விலைவாசி

This entry is part [part not set] of 37 in the series 20070830_Issue

டீன்கபூர்


ஏறுகிறது.
கோரி அள்ளிய வாக்குப் பெட்டிக்குள்ளிருந்து
சீறி எழுந்து.

மேடையிலிருந்து விசிறிய
உஷ்ண மொழியிலிருந்து
ஏழையின் கண்ணீர் உலர்ந்தா போகிறது?
ஒரு பொழுதை கடனாக்கி
மறுபொழுதை கடைக்காரனிடம்
அடகு வைத்து
தலைக்குள் வருடி சொடுகு பிடுங்கி
கடைக்காரனிடம் குரங்காய் இளித்து
நிறைவாகும் நாட்களின் வயிறு.

நாளுக்கு நாள்
மாறுபட்டு
மாறுபட்டு
விஷம் ஏற்றப்படும் விலையால்
ஏழைகளைப் பற்றி
படியேறி வாசலைப் பெருக்கியவன்
பேசுவானா?
மன்றாடுவானா?

ஆயிரம் உணர்வுகளை உரலில் துவைத்து
அவன் பிடித்து எறியும்
பசியின் வடிவம் விடிய விடிய
கவ்விக் கொள்ளும்
ஒவ்வொரு காலையையும் சேர்த்து

தந்தை ஒவ்வொரு முறையும்
வாக்குச் சாவடிக்குச் சென்று
பண்டங்களின் விலைக் குறைப்பிற்கே
அடையாளமிட்டு
அடையாளமிட்டு
மரணமாகிவிட்டார்.

நானும் நாளையும்
இப்படி
இப்படி
அடையாளமிட்டு அடையாளமிட்டு
மரணமாகிக்கொண்டே இருக்கிறேன்.

கிழவனும் கிழவியும்
அந்தக் காலத்து
சல்லி சதத்தை எதற்கு
இன்னும் ஓதிக் கொண்டிருக்கிறார்கள்?
முட்டையின் விலையை ஏன்
உரைத்துக் கொண்டிருக்கிறார்கள்?
நான்கு பணம்
எட்டுக் காசு என
ஏன் வடிகிறார்கள்?

அபேட்சகரின் புன்னகைக்குள்
யாருடைய முகமும் புதைவதில்லை.
அடையாளமிடவேண்டிய வாக்குகளைத் தவிர.

டீன்கபூர்
இலங்கை


deengaffoor7@yahoo.com

Series Navigation

டீன்கபூர் - இலங்கை

டீன்கபூர் - இலங்கை