வாழ்வின் புன்னகை இந்தக் கதைகள்

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

மாலன்


‘தேர்ந்தெடுக்கும் வாய்ப்புக் கிடைத்தால் எப்படி சாக விரும்புகிறீர்கள் ? ‘

என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஆங்கிலேயர் புன்னகை மாறாமல் கேட்டார். மரணத்தைப் பற்றிய சென்டிமென்ட்களைப் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு அவர் நெடுநாள் சிநேகிதர் அல்ல. நாளா ? அவர் அறிமுகமாகி அரைமணி நேரம்தான் இருக்கும். லண்டன் ஹீத்த்ரூவில் கிளம்பிய விமானம் அட்லாண்டா நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது பத்துப் பனிரெண்டு மணி நேரமாகும். அவ்வளவு பொழுதைத் தூங்கிக் கழிக்க முடியாது. குடிக்கவும் பயமாக இருந்தது. பிபிசி மகாதேவன் அவசர அவசரமாய்க் புதினாச் சட்னி தடவி செய்து கொடுத்த சாண்ட்விட்ச் மட்டும்தான் வயிற்றுக்குள் இருக்கிறது. எதிரே ஓடிக் கொண்டிருந்த கணவனை மனைவி மொத்துகிற அசட்டுக் காமெடியிலும் மனம் லயிக்கவில்லை. பக்கத்தில் இருப்பவரிடம் பேசிக் கொண்டுதான் போக வேண்டும் என்பதால் விமானத்தில் ஏறிய முப்பதாவது நிமிடம் கை குலுக்கி விட்டேன். அந்த அரைமணி நேரப் பழக்கத்தில் மனுஷன் கேட்கிறார், எப்படி சாக விரும்புகிறீர்கள் என்று.

கேள்விக்குக் காரணம் இருந்தது. விமானம் மூன்றாம் முறையாகக் காக்காய் வலிப்பு வந்தவன் மாதிரி குலுங்கிக் கொண்டிருந்தது. அதனால் கேட்கிறார். அவர் முகம் முழுவதும் சிரிப்பு விளக்கேற்றியிருக்க மரணத்தைப் பற்றிக் கேட்கிறார். இடுக்கண் வருங்கால். .. ? வள்ளுவரா ? எமதர்மனா ? நான் மாந்திரீக யதார்த்தவாதக் கதை பண்ணுகிறவனாக இருந்தால் அவரை இரா. முருகனாகக் கூட கருதிக் கொள்ளலாம்.

எதிர் சுவரில் இருந்த எல்.சி.டி.திரையில் விமானம் பறக்கும் பாதையைக் காட்டிக் கொண்டிருந்த வரைபடத்தைப் பார்த்தேன். கீழே அட்லாண்டிக் பெருங்கடல் விரிந்து கிடந்தது. ‘நிச்சியமாய் அட்லாண்டிக் சமுத்திரத்தில் ஜலசமாதியாக இப்போதைக்கு ஆசை இல்லை ‘ என்றேன் நானும் சிரித்துக் கொண்டு.

‘ஆமாம். சாவதற்கு அதைவிட உலகில் நல்ல இடங்கள் இருக்கின்றன ‘ என்றும் அவரும் சேர்ந்து சிரித்தார்.

‘நம்மால் நமக்கு விருப்பமான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க முடிவதில்லை. இணக்கமான ‘பாஸ் ‘சைத் தேர்ந்தெடுக்க முடிவதில்லை. விமானத்தில், ரயிலில், விருப்பமான இருக்கையைத் தேர்ந்தெடுக்க முடிவதில்லை. அவ்வளவு ஏன். நான் வாங்கி வரும் வாழைப்பழங்கள் மட்டும் மறுநாளே கறுத்து விடுகின்றன. அதைக் கூட நம்மால் தெரிவு செய்ய முடிவதில்லை. எப்படிச் சாவது என்பதையா தீர்மானித்து விடமுடியும் ? ‘ என்றேன். அவர் ஓஹ்ஹ்ஹோ என்று உரக்க சிரித்தார். அடுத்த வரிசைகளில் கண்மூடிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். அசம்பாவிதமான நேரத்தில் என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கிறது என்று அவர்கள் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது.. ஓசியில் கிடைக்கிறது என்பதால் நிறையத் தண்ணி போட்டுவிட்டான்கள் போலும் என்று நினைத்திருப்பார்கள்.

மறந்தே போய்விட்டது. அப்புறம் எத்தனையோ பயணங்கள். எத்தனையோ கடல் தாண்டியாயிற்று. அதில் இந்த பயம் காட்டிய பயணம் மறந்தே போய்விட்டது. தலைக்குத் தங்கச்சாயம் பூசிக் கொண்டிருக்கும் போது செத்துப் போய்விடுகிறவனை முருகனின் கதையில் சந்த்தித்த போது மறுபடியும் அந்தப் பயணமும் கேள்வியும் ஞாபகத்தில் துளிர்த்து விட்டது.

நம்முடைய வாழ்க்கையை நாம் தேர்ந்து கொள்ள முடியாது என்னும் போது நம்முடைய மரணத்தை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது போவதில் துக்கப்பட ஒன்றுமில்லை. ஆனால் அந்த மரணம் impersonal ஆக முகமற்றுப் போவது மரணத்தைத் தேர்ந்தெடுக்க முடியாததை விடத் துக்ககரமானது. எல்லா வெள்ளைக்காரர்களும் ஒரே மாதிரியிருக்கிற, எல்லா கருப்பர்களும் ஒன்றே போல தோன்றுகிற, எல்லாப் போலீஸ்காரர்களும் ஒருவர்தானோ என்று சந்தேகம் தருகிற சூழலில் மனிதர்கள் முகமற்றுப் போகிறார்கள். வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவன் அடுத்த கஸ்டமராக இருப்பானோ என்று கடைக்காரியை நினைக்கத் தூண்டுகிற, சை இந்த ஆம்புலன்ஸ் கிளம்பத் தகராறு பண்ணுகிறதே என்று அலுத்துக் கொள்ளச் செய்கிற வாழ்க்கையில் முகங்களுக்கு அவசியமிருப்பதில்லை.

இந்த முகமற்றுப் போகிற துக்கத்தை நறுக்கென்று சொல்கிற இன்னொரு கதைதான் சில்லு. அறிவியல் புனைகதை. டினோசர் மாதிரி, அன்னப்பட்சி மாதிரி அருகிப் போன வகையாகி விட்டது தமிழ் அறிவியல் புனைகதை. சுஜாதா எழுதினார். நான் ஒன்றிரண்டு எழுதியிருக்கிறேன். நளினி சாஸ்திரி எழுதினார். காஞ்சனா தாமோதரன் எழுதினார். என்றாலும் தமிழில் அறிவியல் புனைகதை எழுதுவது ஹேய்லியின் வால்நட்சத்திரம் போல் எப்போதாவது புலப்படுகிற விஷயமாகிவிட்டது. இப்போது அந்த வால் இரா.முருகன் என்ற நட்சத்திரத்தின் மூலம் .இங்கே பிரசன்னமாகி இருக்கிறது. இலக்கண சுத்தமான கதை. உலகெங்கும் பல்கிப் பெருகிவிட்ட, அறிவியல் வாச்னையும் இலக்கிய மனமும் கொண்ட இணையத்தமிழ் எழுத்தாளர்கள் இந்த வகை இலக்கியத்தை சேமமுறச் செய்ய வேண்டும். அதற்கான உந்துதலை இந்தக் கதையில் பெற முடியும்.

அறிவியல் புனைகதை போலத் தமிழில் அருகிப் போன இன்னொரு விஷயம் நகைச்சுவை. கல்கி, சாவி, தேவன் போன்ற ஜாம்பவான்கள் உலவிய பூமி அது. இன்று காவிரி போலக் காய்ந்து கிடக்கிறது. இது வரலாற்றுச் சோகம் மட்டுமல்ல, கலாச்சார சோகமும் கூட. தமிழர்களுக்கு இன்று நகைச்சுவை என்பதே காலை இடுப்பளவு உயர்த்தி இன்னொருவன் பிட்டத்தில் உதைக்கிற விஷயமாகிப் போய்விட்டதில் உள்ள சோகம் பிரம்மாண்டமானது. இன்னொரு புறம் சிரிப்பது, சிரிக்க வைப்பது இரண்டுமே சிறுபத்திரிகை உலகில் கழுவேற்றத் தக்கக் குற்றமாகிவிட்டது (அசோகமித்திரன், சுஜாதா போன்றவர்கள் விதியை நிரூபிக்க வந்த விதி விலக்குகள்)

முருகன் சிரிகக வைக்கிறார். முகமற்றுப் போகிற மரணவலியைக்கூட இதழ்க்கடையில் முறுவல் நெளியச் சொல்கிறார். இது அத்தனை எளிதான காரியமில்லை. எழுதிப் பார்த்தால் சிரமம் புரியும். இழை சறுக்கினாலும் எழுத வந்த விஷயம் flippant ஆகிவிடும். சற்று இறுக்கிப் பிடித்தால் நகைச்சுவை இறந்துவிடும். உள்ளங்கைக்குள் குருவியை மூடி வைத்துக் கொள்கிற சாமர்த்தியம் வேண்டும். இயல்பிலேயே நகைச்சுவை உணர்வு இருந்தால்தான் இந்த வித்தியாசமான வித்தை கை வரும் இது முருகனுக்கு கை வருகிறது.

சற்றேறக்குறைய இருபது வருடங்களாக நான் முருகனது எழுத்துக்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். கணையாழி இதழுக்கு அவர் மதுரையிலிருந்து எழுதிய கடிதங்களிலிருந்து இன்று ராயர் காப்பி கிளப் என்ற இணையக் குழுவிற்கு அவர் எழுதும் கடிதங்கள் வரை அவர் எழுத்தைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருகிறது. வாழ்ந்து பெற்ற அனுபவம், வாசிப்பின் மூலம் அறிந்து கொண்ட தகவல்கள், மனிதர்களைக் கூர்ந்து கவனித்துப் பெற்ற சித்திரம், எழுதிப் பழகிய கையின் முதிர்ச்சி, மொழியின் மீதுள்ள ஆளுமை, அதைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் அக்கறை, புதுமையின் மீதுள்ள காதல், யாரையும் காயப்படுத்திவிடக் கூடாதென்ற கண்ணியம், வாசக சுவாரஸ்யத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆவல், அதே நேரம் இலக்கியத் தரத்தைக் கை விட்டுவிடக் கூடாது என்ற கரிசனம் எல்லாம் ஒன்றாகப் பொலியும் எழுத்து அவருடையது. இப்படி இவை எல்லாம் ஒரே நேரத்தில் ஒரு சேர இருக்கும்படி எழுதுகிற எழுத்தாளர்கள் இவர் தலைமுறையில் அதிகம் பேர் இல்லை.

அவர் எழுத்துலகில் அடி எடுத்து வைத்த நேரத்தில் யதார்த்தம், நவீனம், லட்சியவாதம் இவை நிரம்பிய இலக்கியப் போக்கு மாலைப் பொழுதாக மங்க ஆரம்பித்திருந்தது. பின் நவீனத்துவம், நேரொழுக்கு அற்ற உரைநடை, கட்டுடைத்தல், மாய யதார்த்தம் இவை கொண்ட இரவுப் பொழுது படரத் துவங்கியிருந்தது. இலக்கியச் சிற்றேடுகள் மீது மரியாதையும், வெகுஜன இதழ்கள் மீது அபிமானமும் கொண்ட ஆரம்ப நிலையில் இருக்கும் ஓர் இளைஞனுக்குக் குழப்பம் ஏற்படுத்தக் கூடிய பொழுதுகள் அவை. திசை தப்பிப் போவதற்கோ, அல்லது எழுத்தையே உதறிப் போவதற்கோ ஆன வாய்ப்புக்கள் அதிகம். சமூக அந்தஸ்தையோ, குடும்பம் நடத்துவதற்கான வருவாயையோ எழுத்தின் மூலம் ஈட்ட வேண்டிய அவசியம் முருகனுக்கு இருக்கவில்லை. தமிழ்நாட்டிலிருந்து வெகு தொலைவிற்கப்பால் வாழ வேண்டிய பணிச்சூழல். அதையே தமிழ் மொழியிலிருந்து விலகி இருப்பதற்கான வாய்ப்பாக, சாக்காகப் பயன்படுத்திக் கொண்டு ஒதுங்கி இருந்திருக்க முடியும். ஆனால் முருகன் திசை தப்பிப் போய்விடவில்லை. எதை எழுதுவது, எப்படி எழுதுவது, எதில் எழுதுவது என்பதில் குழப்பமடைந்து விடவில்லை. விலகியோ நழுவியோ போய்விடவில்லை. இதுவே அவரை நேசிப்பதற்கும், வியப்பதற்கும் போதுமானது.

அந்த வியப்பையும் நேசத்தையும் இந்தக் கதைககள் மேலும் வலுப்படுத்துகின்றன. இவை முருகன் மீது மட்டுமல்ல இலக்கியத்தின் மீதும் சக மனிதர்கள் மீதும் உங்களை நேசம் கொள்ளச் செய்யும். அந்தக் காரணங்களால் இந்தக் கதைகள் முக்கியமானவை. தேவையானவை. பாதுகாக்கப்பட வேண்டியவை. பாராட்டப்பட வேண்டியவை.

முருகனுக்கு என்னுடைய மரியாதை ததும்பும் வாழ்த்துக்கள்.

மாலன்

ஏப்ரல் 10 2004

Series Navigation

மாலன்

மாலன்