“கலைஞர் தொலைக்காட்சி” மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்

This entry is part [part not set] of 32 in the series 20070531_Issue

கரு.திருவரசு


தமிழ்நாட்டு முதல்வர் அவர்களுக்கு ஒரு மடல், அதுவும் ஏன் திறந்த மடலாக எழுதப்படுகிறது என்பதற்கான காரணத்தையும் இந்த மடலை எழுதுபவன் யார் என்னும் இரண்டு செய்திகளையும் முதலில் சொல்லிவிட்டுத் தொடரவேண்டும் எனக் கருதுகிறேன்.

ஒரு நாட்டு முதல்வருக்கான மடல் – ஒரு தனிப்பட்டவன் எழுதும் மடல் உடனே அவர் கவனத்துக்குச் சென்று சேர்ந்துவிடுமா என்ற ஐயமும் அவசரமுமே காரணம். இதுபோன்ற காரியத்தில் ஏற்கெனவே நடந்த ஒரு செயற்பாடும் ஒரு காரணம்.

1. 1998ஆம் ஆண்டுவாக்கில் தமிழ்நாட்டு அரசில் தமிழ்த்துறைக்குப் பொறுப்பான அமைச்சராய் முதல்வரால் அமர்த்தப்பட்டிருந்த அமரர் தமிழ்க்குடிமகன் தமிழ் தொடர்பான பணிகளை வேகமாகத் தொடங்கிச் செயற்படுத்திக்கொண்டிருந்தபோது, தமிழக அரசின் தொடர்புப் பணிகள் தமிழில் நடைபெறுவதற்குக் கணினியிலும் தமிழ் என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக அமைச்சருக்குத் தமிழிலேயே மின்னஞ்சல் அனுப்பலாம் என்பதும் அறிவிக்கப்பட்டது.

அப்போது, தமிழ் நெடுங்கணக்கில் வரும் ரகர (ர,ரா,ரி) வரிசை, அச்செழுத்துகளில் வரும்போது ஏற்படும் ஒரு குறையைச் சுட்டி அமைச்சருக்கு ஒரு மின்னஞ்சல் விடுத்தேன். (அக்குறை இன்றுவரை தொடர்கிறது) நான் எழுதிய அந்த மடல் அவருக்குச் சேர்ந்ததா, சேரவில்லையா என்பதே தெரியவில்லை. அமைச்சரும் பதவிக்காலம் முடிந்து பின்னர் அமரராகிவிட்டார்.

2. இந்த மடல் எழுதுபவனைப் பற்றிய சிறு அறிமுகம். தி.பி.2028ஆம் (1997) ஆண்டு எங்கள் நாட்டுக் கவிஞர் முரசு.நெடுமாறன் (இப்போது முனைவர் முரசு.நெடுமாறன்) தம் அரிய முயற்சியால் வெளியிட்ட, மலேசியாவின் ஒரு நூற்றாண்டுக் கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய “மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” நூலுக்குத் தாங்கள் வாழ்த்துரை எழுதிப் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். அந்த உரையில், நூலிலிருந்து சில எடுத்துக்காட்டுக் கவிதைகளைச் சுட்டும்போது,

இந்தப் பெருந் தொகுப்பில் ஒரு கவிஞன் பாடுகிறான்; இல்லை கதறுகிறான்.
“தமிழனுக்குத் தனைப்பெற்ற தாய்தெரியவில்லை!
தன்னோடு பிறந்தவனின் முறைவிளங்க வில்லை!”
இந்தப் பெருமூச்சின் இறுதியில், அதே கவிஞன் எப்படி அழுகிறான் பாரீர்!
“இமயத்தில் கொடிபொறித்த இனமிவனாம் அந்தோ!
இவனோடு பிறந்திடநான் என்னவினை செய்தேன்?”

என்றொருவனை எடுத்துக்காட்டி, அவன் பாடுகிறான், கதறுகிறான், அழுகிகிறான் என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே; அவன்தான் இந்த மடலை எழுதுகிறான்.

“கலைஞர் தொலைக்காட்சி”
ஐயா!

“கொடுமை கொடுமையென்று கோயிலுக்குப் போனால்
அங்கே ரெண்டு கொடுமை கால்களில் சலங்கை கட்டிக்கொண்டு ஆடிக்கொண்டிருந்ததாம்” என்னும் பழமொழி சொல்வதுபோல, தமிழ்த்திரைப்படங்களில் பாடல் காட்சிகளில் வரும் படுக்கை அறைக் காட்சிகளுக்கும் படக்கதையின் தலைவிகள் தலைவனை விரட்டி விரட்டி அவன்மேல் விழுந்துபுரளும் களியாட்டக் காட்சிகளுக்கும் போகாமல் தொலைக்காட்சிக்கு வந்தால், தமிழ் நாட்டுத் தொலைக்காட்சி ஒளிபரப்புகளில் அரங்கேறித் தாண்டவமாடும் தமிங்கிலத் திமிங்கிலம் உலகத் தமிழர்களுக்குச் செய்யும் கொடுமைத் தாண்டவம் பெருங்கொடுமையாக இருக்கிறது.

சன் டிவி, செயா டிவி, அடி டிவி, முடி டிவி போன்ற பல டிவிக்களின் வரிசையில் சேர்ந்துவிடாமல் தங்கள் பெயரிலே ஒரு தமிழ்த் தொலைக்காட்சி – தமிழத் தொலைக்காட்சி வருகிறது என்பதை வரும் முன்னறிவிப்புகள் காட்டுகின்றன. இன்றுகூட (27.05.2007) இணையத்தில் வரும் தமிழகத்தின் நாளேடுகளில் ஒன்றான “தினமணி”யில் பாரத்தேன். சென்னை அறிவாலயத்தில் தொடங்கப்பட்டுள்ள புதிய தொலைக்காட்சி அலுவலக அறிவிப்புப் பலகை “கலைஞர் தொலைக்காட்சி” என என்னோடு தமிழ் பேசியது.

ஐயா!

தமிழ்நாட்டுத் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு பெரிய வரலாற்றுத் திருப்பத்தை, வரப்போகும் “கலைஞர் தொலைக்காட்சி” ஏற்படுத்துவதன் வழி தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, உலகத் தமிழ்மக்கள் அனைவரும் கடைத்தேறத் தாங்கள் உதவவேண்டும்.

தொலைக்காட்சி என்பது இன்று மிகமிக வலிமை வாய்ந்த ஓர் ஊடகம். அதற்கு வாணிகம்தான் முதன்மை என்றாலும், தமிழை வாணிகப் பொருளாக்கிவிடலாமா?

தங்கள் ஆட்சியிலே தமிழ்நாடு வளர்ந்து உயர்ந்துகொண்டிருப்பதை இந்த ஆண்டின் தொடக்கத்திலே சென்னை வந்தபோது கண்டேன். தொலைக்காட்சி வரிசையிலே “மக்கள் தொலைக்காட்சி” என்றொரு நல்ல தமிழ்த் தொலைக்காட்சியைக்கூட அங்கே கண்டு மகிழ்ந்தேன்.

ஐயா!

சங்கத் தமிழ் தந்த தாங்கள், சங்கத் தமிழை – நம் தங்கத் தமிழை இமய முடியிலன்று, உலக முடியிலேயே ஏற்றிவைக்கக்கூடிய இளைஞர், இந்தக் கலைஞர் – மாண்புமிகு தமிழக முதல்வர் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். “இது உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை”

கலைஞர் தொலைக்காட்சி வருகிறது!
அது தமிழத் தொலைக்காட்சியாக வரவேண்டும், வரும், வந்துகொண்டிருக்கிறது!

தமிழ் முதல்வர் கலைஞர் தொலைக்காட்சி வருகிறது!
தமிங்கிலத்தைத் தவிடுபொடியாக்கக் கலைஞர் தொலைக்காட்சி வருகிறது!

தமிழினத்தை முன்னிறுத்தும் வண்ணத்தமிழ்க் கலைஞர் தொலைக்காட்சி வருகிறது!

தமிழ் உலகமே வரவேற்கிறது!

இவ்வண்ணம்,

கரு.திருவரசு,
ஒரு மலேசியத் தமிழன்.

“வெல்லத் தமிழினி வெல்லும்”

E-Mail: thiru36@streamyx.com

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு