வாரபலன் – டிசம்பர் 9,2004 – ராகோல்ஸவம் , குஞ்ஞாலிக்குட்டி சோதனை ,இராதா இசைவிழா

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

மத்தளராயன்


கைரளி தொலைக்காட்சியில் நான் காணத் தவறாத நிகழ்ச்சி ‘ராகோல்ஸவம் ‘. வாராவாரம் ஞாயிறு இரவு (இந்திய நேரம்) ஒன்பதுக்கும், மறு ஒளிபரப்பாக வெள்ளிக்கிழமை காலை ஆறரைக்கும் ஒளிபரப்பாவது.

எம்.ஜெயச்சந்திரனும், காவாலம் ஸ்ரீராமனும் சேர்ந்து வழங்கும் இந்த நிகழ்ச்சி நாலு அல்லது ஐந்து எபிசோடுகளில் ஏதாவது ஒரு கர்னாடக சங்கீத ராகத்தை எடுத்துக்கொண்டு விரிவாக அலசி ஆராய்வது. கர்னாடக சங்கீத வித்துவான்களின் சிறிய பேட்டிகள், பாட்டு, வாத்திய இசை, பழைய அருமையான இசைத்தட்டுகளை இசைப்பது என்று சுவாரசியமான அமைவது இது. (மறைந்த இசைமேதை எம்.டி.ராமநாதன், என்.சி.வசந்தகோகிலம் இசையை எல்லாம் நிறையக் கேட்கலாம் இந்த நிகழ்ச்சியில்).

எம்.ஜெயச்சந்திரன் பல மலையாளத் திரைப்படங்களுக்கும் சின்னத்திரை சீரியல்களுக்கும் இசையமைத்தவர். இவர் இசையமைத்து சூர்யா டிவியில் வரும் ‘காவ்யாஞ்சலி ‘ சீரியலின் தொடக்கத்தை அதன் டைட்டில் பாடலை ரசிக்க மட்டும் ( ‘இளம் பின்னணிப் பாடகர் கார்த்திக் குரலில் ஒலிக்கும் மாவேலி வாழும் நாட்டில் ‘) பார்ப்பது வழக்கம். காவாலம் ஸ்ரீராமன் அவரோடு அனுசரணையாக இசை அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் ராகோல்ஸவம் நிகழ்ச்சிக்கு முன்னோடி சில வருடம் முன்னால் ஏஷியாநெட்டில் கைதப்ரம் தாமோதரன் நம்பூத்ரி நடத்திய ‘நாத மாதுரி ‘. கைதப்ரம் திருமேனி அறியப்பட்ட மலையாள நடிகர், கவிஞர், இசையமைப்பாளர். ஜெயராஜின் ‘தேசாடனம் ‘ கலைப்படத்துக்கு இசை இவர்தான். ஜேசுதாஸின் குரலில் ‘களிவீடு உறங்கியல்லோ ‘ பாடல் மறக்க முடியாதது இப்படத்தில்.

அதே ஜெயராஜின் வணிகப் படமான ‘ஃபோர் த பீபிள் ‘ படத்தில் ஜாஸி கிப்ட் பாடிப் பிரபலமாக்கிய ‘லஜ்ஜாவதியே ‘ பாடலாசிரியரும் கைதப்ரம் நம்பூத்ரிதான் !

தேசாடனம் பற்றி – சின்ன வயதில் சங்கர மடத்தில் சேர வீட்டுப் பெரியவர்கள் நிர்பந்தத்தால் அனுப்பப்படும் சிறுவனைப் பற்றிய மனதைத் தொடும் கதை இது.

கைரளி ராகோல்ஸவத்துக்கு மீண்டும் –

இந்த நிகழ்ச்சி மலையாளத்தில் நடத்தப்படுகிறதென்றாலும் பாதிக்கு மேல் தமிழ்நாட்டு இசைக் கலைஞர்களான வேதவல்லி, நெய்வேலி சந்தான கோபாலன் போன்றவர்கள் தான். இவர்கள் முழுக்கத் தமிழில் பேசுவதால் தமிழ் மட்டும் அறிந்த ரசிகர்களுக்கும் புரிந்து கொள்ள எளிதாக இருக்கிறது. (சந்தானகோபாலன் அவ்வப்போது நல்ல ஆங்கிலத்துக்குத் தாவிவிடுவார்).

நுணுக்கமான இசை விவரங்களை ஐந்து பத்து நிமிடத்தில் சொல்வதும் பாடிக் காட்டுவதும் இந்த நிகழ்ச்சியில் வாடிக்கை -கெளரிமனோகரியில் பூர்வாங்கமும் உத்தராங்கமும் சேர்த்துப் பாடுவது ரசமானது என்றார் வேதவல்லி இந்த வார நிகழ்ச்சியில்.

கெளரிமனோகரி கீர்த்தனை என்றால் வழக்கமாக ‘குருலேக எடுவண்டி ‘ என்று ஸ்டார்ட்டிங் டிரபிள் இல்லாமல் வண்டியைக் குஷியாகக் கிளப்புவதுதான் வாடிக்கை. சந்தானகோபாலன் இந்த ராகக் கீர்த்தனமாக எடுத்துக்கொண்டது ‘திருவிளையாடல் ‘ படத்தில் வரும், கவி கா.மு.ஷெரிஃப் எழுதிய ‘பாட்டும் நானே, பாவமும் நானே ‘.

‘இசைப்பாடல் கடவுளைப் பற்றியதாக இருந்தால் அது கீர்த்தனமாகும் ‘ என்றார் நெய்வேலி. சரியா என்று தெரியவில்லை.

‘அத்வைத போதினி ‘ பத்திரிகையில் (நூறு வருடம் முன்) வெளிவந்த காப்பி ராகத்தில் அமைந்த நாத்திக கீர்த்தனம் பற்றி இங்கே எழுதிய நினைவு இருக்கிறது.

****

கேரளம் ஒரு ப்ராந்தாலயம் (மனநோயாளர் விடுதி) என்று எந்தக் காலத்திலோ சுவாமி விவேகானந்தர் சொல்லி விட்டு, கன்யாகுமரி முக்கடல் சங்கமத்தில் நீந்தி பாறையில் சிலையாக தியானத்தில் உறைந்து விட்டார்.

மலையாளிகளோ இப்போது கடலா கரையா என்று முடிவுக்கு வரமுடியாமல் அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எல்லாம் தொழிலமைச்சர் குஞ்ஞாலிக்குட்டி விவகாரம்தான்.

உம்மன்சாண்டி முதல்மந்திரி பதவி ஏற்றபின் கூட்டிய முதல் சட்டமன்றத் தொடர் இடது முன்னணியின் எதிர்க்குரல்களுக்கு நடுவே மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒரு முதல்வர் பதவியேற்றதுமே முதல் சட்டசபைக் கூட்டம் இப்படி வாய்தா வாங்கித் தள்ளிப்போடப்பட்டது இந்தியச் சட்டமன்றத்திலேயே முதல்முதலாகவோ என்னமோ.

கோழிக்கோடு ஐஸ்கிரீம் பார்லர் மைனர் பெண் ரஜீனாவைப் பாலியல் வன்முறைக்குட்படுத்திய விவகாரத்தில் குஞ்ஞாலிக்குட்டியைத் தவிர மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களை மட்டும் விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறது நீதிமன்றம்.

குஞ்ஞாலிக்குட்டியையும் சேர்க்க வேண்டும், அவர் பதவி விலகவேண்டும் என்று அச்சுதானந்தன், பிணராய் விஜயன், வெளியம் பார்கவன் போன்ற இடது முன்னணித் தலைவர்கள் ஓரணியில் நிற்க, திருவனந்தபுரத்தில் இது குறித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், மாணவர்கள் என்று சொல்லிக் கொண்ட வன்முறையாளர்கள் ஜீப்பை, வேனை எல்லாம் கொளுத்த தடியடி, அரஸ்ட் என்று மாநிலம் திமிலோகப்படுகிறது.

இதற்கு நடுவே குஞ்ஞாலிக்குட்டி மேல் எட்டு வருடம் முன்னால் பாலியல் வன்முறை குற்றம் சாட்டி, இந்த அக்டோபரில் அதை மறுபடி எடுத்து விட்டு உறுதிப்படுத்தி, அப்புறம் குஞ்ஞாலிக்குட்டியைத் தெரியவே தெரியாது என்று மஜிஸ்ட்ரேட்டுக்குக் கடிதம் எழுதிய ஐஸ்கிரீம் பார்லர் (அன்றைய) மைனர் பெண் ரஜீனா, மாஜி நக்சலைட்டும் பெண்ணுரிமைக்கான அமைப்பான அன்வேஷியின் தலைவியுமான அஜீதா தான் தன்னை இப்படி அமைச்சர் மேல் குற்றம் சாட்ட வைத்ததாகச் சொன்னார்.

டிசம்பர் ரெண்டாம் தேதி திரும்ப வாக்கு மாற்றிய ரஜீனா, தன் உம்மாவும், குஞ்ஞாலிக்குட்டியிடம் பணம் வாங்கிய உறவினர்களும் நிர்பந்தித்ததால் அப்படிச் சொன்னதாகவும், குஞ்ஞாலிக்குட்டி மேல் முன் சொன்ன புகாரில் திடமாக மறுபடி நிற்பதாகவும் பத்திரிகையாளர்கள், டிவி சேனல் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அவர் சொன்னது பத்திரிகையில் அடித்து வந்த மை உலரவில்லை. அதற்குள் டிசம்பர் நாலாந் தேதி சனிக்கிழமை மறுபடி குஞ்ஞாலிக்குட்டி யாரோ நானறியேன் என்று பழைய ரிக்கார்டைத் திருப்பப் போட்டு விட்டார். இந்த முறை அஜிதா மீது வழக்குப் போடுவேன், எழுத்தாளர் சாரா ஜோசஃப் என்னை ஜெயிலில் போடுவதாகப் பயமுறுத்திக் குஞ்ஞாலிக்குட்டிக்கு எதிராக இரண்டு நாள் முன்னால் பேச வைத்தார் என்று அவர் புகார் செய்கிறார். இதை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது அவர் இன்னொரு முறை குஞ்ஞாலிக்குட்டிக்கு எதிராக ஒரு கோல், ஆதரவாக ஒரு கோல், மறுபடி எதிராக ஒரு கோல் என்று போட்டு முடித்திருப்பார்.

கேரள காங்கிரஸ் பாலகிருஷ்ணபிள்ளை குரூப் தலைவரும் தொண்டருமான பாலகிருஷ்ணபிள்ளை சந்தோஷத்தில் இருக்கிறார். ஆன்றணி மந்திரிசபையோடு ராஜினாமா செய்த இவர், சாண்டியின் மந்திரிசபையில் இல்லை. ‘என் வாழ்க்கையிலேயே அதிர்ஷ்டமான நேரம் இது – இந்த மந்திரிசபையில் சேர எனக்குக் கேடுகாலம் வாய்க்கவில்லை ‘. அவருடைய சந்தோஷத்தை இரட்டிப்பாக்குவதுபோல், கட்சியில் அவரை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்திய அவருடைய மகன் நடிகர் கணேஷ்குமார், சின்னத்திரை சிறந்த நடிகராகப் பரிசு வாங்கிய கையோடு (மாத்ருபூமி பத்திரிகை உபயம்), அப்பா பக்கமே திரும்பி வந்துவிட்டார்.

சோனியாம்மா தனி விமானத்தில் மொரீஷியஸ்ஸில் ராஜிவ் காந்தி சிலை திறந்து வைக்கப் புறப்பட்டு, இடைவழியில் திருவனந்தபுரம் விமானத் தாவளத்தில் இறங்கியபோது மாநிலக் காங்கிரஸ் தலைவர் தென்னல பாலகிருஷ்ண பிள்ளை, சபாநாயகர் தேரம்பில் பாலகிருஷ்ணன், இன்னும் அநேக மந்திரிகள் குஞ்ஞாலிக்குட்டி விவகாரம் தங்கள் மந்திரிசபையை ஆட்டி அசைத்து வீழ்த்திவிடுமோ என்று பயத்தைத் தெரிவிக்க சோனியாஜியைச் சந்திக்கப் போயிருக்கிறார்கள். (உம்மன் சாண்டி பயணத்தில் இருந்ததாலும், கருணாகரன் சார் ஆஸ்பத்திரியில் இருந்ததாலும் அவர்கள் கோஷ்டியில் இல்லை).

ஒரு தட்டு வறுத்த முந்திரிப் பருப்பை முந்திரிக்கொட்டை போல் மந்திரிமார் நீட்ட, முந்திரி சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் கூடுமா கூடாதா என்பதைப் பற்றி மட்டும் விவாதித்து விட்டு சோனியா கிளம்பிவிட்டார். அந்த அவசரத்திலும் சோனியாவுடன் விமானத்தில் வந்த அவருடைய ப்ரட்டகோல் ஓஃபிசர் காவலுக்கு நின்ற கான்ஸ்டபிளைக் கூப்பிட்டு ரூபாயை நீட்ட, அவர் நெட்டோட்டமாக வெளியே ஓடி ஒரு கையில் நாலு டஜன் ரஸ்தாளிப் பழம், மற்றதில் அதே போல் செவ்வாழை என்று தூக்கிக் கொண்டு லொங்கு லொங்கென்று ஓடிவந்து சேர்ப்பித்தார். பிரதமர் மன்மோகன் சிங் வந்திறங்கி ஒற்றை வாழைப்பழம் கேட்டால் கூட இந்த மரியாதை எல்லாம் கிடைக்குமா என்று தெரியவில்லை.

ரெவல்யூஷனரி சோஷலிஸ்ட் கட்சி (ஆர்.எஸ்.பி) என்ற போல்ஷ்விக் கட்சி. வங்காளத்திலும் கேரளத்திலும் மட்டும் தென்படும் இந்த அபூர்வ உயிரினம் மலையாள வழக்கப்படி நுண்மையாகப் பிரிவடைந்து பாபு திவாகரன் க்ரூப், தாமராக்ஷன் க்ரூப் என்று இருக்கிற இடத்தில் குதிரையோட்டிக் கொண்டிருக்கிறது. இந்த ரெண்டு கோஷ்டிக்கும் மோதல் திருவனந்தபுரத்தில் இந்த வாரம். அடிபட்டுக் கைதானதென்னமோ நூற்றுக் கணக்கில் பத்திரிகை நிருபர்கள் தாம். சண்டையைப் பத்திரிகை, தொலைக்காட்சிக்காக கவர் செய்ய வந்தவர்கள். நூறு பேர் பார்க்க, படம் பிடிக்க மொத்தம் பதினாலு பேர் பாய்ந்து அடித்துக் கொண்டிருப்பதும், அந்தப் பதினாலும் எட்டடி பாய்ந்து ஓடித் தப்பிக்க, நூறு மட்டும் கோஷம் போட்டுக்கொண்டு பொலீஸ் வேனில் ஏறி அடுத்த நாள் தலையங்கத்தில் இடம் பிடிப்பதும் கேரளத்தில் மட்டும்தான் நடக்கும்.

****

இன்னொரு சென்னைப் பனிக்காலம். சென்னை சபாக்கள் இந்த வருட இசை விழாவுக்காகத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்து பத்திரிகை இணைப்பில் நிகழ்ச்சி நிரலை மேய்ந்தபோது

இந்த வருடம் காணாமல் போன பட்டியலில் முதன்மை வகிப்பது மியூசிக் அகாதமி.

இசை ரசிகரான உயர்நீதிமன்ற நீதிபதி பக்தவத்சலம் போன்றோர் கூடப் பொது மேடைகளில் கோரிக்கை விடுத்தும், அகாதமியில் தேர்தல் – பதவிச் சண்டை இன்னும் முடிவுக்கு வராததால், இந்த ஆண்டு இசைவிழா இல்லை போலிருக்கிறது.

மியூசிக் அகாதாமியில் கடந்து போன இசைவிழாவில் மோசமான காண்டானை வைத்து சாப்பாட்டு

ரசிகர்களைப் பழிவாங்கினார்கள். இந்த வருடம் இசை ரசிகர்களையும் சேர்த்துப் பழி வாங்கி விட்டார்கள்.

ஓய்வாக ஒரு சனிக்கிழமை காலையில் அகாதமி காண்டானில் நல்ல டிஃபன். வித்வத் சதஸ்ஸில் யாரும்

காலை மிதிக்காத ஓர இருக்கையில் உட்கார்ந்து ஜன்ய ராகம் பற்றிய ஆராய்ச்சியைக் கேட்டபடி

கொஞ்சம் தூக்கம்; தடார் தடார் என்று குட்டநாட்டு மாரார் ஒருத்தர் மாரெல்லாம் சந்தனமாக வந்து

செண்டை முழக்கி விழிக்க வைக்க, வெள்ளைக்காரத் துரை அதற்கு ஆங்கிலத்தில் பொழிப்புரை தர,

நாலு நம்ம ஆளுகள் துரைக்கு லாவணி பாட என்று பார்த்து ரசிக்க முடியாது. சாயந்திரம் ஜெயஸ்ரீ

கச்சேரி முடிந்ததும் அவசர அவசரமாகக் காப்பியை விழுங்கிவிட்டு செளமியா முதல் ஸ்வரம் பாட ஆரம்பித்திருக்கும் அடுத்த கச்சேரிக்கு ஆனந்தமாக உள்ளே ஓட முடியாது.

டி.டி.வாசு சார், நியாயமா இது ?

அது சரி, நித்யஸ்ரீ மகாதேவன் கச்சேரியே ஒரு சபாவிலும் இல்லையே ? என்ன ஆச்சு ?

****

(தலைப்புகள் உபயம் திண்ணை குழு )

Series Navigation