கூந்தலழகி

This entry is part [part not set] of 30 in the series 20020610_Issue

அ முத்துலிங்கம்


மாமாவீட்டு பின் வளவில் எங்களுடைய உதை பந்தாட்டம் நடைபெறும். நல்லாக தேய்ந்து, மயிர் எல்லாம் போய், இனி தேய்வதற்கு இடமில்லாமல் வழுவழுவென்று இருக்கும் டென்னிஸ் பந்தில், சூாியன் முற்றாக அஸ்தமித்த பிறகும் விளையாட்டு தொடரும். இதில் முக்கியமானவர்கள் நான், ரவி, சண்முகம்தான்.

ரவியும், சண்முகமும் உதை பந்தாட்டத்தில் மன்னர்கள். ரவி ஒரு பக்கமும் சண்முகம் எதிர் பக்கமுமாக நிற்பார்கள். நாங்கள் ஒரு பத்து பேர் அவர்களை சுற்றி முகத்தை பார்த்துக்கொண்டு காத்திருப்போம். ரவி ஒரு பேரைச் சொல்ல அவன் ரவியின் பக்கம் போய் சேர்ந்துகொள்வான். சண்முகம் ஒரு பேரைக் கூப்பிட அவன் அந்தப் பக்கம் போவான். இப்படியாக இரண்டு டாம் உருவாக்கப்படும். ஒவ்வொரு முறை ஆள் தொிவு செய்யும் போதும் நான் துள்ளி துள்ளி கையை காட்டுவேன். இருந்தும் ஒருவரும் என்னை கண்டுகொள்ள மாட்டார்கள். இனி ஒருவருமில்லை என்ற நிலையில் கடைசியாக நான் சேர்க்கப்படுவேன்.

இப்படி நான் கடைநிலை ஊழியனாக தள்ளப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன:

1) ஒரேயொரு முறை அசந்தர்ப்பவசத்தால் தன் சைட் கோல் போட்டது.

2) எதிாில் உருண்டோடி வரும் பந்தை ஓங்கி உதைக்க நான் எடுக்கும் அவகாசம் பந்து காலைத்தாண்டி போக எடுக்கும் நேரத்திலும் பார்க்க கூடியதாக இருப்பது.

இருந்தாலும், விளையாட்டு மைதானத்துக்கு உடமைக்காரர் என்ற முறையில் என்னுடைய முக்கியத்துவத்தை யாரும் மறுக்க முடியாதபடிக்கு அடிக்கடி அச்சுறுத்தியும், ஞாபகமூட்டியும் நிலைநிறுத்த நான் தவறவில்லை.

விளையாட்டு முடிந்ததும் நாங்கள் மூன்று பேரும் மாமா வீட்டுக்கு போவோம். சற்று முன்புவரை வளைந்தும், நிமிர்ந்தும், ஓடியும், உதைத்தும் செயல்பட்ட எங்கள் உடம்பு இப்பொழுது விறைப்பு நிலையை அடைந்துவிடும். மாமா சிாித்த முகத்துடன் வரவேற்பார். பாதி உண்டுமுடித்த சாப்பாடுகளும், இன்னும் சாப்பிட உத்தேசித்திருக்கும் உணவுகளும், கம்பிவலை அடித்த அலுமாாியில் கண் பார்க்கக் கூடியதாக இருக்கும். அவற்றில் சில எங்களுக்கு தரப்படும். அது தவிர அவருடைய பூஞ்சோலையில் விளையாட அனுமதியும் கிடைக்கும்.

வீட்டின் உள்ளேயும், வெளியேயும் மாமா அபூர்வமான தாவரங்களையும், கொடிகளையும், செடிகளையும் வளர்த்து வந்தார். இவற்றோடு அவர் பல மணி நேரங்களை செலவழிப்பார். நாங்கள் அங்கே போனால் மாமாவுக்கு இன்னும் உற்சாகம் வந்துவிடும். ஒவ்வொரு தாவரமாக அறிமுகம் செய்து அதனுடைய அன்றைய மகிமைகளை விளக்குவார்.

எப்பவும் பிரமிப்பை தருவது ‘நேற்று, இன்று, நாளை ‘ என்னும் செடிதான். இந்தச் செடி முதல் நாள் பூக்கும்போது கறுப்பு ஊதாக்கலாில் பூக்கும்; இரண்டாவது நாள் இதே பூ மங்கிய ஊதாவாக மாறிவிடும். மூன்றாவது நாள், நம்பமுடியாதபடிக்கு வெள்ளைப் பூவாகியிருக்கும். எந்த ஒரு நேரத்திலும் மூன்று கலாில் பூத்து குலுங்கும். நான் பல காலமாக இந்த மரத்தில் மூன்று நிற பூக்கள் பூப்பதாக நினைத்திருந்தேன்; இந்த மர்மத்தை விடுவித்தது மாமாதான்.

அடுத்து எனக்கு பிடித்தது impatient என்ற மரம்தான். பொறுமை இல்லாத இந்த மரத்துடன் நான் பொறுமையாக விளையாடுவதை மாமா பார்த்துக்கொண்டே இருப்பார். யாராவது கிட்ட போனால் இந்த மரத்தின் மொட்டுக்கள் பயத்தினால் வெடிக்கும். நான் அடிக்கடி தொட்டு பயம் காட்டிக்கொண்டு இருப்பேன். மாமாவும் என்னுடன் சிலசமயம் சேர்ந்து விளையாடுவார். நான் பார்க்காத நேரங்களில் மாமா அந்த செடிகளுடன் ரகஸ்யமாக சல்லாபிப்பதை அவதானித்திருக்கிறேன். அதில் ஒரு அந்தரங்கமும் பாசமும் இருக்கும். வெகு காலத்துக்கு பிறகு, என் திருமணம் முடிந்த பின்புதான், மாமா மணமுடிக்காததன் காரணம் எனக்கு தொியவரும்.

அந்தக் காலத்தில் நான் பல நீண்ட வார்த்தைகளை சேகாித்து வைத்திருந்தேன். ‘நாழிகை, நாலாம் ஜாமம், உப்பாிகை, முப்பது காதம், கிருஷ்ணபட்சம், அத்தாணி மண்டபம், ஜலக்கிாீடை ‘ என்று வகை வகையான சொற்கள். இதனால் என் நண்பர்கள் மத்தியில் எனக்கு பயமும், மாியாதையும் இருந்தது. எங்கள் மூவரையும் ஒன்றாகப் பார்க்கும்போது மாமா ‘அடுப்புக்கட்டிகளே ‘ என்றுதான் அழைப்பார்.

எங்கள் வீட்டில் பாம்புகளோடு விளையாடுவது தடுக்கப்பட்டிருந்தது. பாம்புகள் மாத்திரமல்ல. நாய், பூனை, கிளி இவற்றோடு பழகுவதற்கும் அனுமதி கிடையாது. ஆனால் செடி வளர்ப்பதற்குமட்டும் தடை இல்லை. இந்தச் சமயத்தில் மாமா பொிய உதவி செய்தார். எங்கள் ஆசையை தூண்டிவிட்டு ஆளுக்கொரு செடியும் தந்தார். இதில் எனக்கு தந்தது நான் முந்தி பிந்தி பார்த்திராத, கேட்டிராத செடி. ஆபிாிக்க வயலட்.

ஒரு சட்டியிலே ஆறு அங்குலத்திலும் குறைந்த உயரமாக அது இருந்தது. அதன் பெயருக்கும் அதற்கும் ஒருவித சம்பந்தமும் கிடையாது. அது ஆபிாிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பரவிய செடி. அதனுடைய பூ சிவப்பு, வெள்ளை, அடர் நீலம், வயலட் இப்படி பல வர்ணத்திலும் இருக்கும். எனக்கு கிடைத்த செடியின் பூ நிறம் இளம் சிவப்பு. இந்தச் செடி வந்த பிறகு என்னிடம் அதிசயமான மாற்றம் ஏற்பட்டது. என்னுடைய விளையாட்டு நேரம் கணிசமாகக் குறைந்து செடி வளர்க்கும் ஆசை கூடியது அப்போதுதான்.

அது நடந்து ஒரு இருபது வருடம் இருக்கும். என்றாலும் என்னால் மாமாவை மறக்க முடியாது. சமீபத்தில் நான் காதலில் அடிபட்டு விழுந்தபோது வந்து உதவியவரும் அவர்தான். ‘அடிபட்டது ‘ என்றால் உண்மையான accident தான்.

நான் காரை ஓட்டிக்கொண்டு வந்தேன். எனக்கு பக்கத்தில் இன்னொரு காரும் வேகமாக வந்தது. முன்னுக்கு இருந்தது ஒரு கார் மட்டுமே போகக்கூடிய ஒடுங்கிய ரோட்டு. பார்த்ததும் ஆசையை தூண்டக்கூடிய விதமான வழவழப்பான பாதை. என் கார் பாய்ந்த அதே சமயம் பக்கத்துக் காரும் பாய்ந்தது.

அப்பொழுதுதான் விபத்து ஏற்பட்டது. என்ன அழகான விபத்து.

அந்தக் காரை ஓட்டியவன் கர்வமான முகத்துடன் இருந்தான். அவனுக்குப் பக்கத்திலே ஒரு தேவ கன்னிகை. அவளுடைய கூந்தலைப்போல நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை. தண்ணீருக்குள் அமிழ்ந்து இருக்கும்போது மயிர் மிதப்பதுபோல, ஒரு மயில் தோகை விாித்த பாவனையில் புவியீர்ப்பை எதிர்த்து பக்கவாட்டில் பரவியிருந்தது. என்னால் என் கண்களை பிடுங்கி எடுக்கமுடியவில்லை. அவள், அவனுடைய மனைவியாக இருக்க முடியாது. மனைவியின் முகம் அவளுக்கு இல்லை. காதலியாகவோ, தங்கையாகவோ இருக்கலாம். என் மனம் விபத்தை மறந்துவிட்டு ‘தங்கையாக இருக்கட்டும், தங்கையாக இருக்கட்டும் ‘ என்று பிரார்த்திக்க தொடங்கியது.

உடல் காயம் இல்லாத விபத்து. என்றாலும் ஞாயிறு காலைதோறும் நியூ குளொஸ் மினுக்கி போட்டு தேய்த்து, தேய்த்து பளபளப்பாக்கிய கார் நசுங்கிவிட்டது. இது விஷயமாக பலதடவை பொலீஸ் ஸ்டேசனுக்கு போகவேண்டி வந்தது. அப்பொழுது மாமாவும் கூடவே வந்தார். சமரசப் பேச்சுக்கள் நடக்கும்போதே அவருக்கு என் மனது புாிந்துவிட்டது. அவர்தான் என் பெற்றோருக்கு என் விருப்பத்தை எடுத்துச் சொன்னார். என் வாழ்க்கையில் இது பொிய திருப்பம் என்பது அப்போது எனக்கு தொியவில்லை. சிறு தூறல் போட்ட ஒரு குளிர்கால நாளின் முன்மதியத்தில் எங்கள் திருமணம் நடந்து முடிந்தது.

விபத்திலே சந்திப்பு தொடங்கினாலும் நாங்கள் அவசரப்பட்டு மணந்துகொள்ளவில்லை. ஒருவரை ஒருவர் புாிந்து கொள்வதற்கு போதிய சந்தர்ப்பங்களை உண்டாக்கிக் கொண்டோம். கடற்கரையில் உட்கார்ந்து மணிக்கணக்காக பேசினோம். புத்தகங்கள் பாிமாறிக்கொண்டோம்; இலக்கியம் பற்றி விவாதித்தோம்.

ஆனால் ஒரேயொரு சிறு கேள்வியை மட்டும் நான் கேட்க தவறிவிட்டேன்.

ஒரு கதவு, இரண்டு ஜன்னல், முக்கோண கூரையிலே ஒரு புகைபோக்கி, சுருளாமல் மேலே போகும் புகை, நீளமான மஞ்சள் பாதை, மறைகிறதோ, எழுகிறதோ என்று குழப்பம் தரும் அரைச்சூாியன், இறகை விாித்துப் பறக்கும் சிவப்பு பறவைகள்: இவைதான் அந்த வீடு. அவருடைய சிறிய மகளோ, மகனோ வரைந்த அந்த வீட்டு படத்துக்கு கீழேதான் எங்கள் அலுவலகத்தின் பாரதூரமான திட்டங்கள் போடும் ‘திங்கள் காலை கூட்டம் ‘ நடைபெறும். சேர்மன் ஒரு நீல வரைபடத்தை காட்டி கம்பனி நிலவரத்தை விபாித்துக்கொண்டிருந்தார். என்னுடைய மனம் வெள்ளிக்கிழமை மாலை ஆவேசத்துடன் மல்லிகைச்சரம் அறுக்கப்பட்ட சம்பவத்தில் தொடங்கி, சனி காலை, மாலை, ஞாயிறு இரவு, திங்கள் அதிகாலை என்று ஒவ்வொரு காட்சியாக விாித்து, நிறுத்தி, நிறுத்தி லயித்துக்கொண்டிருந்தது.

பொிதாக civil works என்ற சொல் உச்சாிக்கக் கேட்டு நான் திடுக்கிட்டபோது ஒரு சிவப்பு படத்தை காட்டி சேர்மன் விளக்கிக் கொண்டிருந்தார். நீலம் எப்பொழுது சிவப்பாக மாறியது தொியவில்லை. அந்திரக்கிலேஸின் சிங்கம்போல இவருடைய ஞாபகசக்தி அபாரமானது. சென்ற திங்கள் தொடர் கட்டட மேற்பார்வைக்கு பணிக்கப்பட்டிருந்தேன். வேறு விஷயங்களால் நிரம்பியிருந்த என் மூளையிலிருந்து அது நழுவிவிட்டது. கையிலே marker உடன் ஒரு கொழுக்கவைக்கப்பட்ட கடல் ஆமை அபூர்வ சக்தி பெற்று நிமிர்ந்து நிற்பதுபோல அவர் நின்றபடிக்கு என்னை உற்றுப்பார்த்தார்.

இந்தக் காலங்களில் நான் என்னை மறந்த நிலையில் இருந்தேன். நான் ஆசையாக வளர்த்த செடிகளும், கொடிகளும் இடம் பெயர்ந்து கொண்டிருந்தன. சட்டியில் வளர்க்கும் செடிகளுக்கு அவை இருக்கும் இடம்

பிரதானமானதென்பது ஒரு முழுமூடனுக்கும் தொியும். புது மண மோகத்தில் நான் கவனிக்காமல் விட்ட விஷயங்களில் இதுவும் ஒன்றாகிவிட்டது.

நான் மூன்று வயதாயிருந்தபோது என் மண்டையில் பட்ட காயத்தில் ரத்தம் ஒழுகியபோது மாமா தூக்கியதில் அவர் சேட்டில் ரத்தக்கறை பட்டிருந்தது. இந்த சம்பவம் என் ஞாபகத்தில் இருந்து மறைந்துவிடும் என்று பயந்து அடிக்கடி தனது ரத்தக்கறை சேட்டை மாமா காட்டுவார். எனக்கு ஆச்சாியம் தாங்காது. ரத்தக்கறையை பார்த்தல்ல. கோமாளித்தனமான நாவல்பழ கலர் சேட்டை அவர் இன்னும் பத்திரப்படுத்தி வைத்திருந்ததுதான்.

மாமா வீட்டைப் பார்த்து என் வீட்டையும் ஒரு பூஞ்சோலை போலவே அமைத்திருந்தேன். எங்கே பார்த்தாலும் தொட்டிகளிலும், சட்டிகளிலும் தாவரங்கள், கொடிகள், செடிகள் என்று நிறைந்திருக்கும். இரண்டு கைகளையும் தொங்கவிட்டபடி, அந்த சுவாத்தியத்துக்கு முற்றிலும் பொருந்தாத மோசமான முரட்டு நாவல்பழ உடையில் மாமா திடாரென்று ஒரு நாள் வந்தார். வீட்டுக் காற்றை முகர்ந்து பார்த்தார். அவர் முகம் சுருங்கியது. அப்போதுதான் எனக்கும் ஏதோ ஒன்று உறைத்தது. என்னவென்று தொட்டு சொல்லமுடியவில்லை. வழக்கமாக மாமா வந்தால் நான் வளர்க்கும் செடிகளை வியந்து அவர் முகத்தில் ஒரு செழிப்பு உண்டாகும்.

ஆனால் இந்த முறை, வட்டமான கண்ணாடி தொட்டிக்குள் வளர்க்கும் மீனைப்போல, அவருடைய முகம் பம்மிப்போய் இருந்தது. ஏதோ ஒரு யோசனை அவரை வாட்டியது. அதை என்னுடன் பகிர்வதற்கு அவர் பிாியப்படவில்லை போலும். ஒரு விலங்கின் கழிவை விலக்கி நடப்பதுபோல ஓர் அருவருப்புடனும், அவசரத்துடனும் என்னைத் தாண்டி போனார். பிறகு என்ன நினைத்தாரோ திரும்பி வந்து சிறுவயதில் செய்வதுபோல என் தலையை ‘அடுப்புக்கட்டி ‘ என்று சொல்லி தடவிவிட்டு சென்றார். அந்தச் சிறு செய்கை என் மனதை என்னவோ செய்தது.

மாமா தந்த ஆபிாிக்க வயலட் என்னிடம் பல வருடகாலமாக இருந்தது. இதுதான் எனக்குக் கிடைத்த முதலாவது செடி. இது பல மாதங்கள் தூங்கும். திடாரென்று ஒரு நாள் காலையில் ஆரவாரமில்லாமல் பூத்துவிடும். அந்தப்பூ இரண்டு மாதம் வரையில் செடியில் வாடாமல் இருக்கும். பிறகு பழையபடி தூங்கப் போய்விடும். எது எப்பொழுது தூங்கும், எப்பொழுது பூக்கும் என்பது மர்மம்.

இந்தச் செடியில் ஒரு இலையை கிள்ளி நட்டுவிட்டால் போதும். அது முளைத்து இன்னொரு செடியாகிவிடும். எனக்குத் தொிந்து இலையில் இருந்து முளைக்கும் செடி இது ஒன்றுதான். இப்பொழுது என்னிடம் இருப்பது மாமா தந்த செடியின் மூன்றாவது தலைமுறை.

இந்தச் செடி சூாிய ஒளி நேராகப் படாத ஒரு ஜன்னல் விளிம்பில் கடந்த ஆறு வருடங்களாகவசித்தது. அதற்கு இந்த இடம் மிகவும் பிடித்திருந்தது. அதைத்தான் இன்று காணவில்லை. இடம் பெயர்ந்துவிட்டது.

வீட்டிலே வளர்ப்பதற்கு ஏதுவாக ஒரு சிறிய அந்தூாியம் செடியும் என்னிடம் இருந்தது. அழகான செடி. மொடமொடவென்று பூரணமாக விாிந்த இலைகள் நடுவே இந்தப்பூ இரத்தச் சிவப்பு நிறத்துடன் அண்ணாந்து பார்த்தபடி நிற்கும். முதல் வெளிச்சம் இதற்கு மிகவும் அவசியமானது. கிழக்குப் பார்த்து கிடக்கும் ஜன்னலில் இது இருந்தது.

ஒரு நாள் இந்தச் செடியையும் காணவில்லை.

என் வீட்டு தாவரங்களுக்கு பெயர்கள் இருந்தன. இவை எல்லாவற்றின் பெயரும் எனக்கு பாடம். பெயர் தொியாதவற்றுக்கு நான் எனக்கு வசதியான ஒரு பேரை சூட்டியிருப்பேன். ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் நான் ஒரு சுற்று வந்து அவற்றை பார்வையிடவேண்டும். அல்லாவிட்டால் அவை மனது ஒடிந்துபோகும்.

கூந்தலழகி என்று ஒரு கொடிக்கு பேர். ஒரு கன்னியின் கூந்தல் போல இது நாலாபக்கமும் படர்ந்துபோய் ஆடிக்கொண்டிருக்கும். (பிற்காலத்தில் இதனுடைய உண்மையான பெயர் maiden hair என்பது எனக்குத் தொியவரும்.) கொசுவலை போல மெல்லியதாக தொட்டதும் உடைந்துபோகும் தன்மை உடையது. கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் வெப்பமாகவும் இருக்கும். மிகவும் பொறாமை கொண்டது. இதற்குப் பக்கத்தில் வேறு ஒரு செடியும் இருக்கக்கூடாது. இந்தக் கொடி இப்போது சோபை இழந்துகொண்டு வந்தது.

துர் ஆவியொன்று இறங்கியதுபோல என்னுடைய வீடு ஒரு புதிய நெடியை கொடுக்கத் தொடங்கியிருந்தது. தாவரங்களும், பூமரங்களும் என்னிடம் அன்னியப்பட்டுவிட்டதுபோல காணப்பட்டன. காலையில் எழும்பும் போதெல்லாம் ஏதோ உற்பாதம் அன்று நடக்கப் போவதுபோல என் மனது அடித்துக்கொண்டது.

நான் மணமுடித்து மூன்று மாதங்கள்கூட ஆகவில்லை, செடிகள் ஒவ்வொன்றாக செத்துக்கொண்டு வரத்தொடங்கின. முதலில் போனது சூாிய வெளிச்சத்தை முதலில் தாிசிக்கும் அந்தூாியம்தான். ஒரு நாள் காலை அது வாடிக்கிடந்தது. அதைத் தொடர்ந்து மணிக்கொடிகள், குரோட்டன்கள், சிலந்தி செடிகள், கத்தாளை, பாட்டுப்பெட்டி பூமரம் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அவசரத்துடன் போயின. நான் ஏதோ சதி செய்துவிட்டதுபோல உணரத்தொடங்கினேன்.

இப்பொழுது தப்பி நிற்பது இரண்டே இரண்டுதான். புள்ளிக்குரோடனும், கூந்தலழகியும். நான் சிறுவயதாயிருந்தபோது மாமா கொடுத்து, இவ்வளவு காலமும் அருமையாக வளர்த்து வந்த ஆபிாிக்க வயலட்டும் ஒரு நாள் இறந்துவிட்டது.

நடு நிசி இருக்கும். யாரோ ‘தண்ணீர், தண்ணீர் ‘ என்று தீனமாக முனகியது காதிலே விழுந்தது. படுக்கையில் இருந்து எழுந்து நேரே கூந்தலழகியிடம் போனேன். விாிந்து, படர்ந்து வழக்கமாக தகதகவென்று இருக்கும் செடி சோர்ந்துபோய் கிடந்தது. நுனியில் இருந்து அதனுடைய நூல் போன்ற இலைகள் கருகிக்கொண்டு வந்தன. பக்கத்திலேயே கிடந்த தண்ணீரை ஒரு மிருகத்தைப் போலவோ, பறவையைப் போலவோ தானாகவே நகர்ந்து குடிக்க அதனால் முடியாது. யாராவது ஊற்றினால்தான் உண்டு. கொஞ்சம் தண்ணீரை சாய்த்து அதை தடவி விட்டேன். காலம் கடந்த முயற்சி என்று பட்டது.

நான் வேலை பார்த்த நிறுவனத்தில் சர்மிளா என்ற பெண் எஞ்சினியராக வேலைக்கு சேர்ந்திருந்தாள். இவளை எனக்கு ஜூனியராகப் போட்டிருந்தார்கள். பத்திரப்படுத்தப்பட்ட அழகு; திரவமான கண்கள். அறிவுத்தாகம் கொண்ட இவள் இலகுவாக சிாித்தாள். கையிலோ, கழுத்திலோ, காதிலோ ஒருவித ஆபரணமுமில்லை. கூந்தல் அடங்காமல் இருந்ததால் ஒரு ரப்பர் வளையத்தை போட்டு இறுக்கி அதை அடக்கி ஆண்டுகொண்டிருந்தாள். இவளை எனக்குப் பிடித்திருந்தது.

இனியும் தள்ளிப்போட முடியாமல் தொடர் கட்டட வேலையை மேற்பார்வை பார்க்க போனபோது அந்தச் சம்பவம் நடந்தது. போன வேலையை சீக்கிரமாகவே முடித்துவிட்டு சர்மிளாவும், நானும் திரும்பிக்

கொண்டிருந்தோம். அவளுடைய அருகாமையில் என் மனம் லேசாகவிருந்தது. கார் காட்டுப்பாதையில் விரைந்து கொண்டிருந்தது.

கிரேக்க புராணங்கள் பற்றியும், தேனீக்களின் நடனம் பற்றியும் நீண்ட நேரம் பேசினாள். எந்த விஷயத்தை எடுத்தாலும் அதை ஆழமாகவும், உணர்ச்சியோடும் அலசினாள். இவளிடத்தில் ஆச்சாியங்கள் பல இருந்தன. நேரம் போனதே தொியவில்லை.

திடாரென்று ‘நிறுத்துங்கள், பிளீஸ் ‘ என்றாள். கிறீச்சென்று கார் நின்ற பிறகுதான் அவள் கத்தியதன் காரணம் புாிந்தது. காட்டு முயல் ஒன்று நடு வீதியில் லொறியிலோ, காாிலோ அடிபட்டு, சதை எல்லாம் தரையோடு அரைபட்டு ரத்தம் உறைய செத்துப்போய் கிடந்தது.

கார் கண்ணாடியில், ‘தூரத்து பிம்பங்கள் அருகாமையில் தொியும் ‘ என்று எழுதியிருந்தது. அந்த முயலின் சடலம் கண்ணாடியில் வெகுநேரம் அருகில் தொிந்தது. பிறகு திடாரென்று விளிம்பில் மறைந்துவிட்டது. அவள் மெளனமாக வந்தாள். கண்கள் கவிழ்ந்திருந்தன. அடிக்கடி இமைகளை வெட்டிக்கொண்டிருந்தாள். ஒரு நொடியில் உற்சாகம் எல்லாம் வடிந்து விம்மி அழத்தொடங்கிவிட்டாள்.

‘சர்மிளா, இது ஒரு விபத்து; இதைப் பொிதுபடுத்தலாமா ? என்றேன்.

‘இது விபத்தல்ல, கவனக்குறைவு. இந்த மனுச சாதி ஒருபோதும் மற்ற ஜீவராசிகளுடன் இந்த பூமியை பகிர்ந்துகொள்ள மாட்டாது. ‘

‘ஏதோ நடந்துவிட்டது. இப்ப அழுது என்ன பிரயோசனம். கண்ணீரை துடையும் ‘ என்று சொல்லிவிட்டு என் கை விரல்களை மேக்கப் இல்லாத அவளுடைய முகத்திற்கு சமீபமாக கொண்டுபோனேன்.

அப்பொழுதும் அவள் தணியவில்லை. ‘ இந்த மிருகங்களும், தாவரங்களும் மனிதர்களை எவ்வளவு வெறுக்கின்றன தொியுமா ? மனிதனைக் கண்டாலே மிருகங்கள் ஓடி ஒளிந்துகொள்கின்றன. சில தாவரங்கள் வேண்டாத மனிதனின் மூச்சுக் காற்று பட்டாலே வாடிவிடும். எவ்வளவு கொடுமை! ‘

நல்ல சிவப்பு மாம்பழத்தில் ஒரு சின்ன அழுகல் விழுந்ததுபோல ஒரு மச்சம், அதைத் துடைத்துவிட கையைத் தூண்டவைக்கும் விதமாக, அவளது வலது கன்னத்தின் நடுவில் இருந்தது. மாட்டின் சருமத்தில் தொடமுன்பே சதை துடிப்பதுபோல என்னுடைய எண்ணத்தை உணர்ந்ததுபோல அவளுடைய கன்னம் அந்தக்கணம் துடித்தது. கண்ணீர் அவள் முகத்தில் வழிந்தோடியது. சேலை தாவணி படபடவென்று கட்டுக்கடங்காமல் அடித்தது. காட்டுக்காற்று அவள் மேல் பட்டு என்னிடம் வரும்போது புது வாசனையுடன் வந்தது. கோபித்துக் கொண்டதுபோல அவள் மார்புகள் தனித்தனியாக தள்ளி நின்றன. அவள் உதடுகள் இன்னமும் ஒரு சிறு பறவையின் இதயம்போல துடித்துக்கொண்டிருந்தன.

வளையல் இல்லாத அவளுடைய கரங்களைப் பார்த்தேன். மெல்லிய ரோமம் படர்ந்துபோய் அவளுடைய நீண்ட விரல்களில் முடிந்தது. மெல்ல அந்த விரல்களை தடவி அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளுடன் தங்கிவிடவேண்டும் போல எனக்கு பட்டது.

ஆனால் அதற்கு இப்போது நேரமில்லை. அதனிலும் முக்கியமான ஒரு வேலை எனக்கு காத்திருந்தது.

சர்மிளாவை இறக்கிவிட்டு அவசரமாக என்னுடைய வீடு வந்து சேர்ந்தேன். ஞாபகமாக கதவை திறந்து மூடாமலேயே விட்டேன். என்னுடன் வந்த சூாிய வெளிச்சம் வாசலிலேயே நின்றுவிட்டது. வீட்டினுள்ளே வெப்பவாடை வீசியது. புள்ளி குரோட்டன் இலை எல்லாம் உதிர்த்து வெறும் தண்டாக நின்றது. கூந்தலழகி முற்றிலும் செத்துவிட்டது. பசுமை நிறைந்திருந்த வீடு இப்போது முற்றிலும் ஒரு காடாக மாறியிருந்தது.

நான் தயாராகினேன். சமையலறையில் சென்று கோப்பி செய்தேன். கையில் சிறு நடுக்கம். எந்த நேரத்திலும் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கலாம். நான் தயாராகினேன். சாய்வு நாற்காலியில் கால்மேல் கால் போட்டு சாய்ந்து உட்கார்ந்தேன். கார் கதவு அடித்து சாத்தும் சத்தம். நடைபாதையில் நடக்கும் ஒலி. கோப்பையை கையிலே எடுத்தேன். என்னுடைய ஆள்காட்டி விரலும், பெருவிரலும் தேவைக்கு அதிகமான பலத்துடன் அந்தக் கோப்பையின் சிறிய கைப்பிடியை அழுத்திப் பிடித்தன. சாவதானமாக கோப்பியை உறிஞ்சிக் குடித்தேன், சிறு நடுக்கமும் தொியாமல். கதவு வீசித் திறந்தது. நான் தயாராகினேன்.

கர்வமான முகத்துடன் என் கணவர் என் முன்னால் வந்து நின்றார். நான் அசையவில்லை. மிக அமைதியாக, ‘ சுமந்திரன், உங்களுடன் கொஞ்சம் பேசவேண்டும் ‘ என்றேன்.

***

muttu@earthlink.net

Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்