ஸீஸன் கச்சேரியும் தொய்வு அளவையும்

This entry is part [part not set] of 41 in the series 20060616_Issue

அருண் நரசிம்மன்


தற்கால சங்கீத கச்சேரிகள் பெரும்பாலானவற்றில், குறிப்பாக ஸீஸன் சமயத்தில் சென்னையிலும் சென்னையைச் சார்ந்த பகுதிகளிலும் நடப்பவைகளில், சில பொது அம்சங்களைக் காணலாம்.

உதாரணத்திற்கு, இக்கச்சேரிகள் 1 வர்ணம், 1 சப் மெயின், 1 மெயின் உருப்படி, 1 சொதப்பல் முயற்சி, 1 அபார முயற்சி, 3 துக்கடா, 2 பஜன், 1 மங்களம் ஆகிய பத்துப்பாட்டு அடங்கிய, எல்லா வகை ரசிகர்களையும் திருப்தி செய்யும், நகர வாழ்க்கையின் அவசர கதி சிலுவையில் அறையப்பட்டுள்ள, இரண்டரை மணி நேர, தலை கலையாத, நேர்வகிடு முயற்சிகள்.

எம்பார் விஜயராகவாச்சாரியாரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், ‘கச்சேரி மூட்டைகள்’.

மேலும், முதல் ஆலாபனைக்கே முக்கால் மணி நேரம் காத்திருக்கவேண்டும். நிச்சயம் இரண்டு ராக ஆலாபனைகளுக்கு மேல் இருக்காது. மருந்துக்கு ஒரு நிரவல், ஒரு தமிழ், ஒரு சாப்பு.

சத்தியமாக இந்த தற்கால கிளரொளி மூட்டையினுள் நம் கர்நாடக சங்கீதத்தின் மேதாவிலாஸ அபாரங்களில் ஒன்றான, RTP எனப்படும் ராகம்-தானம்-பல்லவி பகுதி இருக்காது (“அவாளே வேண்டாம்னுட்டா சார், அதுக்கு பதிலா துக்கடா செட் பாடிட சொல்லிட்டா”).

அபாங் எனப்படும் தஞ்சாவூரிலிருந்து வடநாடு சென்று இழுவைபெற்று விளங்கும் ஒரு அடித்தொண்டை விஷயமும், காளிங்க நர்த்தன தில்லானா படிக்கப்படுவதும், பிரசித்தம்.

நிற்க. பொதுஅம்ச பின்புலத்தில் பாடப்படும் ராகங்களை மட்டும் பார்ப்போம்.

கர்நாடக சங்கீதத்தில் மொத்தம் 72 மேளகர்த்தா ராகங்கள். அவற்றின் ஜன்ய ராகங்கள் கணக்கிலடங்கா. மொத்தத்தில் ஒரு சமுத்திரம். ஆனால் ஸீஸனில் குத்துமதிப்பாக தொடர்ந்து 5 கச்சேரிகளை கேட்டால், அவற்றில் மெயின் உருப்படி 90 சதவிகிதம் சங்கராபரணம், கல்யாணி, தோடி, காம்போதி, பைரவி, கரஹரப்ரியா, இவற்றில் ஒன்றாக இருப்பது நிச்சயம். சமுத்திரம் எங்கே, மேற்கூறிய சிறு ஓடை எங்கே, இசைக் கப்பலை ஓட்டுவதற்கு?

நம் போறாத வேளைகளில் சில ஸீஸன்களில் வரிசையாக ஐந்தும் தோடியாக அமைந்து, ஐந்தாவது கச்சேரி பாடகியிடம் தோடி…? ‘நோ’டி! எழுந்தோடி போடி..என்று அலறத்தோன்றும்.

மேற்கூறிய ஐந்து ராகங்களையும் சேர்த்துக் கொண்டு பொதுவாக ஸீஸன் கச்சேரிகளில் காதில் விழுபவைகளை, மேலே கூறியுள்ள பத்துப்பாட்டு பாடப்படும் ராகங்களின் கிரமப்படி வரிசைப்படுத்தியுள்ளேன். சரிதானா என்று பாருங்கள்.

ஹம்ஸத்வனி, நாட்டை, ஆபோகி, ஸ்ரீ, கௌளை, வராளி, மோஹனகல்யாணி, சௌராஷ்ட்ரம், கானடா, பந்துவராளி, பூர்வி கல்யாணி, மோஹனம், ஹிந்தோளம், சங்கராபரணம், கல்யாணி, தோடி, காம்போதி, பைரவி, கரஹரப்ரியா, கீரவாணி, சிம்மேந்திரமத்தியமம், ஷண்முகப்ரியா, காபி, யமுனா கல்யாணி, பெஹாக், ரேவதி, சிந்து பைரவி, மத்யமாவதி, சுருட்டி., இவற்றுடன் முன்பு ஒரு கட்டுரையில் கூறிய ஆலாபனை செய்ய முயலாத ஒரு சில one hit wonders…

அவ்வளவுதான்.

சில ரசிகர்களின் மதிப்பிற்குறிய வித்வான்கள் தங்கள் கச்சேரி வாழ்க்கை முழுவதையுமே இந்த ராக பட்டியலை மட்டும் வைத்துக்கொண்டு தள்ளி இருக்கிறார்கள். இன்னமும் தள்ளிக்கொண்டு இருக்கிறார்கள். இனிமேலும் தள்ளுவார்கள் (விசு என்னை மன்னிப்பாராக). திருமூர்த்திகளின் இசைச் சமுத்திரப் பயணத்திற்கான சங்கீதக் கப்பல் இந்த சிறு ஓடையில் திக்கித்தவிக்கிறது.

ஏன் இந்த தேக்கம்?

இந்த ராகங்களில்தான் ஜீவன் இருக்கிறது. இவ்வளவு வருடங்களாக பாருங்கள் இவை மட்டுமே கச்சேரிகளில் நிலைத்து நிற்கிறது. மற்ற ராகங்கள் கச்சேரிகளில் மெயினாகப் பாடினால் எடுக்காது. ரசிகர்களுக்குப் புரியாது. நல்ல கீர்த்தனைகள் மற்ற ராகங்களில் இல்லை.

இவையெல்லாம் கணம் பொருந்திய சங்கீத விமர்சகர்களின் முடக்குவாதங்கள். ஆனால் இவர்களால் ‘மஹா பெரியவா’ என்று போற்றப்படும் மஹாவைத்தியநாத ஐயர் நாராயண கௌளையில் விஸ்தாரமாக RTP பாடி போட்டியில் வென்றதாக வரலாறு கூறுகிறது. இப்போது உள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த ராகத்தின் ஆரோஹணம் அவரோஹணமே தெரியுமா என்பதே சந்தேகம்.

இந்த சூழலை தேக்கம் என்று நாம் இன்னமும் ஒப்புக்கொள்ளவில்லை. இந்த ரக்தி ராகங்களுக்கு தேய்மானம் கிடையாது என்பது பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டது. எத்தனை முறை கேட்டாலும் இவைகள் அலுக்காது என்பது எண்ணம். அப்படியானால் ஒரு காயகப்பிரியாவோ, காங்கேயபூஷணியோ அலுத்துவிடுமா? யாருக்குத்தெரியும். மெயின் உருப்படியாக பாடினால்தானே பாடு.

மனித மூளை ஒரு குழப்பத்திலிருந்து பாட்டர்ன் (Pattern) கண்டுபிடித்து நிலைகொள்ளும் கருவி. கேட்டதை, செய்ததை பலமுறை திரும்பச்செய்து சீக்கிரமே அலுப்புதட்டும் அபாயத்துடன் கூடிய அப்பியாச மகிழ்ச்சி தரும் செயல்கள் ஒருபுறமும், தட்டுத்தடுமாறித் தப்பும் தவறுமாக முன்னநுபவம் இன்றி செயல்படுத்தப்படும் முற்றிலும் புதிய, சற்றே பயம் கலந்த குதூஹல விளிம்பு முயற்சிகள் ஒருபுறமும் இருத்தி, மூளை மனிதனை இவற்றிற்கிடையே ஒரு பெண்டுலமாக, ஆரோக்கியத்துடன் ஆட்டுவிக்கும்.

கடந்த 60 வருடங்களாக கச்சேரிகளில் பாடப்பட்டுவரும் ரக்தி ராகங்கள் தற்காலத்தில் அப்பியாச மகிழ்ச்சி தருபவையே. பலமுறை கற்பித்து, கேட்டதால் நம் எல்லோர் மனதிலும் உள்ள ஒரு பழகிய, அழகிய, பெருச்சாளி. அதன் சங்கீத சாமுத்ரிகாலக்ஷண குடமுருட்டல்கள் நமக்கு அத்துப்படி. சஞ்சாரங்கள் உள்ளங்கை நெல்லிக்கனி. பாடகர் இந்த பழகிய மனப்பிம்பத்தை வருடி, மேலும் பாலிஷ் செய்து கச்சேரியில் சீராட்டினால் நமக்கு ஆனந்தம். அவர் இந்த ராகங்களின் நம் பழகிய மனப்பிம்பங்களை மாற்ற நினைத்து சற்றே சொதப்பினாலும் அடி விழும்.

ஆனால் இதே மூளைக்கு மேற்கூறியதுபோல் புதிய முயற்சிகள், பிம்பங்கள் அதன் குதூஹலங்கள் அவசியம். கலை என்றாலே கற்பணைவளம் கரைபுரள வேண்டும். செதுக்கிய பேழையினுள் கலையை இருத்தி, பேழை எவ்வளவு அழகு என்று கூறிக்கொண்டிருந்தால், பழகிய குட்டையில் ஊறி, காலப்போக்கில் நாறிவிடும், ரசிகருடன் சேர்த்து அவர் கேட்பதையே தரும் பாடகரின் சங்கீத மட்டையும்.

நிற்க.

கடந்த சில பல வருடங்களாக இம்மாதிரி கச்சேரிகளை அனுபவித்துவரும் எனக்கு, சென்ற வாரம் இம்மாதிரி ஒரு கச்சேரியில், அறுவை தாங்க இயலாமல் கொட்டாவியால் திறந்த வாயை மூடமுடியாத ஒரு அசந்தர்ப்பமான வேளையில், நியூரான்கள் சிலிர்த்தெழ, தோன்றியது ஒர் எண்ணம்.

என்னுடன் ஒருமித்த “இசைக்காதுகள்” கொண்ட அனேகர்களுக்கும் உபயோகமாக ஸீஸன் சென்னைக் கச்சேரிகளை வகைப்படுத்த ஒரு “கச்சேரி தொய்வு அளவை” (kutchery dullness index) நிர்ணயித்தால் என்ன என்று தோன்றியது. ஹிந்தூவிலோ எக்ஸ்பிரஸிலோ, இல்லை என்னைப்போன்ற சுயமாக பிரகடனஞ்செய்து கொண்ட விமர்சகர்கள் தங்கள் அழுக்கு நோட்டிலோ, பாடுபவர், வயலின், மிருதங்கம், கடம் இன்னார் என்று குறிப்பதுபோல், அவற்றின் கீழே கச்சேரி தொய்வை இவ்வளவு என்பதயும் குறிக்கலாம்.

விகடனில் சினிமா விமர்சனத்தில் மார்க் போடுவது போல.

பல “மூளை புயல்களுக்குப்” பிறகு, தற்போதைக்கு பாடப்படும் ராகங்களை மட்டும் அம்சமாக வைத்து இந்த அளவையை நிர்ணயிப்பது என்று முடிவு செய்தேன்.

(இசைக்காதுகள், மூளைப்புயல்கள் – தமிழில்தான் எழுதுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டதனால் வந்து விழும் சற்றே ரஸமான மொழிமாற்றச் சொதப்பல்கள் இவை. நெற்றிக்கண்ணை ஆஃப் செய்து விட்டு, ஒரு முறை தலையை சிலுப்பிக்கொண்டு தொடர்ந்து படித்துக்கொண்டு போங்கள்)

ஒரு கச்சேரியில் மெயின் உருப்படி மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து அல்லது ஆறு ராகங்களில் ஒன்றாக அமைகிறது என்று வைத்துக்கொண்டால், அக்கச்சேரியின் கச்சேரி தொய்வு அளவை (தொய்வை) 30% என்று நிர்ணயித்துள்ளேன். தொய்வை 75% மேல் சென்றால், வீட்டிலேயே இருந்திருக்கலாம் என்று அர்த்தம்.

மேற்படி மெயின் உருப்படி தொய்வைக்கு 30% சற்று கூடவோ குறையவோ பட்டால், நீங்களே உங்கள் விகிதத்தை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். பிறகு கச்சேரியிலிருந்து எழுந்து போய் கற்பகாம்பாளிலோ, ஞானம்பிகாவிலோ ஒரு காப்பி குடித்துவிட்டு வாருங்கள்.

சென்ற 3 வருடத்தில், நான் கேட்டதில், ஒரு சில சஞ்சய் சுப்பிரமணியன், டி.எம். கிருஷ்ணா, சேஷகோபாலன், சாத்தூர் சகோதரிகள் கச்சேரிகள் தள்ளுபடியாக, மற்ற 896 கச்சேரிகளுக்கும் மெயின் உருப்படி தொய்வை நிச்சயமாக 30%.

மெயின் உருப்படி தொய்வை 30% தவிர, கச்சேரியின் மற்ற உருப்படிகளிலும் மேலே கூறிய மற்ற ராகங்கள் மட்டுமே பாடப்பட்டால், கச்சேரி க.தொ. (30% + 50% = ) 80%. All are welcome கச்சேரியாக இருந்தால் தப்பினீர்கள். இல்லையேல் மொய்தான். கொட்டாவியை அடக்கவோ பாடகரிடம் மறைக்கவோ தேவையில்லை.

மெயின் தொய்வை 30% ஆனாலும், சப்மெயினில் ஒரு அபூர்வ ராகமோ (ஆலாபனையுடன் இருக்கவேண்டும்), இல்லை மேலே கூறிய ராக பட்டியலில் இல்லாமல் ஒரு ஐந்து ராகமோ கச்சேரியில் இருந்தால், என்னைப் பொறுத்தவரையில் கச்சேரிக்கு 30% டில் நிச்சயம் தள்ளுபடியும், பாடகருக்கு பொதுமன்னிப்பும் உண்டு.

ஆனால் மோஹனத்தை மெயினாகவோ, சிந்துபைரவியை துக்கடாவாகவோ, அதுவும் ஒரே கச்சேரியில் பாடினால், தொய்வை 100%. அதுதான் அந்த பாடகருக்கு நான் செல்லும் கடைசி கச்சேரி.

நான் இங்கு சொல்வது சற்று மிகையாகத் தெரியலாம். பெரிய இவனாட்டம் ஜெர்க் விடுகிறானே என்று தங்களை எண்ணவைக்கலாம். ஆஃப் சீஸனில், சென்ற மே 2006 மாதத்தில் நான் சென்ற 5 கச்சேரிகள் முறையே பாகீரதி, டி.எம். கிருஷ்ணா, சிவசிதம்பரம், வைகொம் ஜயசந்திரன், வசுதா ரவி ஆகியோர் செய்தது. எல்லோரும் சங்கீத ஞானத்தில் குறை சொல்ல முடியாத சொக்க தங்கங்கள்.

நான் இங்கு கேட்ட மெயின் உருப்படிகள் முறையே கல்யாணி, தோடி, காம்போதி, சங்கராபரணம், பைரவி.

நீங்கள் எப்படியோ; சென்னை கச்சேரிகளின் நாடித்துடிப்பை நிறைய அடிபட்டு ஒரளவு தெளிந்தவன் என்ற என் தகுதியில் நம்பிக்கை உள்ள நான், இனி சென்னையில் அடுத்த கச்சேரி செல்வது…

…மெயின் உருப்பிடியாக கரஹரப்பிரியா கேட்க மூட் இருக்கயில்தான்.
——————————————————————–
ommachi@gmail.com

[http://www.arunn.net/tamilblog]

Series Navigation