விடைபெறுகிறேன்

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

ஞாநி


திண்ணை ஆசிரியர் குழுவுக்கு

இதுவே உங்கள் இதழுக்கு என் கடைசிக் கடிதம்.

1. மாயவரத்தான் வருத்தம் தெரிவித்தது முழுமையாக இல்லாத போதும் அதில் ஒரு கண்ணியம் இருந்தது. அதற்காக அவருக்கு என் நன்றி.

2. சியாட்டல் பா. ரங்கதுரை என் கட்டுரைகைளை அதிகமாகப் படிக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டவில்லை என்ப்தால் நான் சம கால விஷயங்களைப் பற்றி கருத்து தெரிவித்ததெல்லாம் அவருக்குத் தெரியாது என்று இப்போது சொல்லுகிறார். ஒருவரின் எழுத்துக்களோடு பரிச்சயம் இல்லாத நிலையில், முதல் கடிதத்தில் சவால் விடும் தொனியில் எழுதியது தவறு என்பதை அவர் உணர வேண்டும். என் பதில் பொத்தாட் 5 பொதுவாக இருக்கிறது என்று அவர் கருதினாலும் நான் அப்படிக் கருதவில்லை. எனினும் அவர் விரும்பியபடி இன்னும் தெளிவாக சொல்ல விரும்புகிறேன். பெரியாரை தலித் விரோதி என்றோ பெண் பித்தர் என்றோ ரவிக்குமார் எழுதி வருவதை நான் முழுமையாக நிராகரிக்கிறேன். இந்தியச் சூழலில் சமூக மாற்றத்துக்கு உதவும் கருத்தாக்கங்களை பெரியார், காந்தி, அம்பேத்கர், மார்க்ஸ் என்று பல சிந்தை னயாளர்களிடமிருந்து எடுத்துத் தொகுத்துக் கொள்ள முடியும் என்பதே என் கருத்து. காலச்சுவடு, மற்றும் இதர சில இதழ்களைப் புறக்கணிக்கச் சொல்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. அப்படி புறக்கணிக்கச் சொல்வது தலித் எழுத்தாளர்களுக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் எதிரானது என்று திரிப்பதிலும் எனக்கு உடன்பாடில்லை. கருத்து வேறுபாடு உள்ள இதழ்களுடனும் கூட, பரஸ்பர மரியாதை இருக்குமானால், நமது கருத்துக்களை தெரிவிக்கும் வாய்ப்பைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்பதே என் கருத்து.

3. திண்ணை ஆசிரியர் குழுவுக்கும் எனக்கும் இடையிலான அந்த பரஸ்பர மரியாதை இப்போது செத்துவிட்டது. என்னிடம் கோரியிருக்கும் மன்னிப்பு என்பது ஒரு பாசாங்கு என்பது வெளிபப்டை. என்னை மேலும் அவதூறு செய்வதற்காகவே அந்தப் பாசாங்கு. எம்.எஸ், இளையராஜா பற்றிய என் கருத்துக்கள் அவர்களை இழிவுபடுத்துவதல்ல என்பது தின்னை ஆசிரியர் குழவில் உள்ளவர்களின் அறிவில் பாதியளவு இருக்கக் கூ டியவர்களுக்குக் கூடப் புரியும். சமஸ்கிருதமயமாக்கல் என்ற கோட்பாடு எம்.என்.சீனிவாஸ் முன்வைத்த வரையறையிலிருந்து கடந்த முப்பதாண்டுகளில் விரிவுபடுத்தப்பட்டு பல அறிஞர்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. என்னுடையதும் அத்தகைய ஒரு பயன்படுத்தலே.

4. எனினும் நான் சமூக அறிவோ இதழியல் அறிவோ இல்லதவன் என்றும் என் கட்டுரைகளை இதுவரை வெளியிட்டதற்காக வாசகர்களிடம் மன்னிப்பு கோர வேண்டிய அவசியம் இருப்பதாகவும் இப்போது திண்ணை ஆசிரியர் குழு கண்டுபிடித்துள்ள சூழ் நிலையில், இனி திண்னையில் பங்கேற்க நான் விரும்பவில்லை. அதை நீங்களும் விரும்பவில்லை என்பது தெளிவு. எதிர்கால வாசகர்களும் ‘அறிவிலி ‘யான என் எழுத் துக்களை திண்ணை ஆவணத் தொகுப்பில் சந்தித்து அதிர்ச்சியடைந்து அவர்களிடமும் நீங்கள் தொடர்ந்து மன்னிப்பு கோரும் கட்டாயத்தை அடைய வேண்டாம் என்பதற்காக, இதுவரையில் திண்ணையில் வெளியாகியிருக்கும் என் எழுத்துகள் அனைத்தையும் உடனடியாக திண்ணையிலிருந்து நீக்கிவிடும்படி கோருகிறேன்.

5. முற்றிலும் மாறுபட்ட கருத்துக்கைளை உடையவர்கள் அவற்றைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு தளமாக திண்ணை இருக்கும் என்ற நம்பிக்கையில் பங்கேற்க வந்த எனக்கு உங்கள் நடத்தை பெரும் ஏமாற்றம்தான். சுமார் ஓராண்டுக்கு முன்பு மஞ்சுளா நவநீதன் என்னை அவதூறு செய்தபோது, நீங்கள் காட்டிய சுமாரான பொறுப்புணர்ச்சி கூட இந்த முறை இல்லை. பாதல் சர்க்காரின் மொழிபெயர்ப்பாளராகவும், நல்ல இலக்கியவாதியாகவும் நல்ல மனிதராகவும் எனக்கு தமிழ் நாட்டில் அறிமுகமாகியிருந்த நண்பர் கோ.ராஜாராம் மீது இருந்த நம்பிக்கையினாலும் என் இனிய நண்பர் சாமிநாதன் அளித்த பரிந்துரையினாலும் மட்டுமே நான் திண்ணையில் பங்கேற்பைத் தொடர்ந்தேன். மிராசுதார்களின் அரட்டை- அவதூறுக் கச்சேரி நடக்கும் திண்ணையாக இதழியல் சிதைக்கப்படும் நிலையில், நீங்கள் என்னை இழிவுபடுத்துவது கூட எனக்கு அளிக்கப்படும் கெளரவமேயாகும். நீங்கள் என்னைப் பாராட்டினால்தான் நான் கவலை கொள்ள வேண்டியிருக்கலாம்.

6. இதுவே உங்களுக்கு என் கடைசிக் கடிதம். இதற்கு எதிர்வினையாக சமாதானங்களாயினும் சரி, மனம் திருந்திய மன்னிப்புகளானாலும் சரி, மேலும் வன்மத்துடன் கூடிய தொடர் அவதூறுகளானாலும் சரி, நீங்கள் என்ன சொன்னாலும், என்னிடமிருந்து எந்த பதிலும் வராது . நமது பாதைகள் வெவ்வேறு. மீண்டும் அவை ஒருபோதும் சந்திக்காமலே இருக்கட்டும் என்று விழைகிறேன். தீம்தரிகிட இதழை மூன்றாண்டுகள் முன்பு தொடங்கியபோது அது குறித்த செய்தியை வெளியிட்டு ஆதரவு காட்டியமைக்கு நன்றி தெரிவித்து விடை பெறுகிறேன்.

ஞாநி

சென்னை 41

20-1-2005

***

(திண்ணைக்குழு குறிப்புகள்: இதில் ஒரு வார்த்தையும் இரண்டு அடைப்புக்குறிகளும் நீக்கப்பட்டுள்ளன. திண்ணையில் எழுதுபவர்களை மிராசுதார்கள் என்று குறிக்கும் ஞாநி வாசகத்தைப் பிரசுரிக்க நேர்ந்ததற்கு திண்ணை எழுத்தாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். ஞாநியின் எழுத்துக்களை திண்ணையிலிருந்து நீக்குவது சாத்தியமில்லை. இதில் ஞாநிக்கு ஏதும் அசெளகரியங்கள் இருக்குமாயின் வருந்துகிறோம்.)

Series Navigation