விடியலைத் தேடி…

This entry is part [part not set] of 28 in the series 20020924_Issue

நந்தா, வேலூர்


இருண்டால்
இரவு என்பது கணக்கு – கண்கள்
இருண்டே இருப்பது எங்கள் வழக்கு

சோகம்
எங்களை பிரிந்ததில்லை.. அதனால்
எங்கள் பிரிவுகளில் ஏனோ சோகம் இல்லை

ஜனனம்
எமக்கு கடுஞ்சாபம்
உடன் துரத்தும்
மரணத்தின் தீரா தாகம்…

எம் வாழ்வினின்று
அகன்றது மகத்துவம் – முடிவில்
பட்டினியின் பிடியில் கண்டோம் சமத்துவம் !

இன்று
உலகெங்கிலும் எங்கள் அறிகுறி…
சோமாலியா எங்கள் முகவரி!

கனவுகள் சிதைந்தாலும்
கண்ணீர் வறண்டாலும்
காலம் விடுவதாய் இல்லை…

உறவுகள் சிதைந்தாலும்
உணர்வுகள் தொலைந்தாலும்
உணர்ச்சிகள் அழியதாய் இல்லை…

உணர்ச்சியின் வடிகாலாய் உறவுகள்
உறவுகளின் உருக்களாய் புதுவரவுகள்

மொட்டு
மலர்ந்தாலே சிறப்பு!
மலர்ந்தும் மலராமல் – இங்கு
மழலைகளின் தவிப்பு!

பிரிதோர் உலகில் –
இங்கும் அங்கும்
நதிகள் கடலில் பாயும்…
வசதிகள் மிகுந்தும்
தேடலில் மனம் அலைபாயும்…

எம் வாழ்வு –
இருண்டாலும் மருண்டாலும்
பொழுது சாயும்,
உடல் உள்ளம்
முழுவதும் காயம்…

வேற்றுமை உலகம் –
காலம் செய்யும் மாயம் !
***
kanthimagan@yahoo.co.uk

Series Navigation