“பயன்பாடு”

This entry is part [part not set] of 45 in the series 20071108_Issue

உஷாதீபன்


ஒவ்வொரு முறையும் எழுத அமரும்போது இந்தப் படைப்பினால் நாம் ஏதேனும் நல்ல செய்தியை, நற்சிந்தனையைப் படிப்பவர்களுக்கு ஏற்படுத்த முடியுமா என்பதாகவே நான் சிந்திக்கிறேன்.
மனதில் தோன்றியிருக்கும் கரு அதற்கு உகந்ததுதானா அல்லது அதை ஒதுக்கி விடுவோமா? என்றுதான் என் சிந்தனை போகிறது.
நான் வளர்ந்த விதம்;, என் தாய் தந்தையரோடு இயைந்த என் வாழ்க்கை, கண்கூடாகக் கண்ட,அனுபவித்த வறுமை, அதன் கோரப்பிடி, அத்தனை கஷ்டத்திலும், துன்பத்திலும் செம்மை மாறாமல், தடம் பிறழாமல் வாழ்ந்த என் தாய் தந்தையரின் வாழ்க்கை முறை இவை எல்லாமும்தான் இதற்குக் காரணம் என்று நான் உறுதியாகச் சொல்வேன்.
வறுமையும், அதன்பாலான செம்மையான ஒழுக்கமும், மனிதனை அதிகச் சுயமரியாதை உள்ளவனாய் வளர்க்கிறது.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சிறுவயதில், படிக்கும் காலத்தில் ஒரு சம்பவம்.
என் தகப்பனார், மறுநாள் நடக்கவிருக்கும் தன் தந்தையின் வருடாந்திர நினைவு தினத்திற்குப் பணமில்லையென்று– ஒரு நபரைக் குறிப்பிட்டு—அவரிடம் சொல்லியிருப்பதாகக் கூறி, உடனேபோய் ஒரு நூறு ரூபாய் வாங்கி வரும்படி என்னை அனுப்பினார்.
பணம் வாங்கச் சென்று கேட்டநான் அந்த ஆள், பக்கத்துக் கடையில்; போய் டீ வாங்கிவா என்று சொன்னதை மறுத்து – முடியாது என்று வந்து விட்டேன்.
கடன் தரும் காரணத்திற்காகவே,அவன் என்னை ஏவலாள் ஆக்கும் வேலை அப்போதே எனக்குப் பிடிக்கவி;ல்லை. இரண்டாவது, அந்த மாதிரி வேலைக்கெல்லாம் நான் ஆள் இல்லை என்பதான எண்ணம் அப்போதே என் மனதில் படிந்து போயிருந்ததுதான்.
அப்பாவின் நற்குணத்திற்காகவும், நன்னடத்தை, ஒழுக்கம், கட்டுப்பாடு இவை கருதியும்-அவருக்காகப் பணம் கிடைத்தது என்பது வேறு. அந்த நிகழ்வு அப்பாவுக்குத் தெரியாது. கடன் தந்தவரும் அதைச் சொல்லவில்லை. அதுகூட அப்பாவின்பாற்பட்ட அவரது அபிமானம் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் அதே மனப்பாங்குகொண்ட நான் எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவேளையில் மேற்கொண்டு கல்லூரி படிக்க வசதியில்லாத நிலையில், தட்டச்சுக் ;கல்வி பயில வேண்டி முனைந்தபோது-அந்தக் கல்விக்குரிய கட்டணத்தையும் நானே சம்பாதித்துச் செலுத்த வேண்டி இருந்த நிலையில் ஒரு மாவு மிஷின் இயந்திர சாலைக்கு வேலைக்குப் போனேன்.
அங்கே இதே டீ வாங்கிவரும் வேலையை மனமுவந்து செய்தேன். அன்றைய நிலையில் எனக்கு என் கல்வியும்-பிறகு பலப்பல தேர்வுகள் ;எழுதி எப்படியாவது அரசுப் பணிக்குச் சென்றாக வேண்டும் என்ற வெறியுமே மனதில் நின்றன. அந்த முதலாளி கொடுக்கும் நாற்பது ரூபாய் சம்பளம் அன்று எனக்கு அவ்வளவு பெரிது. அங்கே என் சுயமரியாதை தன் படத்தைத்தானே சுருட்டிக் கொண்டது. அது காலத்தின் கட்டாயமாகிப்போனது அன்று.
ஆனால் அந்த நிகழ்வும்-ஒழுக்கம்-கட்டுப்பாடு என்ற எல்கைகளுக்கு அடி பணிந்தே நிகழ்ந்தவைகள் என்பதை மறுக்க இயலாது. இதை நான் இங்கே வலியுறுத்திச் சொல்வதற்கான காரணம் இதுதான்.
சொந்த வாழ்க்கையில் ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், இருப்பவன்தான்-சமூகத்துக்கு நல்ல செய்திகளைத் தர முடியும். சமூக மேம்பாட்டுக்கு உதவ முடியும்.
நமது உறவு முறைகளிலும், நமது குடும்ப வாழ்க்கையிலும், சமூக நிகழ்வுகளிலும், எத்தனையோ நல்ல விஷயங்கள் அடியொட்டிப் போய்க் கிடக்கின்றன. அவையெல்லாம் நம்மைப் பண்படுத்திக் கொள்ள, மேம்படுத்திக் கொள்ளப் பெரிதும் ;உதவும் வகையிலான செய்திகளை நமக்குத் தந்து கொண்டேயிருக்கின்றன. அவைகளால் உந்தப்படும்பொழுது, அந்தத் தாக்கம் நம்மை ஆட்டி வைக்கும்போது – வடிகாலாக அதைச் சமூகத்துக்குச் சொல்ல வேண்டும் என்ற அவா என்னை உந்தித் தள்ளுகிறது. அப்பொழுதுதான் நான் அதை மனித நேயம் மிக்க உயர் சிந்தனைகளாக-எளிமையான வழியில் முன் வைக்கிறேன்.
படிக்கும் ஒவ்வொருவரும் ஒரு படியேனும் சுய சிந்தனையில் முன்னேற வேண்டும். எல்லா மனிதருக்குள்ளும் ஈரமான் பகுதி என்று ஒன்று உண்டு. அடிப்படையில் எல்லோரும் நல்லவரே. அந்த ஈரமான பகுதியில் ஊற்றுக் கிளம்ப வேண்டும். நாமும் இம்மாதிரி இருந்திருக்கிறோம், இருக்க வேண்டும் என்ற உணர்வு எழவேண்டும். அப்பொழுதுதான் ஒரு படைப்புக்கு ஓரளவு; வெற்றி கிட்டுகிறது என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
பொழுது போக்காக எழுதுவதானால் மனதுக்குள் திருப்தி எழுவதில்லை. எழுத்துத் திறமையை நல்ல காரியத்திற்குப் பயன்படுத்தினால் மனதுக்கு நிறைவு ஏற்படுகிறது. படிப்பவர்களின் சிந்தனையைக் குறைந்தது சில மணிநேரங்களாவது கட்டிப் போடுகிறது. அங்கேதான் என் படைப்பின் வெற்றியே இருப்பதாக நான் நினைக்கிறேன்.


ushadeepan@rediffmail.com

Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்