விஷம்

This entry is part [part not set] of 29 in the series 20091225_Issue

ஹெச்.ஜி.ரசூல்


என் நாக்கில் தொட்டுவைத்த

ஸம்ஸம் புனிதநீரில் யாராலோ

ஒரு துளி விஷம் கலந்திருக்கிறது.

உம்மும்மா தள்ளாத வயதில்

ஹஜ்ஜிற்குபோய் திரும்பிவந்தபோது

ஒரு பாட்டிலில் தந்திருந்தாள்

உடலெங்கும் விஷமாக

வெளிவரத்தயங்கிய வார்த்தைகளும்

நீலம்பாரித்துக் கிடந்தன.

மரணத்தின் தூதுவன் எங்கிருந்தோ

என்னை கட்டி இழுக்க முற்பட்டான்.

அறைமுழுக்க விஷம் பரவியது.

செல்போன் அழைப்புமணியின்

ஒலித்துகள்கள் ஒவ்வொன்றும்

கண்ணீர் சொட்டுகளாகி

என் காதுகளில் படிந்தது

யாரையேனும் தொட்டுணர முற்பட்டபோது

எதுவும் சாத்தியமாகவில்லை

உதிரும் தருணத்திலிருந்த கருவிழிகளில்

நீண்டகால துக்கம் உறைந்திருக்க

அவைதிரும்பவும்

இதுவரையிலும் யாராலும் எழுதமுடியாத

ஒரு கவிதையை எழுத எத்தனித்தது.

சிரிப்பை அழித்து எழுதிய

அந்த கவிதையிலும்

விஷத்தின் ஈரம் தொற்றியிருந்தது.

விஷம் தீண்டிய உடல் சுருளத்துவங்க

என்மகள் பயந்துகொண்டே

பின்வாங்கினாள்

விஷக் கொம்புகள் முளைத்த

தேளாய் ஊர்ந்து செல்கிறேன்

நன்றி: சிக்கிமுக்கி

Series Navigation