வெ.சா. என்றொரு விமர்சகர்

This entry is part [part not set] of 43 in the series 20070125_Issue

நரேந்திரன்


சமீபத்தில் படித்தவற்றில் இரண்டு புத்தகங்கள் என் நினைவில் நிற்கின்றன. முதலாவது, தமிழிலக்கிய உலகிற்கு பரவலான அறிமுகமுள்ள விமர்சகர் திரு. வெங்கட் சாமிநாதன் எழுதிய “கலை உலகில் ஒரு சஞ்சாரம்”. இரண்டாவது, நியூஸ்வீக் இண்டர்நேஷனல் பத்திரிகையின் நிருபரான ஸ்டீபன் க்ளெய்ன் (Stephen Glain) எழுதிய, “Mullahs, Merchants and Militants: The Economic Collapse of the Arab World”.
Mullahs, Militants…, அரபு உலகின் இன்றைய பிரச்சினைகள், அதன் வீழ்ச்சிக்கான காரணங்கள், எதிர் வரும் காலங்களில் எழக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆரய்கிறது. ஸ்டீபன் க்ளெய்ன் ஏழிற்கும் மேற்பட்ட அரபு நாடுகளில் பயணம் செய்து, அமெரிக்கர்களுக்கே உரித்தான சிரத்தையுடன், தகவல்களைத் திரட்டி எழுதியிருக்கும் மிகச் சிறந்த புத்தகம். அரபு உலக ஆர்வலர்கள் படிக்க வேண்டிய ஒன்று. அதுபற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுத முயல்கிறேன்.
இந்த கட்டுரை வெ.சா.வின் “கலையுலகில் ஒரு சஞ்சாரம்” குறித்தானது. முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். இது வெ.சா.வின் புத்தகத்திற்கான விமரிசனமோ, மதிப்புரையோ அல்ல. அந்த அளவிற்கு எனக்குத் தகுதி இல்லை. அவரின் புத்தகத்தைப் படித்த பிறகு எனக்குள் ஏற்பட்ட சில எண்ணங்களின் விளைவே இக்கட்டுரை.
மேற்கூறிய இரண்டும் சற்றே பழைய புத்தகங்கள் என்றாலும், படித்தறிய எனக்குக் கிடைத்த வாய்ப்பு இப்பொழுதுதான். ஒரு நல்ல புத்தகமானது, அது எவ்வளவு காலத்திற்கு முன் எழுதப்பட்டதாக இருந்தாலும், என்றேனும் ஒருநாள் அதன் வாசகனைச் சென்றடைந்தே தீரும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. அது அச்சில் வந்திருந்தாலும் சரி; அல்லது வெறும் ஓலைச் சுவடியில் எழுதப்பட்டிருந்தாலும் சரி. தன் வாசகனை தானே கண்டடைந்து விடும் வலிமை அந்த நூலுக்கு உண்டு. நூற்றாண்டுகளுக்கு எழுதப்பட்ட திருக்குறளும், கம்ப இராமாயணமும் இன்றளவும் அதன் வாசகர்களைச் சென்றடைந்து கொண்டுதானே இருக்கின்றன?
வெ.சா. அறிமுகப்படுத்தும் பல்வேறுபட்ட இந்திய படைப்பாளிகள் பெரும்பாலான தமிழ்நாட்டினருக்கு அதிகம் அறிமுகமில்லாதவர்கள். ஆனந்த குமாரஸ்வாமியிலிருந்து அல்-குரேஷி வரை அவர் அறிமுகம் செய்யும் பரந்து பட்ட ஆளுமைகளை, திறமைகளை நான் இதற்கு முன் அறிந்ததில்லை. எம். எ·ப். ஹ¤செய்ன், கே. தாமோதரன், முத்துக் கோயா, ரங்கசாமி சாரங்கன், பூபன் காக்கர், ப்ரொ·பல்ல மொஹந்தி என்று நாம் அறிந்தும், அறியாத இந்திய படைப்பாளிகள் குறித்து அவர் எழுதும் தகவல்கள் வேறங்கும் காணக் கிடைக்காதவை. இந்திய படைப்பாளிகள், உலகின் மற்ற தலை சிறந்த படைப்பாளிகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்களல்ல என நம்மைப் பெருமிதம் கொள்ள வைக்கிறார் வெ.சா.
ஒரு கலைஞனும் சமூகமும் கொள்ளும் உறவு குறித்தும், அன்றாட வாழ்வில் நாம் பார்க்கத்தவறிய அழகுகள் குறித்தும், மனிதனின் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட கலைகள் குறித்தும், இசை, நாடக, ஓவிய, சிற்பக் கலைகளில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் எழுதிச் செல்லும் வெ.சா.வின் பார்வை மிக ஆழமானது. இன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் நிலவும் அவலத்தின் மீதான அவரின் தார்மீகக் கோபம் நம்மையும் தொற்றி கொண்டு விடுகிறது. நம்மையும் அறியாமல்.
தமிழர்களைப் போல தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டு வரும் ஒரு சமுதாயம் உலகில் எங்குமே காணக்கிடைக்காத ஒன்று. நமது கோவில்களும், கிராமக் கலைகளும் சிறிது சிறிதாக தமது கண் முன்பே அழிந்து வருவதைக் கண்டும் ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்க்கும் மக்களும், அழிவினைத் துரிதப்படுத்த துணை போகும் மூடத்தனமான அரசியல்வாதிகளும் நிறைந்த விசித்திர உலகமே இன்றைய தமிழ்நாடு.
தமிழ்நாட்டுக் கோயில்களின் அழகும், அமைதியும் போல உலகில் வேறெங்கும் நான் இதுகாறும் காணவில்லை. நமது கலாச்சார செல்வங்களின் அழிவு குறித்தும், தலைமுறை தலைமுறைகளாக நிலவி வரும் அலட்சியம் குறித்தும் வெ.சா. கொள்ளும் கவலை நம்மையும் ஆட்கொள்ளுகிறது. வேலூர் பக்கமிருக்கும் ஏதோ ஒரு கோவில் பொது கழிப்பிடமாக பயன்பட்டு வருகிறது என வெங்கட் சாமிநாதன் எழுதுகையில் மனம் பதைக்கிறது. இதனைத் தடுக்கும் சக்தியற்றவர்களாக, கவலையில்லாதவர்களாக இருக்கும் இன்றைய தமிழர்களின் மனப்பாங்கு ஆச்சரியமான, ஆராயப்பட வேண்டிய ஒன்று.
எண்பது வயதிற்கும் மேலான ஒரு மூத்த அரசியல்வாதி சமீபத்தில் “கோயிலில் இருக்கும் சிலைகள், பூசாரிகளே கண்களை மூடிக்கொள்ளும் அளவிற்கு ஆபாசமாக இருக்கின்றன” என ஒரு தத்துவ முத்தை உதிர்த்தார். வள்ளுவர் கோட்டமும், வள்ளுவருக்குச் சிலையும் எடுத்த, ஓரளவு கலையுணர்வு உள்ள அரசியல்வாதி என்று நான் இதுகாறும் நம்பிக் கொண்டிருந்த ஒருவரிடமிருந்து இதனை எதிர்பார்க்கவில்லை. காமக் கண்ணுடன் பார்த்தால், கை உயர்த்தி நிற்கும் கண்ணகி சிலையும் ஆபசமே; முலைப்பால் ஊட்டும் தாயும் ஆபாசமானவளே. எல்லாம் நம் பார்வையில்தான் இருக்கிறது என்பது அவருக்குத் தெரியாதது பரிதாபம்தான்.
பாரிஸ் நகரிலும், ரோமிலும் இருக்கும் நிர்வாணச் சிலைகளை யாரும் ஆபாசம் என்று சொல்லுவதில்லை. அவைகள் கலைப் படைப்புகளாக மட்டுமே பார்க்கப்படுகின்றன. ரசிக்கப்படுகின்றன. இந்த முதிய வயதிலும், நாலந்தர சினிமா நடிகைகள் தங்களின் தனங்களையும், ஸ்தனங்களையும் குலுக்கிய ஆடியதை, ஆட்டிக் காட்டியதை, முதல் வரிசையில் அமர்ந்து ரசித்துப் பார்த்த ஒருவரா கோவில் சிலைகளின் ஆபாசத்தைப் பற்றிப் பேசுவது? கோவிலுக்காவது என்றாவது ஒருநாள்தான் போக முடியும். “ஆபாசத்தை” பார்க்க முடியும். அவர் நடத்தும் தொலைக்காட்சி சேனலில் காலை முதல், இரவு வரை தொடர்ச்சியாக காட்டப்படுவது என்ன? கலைப் படைப்புகளா? அவையெல்லாம் அவருக்கு “கலைப் படைப்பு”களாகத் தெரிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவரெழுதிய ஆபாசக் கதைகளை விடவா கோவில் சிலைகள் ஆபசமானவை? வேடிக்கைதான். உள்ளத்தனைய உயர்வு.
மக்களில் ஒரு சாரார் விபூதி பூசுவதையும், குங்குமம் இடுவதையும் பழித்துக் காட்டும் பகுத்தறிவுச் செம்மலின் வீட்டிற்கு, மதத் தலைவரான சத்திய சாயிபாபா சென்ற போது, ப. செ. வீட்டுப் பெண்கள் சாயி பாபா காலில் காலில் விழுந்து வணங்கியதைப் பற்றி அவர் ஒன்றும் சொல்லாதது ஏன்? ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்வாரோ இந்த பகுத்தறிவுப் பகலவன்? “சக்கரவர்த்தி அம்மணமாக ஊர்வலம் போகிறார்” என்று யார் இவருக்கு உணர வைக்கப்போகிறார்கள்?
முப்பது அல்லது நாற்பது வருடங்களுக்கும் மேலாக, புது டெல்லி தமிழின் முக்கிய பல எழுத்தாளர்களின், விமர்சகர்களின் சங்கமமாக இருந்து வந்திருக்கிறது. தி. ஜானகிராமன், க.நா. சுப்ரமண்யம், வெங்கட் சாமிநாதன், சுஜாதா, வாஸந்தி, சாருநிவேதிதா எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். டெல்லித் தமிழ் சங்கத்தின் பங்கும் இதில் அதிகம். என் சிறு வயதில், அவ்வப்போது குமுதம் போன்ற பத்திரிகைகளில் மறு பிரசுரம் செய்யப்பட்ட சுஜாதாவின் ‘கணையாழியின் கடைசிப் பக்கம்’ மூலமாக, ‘கணையாழி’ என்றொரு பத்திரிகை டெல்லியிலிருந்து வெளிவருவதாக பொதுவாக அறிந்து வைத்திருந்தேன். அதனைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை.
புது டெல்லியில் நான் தங்கியிருந்த ஆறேழு மாதங்களில் நான் பார்க்க விரும்பிய ஒரு இடம் தில்லித் தமிழ்ச் சங்கம். அது எங்கிருக்கிறது? என்று கேட்கையில், “அது அங்கிட்டு இருக்கு” என்று செக்டர் நான்கு குடியிருப்புகளின் பக்கம் கையைக் காட்டினார் ஒரு மதுரைக்கார நண்பர். நான் தங்கியிருந்த முனீர்கா (முனீர் காவ்ன்?) விற்கு எதிரில்தான் செக்டர் நான்கு இருந்தது. தமிழ்ச் சங்கம் செக்டர் நான்கில் இருந்ததா இல்லையா என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. ஆனல் அதனைக் கடைசிவரை சென்று பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டவில்லை. குளிர் காலத்தில் எலும்பைச் சுருள வைக்கும் குளிரும், வேனிற் காலத்தில் வீசும் முகத்தைப் பொசுக்கும் அனல் காற்றையும் தாங்க இயலாமல், இதற்கு ‘மும்பைச்சா பாரிஷே’ பரவாயில்லை என்று மும்பைக்கு பின் வாங்கித் தப்பிச் செல்ல வேண்டியதாகி விட்டது. ஒருவேளை டெல்லியிலியே இருந்திருந்தால் நானும் நல்ல இலக்கியவாதி ஆகியிருக்கலாமோ என்னவோ?
என் கணிப்பில், தமிழ் நாட்டிற்கு வெளியே வசிக்கும் எழுத்தாளர்களின் படைப்புகள் விரிந்த தளத்தில், ஆழத்துடன் இருக்கும். இது என் பொதுவான அனுமானம் மட்டுமே. தவறாகக் கூட இருக்கலாம். கட்டுப்பெட்டித்தனமான தமிழ்நாட்டுச் சூழல் தமிழ்நாட்டு எழுத்தாளர்களை சுதந்திரமாக இயங்க விடுவதில்லை. அல்லது அப்படி எழுதும் அக்கறையோ, அதற்கான அனுபவமோ இல்லாமல் இருக்கிறார்கள். வெ.சா. சொல்வது போல, வியட்நாமிய யுத்தம் பற்றி ஒரு புதுக் கவிதை எழுதி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து விட்டதாக எண்ணி இறுமாப்புடன் பேனாவை மூடி வைத்து விட்டு, யாராவது சினிமாக்காரனின் வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள். பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் ஏதாவது ஒரு அரசியல் கட்சியின், அரசியல் கட்சித் தலைவரின் அடிப்பொடிகளாக இருப்பதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
மோட்டு வளையைப் பார்த்து கதை எழுதும் காலம் முடிந்து விட்டது என்பது கூடத் தெரியாதவர்களை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது? அனுபவப் பின்னனி இல்லாத கதைகளோ, கட்டுரைகளோ நிலைத்து நிற்கக் கூடியன அல்ல. கேரளத்து பஷீரின் எழுத்தில் காணப்படும் செழுமை அவர் தேசாந்திரியாக திரிந்து பட்ட அனுபவத்தில் உண்டானது. பாலச்சந்திரன் சுள்ளிக்காடு போன்ற கவிஞர்களும் ஊர் சுற்றியவர்களே.
தமிழ்நாட்டு ஜெயமோகனும் தான் அவ்வாறு இந்தியா முழுமையும் சுற்றியதைப் பற்றி எழுதி இருக்கிறார். நாஞ்சில் நாடனுக்கு அனுபவம் அவரின் நீண்ட மும்பை வாசத்தில் கிடைத்த ஒன்று. சாரு நிவேதிதா, வெ.சா., வாஸந்தி போன்றவர்கள் டெல்லியிலேயே நீண்ட நாள் குடியிருந்தவர்கள். பல வேறுபட்ட இலக்கியவாதிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பு பெற்றவர்கள். சுஜாதாவும் அப்படியே. இன்றைய பல தமிழ் எழுத்தாளர்களின் ஆதர்சமான சுந்தர ராமசாமியின் அனுபவம் கேரளத்திலிருந்தும், வணிக விஷயமாக அவர் சென்ற வடநாட்டுப் பகுதிகளிலிருந்தும் கிட்டியிருக்கக் கூடும். ஈழம் நமக்களித்த கொடைகளில் ஒருவரான அ.முத்துலிங்கத்தின் எழுத்துச் செழுமை, அவர் வாழ்ந்த, பிரயாணித்த நாடுகளில் இருந்து கிட்டிய ஒன்று.
தமிழ் எழுத்தாளர்கள் எல்லோரும் ஆளுக்கொரு ரயில் டிக்கெட் வாங்கிக் கொண்டு வெளியூர் செல்ல வேண்டும் என்பதல்ல நான் சொல்ல வருவது. அனுபவத்துடன் கூடிய எழுத்து தமிழுக்கு வளம் சேர்க்கும் என்பதே என் தாழ்மையான கருத்து. வெளி நாட்டிலிருந்து கடன் வாங்கிய மாந்திரீக, தாந்திரீக எழுத்தால் யாருக்கு என்ன பயன்? இது என்னுடைய பொதுவான அபிப்ராயம் மட்டுமே.
நன்கு சிந்திக்கத் தெரிந்த, எழுதத் தெரிந்தவர்களை அவர்களின் சாதியைச் சொல்லி அழுத்தி வைப்பது தமிழ்நாட்டில் எளிதான, நடைமுறையில் இருக்கக் கூடிய விஷயம். அவர்கள் பிராமணர்களாக இருந்துவிட்டால் இன்னும் எளிது. அவர்களின் எழுத்துக்கு ஒரு பெரிய பூட்டே போட்டு விடு முடியும். தமிழிலக்கியவாதிகளில் குழு அரசியல் இன்று வரை எனக்குப் புரிபடாத விஷயம். வேறு மொழிகளில் இந்த அளவிற்கு இலக்கிய அரசியல் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை.

(கலை உலகில் ஒரு சஞ்சாரம் – வெங்கட் சாமிநாதன், சந்தியா பதிப்பகம், சென்னை)


narenthiranps@yahoo.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்