ஹாங்காங்கில் இந்தியப் பண்பாட்டு விழா

This entry is part [part not set] of 31 in the series 20100319_Issue


ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் மார்ச் 13ஆம் தேதியன்று இந்தியப் பண்பாட்டு மாலை எனும் கலை நிகழ்வை அனைவரும் ரசிக்கத்தக்க வகையில் நடத்திக் காட்டியது. இந்தியாவை விட்டு பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வாழும் இந்தியர்கள் அனைவரும் தத்தம் பண்பாட்டை மறவாமல் நினைவு கூர்வதற்காகவும் இளைய சழுதாயத்திற்கு நம் கலாச்சராத்தின் சாரத்தைக் காட்டுவதற்காகவும், ஹாங்காங்கில் வாழும் இந்திய சழுகத்தினரை இந்நிகழ்ச்சியில் பங்குகொள்ள அழைப்பு விடுத்தது. ஹாங்காங் வங்காளச் சங்கம், மஹாராஷ்ர மண்டல், கன்னட சங்கா ஹாங்காங், ஸ்ரீ சக்தி அகாடமி, நாட்டிய சிகரா மற்றும் ஆந்திரா, கேரளா, பஞ்சாப், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து பாடல், நடன நிகழ்ச்சிகளைத் தந்து அனைவரையும் மகிழ்வித்தனர்.
அனுராதா முகுந்தன், வர்ஷா மணிகண்டன் நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்க, முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. விநாயகருக்கு வந்தனம், மஹாராஷ்ராவைச் சேர்ந்த மேகனா அழகிய நடனம் மூலம் செய்தார். தமிழ்ப் பண்பாட்டுக் கழகத் தலைவர் திருமதி சுகந்தி பன்னீர்செல்வம் வரவேற்புரை வழங்க நிகழ்ச்சி களை கட்ட ஆரம்பித்தது.
பாரம்பரிய நடனங்களான பரதம், குச்சுப்புடி, மோகினியாட்டம் மற்றும் கதக், பல்வேறு மாநிலங்களின் கிராமிய நடனங்கள், பாடல்கள் என்று இரண்டு மணி நேரம் ஒரே கலைக் கொண்டாட்டம் தான்.
கேரளாவைச் சேர்ந்த தன்யா மோகினியாட்டம் ஆடி அனைவரையும் கேரளாவிற்கு அழைத்துச் சென்றார். நாட்டிய சிகரா மாணவியர் சாக்ஷி கௌசிக் மற்றும் வைஷ்ணவி கௌசிக் நடனமாடினார் என்ற நடராஜர் நர்த்தனத்தையும்;, கன்னட சங்கத்தைச் சேர்ந்த ரூபா கிரண், சுஷ்மா பிரதீப் இனிய மேற்கத்திய இசைக் கலவையில் கிருஷ்ணனின் லீலைகளையும் பரத்தின் மூலம் அபிநயித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். சோனியா, சோனல், ஜானவி மூவரும் கதக் நடனத்தை ஆடி தங்கள் கலைதிறத்தைக் காட்டினர். வினிதா மேத்தா சரஸ்வதி துதியை கதக் நடனம் ஆடி, நடனத்திற்கு வயதொரு தடையில்லை என்பதைக் காட்டினார். ஹரி ஓம் யோகா பயிற்சியாளராக இருந்த போதும், தன்னுடைய குச்சுப்புடி நடனத் திறமையை, சீனர்களுக்குக் கற்றுக் கொடுத்து, அவர்களில் ஆறு பேர்களை மேடையேற்றியது, இந்தியர்கள் மத்தியில் நம் கலையின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டும் படியாக அமைந்தது.
நாட்டுப்புற நடனங்களுக்கு அதிகமான வரவேற்பு இருந்தது என்று சொல்லலாம். மஹாராஷ்ர மண்டல் தங்கள் கலை வடிவை அழகிய முறையில் காலை, மதியம், மாலை என்று மூன்று காலங்களுக்கும் ஏற்ற பாடல் நடன அமைப்புகளைக் கொண்டு வெளிப்படுத்தினர். திருமதி சங்கீதா, லாவணி என்று நடன முறையை ஆடி, பார்வையாளர்களைத் தன்வசப்படுத்தினார். தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தைச் சேர்ந்த சிநேகா, மயிலாட்டம், கரகாட்டம் மற்றும் காவடியாட்டத் எ;னறு அத்தனை ஆட்ட வகைகளையும் விஜயலஷ்மி நவநீதகிருஷ்ணனின் பாடலுக்கு ஆடி பார்வையாளர்களை ஆரவரிக்கச் செய்தார். வங்காளத்தைச் சேர்ந்த ஸ்ரீஜா சக்ரபர்தி வங்காள நாட்டுப் பாடலுக்கு ஆடி மகிழ்வித்தார். ஹரி ஓம்மின் மூன்று சீன மாணவியர் ஆந்திராவைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினர். மூன்று சிறுவர்கள் பாங்கரா நடனத்தை ஆடி பஞ்சாப் மாநிலத்திற்கே இட்டுச் சென்றனர். கன்னட சங்கத்தைச் சேர்ந்த பாபு குழுவினர், கன்னட நாட்டுப்பாடலுக்கு ஆடி, அவர்களது கலைநயத்தை எடுத்துக் காட்டினர்.
நடனங்களுக்கு இடையே பாடல்கள் இனிமை சேர்த்தன. கனகா பாலசுப்ரமணியன், உமா அருணாசலம், ரூபா தெலுங்கிலும், கன்னட சங்கக் குழு கன்னடத்திலும், சோகினி பால் வங்காளத்திலும், சுதா நாயர் மலையாளத்திலும், பிரீதி தமிழ், கன்னட, ஹிந்தி மொழிகளிலும் பாடி அசத்தினர்.
வங்காள சங்கத்தினர் அனந்தசங்கர் என்ற இசை மேதைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இசைக்கு குழு நடனங்களை அமைத்து, ஆடிக் காட்டினர்.
நிகழ்ச்சியின் போது, ஜெ. வி. ரமணி, முன்னாள் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத் தலைவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்று இந்தியா திரும்பும் காரணமாக, அவருக்கு பிரிவுபசாரமும் பாராட்டும் செய்யப்பட்டது. திரு வெங்கடராமன், தமிழ்ப் பண்பாட்டுக் கழகத் துணைத் தலைவர், ரமணி அவர்கள் கழகத்திற்குச் செய்த பணிகளைப் பட்டியலிட, திரு. யூனுஸ் அவர்கள் பொன்னாடை போர்த்தி அவரைப் பாராட்டினார். ஜெ. வி. ரமணி அவர்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். திருமதி வித்யா ரமணி, பாடல் ஒன்றைப் பாடி, ஹாங்காங் நண்பர்களிடமிருந்து விடை பெற்றார்.
விழாவில் இந்தியர்கள், சீனர்கள் என்று 300 பேர்கள் வரை கலந்து கொண்டு, பல கலாம்சங்களைப் பரிமாறிக் கொண்டு மகிழ்ந்தது கழகத்தாரை மிகவும் உற்சாகம் கொள்ளச் செய்தது.

















Series Navigation