்கணுமென்று சொல்லியிருக்கான். எனக்கெதுவும் தெரியாது. மயிலத்துக்குப் போயிட்டு மாலைமாத்திகிட்டு புதுச்சேரியில் திருமணத்தை முறைப்படி பதிவும் செய்திருக்கிறார்கள். குழந்தை பிறக்கிறவரை இவளை எங்கவீட்டிலேயே இருப்பதென்றும், தனது குடும்பத்தைச் சமாதானம் செய்துவிட்டு அழைத்துக் கொள்வதாகவும் கூறப்பட்டதைக்கேட்டு நானும் சம்மதிச்சேன். குழந்தையும் பிறந்தது. அப்படி இப்படியென்று குழந்தை பிறந்து ஒருவருடம் ஓடிட்டுது. அவன் வந்து இவளை கூப்பிட்டுப்போற மாதிரி தெரியவில்லை. போனமாதந்தான் இவளை இழுத்துக்கொண்டுபோய் அவனை விசாரித்தேன். இவர்கள் பதிவுத் திருமணம் இந்து சட்டப்படி செல்லாது என்கிறான்.

– இதிலுள்ள சிக்கல் எனக்குப் புரிகிறது. பதிவுத் திருமண ஆதாரத்தைமட்டும் நம்பிப் பெரிதா எந்த உறுதிமொழியும் உங்கக்கிட்டே கொடுக்க முடியாது. சிவில் வழக்குகளில், சட்டம் என்ன சொல்கிறதென்பது இங்கே மிகவும் முக்கியம். தவிர நம் நாட்டில் கையூட்டு என்பது இன்றைக்கு நீதிமன்றங்களையும் விட்டுவைக்கவில்லை. பெரும்பாலான வழக்குகளில் நீதிபதிகள் இப்போதெல்லாம் சட்டம், சாட்சிகளைப் பின்னுக்குத்தள்ளிவிட்டு, வழக்கில் சம்பந்தப்ட்டவர்களின் பணபலம், அரசியல் அதிகாரத்தினைக் கொண்டு தீர்ப்பு வழங்குகிறார்கள். உங்கக்கிட்ட இருக்கிற அத்தனை ஆதாரங்களையும் எடுத்து வாருங்கள். இருவருமாக சேர்ந்து எடுத்துக்கொண்ட நிழற்படங்கள், திருமணப் பதிவு, உங்களுக்கென வாங்கிய பரிசுப்பொருள்களுக்கான ரசீதுகள், இப்படி எதுவென்றாலும் கொண்டுவாருங்கள், முயற்சி பண்ணிபார்ப்போம். தேவா.. நீங்க உங்க நண்பர்கிட்டே பேசிப் பார்த்தீர்களா?

– அவன் ஒரே அடியா மாறிட்டான். அவனை எனக்கு ரொம்ப பழக்கமில்லை. ஆனாலும் நான் கேள்விபட்டவரை அப்படிப்பட்டவனில்லை. எனக்கே வியப்பா இருக்கு. இருந்தாலும் தொடர்ந்து அவன் கிட்டே பேசுவதென்றுதான் இருக்கிறேன்.

– மேடம் சுதா ராமலிங்கத்தை எப்படி உங்களுக்குத் தெரியும்.

– நம்ம புதுச்சேரியைச் சேர்ந்த பி.யு.சி.எல்.(2) அமைப்பைச் சேர்ந்த ஒருத்தர் அவங்களைப் பற்றிச் சொன்னார். பிறகு அவங்க உங்களை காட்டிவிட்டாங்க.

– அப்படியா? குழந்தை அழகாய் இருக்கான். குழந்தையைப் பார்த்துமா அந்த நண்பர் மனசு மாறலை.

– இல்லையம்மா.. வந்து எட்டியே பார்க்கலை, படுபாவி. மூக்கும் முழியும் குழந்தை அப்படியே அவங்க அப்பனை உரிச்சு வச்சிருக்குது பாருங்க.. நீங்க நினைக்கிற மாதிரி ஆம்பிளை பிள்ளை இல்லை. பொட்டை கழுதை. ஹ¤ம், அதன் தலையிலே ஆண்டவன் என்ன எழுதிவச்சிருக்கிறானோ?

– பயப்படாதீங்க. உங்க காலம் வேற. என்ன பேரு வச்சிருக்கீங்க

– ஹரிணி – முதன் முறையாக குழந்தையின் தாய் வாய்திறந்துபேசினாள்

– நல்ல பேர்.

– அப்போ நாங்க புறப்படறோம்- தேவா.

– போயிட்டுவாங்க. நான் சொன்னதையெல்லாம் மறந்திடாதீங்கம்மா. எவ்வளவு சீக்கிரம் என்னை வந்து பார்க்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்து பாருங்க.

அவர்கள் விடைபெற்று சென்று ஒரு சில வினாடிகள் கழிந்திருக்கும். மெல்ல கதவைத் தட்டும் சத்தம், யாரென்று நிமிர்ந்து பார்க்க, தேவா புன்முறுவலுடன் நிற்கிறான்.

– சொல்லுங்கள் என்ன விஷயம்

– உங்களிடம் பேசவேண்டும். பத்மா போன் பண்ணினாளா?

– பாட்டிச் சொன்னாங்க. பேசுவதற்கு இதுநேரமல்ல, இந்த இடமும் அதற்கானதல்ல. வழக்குகள் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.

– நாளைக்கு நீங்கள் பீச்சுக்கு வரணும். உங்களோடு பேசவேண்டியிருக்கு.

– நான் யோசிக்கணும். அடுத்த வெள்ளிக்கிழமை வரை, என்னால் எங்கும் வரமுடியாது.

– யோசிச்சுவையுங்க- அமைதியாகத் திரும்பிச் சென்றான்.

(தொடரும்)

———————————————————————————-
1. யாதுமாகி நின்றாய் – ராஜம் கிருஷ்ணன்- ‘தாகம்’- சென்னை-17
2. P.U..C.L. – People’s Union for Civil Liberties

nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா