2006 நவம்பர் 22 ராம்தாஸைப் பாராட்டிய ரஜனி

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

விசிதா


திரையுலகம் நடத்திய பாராட்டு விழாவில் ரஜனி காந்த் உட்பட அனைவரும் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர்கள் டாக்டர்.ராமதாஸ், ஜி.கே.வாசனைப் பாராட்டினார்கள். உடல் இங்கே உள்ளம் அங்கே என்று கலைஞர் கருணாநிதி அனுப்பியிருந்த கவிதையை அமைதியாக அனைவரும் கேட்டனர். நிகழ்ச்சியின் இறுதி வரை ஸ்டாலினும், இரு துணை முதல்வர்களும் இருந்தனர். நிகழ்ச்சியின் துவக்கத்தில் மூன்று நடிகைகளுக்கு தமிழ்ப் பெயர்களை ராமதாஸ் சூட்டினார். இது போல் நடிகர்களுக்கும் தூய தமிழ்ப் பெயர் சூட்டும் நிகழ்ச்சி விரைவில் நடைபெறும் என்றும் கூறினார். இது நடிக, நடிகையர் விருப்பத்தின் பெயரில் செய்யப்படுவதாகக் கூறினார்.

சோனாலி ஷா என்ற நடிகைக்கு தமிழ்த்தங்கம் என்ற பெயர் சூட்டுவதுடன் நிகழ்ச்சி துவங்கியது. சோனாலி என்ற பெயரில் வேறு சில நடிகைகளும் இருப்பதால் நடிக்கும் மொழிக்கு ஒரு பெயர் வைத்துக்கொள்வது தனக்கு வசதிதான் என்று அவர் குறிப்பிட்டார். மேலும் தன் முகத்தைப் பார்த்தாலே தான் யார் என்பதை ரசிகர்கள் அறிந்து கொள்ள முடியுமென்பதால் தனது வெவ்வேறு பெயர்களால் குழப்பம் வராது என்றார்.

ஸ்டாலினைப் பார்க்கும் போது கலைஞரைப் பார்ப்பது போலிருப்பபதாக குறிப்பிட்ட ரஜனி ஸ்டாலின் நடிக்க வராதது அரசியலுக்கு லாபம், திரையுலகிற்கு நஷ்டம் என்றார். ரஜனி தான் ஸ்டாலின் நடித்த தொலைக்காட்சித் தொடரை விரும்பிப் பார்த்தாக குறிப்பிட்டார். அந்தப் பாத்திரத்தில் அவர் நடிப்பு தனக்கு மிகவும் பிடித்ததாகவும் கூறினார். அவர் டாக்டர் ராமதாஸின் விடா முயற்சியையும், தைரியத்தினையும் பாராட்டினார். மேலும் வாசன் கருப்பையா மூப்பனாரின் கனவுகளை நிறைவேற்றுகிறார் என்றார். முன்னதாக திரையுலகின் சார்பில் ஒரு பெரிய மாலையை ரஜனி, கமல்,விஜயகாந்த, சரத் குமார் கூட்டாக ஸ்டாலினுக்கு அணிவித்தனர்.

நிகழ்ச்ச்யில் ஒரு பாடல் ஐயா ராமதாஸ் நீங்க் இப்போ எங்க பாஸ் பாஸ் என்று துவங்கியது. சத்தியராஜ் நடித்து கடலோரக் கவிதைகள் படத்தில் இடம் பெற்ற பாடலின் மெட்டில் அமைந்திருந்த இப்பாடலுக்கு நடிக நடிகையர் ஆடியதை ராமதாஸ் வெகுவாக ரசித்தார். பூம்புகாரில் கண்ணகி பாத்திரம் பேசிய வசனத்தை நடித்துக்காட்ட வந்த நடிகை அரைகுறை ஆடையுடன், தலையில் தங்க நிற விக் வைத்திருந்தார். இப்படிப் பொருந்தாத ஆடை அலங்காரத்துடன் அவர் நடித்த போது அரங்கமே சிரிப்பிலாழ்ந்தது. உடனே அவர் ஆடை, தலை அலங்காரம் மாற்றி வந்தார். ஆனால் பிண்ணனி குரல் கொடுத்தவருக்கு இது தெரியாததால் சிறிது நேரம் அவர் குரல் மட்டுமே ஒலித்தது.

அன்று செருப்பு தைத்த குடும்பத்தில் பிறந்து உயர்ந்த பதவிக்கு வந்தார் ஒரு ஸ்டாலின் தமிழுக்கு சிறப்பு சேர்த்த ஒருவரின் வாரிசு நம் ஸ்டாலின் அவருக்கு இருப்போம் நாம் செருப்பாய் என்று துவங்கும் கவிதையை விவேக் கரகர குரலில் வாசித்தார்.

இதில் இடம்பெற்ற பல கலை நிகழ்ச்சிகள் 2004 ல் ஜெயல்லிதாவைப் பாராட்டி நிகழ்த்தப்பட்ட விழாவின் போது மேடையேற்றப்பட்டவற்றின் வேறு பதிப்புகள், சில வார்த்தைகளையும், மெட்டுகளையும் மாற்றி மீண்டும் இப்போது அரங்கேறியுள்ளன என்று பெயர் வெளியிட விரும்பாத நடன இயக்குனர் கூறினார்.

மாலை ஏழு மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி இரவு 11.45க் கு நிறைவடைந்தது. இறுதி வரை ஸ்டாலின் இருந்தார். பத்து மணியளவில் வாசனும்,ராமதாஸும் வெளியே சென்றனர்.

இந்த விழாவில் திரையுலகினர் முன்வைத்த கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலிக்கும் என்றார் ஸ்டாலின். சில கோரிக்கைகளை மத்திய அரசுடன் கலந்தாலோசித்த பின்னரே அரசின் முடிவினைச் சொல்ல முடியும் என்றார்.

திரைப்படத்துறையினர் முன் வைத்த முக்கிய கோரிக்கைகள்

கோடம்பாக்கம், விருகம்பாக்கம் உட்பட சிலபகுதிகளை கலைமாநகரம் என்று அறிவித்து, அதை திரையுலகினரின் நிர்வாகத்தில் விட வேண்டும்.

கேளிக்கை வரியினைக் குறைக்க வேண்டும்

பொது விநியோக்த் திட்டத்தில் குடும்பத்திற்கு அளிக்கப்படும் மான்யத்தின் ஒரு பகுதி திரையரங்குகளில் சலுகை விலையில் டிக்கெட் வாங்க உதவுவதாக இருக்க வேண்டும். அரிசிக்குப் பதிலாக சினிமா டிக்கெட் பெற்றுக் கொள்ளும் வகையில் அதில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த கட்டணத்தினைக் குறைக்க வேண்டும். படப்பிடிப்பினை பார்க்கும் பார்வையாளர்களிடமிருந்து பார்வைக் கட்டணம் வசூலிக்கும் உரிமை வேண்டும்.

தமிழ் நாட்டில் விசிடி,டிவிடி பிளேயர்களைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும்.

திரையரங்குகளுக்கு விதிக்கப்படும் மின்சாரக் கட்டணம் விவ்சாயிகள் செலுத்தும் கட்டண அளவினை விட 10% அதிகம் இருக்க வேண்டும்.

திரைத் தொழிலும் ஒரு தொழில் என்பதால் அரசு தொழில் வளர்ச்சி அமைப்புகள் மூலம் திரைப்படம் எடுக்க, தியேட்டர் கட்ட குறைந்த வட்டிக்கு கடன் தர வேண்டும்.

இந் நிகழ்ச்சியிலிருந்து சில காட்சிகள் தமிழரசு தயாரிக்கும் லவ் இஸ் லவ் என்ற படத்தில் இடம் பெறவிருப்பதால் முழு நிகழ்ச்சியும் படமாக்கப்பட்டது.

http://wichitatamil.blogspot.com

Series Navigation

விசிதா

விசிதா