வெற்றியில் கிறக்கம்

This entry is part [part not set] of 35 in the series 20100121_Issue

ராமலக்ஷ்மி, பெங்களூர்.


இலக்கைத்
தொட்டு விட்ட
புள்ளியில் நின்று
தன்னை மறப்பதும்
தற்பெருமை பேசுவதும்
சிறையில் இருப்பவன்
அறையின் விசாலத்தை
சிலாகிப்பதாகாதா?

அடைந்த உயரம்
அளிக்கலாம் ஊக்கம்
ஆனால் அதுவே
தரலாமா தலைக்கனம்?
பரந்தது உலகம்
உணர்வது முக்கியம்;
வெற்றியில் கிறக்கம்
வீழவும் வைக்கும்.

எத்தனை நேரம்தான்
ஏந்தியே நிற்போம்?
கிடைத்த கோப்பையை
கீழே வைத்துவிட்டு
வந்த பாதைக்குஒரு
வணக்கம் சொல்லிவிட்டு
இந்தப் பக்கம்
திரும்பினால்தானே-
தென்படும் தூரத்தே..
சவாலாய் நமக்குக்
காத்திருக்கின்ற
அடுத்த இலக்கு?!
*** *** ***

ramalakshmi_rajan@yahoo.co.in

Series Navigation