விடை உள்ளது ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் பெறுவதே நோக்கமெனில்

This entry is part [part not set] of 28 in the series 20060106_Issue

மலர்மன்னன்


நிகழ்வுகள் பிழையின்றிப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற, விருப்பு வெறுப்பு அற்ற குறிக்கோளுடன் கேட்கப்படும் கேள்விகளுக்கு என்னிடம் பதில்கள் உண்டு. என்னை நான் வெளிப்படையாக அடையாளப் படுத்திக் கொண்டிருப்பதால் வரலாற்றுப் பார்வையுடன் நிகழ்வுகளைப் பதிவு செய்வதில் எனக்கான சாதக பாதகங்களை கவனத்தில்கொண்டே எதனையும் பதிவு செய்வேன் என எண்ணிவிட வேண்டாம். அடிப்படையில் நான் பத்திரிகைக்காரன். இன்றைக்கு

நம்மிடையே இருக்கிற பெரும்பாலான பத்திரிகைக்காரர்களைப் போல அல்ல. செய்திகளைக் கொடுக்கிறபோது அவற்றைச் செய்திகளாகவே கொடுக்க வேண்டும் என்றும் அதில் நம் சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலோ பத்திரிகை முதலாளியின் விருப்பத்திற்கு இணங்கவோ எதையும் செருகிவிடலாகாது எனவும் சுயக் கட்டுப்பாடு விதித்துக் கொண்டு இயங்கியவன்.

இதன் காரணமாகத்தான் அண்ணாவிடமும் காமராஜரிடமும் ஒருசேர அவர்களின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரித்தானவனாக என்னால் நெருங்கியிருக்க முடிந்தது. ஏன், கருணாந்ிதியும் கூட என்னிடம் விரோதம் பாராட்டாமல், 1980-81 வாக்கில் முரசொலியில் ‘ ‘மலர்மன்னன் கதை ‘ ‘ என்று மிக நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறாரே! நான் அப்பாவி, பேதையே தவிரப் பொல்லாதவன் அல்ல, விலைபோகக்கூடியவன் அல்ல, எம்ஜிஆர் மிகவும் நல்லவர் என்று மனதார நம்பியதால்தான் அவருக்குச் சாதகமாகப் போனேன் என்றுதான் அதில் எழுதினாரே தவிர எனது செயலுக்கு உள் நோக்கம் ஏதும் கற்பிக்கவில்லையே! வேண்டுமானால் சின்னக் குத்தூசி திருவாரூர் தியாகராஜனிடம் விசாரித்து அந்த முரசொலிஇதழைத் தேடியெடுத்து திண்ணையில் மறுபிரசுரம் செய்யலாம்!

அதிலும் காமராஜர் லேசில் எவரையும் நெருங்கவிடமாட்டார். அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமான மூத்த பத்திரிகையாளர்கள் சென்னையில் ஹிந்து கிருஷ்ணஸ்வாமியும் அவரது சீனியரும் (பெயர் மறந்துவிட்டது), எக்ஸ்பிரஸ் ஆர். ராமச்

சந்திர ஐயரும். நவசக்தி அவரது சொந்தப் பத்திரிகைபோலத்தான். ஆனாலும் அதன் நிருபர் அம்பி என்கிற ஜகன்னாதனிடம்கூட ஆப் த ரெகார்டாக ஏதும் சொல்லமாட்டார். ஒருவேளை அம்பி மூலமாகக் கட்சிக்காரர்களுக்குக் கசிந்து

விடலாம் என்பதாலோ என்னவோ! வயதில் மூத்த கிருஷ்ணஸ்வாமி, அவருடைய சீனியர், மற்றும் ஆர்.ஆர். என அழைக்கப்பட்ட ராமச்சந்திர ஐயருக்கு அப்பால் வயதில் மிகவும் இளையவனான என்னை அவர் அண்டவிட்டது மிகவும் ஆச்சரியந்தான். ஒருவேளை அதற்கு என் தந்தையார் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர் என்பது காரணமாக இருக்கலாம். என் தந்தையார் தியாகிகளுக்கான ஐந்து ஏக்கர், ஓய்வூதியம் என எதனையும் எதிர்பராததால் ஏற்பட்ட மரியாதையாக இருக்கலாம். என் தந்தை வார்தாவில் காந்தியின் ஆசிரமத்திற்கு அடிக்கடி சென்று வந்தவர் என்பதை அறிந்திருந்ததாலும் என்ன இருந்தாலும் அவருடைய மகனாயிற்றே என்ற சலுகையாகவும் இருக்கலாம்(என் தந்தையாருடன் சிறு பையனாக வார்தா சென்று காந்திஜியைப் பார்த்தது மங்கலாக நினைவில் நிழலாடுகிறது!).

காமராஜரிடம் நிருபர்கள் அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டுதான் இருப்பார்களேயன்றி எவரும் குறுக்குக் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். இளங் கன்று பயம் அறியாது என்பதற்கு இணங்க நான் ஏதாவது கேட்டு வைப்பேன். உடனே சரளமாகப் பேசிக் கொண்டிருந்தவர் சிடுசிடுத்து மவுனம் சாதிக்கத் தொடங்கிவிடுவார். அப்புறம் வெளிியில் வந்துவிட வேண்டியதுதான். வெளியே வந்ததும் காரியத்தைக் கெடுத்தேனே என்று ஆர்.ஆரும் கிருஷ்ணஸ்வாமியும் எரிந்து விழுவார்கள் என்னிடம். காமராஜருடன் எனது சுவாரஸ்யமான அனுபவங்களைப் பிறகு எழுதுகிறேன். கணையாழியில் ஒருமுறை எழுதியிருக்கிறேன். ஆனால் அதையே திருப்பிச் சொல்லப் போவதில்லை. அதைவிடச் சுவையான விஷயங்கள் உள்ளன. காமராஜரின் குணச்சித்திரம் சரியாக விழும் செய்திகள்.

காமராஜர் என்னை அணுகவிட்டதால் ப. சிதம்பரம், ஏ.கே.சண்முகசுந்தரம் முதலானவர்கள் இந்திரா காங்கிரசுக்குப்

போய்விட்டிருந்த நிலையில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விவகாரத்தில் ‘பெரியவர் ‘ என்ன அபிப்பிராயத்தில் இருக்கிறார் என்று என்னைத்தான் விசாரிக்கச் சொல்லுவார்கள் (சண்முக சுந்தரம் தமிழ்நாடு இந்திரா காங்கிரசின் பொதுச் செயலாளராக இருந்தவர். சட்ட மன்ற உறுப்பினராக இருந்த காரியா கவுடர் என்ற காமராஜருடைய விசுவாசியின் மகன். இப்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஞானசேகரனின் பெரியப்பா அல்லது சிற்றப்பா). நானும்

காமராஜரிடம் எதையாவது கேட்டு அவரது எரிச்சலைக் கிளப்புவேன். ‘ ‘இத யாரு கேக்கச் சொல்லி நீ அப்புராணிியாட்டம் எங்கிட்ட கேக்கறே ? ‘ ‘ என்பார், காமராஜர்! ஒருமுறை குமரி அனந்தனும் இருக்கையில் அப்படித்தான் எதுபற்றியோ கேட்டு, பிறகு ‘ ‘என்ன நீங்கள் பெரியவரிடம் இப்படியெல்லாம் கேட்கிறீர்கள் ? ‘ ‘ என்று குமரி அனந்தன் பாதிக் கோபத்துடனும் பாதி வியப்புடனும் கடிந்து கொண்டார்!

1967-ல் எல்லோரும் காங்கிரஸ் ஜயிக்கப் போகிறது என்று சொல்லி காலில் அடிபட்டுப் படுத்திருந்த காமராஜரை

மகிழ்வித்துக் கொண்டிருந்தபோது, தோற்கும் அறிகுறிகள்தான் தென்படுவதாகக் கூறி, ‘ ‘ நீ அண்ணாத்துரை ஆளுதானே, வேற எப்பிடிச் சொல்லுவே ‘ ‘ என்று அவரை எரிந்து விழச்செய்தேன். நான் அண்ணாவின் அபிமானி எனத் தெரிந்திருந்தும் என்னைத் தம்மிடம் அணுகவிட்டாரே காமராஜர், அதுதான் அவரது பெருந்தன்மை! அன்ணாவும் சில சமயங்களில் அவருக்கு உவப்பாக இல்லாத விஷயம் சொல்ல நேர்ந்தால் ‘ ‘ ஆர் யூ ப்ளாண்டட் பை காமராஜ் டு டிஸ்கரேஜ் மீ ? ‘ ‘ என்று குறும்பாகச் சிரித்துக் கொண்டே கேட்டதுண்டே தவிர விலக்கிவைத்ததில்லை!

இவ்வளவும் சொல்வது ஏனென்றால் என் வசதிக்காக எதையும் திரித்துச் சொல்ல மாட்டேன், ஆதாரமற்ற செய்திகளைப் பதிவு செய்யமாட்டேன்; நம்பலாம் என்னை.

1947க்குப் பிறகு சிலர் சில காரியங்களைத் துணிந்து செய்ய நேர்ந்தது வாஸ்தவந்தான். மத நல்லிணக்கம்,

சிறுபான்மையினர் மனங் கோணாது இருக்கச் செய்தல் என்பன போன்ற கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு துணிவை

இழந்து உண்மையான வரலாற்றைப் பதிவு செய்யத் தவறிவிட்டதால் வந்த வினை, தவறான அனுமானங்கள் நிஜமெனப் பதிவாகிவிட்டிருக்கின்றன. மாறாகச் சிலராலாவது துணிந்து செயல்பட முடிந்திருக்கிறதே! ஆச்சரியந்தான்.

நாதுராம் விநாயக கோட்ஸே இன்றைய பயங்கரவாதிகளைப் போல் ஒரு நபரைக்கொல்வதற்காகப் பல அப்பாவி உயிர்களைக் காவு வாங்கியவர் அல்ல. தன்னந்தனியாகச் சென்று காந்திஜியின் நேர் எதிரே நின்று காந்திஜிக்கு மாத்திரமே பாதிப்பு நேருமாறு துப்பாக்கியால் சுட்டவர். காந்திஜியைச் சுட்டதும் சூழ்ந்துள்ளோர் ஆவேசச் சீற்றத்தில் தன்னைக் குற்றுயிரும் குலை உயிருமாகச் சிதைத்துப் போடுவார்கள் என்பது தெரிந்தே அவ்வாறு வினையாற்றினார். காந்திஜியைச் சுட்டுக் கொலை செய்த சமயத்தில் கோட்ஸேயின் வயது முப்பத்து ஒன்பது. நன்கு ஆலோசித்து, முடிவு எடுக்கும் வயது. வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் திடார் என முடிவு செய்யும் பருவமல்ல. அவர் மூர்க்கத்தனமான வெறிியூட்டப்படும், மூளைச் சலவை செய்யப்படும் மதரஸாக்களில் இளமை முதல் பயின்றவருமல்ல. மேலும் ஒரு பத்திரிகையின் ஆசிரியர். பெரிய படிப்பு ஏதும் படிக்காவிடினும் தனது தரப்பு நியாயத்தைத் தெளிவான ஆங்கிலத்தில் சொல்லத் தெரிந்து நீதிபதியை வியக்கச் செய்தவர். நீதிமன்றத்தில் கோட்ஸே அளித்த வாக்குமூலம் நெடுங்காலம்

பிரசுரிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இனி வெளியில் வந்தால் ஒன்றும் குடிமுழுகிவிடாது என்று அரசு உறுதி செய்துகொண்ட பின்னரே அது பகிரங்கப் படுத்தப்பட்டது. ‘ ‘மே ஐ ப்ளீஸ் யுவர் ஹானர் ‘ ‘ என்ற தலைப்பில் கோட்ஸே யின் நீதிமன்ற வாக்குமூலம் புத்தகமாக வெளிவந்துள்ளது. அதனைப் படித்துப் பார்த்தால் முன்னரே ஒரு முடிவு செய்துகொண்டு, எதிராளியை மடக்குகிறோம் என்கிற நினைப்பில் என்னிடம் கேள்விகளை எழுப்பத் தோன்றாது.

காந்திஜி கொலை வழக்கு பகிரங்கமான நீீதிமன்ற விசாரணையாக நடைபெறவில்லை. இன் காமரா என்பார்களே அதற்கு இணங்க அறைக்குள்ளே ரகசியமாக நடந்தது. நிருபர்கள் வடிகட்டப்பட்டே அனுமதிக்கப்பட்டனர். அதுமட்டுமல்ல, நிருபர்கள் விசாரணைபற்றிப் பதிவு செய்யும் செய்திகள் நீதிபதியின் பார்வைக்குச் சென்று அவரது தணிக்கைக்குப் பிறகுதான் பிரசுர அனுமதியைப் பெற்றன. ஏனெனில் பொது ஜன அபிப்ப்ிராயமே தலைகீழாக மாறிவிடக் கூடிய நிலையில் விசாரைணையின் போக்கு அமையலாயிற்று.

1947 ஆகஸ்டு 15 உண்மையான சுதந்திர நாள் அல்ல. டொமினியன் அந்தஸ்து தரப்பட்ட தினம்தான் அது. பர்மாவில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவ வீரர்களை (அவர்களில் முக்கால்வாசியும் தமிழர்கள்), பூச்சிகளை நசுக்கிக் கொல்வதுபோல் கொல்லச் செய்த தளபதி, அதற்குப் பரிசாக பிரிட்டிஷ் துரைத்தனத்தால் வைசிராய் பதவியில் நியமிக்கப்பட்டவரான மவுண்ட் பேட்டனையே தொடர்ந்து தங்களின் அதிபதியாக இருக்குமாறு காங்கிரஸ் விண்ணப்பித்துக் கொண்டதற்கு இணங்க, அவர் கவர்னர் ஜெனரலாகவும் பெரும்பாலான ஆங்கிலேய அதிகாரிகள் முக்கிய பொறுப்பில் நீீடிப்பவர்களாகவும் இருந்த சமயத்தில்தான் காந்தி சுடப்பட்டார். ஆகவே காலனி ஆதிக்க இந்தியா கண்ணில் வைத்துப் போற்றிய காந்தியை சுதந்திர பாரதம் காப்பாற்ற வக்க்ில்லாது போனதாக ஒரு குற்ற உணர்வு

நமக்குத் தேவை இல்லை. சர்ச்சில் நம்மை ஏளனம் செய்வதற்காகச் சொன்ன விமர்சனம் அது. நாம் துப்புக் கெட்டவர்கள் என்று நம்மைக் குத்திக் காட்டுவதற்காகச் சொல்லப்பட்ட, வெளிப்படையான பாரத துவேஷயின் வார்த்தைகள் அவை. அவற்றையே திருப்பிச் சொல்வது ஈ.வே.ரா. அவர்கள் கற்றுத் தந்த சுய மரியாதைக்கே இழுக்கு.

ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் அல்ல, அதற்காகக் காங்கிரசார் பீற்றிிக் கொள்வது அர்த்தமற்றது எனத் திருச்சி நகர தூதன் திருமலைசாமி அந்தக் காலகட்டத்தில் கிண்டலும் கேலியுமாக எழுதிய வயணம் தெரிய வேண்டுமானால் எஸ்.வி. ராஜதுரையைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். ஈ.வே.ராவுக்குப் பரிந்தும் அண்ணாவை உரிமையுடன் கடிந்தும் திருமலைசாமி அற்புதமாக எழுதிய கட்டுரையைத் தேடி எடுத்துப் பிரசுரித்தவர் என் பழைய சினேகிதர் ராஜதுரை. திருமலைசாமியின் புதல்வர்(பெயர் மறந்துவிட்டது) மிகவும் சிரம தசையில் இருந்தபோது அவருக்குக் கார்ட்டூன் வரையும் திறன் இருப்பதைக் கண்டு அதன் மூலம் அவர் ஓரளவு வருவாய் பெற ஏற்பாடு செய்தவன்தான் நான். அவர்கள் குடும்பம் கடைந்தெடுத்த ஜஸ்டிஸ் கட்சிக் குடும்பம். அதற்காகத் திருமலைசாமியின் மகனை ஒதுக்கிவிடவில்லை. என்னால் முடிந்ததைச் செய்தேன். இன்று அவர் இருக்குமிடம் தெரியவில்லை. தெரிந்தால், இப்போதும் அவர் சிரம தசையில் இருந்தால் அவருக்கு ஒரு நல்ல ஏற்பாடு செய்துதரக் காத்திருக்கிறேன். ஏனென்றால் திருமலைசாமி நாம் மதித்து நினைவில் கொள்ள வேண்டிய திறமை மிக்க கட்டுரையாளர். அவரால் கல்கியே மிகவும் கவரப்பட்டு, தமது ஆசிரியர் குழுவில் சேருமாறு அவரை அழைத்ததுண்டு. ஜஸ்டிஸ் கட்சியின் மீது இருந்த ஈடுபாட்டின் காரணமாகத் திருமலைசாமி கல்கியின் அழைப்புக்கு மசியவில்லை.

சரி, அடிப்படையான விஷயத்திற்கு வருவோம். ரகசியமாக நடந்த காந்திஜி கொலை வழக்கு விசாரணை முடிவில், கோட்ஸேயின் வாக்குமூலத்தையும் கருத்தில் கொண்டு தீர்ப்பு அளித்த நீதிபதி சொன்னது என்ன தெரியுமா ?

‘ ‘அமெரிக்காவில் உள்ளது போன்ற ஜூரர் முறைத் தீர்ப்பு நம் நாட்டில் இருக்கும் பட்சத்தில் குற்றம் சாப்பட்டிருப்பவரை நான் நிரபராதியென விடுதலை செய்யவேண்டியிருக்கும் ‘ ‘ என்பதுதான்!

இவையெல்லாம் ஆவணப்படுத்தப்பட்டுள்ள பதிவுகளே. கற்பனை அல்ல. பத்திரிகைகளுக்கு அன்று இதனை வெளியிட அனுமதி தரப்படவில்லை. ஆனால் இன்று நீதிமன்றப் பதிவாளரிடம் அனுமதி பெற்று ஆய்வுக்காக எனக்கூறி சரிபார்த்துக் கொள்ளலாம். வசதியுள்ள சரித்திர பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு இது எளிதாக முடியும்.

வழக்கை விசாரித்துத் தீர்ப்பு அளித்த நீதிபதியே பகிரங்கமாக அப்படிச் சொன்னார் என்றால் காந்திஜி கொல்லப்பட்டமைக்கு வெறும் மூர்க்கத்தனமான வெறி காரணமாக இருக்கமுடியாது, அதனையும் மீறி ஏதோ ஒரு ஆழமான நோக்கம் இருக்கக்கூடும் என யோசிக்கத் தோன்றுகிறதா இல்லையா ?

இவ்வாறெல்லாம் நான் பதிவு செய்வதால் காந்திஜி கொல்லப்பட்டதை நான் நியாயப்படுத்துவதாகத் திசை திருப்பி விடக்கூடாது. காந்திஜி கொலை ஏறத்தாழ அறுபது ஆண்டுகளாகிவிட்டிருக்கிற ஒரு சரித்திர நிகழ்வு. உணர்ச்சிவசப்படாமல் ஆராயக் கூடிய சூழல் உருவாகிவிட்டிருக்கிற தருணம் இது. சலனப்படாமல் அந்த நிிகழ்வை எல்லாக் கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து விவரங்கைளைப் பதிவு செய்வதுதான் நமது நோக்கமாயிருக்க வேண்டுமேயன்றி, ஓட்டுகளுக்காக அலையும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளைப் போல மதவெறி, மிருகத்தனம் என்றெல்லாம் மனம் போன போக்கில் ஏதும் சொல்லிக் கொண்டிருக்கலாகாது.

புற்றீீசல் மாதிரி இப்போது வந்து கொண்டிருக்கும் புலன் விசாரணை முக்காடு போட்டுக் கொண்டு விற்பனை யொன்றே குறிிக்கோளாகப் பொறுப்பற்ற முறையில் செய்திகளை வெளியிட்டு வரும் பத்திரிகைகளில் ஒன்றாகத் திண்ணையை ஆக்கிவிடக்கூடாது, கண்டதையும் எழுதி. இந்த விஷயத்தில் நான் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறேன். எதிர்வினை ஆற்றுவோரும் இதே மாதிரியான எச்சரிக்கையுடன், எழுதப்படுவதற்கு உள்நோக்கம் கற்பிக்காமல், உண்மைகள் பதிவு செய்யப்படவேண்டும் என்ற அக்கரையுடன் செயல்படவேண்டும் என எதிர்பார்க்கிறேன். வாருங்கள், நாம் எல்லோரும் ஓர் வட்ட மேஜையை மனதால் வரித்துக் கொண்டு ஆய்வுக் கண்ணோட்டத்துடன் கடந்துபோன நிகழ்வுகளைப் பற்றி ஆற அமர அவரவர் குறிிப்புகளைப் பகிர்ந்து கொள்வோம். ணர்ச்சிவசப்படாமல் விவாதங்கள் செய்து முடிவுகளுக்கு, அவை மிகவும் கசப்பானவையாகவே இருப்பினும் வருவோம். நமக்கு வரலாற்றுப் பார்வை இல்லை என்பதாக ஏற்கனவே நம்மீது ஒரு வசை உள்ளது. நம் தலைமுறையிலாவது அதனைக் களைய நாம் முற்படலாம் அல்லவா ? அதற்காக நம் சந்ததியார் நம்மைப் பாராட்டுவார்கள் அல்லவா ?

ஒன்று நினைவிருக்கட்டும். நமது வரலாற்றை வேறு எவரோ எழுதிவைக்க, அதனை ஆதாரமாக வைத்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். இது நமக்குப் பெருமை தருவதாகாது. நாமே நிகழ்வுகளை ஆய்ந்து விருப்பு வெறுப்பு இன்றி நம் வரலாற்றைப் பதிவு செய்வோம். நமக்கு அதற்கான அருகதை இல்லையா என்ன ? குறைந்த அளவிலான கால கட்டத்தில் சம்பவித்துள்ள நம் காலத்து நிகழ்வுகைளை இவ்வாறு பரிசீலித்துப் பதிவுகள் செய்வது சாத்தியம்தான்.

இப்படியான மனப்போக்குடன் என் எழுத்தை அணுகுவதாயின் எல்லாக் கேள்விகளுக்குமே என்னிடம் ஆதாரப் பூர்வமான விடைகள் உண்டு. இன்னொன்றும் தெளிவுபடுத்திவிடுகிறேன்:

நான் வேலை வெட்டி இல்லாமல் பொழுதுபோக வேண்டுமே என்பதற்காகச் சாய்வு நாற்காலியில் கிடந்தவாறு திண்ணையில் கதைக்க வரவில்லை. மிகவும் சலித்துக் கொண்டும், எழுதியாக வேண்டுமேயென்று நொந்து கொண்டும் தான் எழுதுகிறேன். ஆகையால் எதிர்வினைகள் தீவிர சிந்தனையின் அடிப்படையிலும் ஓரளவுக்கேனும் விஷய ஞானத்துடனும் அமையவேண்டும் என நான் எதிர்பார்த்தால் அதில் தவறு இருக்காது என நம்புகிறேன்.

அடுத்த தவணையில் காந்திஜியைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற முடிவுக்கு ஏன் ஒரு விவரம் தெரிந்த, நடு வயது மனிதன் வரப் போயிற்று, தன்னந் தனியாக காந்திஜியின் பக்தர்கள் மத்தியில் அவ்வாறு சுடுவதால் பத்திரமாகப் போலீஸ் வசம் அகப்படுவதற்கு மாறாகச் சின்னாபின்னமாகி விடுவோம் என்று தெரிந்திருந்தும் எதனால் அதற்குத் துணிந்தான் என ஆராய்வோம்.

—-

malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்