விழாவும் நாமும்

This entry is part 10 of 49 in the series 19991203_Issue

ஈ வே ராமசாமி


நமது பண்டிகைகளையும், நமது சமுதாய சம்பந்தமான திருமணம் போன்ற விழாக்களையும் நாம் வெறும் வேடிக்கையாகவும் பொழுது போக்கு வாய்ப்பாகவும் கருதிவந்தோமேயொழிய, அவற்றை மக்களின் அறிவு வளர்ச்சிக்கான வாய்ப்பாக் கொள்ளவில்லை. அப்படிக்கொள்வது தவறென்றும் கூட கருதியிருந்தோம். கடவுள் சம்பந்தமாக, மதசம்பந்தமாக, சாஸ்திர சம்பந்தமான, பழக்கவழக்க சம்பந்தமாக – எந்த ஒரு சிறு மாறுதலுக்கும் இடம் கொடுக்காமல் நாம் நம் முன்னோர் நடந்து கொண்ட மாதிரியை அப்படியே பின்பற்ற வந்தோம். அவற்றை அறிவினால் ஆராய்ந்து பார்க்கக் கூடாது; அவற்றில் எத்தகைய மாறுதலும் செய்ய நினைக்கக் கூடாது. நினைத்தால் நரகம் சம்பவிக்கும்; புல்லாகவோ, புழுவாகவோ மறு பிறவியில் பிறக்க நேரிடும். ‘ என்றெல்லாம் கூறப்பட்டு வந்தது; இன்றும் கூறப்பட்டு வருகிறது. பேய்,பிசாசுகளுக்கும், மந்திரவாதிகளுக்கும் எப்படி இன்று சில மடையர்கள் பயந்து கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்களோ, அதே போல, மத, சாச்திர பூச்சாண்டிக்கும் பயந்து மூளை உபயோகிக்கத் தவறினார்கள். தமது அறிவிலும் ஆற்றலிலும் நம்பிக்கை இழந்து, ‘ஐயோ, பாவமே நான் என்ன பாவம் செய்தேன், இப்படித் துன்பப்படுகிரேன்; என்னை மட்டும் நரகத்துக்கு அனுப்பிவிடாதே என்று ஒவ்வொருவரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வந்தனர். ஓரிருவர் நரகத்தில் நம்பிக்கையற்று அறிவு கொண்டு முன்னேற முயற்சித்தனர் என்றாலும், இந்த நாசமாப் போன நாசகாரப் பயங்கொள்ளிகள் அவர்களையும் சும்மா விட்டதில்லை. அவர்களைக் கடவுளுக்கு விரோதிகள் என்று பழுத்துக்கூறி அவர்களுக்குப் பலவான கொடுமைகள் இழைத்துவந்தனர். இதனால்தான் நம்மக்கள் முன்னேற்றமடைய வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

எது எதற்கு கடவுள், எதற்கு எதற்கு பழக்கவழக்கங்கள் ஆகியவைகளைப் பயன்படுத்துவது என்கின்ற தராதரம் இல்லாமல் அடியோடு யாவற்றிற்கும் அடிமையாகிவிட்டோம். அறிவை உபயோகிக்கும் வாய்ப்பு பெற்றிருக்கும் பிற நாட்டு மக்கள், தம் அறிவால் கண்டுபிடித்திருக்கும் அதிசயக் கருவிகளை எல்லாம் நாமும் செய்யவேண்டுமே என்ற கவலையில்லாமல், அவற்றால் நமக்கேற்படும் ஆசை, வசதி, காரணமாக அவற்றை ஆசையோடு அனுபவிக்க மாத்திரம் தொடங்கிவிட்டோம். நமக்கு பிரயோசனம் இருப்பதைச் சட்டென்று ஒப்புகொண்டுவிட்டோம். அப்போது மாத்திரம் நமக்கு இயற்ற்கையாய் உள்ள பயத்தை வீசி எறிந்து விட்டோம். இது அனுபவிக்கத் தக்கதுதானா ? முன்னோர்கள் இதை அனுபவித்தார்களா ? கடவுள் நம்பிக்கை இதை அனுமதிக்கிறதா ? என்றெல்லாம் நாம் சிந்திக்கவில்லை. நாம் அனுபவிக்கிறோம். ஆனால் அனுபவிக்கப் படும் பொருள் எப்படி செய்யப்பட்டது ? யாரல் செய்யப்பட்டது ? நம்மால் ஏன் அப்படிப்பட்ட பொருளைச் செய்யமுடியவில்லை என்றெல்லாம் நாம் சிந்திப்பதில்லை.

சாதாரணமாக இந்த விளக்கை எடுத்துக் கொண்டால் கூட இதுவும் படிப்படியாக எவ்வளவோ முன்னேற்றம் அடைந்து வருகிறது. நெருப்பு, அகல்விளக்கு, கிரோஸின் விளக்கு, பவர் லைட், கியாஸ் லைட், எலக்ட்ரிக் லைட் என்று முன்னேறி விட்டது. இன்று எவ்வளவுதான் பக்தனாயிருந்தாலும் கூட, அவன் கூட மின்சார விளக்கில்தான் தன் பிரார்த்தனையைச் செலுத்த ஆசைப்படுகிறான். பல மதங்களும் கணக்கற்ற தெய்வங்களும் பெரிய ரிஷிகளும் முனீஸ்வரர்களும் பல தீரர்களும் சூரர்களும் நம் நாட்டில் தோன்றியிருந்தும், அவர்களில் எல்லாம் ஒருவருக்காவது இப்படிப்பட்ட ஒரு சாதனத்தைக் கண்டு பிடிக்கக்கூடிய சக்தியை, நமக்கு அளிக்கத் திறனில்லாமற் போய்விட்டது. உலகம் எவ்வளவோ முன்னேறியும் நாம் மட்டும் இன்னும் காட்டுமிராண்டிகளாகத்தான் வாழ்ந்து வருகிறோம்.

நம்மிடையே இன்னும் நிரந்தரமான வருணாசிரமதர்மம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. 2000 வருடங்களுக்கு முன் எந்த வகுப்பார் சூத்திரராயிருந்தாரோ அந்த வகுப்பார் இன்னும் சூத்திரர்களாகத்தான் இருந்து வருகிறார்கள். நம் வர்ணம் (நிறம்) பழக்க, வழக்கம், ஆசாபாசம், வருண தர்ம நடத்தை ஆகியவைகள் எல்லாம் மாறிய பின்பும் இது மட்டும் மாறுதலடையாமல் பிறவி காரணமான சாதித்தன்மை மட்டும் மாறாமல் இருப்பது சரியா ? இதுவரை இருந்தது போகட்டும். இனிமேலும் இந்த இழிநிலை ஒழிய வேண்டாமா ? மானத்தைப்பற்றி கவலைப்பட இடம் கொடுக்காத மதம்- நமக்கேன் ? இந்த மாதிரி நாம் கூட்டமாக கூடும்போது நமது கவனமும் கவலையும் நமது மனதைப்பற்றிதான் இருக்கவேண்டும். நமது இழிவு நீங்குவது எப்படி ?நாம் மனிதத்தன்மை பெறுவது எப்படி ? என்று சிந்திப்பதில்தான் நமது பூரா கவலையும் இருக்கவேண்டும். நமது இழிவுக்குக் காரணம் நாம் ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொண்டு இருக்கும் மதமும், அதற்கு ஆதாரமாய் இருந்து வரும் சாஸ்திரங்களும் புராணங்களும் அவற்றிற்கேற்ப கற்பிக்கப்பட்ட கடவுள்களும் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். அவற்றை நம் தன்மைக்கேற்ப, மானத்திற்கேற்ப, முற்போக்குக்கேற்ப மாற்றிஅமைக்க முற்படல் வேண்டும். மதம், புராணங்கள், அவற்றிற்கேற்ற கடவுள்கள் ஆகியவற்றின் மூலமாய் வைத்துச் செயல்பட்ட கலையையும் இலக்கியத்தையும் அவ்வப்போது அறிவு கொண்டு நம் மனநிலைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளவேண்டும். நரக தண்டனைக்குப்பயந்து நாம் மனிதாபிமானத்தை விட்டு விட முடியாது. ‘கடவுளா, பாடுபடும் பாட்டாளி மகனை ஏழையாகவும், பாடுபடாத சோம்பேறியைச் சுகவாழ்வுக்காரனாகவும் பிறப்பித்திருக்கிறது, வைத்திருக்கிறது ? ‘ என்று கேட்கவேண்டும்.

மதமா, அது ஏன் பாடுபடுகிற பாட்டாளி மக்களை இழிசாதி மக்களாகவும், பாடுபடாத சோம்பேறி மக்களை உயர்சாதி மக்களாகவும் வைத்திருக்கவேண்டும் ? என்று கேட்கவேண்டும். கண்மூடித் தலைவணங்கி நிற்கும் காலம் கடந்து விட்டது. அதன் ‘லிமிட்டேஷன் பார் ‘ ஆகி விட்டது. மற்ற நாடுகளில் கடவுள் தன்மையிலேயே மக்கள் சந்தேகம் கொள்ள முற்பட்டுவிட்டனர். கடவுள் தன்மையை வெறுக்கக் கூடத் துணிந்துவிட்டனர். கடவுளைச் சந்தேகிப்பவர்களும், கடவுளை வெறுப்பவர்களும் தம் அறிவைச் சுதந்திரமாக விட்டு முயற்சி செய்து பார்க்கிறார்கள். அதனால் அவர்கள் கண்கள் இருண்டு போய்விடுவதில்லை; அல்லது காதும் அடைத்துப் போவது கிடையாது. ஆகவே நீங்களும் கடவுளையும் மதத்தையும் எல்லாவற்றிற்கும் போட்டுக் குழப்பாமல் ஒரு புறம் தனியாய் ஒதுக்கிவிட்டு, பயமின்றி உங்கள் அறிவு கொண்டு யாவற்றையும் சிந்தித்துப் பாருங்கள்.

****

 

Thinnai 1999 December 3

திண்ணை

Series Navigation<< 21 ம் நூற்றாண்டில் சாதி – ஒரு யதார்த்தப் பார்வை சோனியா காந்தி இத்தாலிக்கு திரும்பிச் சென்றுவிட்டால் ? >>

ஈ வே ராமசாமி

ஈ வே ராமசாமி