வெள்ளை மாளிகை வல்லரசர் !

This entry is part [part not set] of 30 in the series 20070726_Issue

சி. ஜெயபாரதன், கனடாவெட்டிப் போரில் சடுகுடு விளையாடிப்
பெட்டி பெட்டியாய்த்
தோளில் சுமக்க வைத்து
நினைவுச் சின்னங்களைத் தினமும்
அனுப்பி வருகிறது
வெடியரசு ஈராக் !
குருதியில் மூழ்கிக்
குளிர்ந்து போன சடலங்கள் !
சூடு தருவது
மூடிய அமெரிக்கக் கொடி !

விடுதலைக் கொடி பட்டொளி
வீசி நாட்டுக்குள் பறக்க
புலம்பெயர்ந்து காய்கிறார் குடிமக்கள் !
விதவைகள்
உருவாக்கும் சுடுகாடு ஈராக் !

வெள்ளை மாளிகையின் குருட்டுக்
கண்களில்
ஒன்றில் சுடுவது சுண்ணாம்பு !
மற்றொன்றில் பூப்பது மல்லிகைப் பூ !
அமெரிக்க ஆணிகள்
சிலுவையில் அடித்துள்ளன
வலுவற்ற ஈராக்கை !

போர்ப் பித்தரின்
போலி யானை
புதைந்து கிடக்குது குழிக்குள் !
கால் பில்லியன் குடிமக்கள்
தேர்ந்து அனுப்பிய
மேல் சபை ஆளுநரும்
தோல் உரிக்க முடியாத
வெங்காயம் ! ஆயினும்
எங்கும் கண்ணீர் வெள்ளம் !

முடியரசை
முறியடித்தார் முன்பு லெனின் !
குடியரசு வல்லவர்
முடி இறக்கப் போகும்
குடிமகன் யார் ?

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 24, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா