ஹெய்ட்டியின் கண்ணீர்
யூசுப் ராவுத்தர் ரஜித்

ஒரு குலுக்கல்தான்
குப்பை மேடானது
குறுநகரம் ஹெய்ட்டி
ஒவ்வொரு வாழ்க்கையும்
தொடர் கதைதான்
இரண்டு லட்சம் கதைகளுக்கு
இரண்டே விநாடியில்
முற்றுப் புள்ளி
ஒரு ரொட்டிக்கு
ஓராயிரம் காக்கைகள்
குடிக்க நீரில்லை
வடிக்கக் கண்ணீரில்லை
தீவாகிப்போனது ஹெய்ட்டி
நீராலல்ல நெருப்பால்
இரும்பையும் கரைக்கிறது
ஹெய்ட்டியின் கண்ணீர்
பாழானதற்கு பலம் சேர்க்க
பால் ரொட்டி வாங்க
பணம் கேட்கிறது உலகம்
உபரி நிதிகளெல்லாம்
நதிகளாய்ப் பாய்கிறது
ஹெய்ட்டி நோக்கி
ஒரு குவளை நீரானாலும்
நாமும் ஊற்றுவோம்
இந்தக் காருண்யம்
செத்திருந்தால் என்றோ
கருமாதி நடந்திருக்கும்
மனித இனத்துக்கு