வெறுப்பும் வேதனையும் – மார்க்கெரித் துராஸின் “காதலன்”

This entry is part [part not set] of 33 in the series 20080724_Issue

பாவண்ணன்



அன்புள்ள நண்பர்களே, எல்லாருக்கும் என் மாலை வணக்கங்கள். கடந்த ஐந்தாண்டுக் காலமாக தொடர்ச்சியாக இலக்கிய இதழ்களை வாசித்துக்கொண்டு வரும் ஒரு வாசகனுக்கு நன்கு அறிமுகமான ஒரு பெயர் நாகரத்தினம் கிருஷ்ணா. பிரெஞ்சு மொழியின் சில முக்கியமான ஆக்கங்களை தமிழில் மொழியாக்கம் செய்து வழங்குகிறவராகவும் பிரெஞ்சு மொழியின் இலக்கிய ஆளுமைகளைப்பற்றி அறிமுகம் செய்பவராகவும் அவர் திகழ்ந்து வந்திருக்கிறார். மொழிபெயர்ப்பாளராக மட்டுமல்ல, குறிப்பிடத்தகுந்த நாவலாசிரியராகவும் அவர் தொடர்ந்து இயங்கி வருகிறார். திண்ணை இணையஇதழ் அவருடைய படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

அவருடைய சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல் மார்க்கெரித்து துராஸ் என்னும் பிரெஞ்சு நாவலாசிரியர் எழுதிய “காதலன்” என்னும் நாவலாகும். இந்த நாவலைப் படித்து முடித்ததும் மொழிபெயர்ப்பு நாவல்கள் வழியாக அறியவந்த காதலர்களை அசைபோட்டது மனம். தல்ஸ்தோயின் “புத்துயிர்ப்பு” நாவலில் இடம்பெறும் காதலனை முதலில் நினைத்துக்கொண்டேன். தொடக்கத்தில் காமத்துக்கான வடிகாலாக கத்யூஷாவை நினைத்தாலும் ஒரு தண்டனைக்கைதியாக பார்க்கிற தருணத்தில் மனம் மாறி அவளை அக்கணம்முதல் விரும்பத் தொடங்கி, அவளுடைய மன்னிப்பையும் காதலையும் யாசிக்கிறவனாக மாறித் தோல்வியுறும் இளைஞன் நெஹ்லூதவை ஒருபோதும் மறக்கமுடியாது. மாஸோ எழுதிய “காதல் தேவதை” நாவலில் இடம்பெறும் காதலனையும் நினைத்துக்கொண்டேன். அவமானப்படுத்தி, அடித்துத் துவைத்து, ஓர் அடிமையென நடத்தும் நங்கை எப்போதாவது தன்னை முத்தமிடவும் தழுவவும் இன்பம் நுகரவும் அளிக்கும் அனுமதியை விழைந்து பைத்தியத்தைப்போல காதலுற்றுத் திரிந்தவன் அவன். கதேயின் “காதலின் துயரம்” நாவலில் இடம்பெறும் இளைஞன் இன்னொருவனுக்கு மனைவியாகிவிட்டவளை விரும்பி, அவளை அடைய இயலாத துயரத்தில் உருக்கமான கவிதைகளை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்கிறான். தஸ்தாவெஸ்கியின் “வெண்ணிற இரவுகள்” நாவலில் இடம்பெறும் இளைஞன் இன்னொருவருக்காக காத்திருப்பவள்மீது அடங்காத காதலோடு உதவி செய்கிறான். இந்தக் காதல் முயற்சிகள் வெற்றி பெற்றிருக்கலாம். அல்லது முறிந்து போயிருக்கலாம். அது அல்ல முக்கியம். காதல் வயப்பட்ட மனநிலை என்பது அநேகமாக எல்லாரிடமும் காணப்பட்ட ஒரு பொது அம்சமாக இருந்தது என்பதுதான் முக்கியம். கனவு, ஆசை, எதிர்பார்ப்பு, பதற்றம், துயரம் என எல்லாம் கலந்ததாக காணப்பட்டது அம்மனநிலை.

காதல் மனநிலையே இல்லாத காதலை என்னால் கற்பனையே செய்துபார்க்கமுடியவில்லை. கற்பனைக்கெட்டாத அத்தகு காதலைத்தான் துராஸ் தன் நாவலில் சித்தரித்துள்ளார். ஆசையும் அன்பும் ஈடுபாடும் சிறிதுகூட இல்லாத காதலும் இந்த உலகில் சாத்தியம் என்பதை உணர்த்துகிறார் அவர். படகில் பிரயாணம் செய்யக்கூடிய பதினைந்தரை வயதுள்ள இளம்பெண்ணும் அவளைச் சந்திக்கிற ஏறத்தாழ முப்பத்திரண்டு வயதான சீன இளைஞனொருவனும் சந்தித்து உரையாடுகிறார்கள். முதல் சந்திப்பிலேயே அவன் தன்னைத் திருமணம் செய்துகொள்ளமாட்டான் என்பது அவளுக்குத் தெள்ளத்தெளிவாகவே புரிந்துவிடுகிறது. ஏராளமான நகைகள் பூட்டிய, செல்வம் மிகுந்த, அப்பா தேடிவைத்திருக்கும் பெண்ணை மணந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அவன் வார்த்தைகள் வழியாகவே அவள் அறிந்துகொள்கிறாள். எந்த ஒரு ஆணுக்கும் தன்னால் உண்மையாக இருக்கமுடியாது என தன்னைத்தானே எடைபோட்டு கணித்துக்கொள்கிறவளாகவும் இருக்கிறாள் அவள். அவளை ஒருபோதும் திருமணம் செய்துகொள்ள முடியாது என்பதை அவனும் தெளிவாகவே சொல்லிவிடுகிறான். ஆனாலும் பேசிக்கொள்கிறார்கள். பழகுகிறார்கள். இன்பம் துய்க்கிறார்கள். அவை எதற்கும் தடையில்லை. இருவருக்கும் இடையே உள்ள இந்த விசித்திரமான உறவுதான் நாவலின் மையம். பற்றில்லாத, ஈடுபாடில்லாத, எவ்விதமான ஈர்ப்பும் இல்லாத உலர்ந்துபோன மனநிலையைக் கொண்டதாக இருக்கிறது இந்த உறவு. தொடக்கத்தில் மட்டுமல்ல, இறுதி வரையில் இந்த உலர்ந்த நிலையில் எவ்விதமான மாற்றமும் இல்லை. யாருடைய மனத்திலும் ஈரம் கசிவதே இல்லை. ஒரு காதல் இப்படி இருக்கமுடியுமா என்று நாம் குழம்பித் தவிக்கிற அளவுக்கு, ஈடுபாடே இல்லாத ஒன்றாக இருக்கிறது இந்தக் காதல். நாவலின் இறுதியில் ஒரு காட்சி இடம்பெறுகிறது. அப்போது அவன் வேறொருத்தியின் கணவனாக இருக்கிறான். மனைவியோடு பாரிஸ் நகரத்துக்கு வந்து தங்கியிருக்கிறான். தொலைபேசியில் அவளை அழைத்து இன்னமும் அவளைக் காதலிப்பதாகவும் அவளை மறக்கும் எண்ணம் இல்லையென்றும் சொல்கிறான். அவன் உரையாடலில் அக்கணத்தில் தென்படுவதும் ஈரமற்ற, ஈடுபாடுமற்ற அதே பழைய உலர்ந்துபோன மனநிலை.

அன்பும் ஈர்ப்பும் காதலின் அடிப்படைத் தேவைகள் என்ற எண்ணத்தைத் தகர்த்து தூள்தூளாக்குகிறது இந்தப் படைப்பு. மாறாக, வெறுப்பும் வேதனையும் பழிவாங்கும் உணர்வும் கூட ஆண்பெண் உறவுக்கு ஒரு தூண்டுகோலாக அமையும் சாத்தியங்களை முன்வைக்கிறது.

இப்படைப்பில் இடம்பெறும் இளம்பெண்ணுக்கு அம்மாவின்மீது வெறுப்பு. சகோதரர்கள்மீது வெறுப்பு. சமூகத்தின்மீது வெறுப்பு. இந்த வெறுப்பைத் தணித்துக்கொள்ளும் வடிகாலாகவே அவள் ஆண்துணையை ஏற்றுக்கொள்கிறாளோ என்று எண்ணத் தோன்றுகிறது. அவள் அம்மாவும் வெறுப்பு நிறைந்தவளாகவே வாழ்கிறாள். கணக்கு படிக்கச் சென்ற மகள் மொழிப்பாடத்தில் முதலிடம் பெற்று, கணக்குப் பாடத்தில் தோல்வி பெறுவதை அவளால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. நினைத்தது நடக்கவில்லை அல்லது விரும்பியது நிறைவேறவில்லை என்கிற கசப்பும் வெறுப்பும் அவள் மனத்தில் மண்டிக்கிடக்கின்றன. சமூகத்தின் மதிப்புக்குரியவர்களாக தம்மால் வாழமுடியவில்லை என்கிற வெறுப்பில் திளைப்பவர்களாக இருக்கிறார்கள் சகோதரர்கள். சொத்துக்கும் வசதிக்கும் ஆசைப்பட்ட சீனக் காதலன் முப்பத்திரண்டு வயதில் அப்பா சுட்டிக் காட்டுகிற பெண்ணை வெறுப்பு மண்டிய நெஞ்சத்தோடுதான் ஏற்றுக்கொள்கிறான். படைப்பில் இடம்பெறும் எல்லா முக்கியப் பாத்திரங்களும் ஏதோ ஒருவகையில் வெறுப்பையும் விரக்தியையும் சுமந்தவர்களாக இருக்கிறார்கள். வெறுப்பிலேயே வாழ்கிறார்கள். வெறுப்பிலேயே திளைக்கிறார்கள். தணல் அடங்காத நெருப்புப்போல வெறுப்பு என்பது அவர்களுடைய நெஞ்சில் புகைந்துகொண்டே இருக்கிறது. மனைவி பார்த்துக்கொண்டிருக்கும்போதே இன்னொரு பெண்ணை தோளோடு சாய்த்துக்கொண்டு தனியறைக்கு அழைத்துச் செல்கிறான் ஒருவன். மனைவியோடு ஊர்ப்பயணத்துக்கு வந்தவன், தொடக்கத்தில் தன்னோடு தொடர்பில் இருந்தவளை தொலைபேசியில் அழைத்து தன் காதலைத் தெரிவிக்கிறான் இன்னொருவன். வெறுப்பில் திளைப்பதிலும் இன்பத்தில் திளைப்பதிலும் ஆண்பெண் வேறுபாடு எதுவுமில்லை

தீயாக எரியும் இந்த வெறுப்பு இவர்களுடைய மனத்தில் குடிபுகுந்தது எப்படி என்பது முக்கியமான கேள்வி. தன் தாய்க்கு இச்சமூகம் இழைத்த அநீதிகளின் விளைவாகவே கசப்பும் வெறுப்பும் அலட்சியமும் அகம்பாவமும் நிறைந்தவர்களாக தானும் தன் சகோதரர்களும் வளர்ந்ததாக இளம்பெண் சொல்வதாக ஒரு வாசகம் நாவலில் இடம்பெறுகிறது. ஒரு சம்பவம் அல்லது ஞாபகம் ஒருவருடைய வாழ்வில் உருவாக்கும் எதிர்மறையான பாதிப்புகளுக்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. தூய மனநிலையில் எளிய காதலைக்கூட வழங்கமுடியாதவர்களாக அல்லது பெறமுடியாதவர்களாக அவர்களை மாற்றிக் கட்டமைத்துவிடுகிறது இந்த உணர்வு.

தம்மைப்பற்றி அவளே சொல்வதாக இடம்பெறும் வாசகங்கள் ஒருவகையில் நம்மைப் பதற்றமடைய வைக்கும் வலிமை பொருந்தியவை. காலையோ அல்லது மாலையோ அல்லது புதுவருடமோ எதுவாக இருப்பினும் தமக்குள் வணக்கங்களையோ அல்லது வாழ்த்துகளையோ பரிமாறிக்கொள்ளும் பழக்கமே இல்லை என்று தொடங்குகிறாள் அவள். நன்றி என்கிற சொல்லை அறிந்ததே இல்லை என்று சொல்கிறாள். ஒவ்வொருவரும் மற்றவரிடத்தில் ஊமையாக இருக்கப் பழகிவிட்டதாகவும் சொல்கிறாள். கல்நெஞ்சக்காரர்கள் என தம்மைப்பற்றிச் சொல்லிக்கொள்வதில் அவளுக்கு எவ்விதமான தயக்கமும் இல்லை. உரையாடல் என்னும் சொல் தம் அகராதியிலேயே இல்லை என அவள் சொல்வது உச்சக்கட்டமான வாசகம். மாறாக, பாசாங்கும் அகம்பாவமும் மட்டுமே நிறைந்திருந்தன. எப்படியாவது அடுத்தவரை முடித்துவிடவேண்டும் என்ற கவலையோடுதான் ஒவ்வொரு நாளும் பிறப்பதாகவும் அதற்கான முயற்சிகளில் இறங்குவதாகவும் சொல்கிறாள். அடுத்தவரைக் காண நேரும் போதெல்லாம் முகத்தைத் திருப்பிக்கொள்வதுதான் தன் பழக்கமென அறிவிக்கிறாள். நேரிட்டுப் பார்ப்பது என்பது, பிறரிடத்தில் அல்லது பிறருக்கென வெளிப்படுத்தும் ஒருவித ஆர்வத்தை உருவாக்கிவிடும் என்பதும் அந்த ஆர்வம் தம்மைத் தாழ்வுறவைத்துவிடும் என்பதும் அவள் நம்பிக்கைகள். ஈரமே இல்லாத மனநிலை அவளிடம் உருவாவதற்கான பின்னணியைப் புரிந்துகொள்ள அவளே முன்வைக்கிற வாசகங்களே துணையாக உள்ளன. தம் காதலர்களைப்பற்றிய தகவல்களும் இடம்மாறி இடம்மாறி காலணி, தோணி, சைகோன் தெருக்கள், இரயில் பயணங்கள் எனப் பல இடங்களில் ஏற்படுத்திக்கொள்கிற சந்திப்புகளும் தம் மனத்துக்குள் கட்டிக்காக்கும் ரகசியங்களில் முதன்மையானவையாக உள்ளன என்பது அவளுடைய முக்கியமான நினைவுப்பதிவாக உள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஓர் அம்சம்.

முழுக்கமுழுக்க ஈரமே இல்லாமல் உலர்ந்து போனவளாகவும் அந்த இளம்பெண்ணை மதிப்பிடமுடியவில்லை. பதினைந்தரை வயது மட்டுமே ஆன இளம்பெண்ணோடான உறவு என்பது சட்டப்படி தண்டனைக்குரிய விஷயம். தன்னுடன் உறவுகொண்ட சீன இளைஞனை மிக எளிதாக அவளால் சிறைக்குள் தள்ளிவிடமுடியும். ஆனால் அவள் அப்படிச் செய்வதில்லை. மாறாக, அவனுடைய விருப்பப்படியே அந்த உறவை முடிந்தமட்டும் ரகசியமாகவே வைத்திருக்க முயற்சி செய்கிறாள். காட்டிக்கொடுக்கும் எண்ணம் ஒருபோதும் அவள் நெஞ்சில் எழுவதில்லை. தற்செயலாக அந்த உறவைப்பற்றிய தகவல்களை தெரிந்துகொள்கிற தாயிடமும் சகோதரர்களிடமும் அதை உறுதிப்படுத்திச் சொல்கிறாளே தவிர, அந்த உறவை ஒரு மூலதனமாக வைத்து பணமீட்ட விழையும் தந்திரங்களுக்கு ஒருபோதும் துணையாக நிற்பதில்லை. சந்தர்ப்ப சூழல்களை வைத்துப் பார்க்கும்போது அவளுக்கு அந்தச் சீன இளைஞன்மீது ஆழ்ந்த காதல் இருந்திருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. அவளே அறியாத ஒன்றாக இருக்கிறது அந்த ஆழம் என்பதுதான் துரதிருஷ்டமானது. அதனாலேயே மீண்டும்மீண்டும் வெறுப்பிலும் வேதனையிலும் மூழ்கியபடி இருக்கிறாள்.

இப்படைப்பில் இடம்பெறும் தாயின் பாத்திரம் சிக்கலும் விசத்திரத்தன்மையும் இணைந்த ஒன்றாக உள்ளது. பிறந்ததிலிருந்து தம் பிள்ளைகள் ஒற்றுமையாக விளையாடியதைக் காட்டிலும், சேர்ந்து வெளியே போனதைக்காட்டிலும் சண்டையிட்டுக் கொண்டதே அதிகமென்பது அவளுடைய நினைவுப்பதிவாக உள்ளது. தோட்டத்திலிருந்து பிரிந்து மேடான பகுதியில் உள்ள வீடு கடுமையான மழையில் அகப்பட்டு மூழ்கத் தொடங்குகிற நேரத்தில் கூடத்தில் உள்ள பியானோவைத் திறந்து பள்ளியில் கற்ற இசைக்குறிப்பை வாசிப்பது இன்னொரு ஞாபகப்பதிவு. சீர்குலைந்திருக்கும் வீடொன்று சட்டென்று ஒரு குளமாக மாறிச் சிதைகிற நேரத்திகல் ஒரு தாய் மகிழ்ச்சியோடு இசைக்கத் தொடங்கும் விசித்திரம் நம் புரிதல் எல்லைக்கு அப்பாலானதாக உள்ளது.

துராஸ் எழுதிக் காட்டுகிற காதல் மிகவும் சிக்கலானதாக உள்ளது. அந்தக்காதலை வரையறுத்துக் காட்டுவது சிரமமான ஒன்றாக உள்ளது. இணைந்து வாழத் தூண்டுகிற காதல் அல்ல இது. விரும்பும்போது இணைந்தும், விரும்பாதபோது பிரிந்துபோவற்குமான வழியையும் ஒருசேரத் தக்கவைத்துக்கொண்டிருக்கிற காதல். காதலில் உள்ள இன்பம் அல்ல, காதலை ஏற்றுக்கொள்கிற அல்லது நிராகரிக்கிற சுதந்திரமே மிக முக்கியமான அம்சமாக மாறிவிடுகிறது. சுதந்திரத்தை அதிக அளவில் பயன்படுத்தும் தருணங்களில் வெறுப்புக்கும் வேதனைக்கும் ஆளாவதை யாராலும் தவிர்க்கமுடிவதில்லை. காதல் உணர்வைக்கூட வெறுப்புக்கும் வேதனைக்கும் இடையில்தான் உணரமுடிகிறது என்பது துயரார்ந்த ஒன்றாகவே தோன்றுகிறது.

(12.07.08 அன்று எனிஇந்தியன் பதிப்பகமும் தென்திசை பதிப்பகமும் இணைந்து சென்னை புக் பாயின்ட் அரங்கில் நிகழ்த்திய நாகரத்தினம் கிருஷ்ணாவின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய உரையின் எழுத்துவடிவம்.)


paavannan@hotmail.com

Series Navigation