வேப்பம்பூப் பச்சடி

This entry is part [part not set] of 8 in the series 20000716_Issue

இரா. கோவர்தனன்


‘திருவாக்கும் செய்கருமம் கைகூடும் – செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானை
காதலாற் கூப்புவர் தம்கை, ‘

என்று அப்பா உள்ளே பூசையறையில் பாடிக்கொண்டிருக்க, இளங்கோவனுக்கு வயிற்றுப் பசி பொறுக்க முடியவில்லை. சமையலறைக்குள் சென்று எட்டிப் பார்த்தவன் மகேஸ்வரி வாணலியிலிருந்து சுடச்சுட எடுத்துப்போட்டுக் கொண்டிருந்த மெதுவடைகள் இவனைப் பார்த்துச் சிரிப்பதைக் கண்டான்.

‘மகி, ‘ என்றான் இளங்கோ. ‘ம் … ‘ என்றாள் அவள் திரும்பாமலே.

‘ஒரு வடை எடுத்துக்கவா ? ‘

‘ஏங்க, இன்னும் பத்து நிமிஷம் பொறுத்துக்க முடியாதா ? மாமா வேற படையலுக்கு இலையைப் போட்டுட்டார். அவர் இன்னொருமுறை கூப்பிடறதுக்குள்ள கடைசி ஈடு எடுத்துடலாம்னு பார்க்கறேன், இதிலே நீங்க வேற, போங்க அப்பால, ‘ என்றாள் மகேஸ்வரி.

மனைவியின் மறுப்பைப் பொருட்படுத்தாமல் இளங்கோ வடைகளை நோக்கி முன்னேற, ‘இவன் ஒருத்தன்! வயசு நாப்பதைத் தொடுதே தவிர இன்னும் குழந்தை புத்தி போகலையே! ‘

குரல் கேட்டு நின்ற இளங்கோ அப்போதுதான் அங்கே அம்மா மூலையில் உட்கார்ந்து கொண்டு விளக்குக்குத் திரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அசட்டுச் சிரிப்புடன் காலிவயிற்றைத் தடவிக்கொண்டே தன்னுடைய அறைக்குத் திரும்பினான்.

விநாயக சதுர்த்தி, விடுமுறை என்று வீட்டிலே இருப்பதும் தொல்லையாகத்தான் இருக்கிறது. இதே அலுவலகத்தில் இருந்தால் மாலியிடம் சொல்லி இரண்டு முறையாவது காபி சாப்பிட்டிருக்கலாம். நொறுக்குத் தீனியும் அவ்வப்போது கிடைக்கும். டாண் என்று பன்னிரண்டு மணிக்கு மதிய உணவுப் பொட்டலத்தை மணியன், சேது, மாலா சகிதம் திறந்துவிடலாம். இங்கே என்னடாவென்றால் அப்பாவுக்கு பயந்து கொண்டு பச்சைத் தண்ணீர் பல்லில் படாமல் கருப்புக் காக்கைகள் முதல்கவளம் எடுத்துக்கொள்ளும் வரை காத்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது! உலகிலேயே இப்படிப்பட்ட காரணத்துக்காக விடுமுறையை வெறுத்து அலுவலக நாளை விரும்பும் மனிதன் நானாகத்தான் இருக்கமுடியும்! இன்னொரு விதத்தில் பார்த்தால் தன் நிலைமை அவ்வளவு மோசமில்லை என்பதும் இளங்கோவுக்கு நன்றாகவே புரிந்தது. போனவாரம் கனடா கால்கேரியிலிருக்கும் தம்பி லோகநாதன் பேசுகையில், ‘உனக்கென்னண்ணா, பொங்கலானா கரும்பு திங்கலாம்; பிள்ளையார் சதுர்த்திக்கு விளாம்பழம் விழுங்கலாம். என்னைப் பார், விளாம்பழம் எப்படி இருக்கும்கிறதே மறந்து போச்சு! இந்த அழகிலே எம் பசங்களுக்கு எப்படிச் சொல்றது ? ‘ தில்லியிலிருக்கும் அடுத்தவன் கிட்டுவிற்கு இது போலெல்லாம் ஏக்கமில்லையென்றாலும் நாள் கிழமையென்றால் கும்பலாய் இருப்பதை அவனாலும்தான் மறக்க முடியவில்லை.

படுக்கையில் இளங்கோ சாய்ந்திருந்த வாக்கிலிருந்து திறந்திருந்த கதவு வழியாக நடுவீட்டில் அப்பா செய்துகொண்டிருந்த பூசை ஏற்பாடுகளைப் பார்க்க முடிந்தது. தாத்தா சொல்லும் செய்யுள்களைக் கேட்டுக் கொண்டே இரு கைகளையும் கூப்பிக்கொண்டு நின்றிருந்த மலர்விழியும், திலீபாவும் கண்ணில் பட்டார்கள். பத்துப் பன்னிரண்டு வயதுக் குழந்தைகள் பசியைப் பொறுத்துக்கொள்கிறார்கள், நமக்கு ? அல்சர் கில்சர் ஏதாவது வந்துவிட்டதா என்று இந்த மாதமாவது மாத்ருபூதத்திடம் போய் சோதித்துக் கொள்ள வேண்டும்.

பால், பருப்பு, நெய், தேன் என்று நான்கு பொருட்களைக் கையூட்டாய்க் கொடுக்கிறேன்; சங்கத் தமிழ் மூன்று மட்டும் பதிலுக்குத் தந்தால் போதும் என்று நாசூக்காக கணபதிக்குக் கொக்கி போட்டுக்கொண்டிருந்த அப்பா அது போதாதென்று தலையில் குட்டிக்கொண்டும் கன்னங்களில் தட்டிக்கொண்டும் தோப்புக்கரணங்கள் போடத் தொடங்க, வேழமுகத்தோன் இத்தனைக்கும் சலனமில்லாமல் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். மலர்விழியும் திலீபாவும் தாத்தா செய்வதைச் சிரத்தையாக தாங்களும் திருப்பிச் செய்வதைப் பார்த்த இளங்கோவனுக்குச் சற்று எரிச்சல் ஏற்பட்டது.

என்ன இது இந்தப் பிள்ளைகள் ? எனக்குப் பிறந்தவைகளாக இருந்தும் கடவுள் பக்தி, பூசை, விரதம் என்று அப்பாவின் பின்னால் போகிறார்களே! அப்பாவையும் குறை சொல்ல முடியாது. தான் இருக்கும் வரை வழிபாடு, வந்தனங்களை முறையுடன் செய்யவேண்டும் என்று செய்கிறாரே தவிர நீயும் வந்து கும்பிடு என்று இப்போதும் சரி, சின்ன வயதிலும் சரி, எப்போதும் சொன்னது கிடையாது. இல்லையென்றால் இதோ இப்படி நாத்திகம் பேசிக் கொண்டு நான் இங்கே எதிரில் உட்கார்ந்திருக்க முடியுமா ? பிள்ளைகள் தாமாகவே கொண்ட ஆர்வத்தால்தான் தாத்தா பின்னே போகிறார்கள். மகியைத்தான் குறைசொல்ல வேண்டும். மகேஸ்வரியை நினைத்ததும் இளங்கோ இங்கே சற்று நின்றான்.

குழந்தைகளைக் கூட்டி அவர்களுக்கு இயங்கியல், பொருள்முதல்வாதம் என்று அரை மணிநேரம் பாடம் எடுத்தால் அடுத்து இரண்டு மணிநேரம் மகேஸ்வரி கந்தபுராணம், பாரதக் கதைகள் என்று சொல்லி ஊட்டுவதெல்லாம் ஒரே ‘பக்தி ரசம் ‘தான்! மனைவியை வழிக்குக் கொண்டுவர முடியாவிட்டால் பிள்ளைகளை வழிக்குக் கொண்டுவருவது நடக்க முடியாத காரியம் என்று இளங்கோவுக்கு வாழ்க்கையில் தாமதமாகத்தான் தெரிந்தது!

‘அழகு, வாடா, படையல் போட்டாச்சு, ‘ என்ற அம்மாவின் குரல் கேட்க, கையில் ஏனோதானோவென்று புரட்டிக் கொண்டிருந்த புத்தகத்தைச் சட்டென்று போட்டுவிட்டு இளங்கோ நடுவறைக்கு வந்தான். வகைக்கொன்றாய்ப் போட்டிருந்த ஐந்து இலைகளிலிருந்தும் வடை, சாதம், பொரியல் என்று கொஞ்சம் கொஞ்சமாக அப்பா கொத்தி எடுத்து உருண்டை பிடிப்பதைக் கண்டதும் இளங்கோவுக்கு, ‘அப்பாடா ‘ என்றிருந்தது. கடைசிக் கட்டம். காகங்கள் இந்தப் பிரசாதத்தில் வாய் வைத்துவிட்டால் சாப்பாட்டுக்கு உட்கார்ந்து விடலாம். காகங்களைத் தேடிக் கொண்டு அப்பா புழக்கடைப் பக்கம் போக, பின்னாலேயே, ‘தாத்தா இங்கே வை, ‘ ‘இல்லே தாத்தா, என்கிட்ட கொடு, நான் வைக்கிறேன், ‘ என்று கத்திக் கொண்டு பிள்ளைகளும் ஓட, ஊதுவத்தி மணமும் குத்து விளக்கின் ஒளியும் வருடிக் கொண்டிருந்த பூசையறைப் படங்களை இளங்கோ ஒரு நோட்டம் விட்டான்.

சுவடியும் வீணையும் ஏந்தியபடி வெண்புடவையில் தாமரை மேல் வீற்றிருந்த கலைவாணி ஒருபுறம். கையிலிருந்து தங்க நாணயங்கள் வழிய நின்றுகொண்டிருந்த திருமகள் இன்னொரு புறம். இடையில் மூஞ்சுறு வாகனத்தின் மேல் எழுந்தருளியிருந்த விநாயகர் — இன்றைய நாயகர். இது மட்டுமல்லாமல் கீழே குடையுடனும் பொரியுடனும் தொப்புளில் நாலணாவை ஒற்றிக்கொண்டு களிமண் பிள்ளையாரும் அமர்ந்திருக்க, சுவரில் எல்லா படங்களுக்கும் தாண்டி ஓரத்தில் இந்திய மாதா கொடியேந்தி நின்றுகொண்டிருக்க எதிரில் பொக்கைவாய்ச் சிரிப்புடன் அப்பா தீட்டிவிட்ட குங்குமத்துடன் மகாத்மா காந்தி! கேள்வியே கேட்காமல் இந்தத் தாத்தாவும் ஒரு சாமிதான் என்று சிறு வயதில் தான் வணங்கி வந்ததை நினைத்துப் பார்த்தான் இளங்கோ. அப்படியே தொடர்ந்து அப்பா சொன்ன வழியிலேயே வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று ஒருகணம் தோன்றியது.

‘கா, கா, ‘ என்று ஏராளமான காக்கைகள் ஒருசேரக் கரைவதைக் கேட்டுத் திரும்பிய இளங்கோ தன் தந்தையும் பிள்ளைகளும் திரும்ப கூடத்திற்கு வருவதைக் கண்டு அவர்கள் பக்கம் நகர்ந்தான். ஒவ்வோர் இலையாக எடுத்து சாப்பிட வசதியாக மேசையில் வைத்துக்கொண்டிருந்த மகேஸ்வரி, ‘ம், வாங்க, அங்கே என்ன பராக்குப் பார்த்துக்கொண்டு ? அப்பவே பசி, பசின்னு துடிச்சீங்களே! ‘ என்றாள். நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளி உட்காரப் போனபோது மூலையிலிருந்த தொலைபேசி, ‘கிணுங்,கிணுங் ‘ என்று குரல் கொடுத்தது. ‘சாப்பிடற வேளையிலே யார்றா ? ‘ என்ற அப்பா மேலே ஏதும் கேட்காமல் தன் இலையின் முன் அமர்ந்தார்.

இளங்கோவின் எரிச்சல் அவன் தொலைபேசியை எடுத்த வேகத்தில் தெரிந்தது. சென்னையிலிருந்து ராகுல் மொஹிலே. மண்டல மேலாளர். இளங்கோவனுக்குச் சட்டென்று உடம்பில் விறைப்பு வந்தது. ‘யெஸ் சார், ‘ என்றான், உடனே ஒருமுகப்படுத்தப்பட்ட கவனத்துடன்.

‘ஹாப்பி கணேஷ் பூஜா, இளங்கோ. ‘ என்றார் அந்த மராத்திய அதிகாரி.

இளங்கோ பதிலுக்கு, ‘ஸேம் டு யூ சார், ‘ என்று சொல்வதற்குக் காத்திராமல் அவர் உடனே தொடர்ந்தார். ‘இளங்கோ, எனது சண்டகர் பூனேயிலிருந்து வந்திருக்கிறார், அதுதாம்பா அவர் கூட நம்ம பூனே மண்டல அலுவலகத்தில் புதுசா சட்டத்துறை ஆலோசகராய்ச் சேர்ந்திருக்கார்னு போன மாதம் சொன்னேனே, அவர்தான். ‘

‘ஆமாமாம், சொல்லுங்க சார், ‘ என்றான் இளங்கோ. ராகுலைப் பார்த்தே மூன்று மாதங்களாகிறது. இதில் இவர் போன மாதம் எங்கே தன்னிடம் பேசினார் ? எந்த சண்டகர் ? இவனென்ன கண்டான் ? சத்தியமாய் இளங்கோவுக்கு நினைவில்லை.

‘படிச்சது லண்டன்ல இளங்கோ! போன வருஷம் வரை அமெரிக்காவிலே ஹூஸ்டன்ல இருந்தார். ஆனா நம்ம மதம் பண்பாடுன்னா அப்படி ஒரு ஈடுபாடு அவருக்கு. பூனேவிலிருந்து விடுமுறைக்கு இங்கே வந்திருக்கிறார். தெற்கிலே இருக்கிற கோயில், கடவுள் பழக்கவழக்கங்களைப் பத்தித் தெரிஞ்சுக்கக் கொள்ளை ஆசை. நாளைக்குக் காலையிலெ ஃபிளைட் பிடிச்சு மதுரை போகிறார். இன்னைக்குச் சும்மாதானே இருக்கேன் எங்காவது போகமுடியுமான்னு கேட்டார். திருத்தணி முருகன் கோயில் பத்திச் சொன்னேன். அவரும் சரின்னுட்டார். அப்பதான் வைஃப் சொன்னாங்க, இன்னிக்கு கணேஷ் பூஜா, கோயில்லே ரொம்ப ஜனமாயிருக்காதோன்னு. உடனே உன் நினைவுதான் வந்தது இளங்கோ. அந்தக் கோயில்லே முக்கியப் புள்ளி ஒருத்தர் உனக்குத் தெரிஞ்சவர் இல்லையா ? போன தடவை மணியன் வந்தப்ப சொல்லியிருந்தார். நிறையப் பேரை நீ கூட்டிப்போய் சுலபமா தரிசனம் பண்ண வச்சிருக்கியாமே. என்னுடைய சண்டகரையும் கொஞ்சம் கூட்டிப் போய் தரிசனம் செய்ய வச்சா நல்லது! ‘

இளங்கோவுக்கு, ‘ஏன்தான் இன்று அலுவலகம் போவது பற்றி நினைத்தோமோ! ‘ என்று வெறுப்பேற்பட்டது. கொழுக்கட்டையும் எள்ளுருண்டையும் தின்றுவிட்டுப் படுத்து ஒரு குட்டித் தூக்கம் போடுவதற்கு பதிலாக இப்போது வெயிலில் திருத்தணி மலைக்குச் செல்லவேண்டும்.

***

மேலாளருடைய சண்டகரை முன்பின் பார்த்திராததால், அலுவலகத்தில் சந்திப்பது என்று முடிவாயிற்று. அலுவலகச் சாவியை எடுத்துக்கொண்டு இளங்கோ தன் யமஹாவைக் கிளப்பினான். பயந்தது போல் வெயில் அவ்வளவாகப் படுத்தவில்லை. கிளம்புமுன் பாலாவிடம் தொலைபேசி மூலம் பேசியதில் அதிர்ஷ்ட வசமாக அவனும் கோயிலுக்குக் கிளம்புவதாகத் தெரிந்தது. ஒன்றரை மணிநேரத்தில் கோயிலில் சந்திப்பதாகச் சொன்னான். இனி தரிசனத்துக்குப் பிரச்சினை இல்லை.

பாலாவின் நட்பு எதிர்பாராமல் கிடைத்த ஒன்று. பாலாவின் அப்பா இரண்டு ஆண்டுகளுக்கு முன் தவறிவிட்டபோது அவர்களுடைய பேரில் எடுத்திருந்த காப்பீடு கிடைப்பதில் ஏதோ தடங்கல் ஏற்பட இளங்கோதான் முன்னின்று பிரச்சினையைத் தீர்த்துவைத்தான். அதிலிருந்து அலுவலகம் வரும் போதெல்லாம் முகம் கருதி புன்னைகை பரிமாறிக்கொள்ளத் தொடங்க அது மெல்ல பேச்சு, பழக்கம், நட்பு என்று மாறியிருந்தது.

சொல்லப் போனால் நண்பர்களைக் கொள்வதில் இளங்கோவுக்கு என்றுமே பிரச்சினை இருந்ததில்லை. பிறருடைய விஷயங்களில் மூக்கு நுழைக்காத இயல்பும், சிரித்த முகமும், பொது விவகாரத்தில் ஏறக்குறைய எதுபற்றிப் பேசினாலும் ஆமாஞ்சாமியாகவும் இல்லாமல் அதிரடியாகவும் இல்லாமல் கலந்துகொள்ளமுடிந்த அவனுடய அணுகல்முறையும் அவனை அலுவலகத்திலும் சரி, சுற்றுப்புறத்திலும் சரி, தெரிந்தவர்கள் மத்தியில் ஒரு நல்ல இடத்தில் வைத்திருந்தன. அதற்கென்று எதிரிகளும் இல்லாமலில்லை. தத்துவ எதிரிகள்.

‘சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்து, ‘ என்று பள்ளிப் பருவத்தில் மார்கழி மாதம் மட்டுமல்ல, ஆண்டு முழுதுக்கும் விடியற்காலையில் எழுந்து பாடம் படிப்பதற்கு முன் திருப்பாவை, திருவெம்பாவை என்று சொல்லிப் பழகியிருந்த இளங்கோவுக்கு தான் எப்போது அதையெல்லாம் கைவிட்டோம் என்பது நினைவுக்கு வரவில்லை. இருந்தாலும் அப்பா, அம்மாவின் மனம் கோணக்கூடாது என்பதற்காக, பண்டிகைகள் கொண்டாடுவதிலிருந்து, நாள் பார்த்து, மந்திரம் ஒதிச் செய்து கொண்ட திருமணம் வரை எதிலும் அவர்களுக்குக் குறைவைக்கவில்லை.

ஆனால், தம்பிகளை அவன் ‘விட்டுவைக்கவில்லை. ‘ அப்படித்தான் அவன் பெற்றோர்கள் சொன்னார்கள். இப்போது கிட்டுவும் சரி, லோகாவும் சரி, ‘சட்டு புட்டெ ‘ன்று பூசை புனஸ்காரங்களை ஓரங்கட்டிவிட்டு ஒருபுறம் ‘போஸ்ட்மாடர்னிஸ ‘த்தைக் கிழிப்பதற்கும் மறுபுறம் நோம் சோம்ஸ்கியை மேற்கோள் காட்டுவதற்கும் பிள்ளையார் சுழி போட்டது யார் என்றால் சுலபமாக இளங்கோவைக் கைகாட்டலாம்.

தம்பிகளை, குறிப்பாக லோகநாதனை நினைத்ததும் இங்கே இளங்கோவுக்கு நெஞ்சம் சற்று இளகியது. கடந்த சில மாதங்களாக லோகாவின் பேச்சிலும் கடிதங்களிலும் ஒரு மாறுதல் தெரிவது அவனுக்கு இன்னும் சற்று நெருடலாகவே இருந்தது. பத்துப் பன்னிரண்டு நாட்களுக்கு முன்னர் லோகா ஒரு மணிநேரத்துக்கும் மேலாகத் தன்னிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

‘அண்ணா, நீ ‘an autobiography of a yogi ‘ படித்திருக்கிறாயா, பரமஹன்ச யோகாநந்தா எழுதியது ? ‘

பரமஹன்ச யோகாநந்தா. கேள்விப்பட்ட பெயர்தான். எங்கு ? சட்டென்று நினைவுக்கு வரவில்லை.

‘இல்லியே ? நீ படிச்சயா என்ன ? ‘

‘ஆமாம். இன்னிக்குதான் முடிச்சேன். Quite an interesting book. நம்ப முடியாத படிக்கு ஏகப்பட்ட மாயாஜாலங்கள் பற்றி எழுதியிருந்தாலும் புத்தகத்தின் அடிப்படை நீரோட்டம் அருமை. அவருடைய குருவுக்கு குருவான பாபா என்பவர் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் இன்னும் உயிரோடு இருக்கிறாராம். எத்தனையோ பேர் இது போலப் பலதும் புளுகுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இவர் காரண காரியங்களோடு அறிவியலுக்கும் மதிப்புக் கொடுத்து இத்தகைய அற்புதங்களை விளக்குவதைப் படித்தால், ஒரு கணம் ‘உண்மைதானோ! ‘ என்று தோன்றுகிறது! ‘

நம்ப முடியவில்லை இளங்கோவுக்கு.

பாபாவுக்கு வயது பத்தாயிரம் என்பதையல்ல.

தன் தம்பி இப்படிப் பேசுகிறான் என்பதை!

செய்யாறில் முத்து காமிக்ஸ், மாண்ட்ரேக்கும் இரும்புக்கை மாயாவியும்.

ஆரணியில் ராணி, பி.டி.சாமியும் அல்லி பதில்களும்.

அரக்கோணத்தில் குமுதம், சுஜாதா, பாலகுமாரன், அரசு பதில்கள்.

சென்னை கல்லூரியில் கணையாழி, இன்குலாப்பும், சுந்தரம் ராமசாமியும்.

கல்கத்தா வேலையில், ஜெஃப்ரி ஆர்ச்சர், பிறகு அய்ன்ராண்ட்.

அமெரிக்காவில் குடும்பம், தீபக் சோப்ரா, ஜேகே!

ம்ஹும், இப்படி அடுக்கினால் வாழ்க்கை சொல்லிவைத்த பாதையில் சுழல்வது போல்தான் இருக்கிறது. எதிர் வீட்டு சோமுஅப்பா பத்து வருடங்களுக்கு முன் சொன்னது நினைவுக்கு வந்தது: ‘இருபது வயதுக்குள் ஒருமுறை ‘நான் கம்யூனிஸ்ட் ‘ என்று சொல்லாதவனும் சரி, முப்பது வயது கடந்த பிறகும், ‘நான் கம்யூனிஸ்ட் ‘ என்று சொல்பவனும் சரி, புத்திசாலி கிடையாது! ‘

அலுவலகக் கதவை சாவி போட்டு நெட்டித் திறந்தபோது உள்ளே ஹாலிலிருந்த கடிகாரம் இரண்டு மணியடித்து ஓய்ந்தது. ராகுலிடம் பேசி அதற்குள் இரண்டு மணிநேரம் ஆகிவிட்டதா ? சென்னையிலிருந்து அவர் சண்டகர் உடனே புறப்பட்டிருந்தால் இந்நேரம் வந்திருக்கவேண்டும். கூலரிலிருந்த நீரை ஒரு குவளை குடித்துத் திரும்பியவன் கண்ணில் வெளியே வந்து நின்ற அம்பாசடர் பட்டது. அட, நினைத்து முடிக்கவில்லை; வந்து விட்டார். முகத்தில் கொஞ்சம் முறுவலை வரவழைத்துக்கொண்டு வெளியில் வந்தான் இளங்கோ.

ராகுல் மொஹிலேயின் சண்டகர், அமெரிக்காவில் படித்து வேலை செய்து விட்டுப் பிறகு இந்தியாவுக்கு வந்திருப்பவர், பக்திப் பழம் என்ற காரணங்களால் தன்னையறியாமலே ஒரு கிழத்தை எதிர்பார்த்த இளங்கோவுக்குக் காரிலிருந்து இறங்கிய முப்பத்தைந்து முப்பத்தாறைத் தாண்டாத இளைஞன் ஒருவன் இறங்கியதைக் கண்டதும் சற்று வியப்பாயிருந்தது. மேலாளரின் உறவினர் மட்டுமன்றி, தலைமை அலுவலகத்தில் ஒரு நல்ல பதவியில் இருப்பவர் என்பதாலும் மரியாதை தருவதற்கு ஆயத்தமாய் இருந்த இளங்கோ, அதை இரண்டு மூன்று வயது தன்னிலும் இளையவனுக்குக் காட்டவேண்டும் என்றபோது, எப்படி அணுகுவது என்று தயங்கினான்.

அதற்கு இடம் வைக்காமல் அவனே, ‘நீங்கள் இளங்கோவாய் இருக்கவேண்டும், ‘ என்று சிரிப்புடன் கைநீட்டினான். ‘ஐ ‘ம் அருண். அருண் குமார் வைத்யா. ஜஸ்ட் கால் மீ அருண். ‘ பேசுகையில் அமெரிக்க நாக்கு அடையாளம் தெரிந்தது. சந்தன நிறத்தில் படபடவென்று கஞ்சி போட்டாற்போலிருந்த பருத்திச் சட்டையும், வெளுத்திருந்த நீல ஜீன்ஸும் அணிந்திருந்த அருண் உயரத்திலென்னவோ இளங்கோவை விட இரண்டு அங்குலம் அதிகமாயிருந்தான். வெயிலுக்குப் பழக்கமில்லாதவன் என்பது சிவந்திருந்த தோலிலிருந்தும் வேர்த்திருந்த நெற்றியிலிருந்தும் நன்றாகவே தெரிந்தது.

இரண்டு வயதுக் குழந்தை மடியில் தூங்கிக் கொண்டிருக்க, காரிலிருந்து இறங்க முடியாமற் போன அல்லது இறங்கவேண்டிய தேவையில்லாமற் போன அவனுடய மனைவி இவன் காரின் முன் இருக்கையில் அமர்ந்த போது, ‘நமஸ்தே, ‘ என்றாள். அருண் மறுபக்கமாய்க் காரில் ஏறி உட்கார்ந்ததும் காக்கிச் சட்டை ஓட்டுநர் இளங்கோவிடம், ‘போலாமா சார் ? ‘ என்றார்.

‘யூ நோ இளங்கோ, இவர் ஓட்டிய வேகத்துக்கு அரை மணி முன்னதாகவே நாங்கள் இங்கே வந்திருக்க வேண்டும். சென்னையில் ஆங்காங்கே இன்று பதட்டமாய் இருக்கவே கொஞ்சம் தாமதமாகி விட்டது. ‘

இளங்கோ கேள்விக்குறியுடன் அருணை நோக்கினான்.

அருண் தொடர்ந்தான். ‘அது என்ன இடம், டிப்ளிகன் ? … ‘ — ‘திருப்ளிகேன் சார் ‘ என்று தூய தமிழில் காரோட்டுநர் எடுத்துக்கொடுக்க — ‘அங்கே போட்டிருந்த கணேஷ் பூஜா பந்தல் பக்கம் யாரோ கலாட்டா செய்ய அங்கிருந்து நம்ம மண்டல அலுவலகம் வரைக்கும் அண்ணா சாலையிலே போலிஸ் கெடுபிடி. இருபது நிமிஷம் அங்கேயே செலவாகிவிட்டது. அந்த ஏரியாவில் முஸ்லிம்கள் அதிகம் என்று கேள்விப் பட்டேன். ‘

‘திடுக் ‘ என்றிருந்தது இளங்கோவுக்கு. ‘ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் இந்தப் பந்தல் கிந்தல் என்று எதுவும் இருந்ததில்லை. இப்போது தேவையில்லாமல் விநாயக சதுர்த்திக்குப் பந்தல், நவராத்திரிக்குப் பந்தல் என்று டென்ஷனை உருவாக்குகிறார்கள். ‘ என்றான் இளங்கோ, பின்பக்கம் கண்ணாடி வழியாகப் பார்த்துக் கொண்டு.

‘அது என்ன இளங்கோ அப்படிச் சொல்லிவிட்டார்கள் ? எங்கள் ஊரில் தொடங்கிய பழக்கம் இது உங்கள் ஊருக்கு வருவதற்கு ஆண்டுகள் அறுபதானாலும் இப்போதாவது வந்து சேர்ந்ததே என்று நான் மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். நம் தேசம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒன்று என்பதை இந்த அடையாளங்களெல்லாம் மேலும் உறுதிப் படுத்தும்; உறுதிப் படுத்த வேண்டும்! ‘

எதிர்பார்க்காத வார்த்தைகள் என்பதைத் திரும்பிப் பார்த்த இளங்கோவின் விரிந்த கண்கள் காட்டின. ஒரு விநாடி அவனுடைய பார்வையைச் சந்தித்த அருண் மேலும் தொடர்ந்தான்: ‘நம் தேசம் பலப்பட நம் பண்பாட்டின் பலமான கூறுகளை நாம் கண்டு கொள்ளவேண்டும். நம் தேசம் ‘கல்சுரலி ரிச் ‘ என்பதை நாம் என்றைக்கும் மறக்கக் கூடாது. தேவையில்லாமல் சண்டை சச்சரவுகள் எழக்கூடாது; ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அதை முதலில் உணரவேண்டியது அவர்கள்! ‘

அவர்கள் ?

‘சுரீர் ‘ என்று எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டு இளங்கோ அருணிருந்த பக்கம் மேலும் கூர்மையாகப் பார்த்ததில் அருணுக்குப் பதிலாய் அங்கே நெளிந்துகொண்டிருந்த ஓர் அருவெறுப்பான பூச்சிதான் தெரிந்தது.

மெளனமாய் முன்பக்கம் முகத்தைத் திருப்பினான் இளங்கோ. விடுமுறையை வெறுத்ததற்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும். திடாரென்று கனடாவிலிருக்கும் தம்பி லோகநாதனின் முகம் இளங்கோவின் கண்களில் மின்னலடித்தது. ‘ஏகம் சத். ஒன்றே உண்மை என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும் அண்ணா. யோகாநந்தா சொல்கிறார். மூச்சடக்கி அடையும் சபிகல்ப சமாதியைத் தாண்டி முற்றுமுணர்ந்த பரமானந்த மயமான நிர்பிகல்ப சமாதியை அடைந்தோமானால் எல்லாமே ஒன்றுதான் என்பதை நாம் உணர்ந்து கொள்வோம். ஆதிசங்கரர் சொல்லியிருப்பதைப் பார்: எல்லாமே சக்தியென்று தெரிந்தால் இவ்வுலகில் எந்தவொரு அணுவும் நான், என்னிலிருந்து வேறுபட்டதில்லை என்பதும் தெரிந்துவிடும். நம் முன்னோர்களுக்கு அறிவியலறிவு இருந்திருக்கிறது அண்ணா. ‘ இதுநாள் வரை ஏற்படாத கலக்கம் திடுதிப்பென்று இளங்கோவிற்குத் தன் தம்பியின் பொருட்டு உண்டாக, நெஞ்சில் நூறுகிலோவை யாரோ தூக்கிவைத்தது போல் இருந்தது. அமெரிக்கா போய் ‘ஞானோதயம் ‘ பெறுபவர்களின் அடுத்த கட்டம் என்ன ? இதோ இந்த ‘அருணோ ‘தயமா ?

அதற்குப் பிறகு அளவுடன் பேசத் தலைப்பட்ட இளங்கோ, மலைக்கோவிலின் முகப்பில் இருக்கும் பாதுகாவலர் இருப்பு கண்ணில் பட்டதும் காரை நிறுத்தச் சொன்னான். அங்கிருந்த தொலைபேசியில் பாலாவுக்குத் தகவல் கொடுத்தபிறகு காரை ஒரு பக்கமாய் நிறுத்திவிட்டு கோவிலை நோக்கி நடந்தார்கள்.

முதுகிலும் நாக்கிலும் வேல்களைச் செருகிக் கொண்டு, மஞ்சள் நீரில் நனைந்திருந்தாலும் காவடியேற்றிய தழும்புகள் சிவந்திருந்த தோள்களுடன் ஆறிலிருந்து அறுபதுவரை இருந்த பக்த கோடிகள் ஆங்காங்கு நெருக்கிக் கொண்டிருந்தார்கள். ஒலிபெருக்கி மூலமாக, ‘அந்த முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்குக் காரியம் கைகூடுமே; பகை மாறி உறவாகுமே! ‘ என்று டி.எம்.எஸ் குழைந்து கொண்டிருந்தார். குழந்தைகள் துணிவுடனும் பெரியவர்கள் தயக்கத்துடனும் கொடுத்த வாழைப் பழங்களை தோலுடன் விழுங்கி பின் அவர்களின் தலைமேல் துதிக்கையை வைத்து ஆசிர்வாதம் செய்து கொண்டிருந்த கோவில் யானையின் முகமே தெரியாதவாறு நீறு பூசியிருந்தாலும் அதன் கண்களின் அருகே இருந்த சுருக்கங்கள் அதற்கு ஏறிக்கொண்டிருக்கும் வயதைக் காட்டின. பக்கத்திலிருந்த வெற்றிலைப் பாக்குப் பழத்தட்டுக் கடைக்குள்ளிருந்து ரேடியோவில் மெலிதாகக் கேட்ட ஒலிச்சித்திரத்தில் ரஜினிகாந்தின் குரல் … ‘அந்த ஆண்டவன் சொல்றான்; இந்த அருணாச்சலம் செய்றான்! ‘

சொன்னபடி நூறுரூபாய் சிறப்பு தரிசன வரிசை வாயிலின் முன் பாலா காத்திருந்தான். அலுவலகத்தில் பார்க்கும் பாலாவுக்கும் இங்கிருக்கும் பாலாவுக்கும்தான் எத்தனை வேறுபாடு ? பேன்ட் சட்டை சகிதம் கீழ்த் திருத்தணியில் நடமாடும் பாலா, மேலே மலைக்கு வந்தானானால் பூனூல் ஆடும் திறந்த மார்புடனும், பின்னால் வாரி முடிந்துவிடப்பட்ட குடுமியுடனும், மடித்துப் பின்னால் செருகப்பட்ட நாலு முழ வெள்ளை வேட்டியுடனும், செருப்பில்லாமல் தேங்காய்ச் சில்லுகளூடும், நசுங்கிய வாழைப் பழங்களூடும், பஞ்சாமிர்தத்திலிருந்து பக்தகோடிகளின் குழந்தைகள் விட்ட ‘தீர்த்தம் ‘ வரையிலும் எல்லாவற்றூடும் நடந்து பழக்கப்பட்ட கருமை படிந்த வெள்ளைப் பாதங்களுடனும் … தந்தை இறந்து விட்டதால் சடுதியில் கிடைத்த ‘பதவி ‘யில் இருந்த அர்ச்சகன் பாலசுப்பிரமணிய சாஸ்திரி வேறு எப்படி இருப்பான் ?

இந்தக் கோலத்தில் ஏற்கனவே பாலாவை இளங்கோ பலமுறை பார்த்திருந்தாலும் இப்போது சற்று எரிச்சலாய் இருந்தது. வேளை/லைக்கொரு கோலம். அது சரி, நாம் இங்கே இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம் ? இப்போது இளங்கோவுக்கு எரிச்சல் தன்மேலேயே திரும்பியது. எல் ஐ சி வேலை ஒரு வேலை; அதைக் காப்பாற்றிக் கொள்ள குன்றம் ஏறிக் குமரனின் தரிசனம். அதுவும் ஓசியில்!

இளங்கோவின் மெளனம் இன்னும் இறுகித் திடமாக, இதைக் கவனிக்கவும் நேரமில்லாத பாலாவோ தன் அரைகுறை இந்தியில் அருணுடன் பேசிக்கொண்டு முன்னே நடந்தான். குழந்தை இன்னும் தூங்குவதால் ஏதோ காரணம் சொல்லி காரிலேயே தங்கிவிட்ட அருணின் மனைவியும், சுற்றுச் சுவருக்குப் பின்னே மறைவாக பீடி பிடிக்க ஒதுங்கி விட்ட காரோட்டுநரும் கூட இல்லாததால் எண்ணங்களே துணையாக பின்னால் இளங்கோ: கட்டாய சரஸ்வதி வாழ்த்து நுழைந்த அரசியலிலிருந்து, தனிமனித அழகியலைத் தொடவேண்டியதை வற்புறுத்தும் ‘முற்போக்கு ‘ இலக்கியங்களென்ன, தெருவிலிருக்கும் விநாயகர் பந்தலிலிருந்து வீட்டுக்குள் லோகா பேசும் புது மோஸ்தர் பொருள்முதல்வாத ஆன்மீகமென்ன, இதோ இந்த அமெரிக்க அருணிலிருந்து நாளுக்கு நாள் அதிகமாகும் திருத்தணி மொட்டைகளென்ன … ?

உள்ளே மூலஸ்தானத்தில் வள்ளி தெய்வானையுடன் பிரகாச விளக்குகளின் ஒளிவெள்ளத்திலும், சாம்பிரானி, ஊதுபத்தி, விபூதி, மஞ்சள், சந்தன மணக் கலவையிலும் தணிகைமலைக் குமரன் திருப்தியாகச் சிரித்துக் கொண்டிருந்தான். மனமுருகித் திருமுருகாற்றுப்படையிலிருந்து பாடியவாறே தீபாராதனை செய்து கையில் ஏந்திய ஜோதியுடன் வெளிவந்த பாலாவின் தட்டில் நூறுரூபாய்த் தாளை வைத்த அருண் பயபக்தியுடன் திருநீற்றை எடுத்துப் பூசிக்கொள்ள, இளங்கோவோ பாலா ஊற்றிய பஞ்சாமிர்தத்தை உள்ளங்கையிலிருந்து உறிஞ்சிக்குடித்தான். சொர்க்கம் கொஞ்சம் கண்ணில் தட்டுப்பட்டது. பக்தியில்லையென்றாலும் மெய்ம்மறக்கச் செய்த அந்த கணத்தில் இளங்கோவுக்கும் ‘அரோகரா, ‘ என்று உருகலாம் போலத் தோன்றியது.

தனியாக எடுத்து வந்திருந்த இரண்டு பஞ்சாமிர்த டப்பாக்களைக் கண்ணிமைக்கும் நேரத்தில் அருண் கையிலொன்றும் இளங்கோ கையிலொன்றுமாகத் திணித்த பாலா அவர்களை ஏறக்குறையத் தள்ளிக்கொண்டு சந்நிதானத்துக்கு வெளியே இருந்த த்வஜஸ்தம்பத்தினருகே வந்தான். அருண் அங்கு வந்த பிறகும் கண்ணை மூடி ஏதோ மந்திரத்தைத் தொடர்ந்து முணுமுணுப்பது தெரிந்தது.

இளங்கோவின் பக்கம் நெருங்கிய பாலா, ‘அப்புறம் சார், சொல்லுங்க. வீட்டிலே எப்படி இருக்காங்க ? ‘ என்றான். ‘போன வாரம் வந்திருந்தப்ப உங்க கம்ப்யூட்டர்லே மோடம் வேலை செய்யலன்னு சொன்னீங்களே சரியாயிடுத்தா இப்போ ? இங்க திருத்தணி பஸ் ஸ்டாண்ட் பக்கத்திலேயே ஷண்முகா நெட்கேஃப்னுட்டு புதுசா சைபர்சென்ட்டர் திறந்திருக்கான் சார், தெரியுமோ ? ‘

சட்டென்று தடம் புரண்ட இளங்கோ பாலாவை மலைப்புடன் பார்த்தான். பின்னே ? சரவணப் பொய்கையில் முழுகியெழுந்தபின் சட்டென்று சாட்டிலைட் டி.வி. யென்றால் எப்படி ? கண்கள் கூசின.

இளங்கோவைக் கண்டுகொள்ளாத பாலா அவிழ்ந்திருந்த தன் கூந்தலை மீண்டும் முடிந்துகொண்டான். ‘சரி, நமக்கும் உதவியா இருக்குமேன்னு நானும் ஜாவா, கோர்பா கத்துக்க ஆரம்பிச்சுட்டேன் சார். உங்க கனடா தம்பி கிட்ட சொல்லி வைங்க. நானே கூட நெட்டிலேயே வேலை தேடிண்டிருக்கேன். கிடைச்சா போயிட வேண்டியதுதான். எக்ஸ் எம் எல் பத்தி ஐபிஎம் சைட்டுல ஒரு சிபிடி கெடச்சுது சார். ஃப்ரீதான். இந்த இணையத்தைப் பொறுத்தவரை ஏழை, பணக்காராங்கிற வித்தியாசமில்லாமப் போச்சு சார். யாருக்கு வேண்டுமானாலும் எதைப்பத்தியும் இன்ஃபர்மேஷன் கிடைக்குது பாருங்கோ! அறிவு வளர்றதிலே இப்படி ஜனநாயகம் வந்துடுச்சின்னா போதும் சார். மிச்ச விருத்தியெல்லாம் ஜனங்களுக்குப் பின்னாலே பேஷா தானே வந்துடும். என்ன சொல்றீங்க ? ‘

‘ம்… ? ஆமாமாம் … ‘ என்று வியப்பின் ஆழத்திலிருந்து மேலே வந்த இளங்கோ பாலாவை ஒரு கணம் உற்று நோக்கி, ‘அற்புதம்! ‘ என்றான். பஞ்சாமிர்தம் தொண்டையில் இறங்கி முழுதாய்ப் பத்து நிமிடம் ஆகியிருந்தாலும் நாவில் இன்னும் இனிப்பு இருந்தது.

-oOo-

Series Navigation