விசுவாசம்

This entry is part [part not set] of 36 in the series 20090618_Issue

ராமலக்ஷ்மி, பெங்களூர்


‘ஒரு வருசமா ரெண்டு வருசமா..? பத்து வருசமா ராப்பகலா நேரங்காலம் பாக்காம நாயாப் பேயா உழைக்கறேன். ஹூம் அதான் நம்பளப் பாத்தா மனுசனாட்டமே தெரியலியோ என்னவோ’

காலையில் இருந்து நினைத்து நினைத்து மனது ஆறவேயில்லை கோபாலுக்கு. வேறொன்றுமில்லை. சின்ன முதலாளி பள்ளிப் பருவத்தில் ஓட்டிப் பழகிய பழைய சைக்கிள் ஒன்று வீட்டோடு இருந்தது. அன்று காலை அதை சடாரெனத் தூக்கி தோட்டக்காரன் முனுசாமியிடம் கொடுத்து விட்டார் முதலாளி செந்தில் நாதன்.

‘இதோ இப்பக் கூட மணி பதினொண்ணாச்சு. கட்சிக் கூட்டம், கரைவேட்டிக் கூட்டமின்னு எல்லாம் முடிஞ்சு இப்படி இவரு ராப்படையிலதான் கெளம்புவாரு. அவரை வூட்ல சேத்துட்டு நான் கெளம்பினா ஒரு பஸ் இருக்காது. ஏதோ இந்த சைக்கிளு இருந்துச்சோ, காலம் ஓடுச்சோ. அதுக்கும் ஆப்பு வச்சுப் புட்டாரே இந்த நன்றி கெட்ட மனுசன்’

மொபைல் மிளிர்ந்து ‘ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன்’ என இசைத்தது. முதலாளியை இறக்கி விட்ட பின் கடுப்புடன் காத்திருந்த போது தேடிப் பிடித்து இறக்கி வைத்த ரிங்டோன்.

இது அவனுக்கு வழக்கம்தான். அவ்வப்போதைய மூடுக்கு ஏற்ற மாதிரி பாடல் ட்யூனைத் தேர்ந்தெடுத்து ரிங்டோனாக செட் செய்வது. குஷியான நாட்களிலே துள்ளல் பாடல்கள். பண்டிகை நாட்களானால் பக்தி பாடல்கள். அதிலும் தேசத் தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களிலும், குடியரசு சுதந்திர தினங்களிலும் ‘வந்தே மாதரம்’ ஒலிக்கும். எப்படியும் எப்போதும் முதலாளியுடன் யாராவது பயணிப்பது வழக்கம். அவர்கள் இவனது அன்றன்றைய ரிங் டோனைக் கேட்டு ‘பலே பலே’ என்கையில் காற்றில் பறக்கிற மாதிரி இருக்கும்.

ஒருமுறை அண்ணன்காரனுடன் கடும் சண்டை. முடிவில் இவன் தனிக் குடித்தனம் வர வேண்டியதாய்ப் போயிற்று. அன்று இவன் தரவிறக்கம் செய்திருந்தது ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா’. பாட்டைக் கேட்டு முதலாளி விசாரித்து வீட்டுக்குப் பத்துமாத அட்வான்ஸ் ஏற்பாடு செய்தது தனிக்கதை. அதெல்லாம் இப்போது அவனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. ஏன் நினைவுக்கே வரவில்லை.

இப்போதும் இந்த ரிங்டோனை கேட்க நேர்ந்து செந்தில் நாதன் ‘என்னது ஊரைத் தெரிஞ்சுக்கிட்டியா ஒலகம் புரிஞ்ச்சுக்கிட்டியா’ என்று வேடிக்கையாய் இழுப்பார். விசாரிப்பார். அப்போது பிடியே கொடுக்காமல் பூடகமாய் இடக்கு மடக்காய் எதையாவது சொல்லி அவரை நல்ல வெறுப்பேற்ற வேண்டும் என்று நினைத்தபடி பச்சைப் பொத்தானை அழுத்தினான் ஆத்திரமாக.

“யப்பா கோவாலு, எங்காச்சும் போய் சாப்பிட்டிருப்பா. பக்கத்திலே எதுவும் நல்லதா கிடைக்காட்டி வண்டிய எடுத்துட்டுப் போயிட்டு வாப்பா. இன்னும் கொறஞ்சது ஒரு மணி நேரமாவது ஆகும் போலிருக்கு” இவனது பதிலுக்குக் காத்திராமல் அவசரமாய் அணைத்து விட்டார்.
முன்னெல்லாம் இப்படி அவர் கனிவாய்க் கூப்பிட்டுச் சொல்லுகையில் நெகிழ்ந்து போகிறவன் ‘இந்தக் கரிசனமெல்லாம் வெறும் வேஷம்’ எனக் கொதிப்பாய் உணர்ந்தான். மொபைலை பக்கத்து இருக்கையிலே வீசினான். ‘இது கூட அவர் கொடுத்தது.’ மெதுவாய் தலை தூக்கிய நினைப்பை வேகமாய்த் துரத்தினான். ‘ சொந்த உபயோகத்துக்கான அழைப்புகளுக்கு மட்டுமின்றி இந்தப் பாட்டு விளையாட்டுக்கெல்லாம் சேர்த்து பில் கட்டுவதும்‘ என்பதை மறந்தான். ‘எல்லாம் தன் வசதிக்கு. ஒரு கடை கண்ணியில் இறங்கினா திரும்பி வாசலுக்கே வண்டியக் கூப்பிட்டுக்க, எங்கே இருக்குறேன்னு தெரிஞ்சுக்க, என் வசதியப் பார்த்தா..?’ எனத் தலை தூக்கிய நல்ல நினைப்புகளைத் தானே மறுதலித்து மகிழ்ந்தான்.
சாப்பிடப் பிடிக்கவில்லை. காரின் இருக்கையைச் சாய்ந்து காலை நீட்டிப் படுத்தான். துரத்திய நினைவுகளில் தூக்கமும் வரவில்லை.

காலையில் சைக்கிளை தள்ளிக் கொண்டே வெளியேறிய முனுசாமி தன்னைப் பார்த்த பார்வையில் ஒரு வெற்றியின் பெருமிதம் தெரிந்ததோ என வேண்டாத சிந்தனைகள் துரத்தின.

‘பொட்டப் புள்ள ரெண்டு கிலோ மீட்டரு நடந்தே காலேஜ் போகுது’ன்னு அத இத சொல்லி அமுக்கிப் புட்டானே. சரி இவருக்குந்தான் எங்கே போச்சாம் புத்தி. நாளக்கி அவன் எப்படி என்னை மதிப்பான்’

கை நழுவிப் போன பொருளைப் பற்றிய கவலை யோசிக்க யோசிக்க கெளரவப் பிரச்சனையாகவும் ஆனது.

‘எத்தினி பேரு, இந்த கட்சி எதிர் கட்சின்னு இல்லாம என் வண்டி ஓட்டர தெறமைய, வேல செய்யற பொறுமய, கையில களவில்லாத அருமயப் பார்த்து எங்கிட்ட வந்திரு அம்புட்டு தாரேன் இம்புட்டுத் தாரேன்னு கூப்பிட்டிருப்பாக. அசைஞ்சு கொடுத்திருப்பனா?’

கொஞ்சம் கொஞ்சமாகத் தன் மேலான கழிவிரக்கம் தடம் மாறி முதலாளியின் மேல் சொல்லொண்ணா கோபமாக உருமாறுவதை அவன் உணராமலும் இல்லை.

‘ஏலேய் கோவாலு ஒரேடியா துள்ளாதே அவரு உனக்கும் குடும்பத்துக்கும் என்னெல்லாம் செஞ்சிருக்காரு. பார்த்தா ஒரு பழைய சைக்கிளு. கேட்டா புதுசே ஒனக்கு வாங்கித் தருவாரு’

குரங்கு மனது, கூவிய மனசாட்சியை ஒதுக்கி ஓரங்கட்டியது.

‘அப்ப்டிக் கேட்டு வாங்கி எனக்கொண்ணும் ஆக வேண்டியதில்லை. என்னிக்கு நான் முக்கியமா படலியோ இனியும் இவரோடு இருப்பதுங்கிறது தன்மானப் பிரச்சனை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியேறிடணும். இத்தினி நாள் ஏதோப் பாத்துட்டாரு, அந்த நன்றிக்கு நல்ல விதமாவே விலகிடணும்’

எடுத்த முடிவில் மனம் சமாதானமடைய மெல்ல மெல்லக் கண்ணயர்ந்தான்.

“ஏலேய் கோவாலு”

‘மறுபடியும் மனசாட்சியா?’ அரண்டு மிரண்டு எழுந்தான். அரக்கப் பரக்க விழித்தான்.

முதலாளியின் ஆத்ம நண்பர் அன்புமணி.

“என்னாலே முழிக்கிறே? செம தூக்கமா? வண்டிய எடு. உங்கய்யா அதோ வர்றாரு”

சுதாகரித்து ஸீட்டை மடக்கி முன்னுக்கிழுத்து, கீழிறங்கி மடமடவெனப் பின்பக்கக் கதவுகள் இரண்டையும் திறந்து விட்டான். செந்தில் நாதன் தொலைவில் எல்லோருக்கும் கும்பிடு போட்டுக் கொண்டிருக்க அன்புமணி காருக்குள் ஏறி அமர்ந்தார் பெருமூச்சுடன். அவர் பக்கக் கதவை ஓங்கி அறைந்து மூடினான். முதலாளியிடம் இந்தக் கோபத்தைக் காண்பிக்க இயலாதே. ஆனால் அன்புமணி அதை சட்டை செய்ததாய் தெரியவில்லை.

தலைவரின் வண்டி கிளம்பும் வரைக் காத்திருந்து பின் செந்தில் நாதன் அவசரமாய் வந்து வண்டியில் ஏறிக் கொண்டார்.

முதல் கேள்வியாய் “சாப்பிட்டியாப்பா கோவாலு” என்றார்.

அவனுக்கோ பேசவே பிடிக்கவில்லை. ‘ம்ம்ம்’ என்று முணங்கினான்.

மேலே ‘எங்கே சாப்பிட்டே என்ன சாப்பிட்டே’ என அடுத்தடுத்து புறப்படப் போகும் கேள்விகளை நினைத்து அயர்வாய் உணர்ந்த வேளையில், அந்தச் சிரமத்தை வைக்காமல் ‘பிலுபிலு’வெனச் செந்தில்நாதனைப் பிடித்துக் கொண்டார் அன்புமணி.

“ஒரு வருசமா ரெண்டு வருசமா இருபது வருசமா அந்தாளு கூட இருக்கீங்க. நேரங்காலம் பாக்காம உண்மையா ஒழச்சிருக்கீங்க. இப்படிக் கவுத்துப்புட்டாரே அண்ணாச்சி. ”

“இந்தா இந்தா நிறுத்து தலைவரை ஒண்ணுஞ் சொல்லாதே.”

“தாங்கலயே எனக்கே தாங்கலயே. நாலுவாட்டி கட்சி தாவி திரும்பி வந்தவனுக்கு லட்டு மாதிரி ஸீட்டு. அதுவும் நம்ப தொகுதிய. ஒங்களுக்கு கோவமே வரலியா அண்ணாச்சி?”

‘எனக்கு நீரு ஆப்பு வச்சா ஆண்டவன் ஒமக்கு வேட்டே வச்சுப்புட்டானா?’

’குப்’பென நெஞ்சுக்குள் பரவிய சந்தோஷத்தில் ஆட்களோ வண்டியோ இல்லாத சாலையில் ‘பீம் பீம்’ என ஹாரனை அடித்து ஒலியெழுப்பினான் கோபால் உல்லாசமாய்.

“அன்பூ, நம்ம தலைவரு எதை செஞ்சாலும் அதில ஒரு அர்த்தம் ஒரு காரணம் ஒரு நியாயம் இருக்கும்ப்பா”

“அட போங்க அண்ணாச்சி. என்ன அர்த்தமோ என்ன காரணமோ! இவரு கூட இருந்து என்னாத்தக் கண்டோம். கேட்டா இவருதான் நல்லவரு வல்லவரு நியாயமானவருன்னு வாயடைச்சுப் போடறீக. மூஞ்சில கரியப் பூசுனாப்ல ஆயிடுச்சில்ல இப்ப?”

இப்போது தன் குரலே அன்புமணியின் வாயிலிருந்து ஒலிப்பது போலிருந்தது கோபாலுக்கு. ஊற்றெடுத்த உற்சாகத்தை ஆக்ஸிலேட்டரில் காட்ட ஸ்பீடாமீட்டரின் முள் நூறைத் தொட்டது..

“உன்னை யாரப்பா அப்படி நினைக்கச் சொன்னது? விசுவாசங்கிறது ஒருவரோடு உயர்விலேயும் தாழ்விலேயும் கூடவே இருக்கிறது மட்டுமில்ல. நம்ம நலனுக்கு ஒவ்வாததாய் ஏதும் நடக்கையில் பெரிசு பண்ணாத இருக்கிறதுந்தான். அது மட்டுமில்லாம நல்லாரோடே இருப்பதிலே கிடைக்கிற திருப்தியொண்ணே போதாதா ஆயுசுக்கும். சரி ஒண்ணு கேட்கிறேன். நல்லது செய்யற ஆண்டவன்தான் நமக்குக் கஷ்டத்தையும் தர்றான். அப்பவும் என்னக் காப்பாத்தப்பான்னு அவங்கிட்டேயேதானே போறோம். அது பக்தின்னா விசுவாசமும் அது போலத்தான். தலைவருக்குன்னு சில நியாயங்கள் இருந்தே இருக்கும் நீ வேணாப் பொறுத்திருந்து பாரேன்.”

கேட்டுக் கொண்டே வந்த கோபால் யாரோ தன் பின்னந் தலையில் ‘பொளேர்’ என அறைந்த உணர்வில் தேவையில்லாமல் ப்ரேக்கை அழுத்த, எழுந்த ‘க்ரீச்’ சத்தத்திலும் வண்டியின் குலுக்கலிலும் செந்தில் நாதனின் பேச்சு திசை மாறியது.

“கோவாலு என்னய வீட்டுல விட்ட கையோடு அப்படியே இவரை அவர் வீட்டிலே சேத்திடுப்பா. இந்நேரத்துக்கு ஒனக்கும் பஸ்ஸு இருக்காது. அதனால என்ன பண்றே. அப்படியே நம்ம வண்டியவே எடுத்துட்டு போயிடு. வூட்டுப் பக்கமா நிறுத்திக்கிட்டு நாளக்கி நேரத்துக்கு வந்து சேரு. ஆங்.. காலம்பறயே சொல்ல நினைச்சேன். ஒன் சின்ன எசமானரு நாளக்கி புது மாடல் பைக்கு ஒண்ணு டெலிவரி எடுக்கிறாப்ல. பழய பைக்கு இனி ஒனக்குத்தான்.”.

கோபாலின் கண்களில் ‘க்ளுக்’ எனக் கண்ணீர்.
***
__________________________________________________________________
ராமலக்ஷ்மி, பெங்களூர்.

நன்றி: கலைமகள் (மே-2009)

Ramalakshmi_rajan@yahoo.co.in

Series Navigation