வாரபலன் டிசம்பர் 16,2004 – நாடாளுமன்றச் சிலைகள், கும்பாரன் குரல், கோல்கீப்பரின் மரணம், தோசை சப்பாத்தி ஐஸ்கிரீம்

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

மத்தளராயன்


நாடாளுமன்ற வளாகத்தில் மார்க்சிஸ்ட் தலைவர் ஏ.கே.கோபாலன், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஸ்ரீபாத அம்ருத் டாங்கே, சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் ஆச்சார்ய நரேந்த்ர தேவ் சிலைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள்.

ஏ.கே.ஜி சிலை கண்ணூரிலிருந்து கொண்டு வந்தது. பத்து அடி உயரமும், ஆயிரத்து ஐநூறு கிலோகிராம் எடையுமாகச் சிற்பி குஞ்ஞிமங்ஙலம் நாராயணன் மாஸ்டர் வெண்கலத்தில் வடித்த ஏ.கே.ஜி சிலை போல் அச்சு அசலாக இன்னொரு கோபாலன் சிலை கண்ணூர் கால்டெக்ஸ் ஜங்ஷனில் உண்டு. இதே நாராயணன் மாஸ்டர் வார்த்தெடுத்த அதுவும் வேட்டியின் இடது மூலையைத் தூக்கிப் பிடித்தபடி அரைக்கைச் சட்டையோடு இனி வராத அடுத்த போராட்டத்துக்கு நடக்கத் தயாராக நிற்கிறது.

டாங்கேயும், நரேந்திரதேவரும் முதல்தடவையாக பீடம் ஏறியிருப்பார்களாக இருக்கும்.

இந்திய நாடாளுமன்றம் என்றால் முன்பெல்லாம் கோவிந்த் வல்லப் பந்த் சிலை தான் நினைவுக்கு வரும். எண்பதுகளில் தூரதர்ஷனில் (வேறே டிவி ஏது அப்போ எல்லாம் ?) ராத்திரி சித்ரஹாருக்குப் பின்னாலோ ஹம்லோக் சீரியலுக்கு முன்னாலோ நாடாளுமன்றச் செய்திகள் என த்ரும் த்ரும் என்று எல்லாத் திசையும் அதிர அரசு வாத்தியம் எதையோ வாசித்து அந்தச் சிலையைத் தான் காமிராவைச் சுழற்றிச் சுழற்றிக் காட்டுவார்கள்.

இப்போது சுற்றுப்புறம் எல்லாம் போதாமலோ என்னமோ, ஏ.கே.ஜி நாடாளுமன்றத்தின் மூன்றாவது காத்திருப்பு மண்டபத்திலும், டாங்கே இரண்டாவது மண்டபத்திலும் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறார்கள்.

காலம் சென்று இருபத்தைந்து வருடம் கழித்து, அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லோரும் கட்சி பேதமில்லாமல் அரசியல் மேதைகளாகி விட வாய்ப்பு உண்டு. இவர்களை முழு உருவத்திலும், மார்பளவுச் சிலையாகவும், அதற்கும் வாய்க்காவிட்டால் சுவரில் பூமாலை சார்த்தித் தொங்குகிற படமாகவும் திறந்து வைத்து, சம்பிரதாயமாகச் சொற்பொழிவாற்றி, சம்பிரதாயமாகக் கைதட்டி, சம்பிரதாயமாகப் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து சம்பிரதாயமாகக் கலைந்து போக இந்திய ஜனநாயகம் வழி செய்கிறது.

இன்னும் ஐம்பது ஆண்டு கடந்து போனால், நாடாளுமன்ற வளாகம் உள்ளும் வெளியும் தலைவர்களுக்குப் போட்டியாகச் சிலைவர்கள் நிறைந்து இருக்க வாய்ப்பு உண்டு.

மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றம் போனவர்கள் வாயைத் திறக்க வேண்டிய நேரத்தில் இறுக மூடிக்கொண்டு நெட்டை மரத்தை நாற்காலியில் உட்கார்த்தினதுபோல் இருந்தால், இந்தச் சிலைகள் பேச ஆரம்பித்து விடலாம்.

****

கும்மார ஸெத்த ‘. அதாவது கும்பாரன் குரல்.

இது ஒரு புதிய மலையாள மாத இதழ்.

மலையாளத்தில் ‘கும்மார ஸத்தெ ‘ என்ற சொற்றொடர் கிடையாது. ‘ இது கும்பார மொழிப் பத்திரிகை.

கும்பார மொழி ? கேரளத்தில் நிலாம்பூர் பிரதேசத்தில் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் கொண்ட ஒரு சிறிய இனக்குழுவால் பேசப்படும் மொழி. இவர்கள் எல்லோரும் எத்தனையோ தலைமுறைகளுக்கு முன் ஆந்திராவிலிருந்து, தமிழகம் வழியாகக் கேரளம் போய்ச் சேர்ந்தவர்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று கலந்து சேர்ந்த மொழிதான் கும்பார மொழி. இதற்கு வரிவடிவம் கிடையாது என்பதால், கும்பார இனத்தவர்கள் தங்களுக்குப் பழக்கமான மலையாள வரிவடிவத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

கும்பாரர், குலாலர் (மண்கல வினைஞர்கள்) இனம் என்கிறது மாத்ருபூமி செய்தி.

தொழில் அடிப்படையில் ஒன்று சேர்ந்த ஓர் இனக்குழு தனியாக ஒரு மொழியை உருவாக்கிப் பயன்படுத்துகிறது என்பது எவ்வளவு தூரம் சரியானது என்று சமூகவியலாளர்கள் தான் சொல்லவேண்டும்.

****

கடந்த வாரம் பெங்களூர் ஸ்ரீகாண்டாரவ மைதானத்தில் நிகழ்ந்த துயரமான சம்பவம் இது –

ஃபெடரேஷன் கப் கால்பந்து இறுதி ஆட்டம். வங்காளத்தின் புகழ் பெற்ற மோகன் பகான் அணியும், கோவாவின் டெம்போவும் பொறி பறக்க மோதுகின்றன.

டெம்போ அணியின் நட்சத்திர விளையாட்டு வீரர் கிறிஸ்தியானோ த லிமா ஜூனியர் என்ற பிரசில் நாட்டுகாரன். கடந்த தேசிய டோர்ணமெண்டில் மொத்தம் பதினாறு கோல் அடித்துப் பிரசித்தமானவர். இந்த ஆட்டத்திலும் முதல் கோல் அவர் தான் போட்டார்.

ஆட்டம் எழுபத்தெட்டாவது நிமிடத்தில் இருக்கும்போது கிறிஸ்தியானோ அடுத்த கோலுக்காக கோல் போஸ்டை நோக்கி முன்னேறினார். மோகன் பகான் கோல் கீப்பர் சுப்ரதோ பால் மீது அவர் மோத, சுப்ரதோவின் கை தற்செயலாக கிறிஸ்தியானோவின் நெஞ்சில் பட்டது.

ஆனாலும் பந்தை கோல் போஸ்டுக்குள் வெற்றிகரமாகச் செலுத்தி அடுத்த கோலையும் போட்டுவிட்டு, கிறிஸ்தியானோ கோல்போஸ்டின் இடது வசத்தில் குழைந்து வீழ்ந்தார். மருத்துவனை போவதற்குள் அவர் உயிர் பிரிந்தது.

தங்களுக்கு வெற்றியைக் கொடுக்க அந்த கோலுக்கு விலையாகத் தர வேண்டிப் போனது ஒரு சகாவின் மரணத்தை என்று அறிந்த டெம்போ குழுவும், மொகன் பகானும், கால்பந்து விசிறிகள் எல்லாரும் துயரத்தில் அமிழ்ந்திருக்கும் நேரம் இது.

ஆயிரக் கணக்கானோர் பார்த்திருக்க, கோல் போஸ்ட் நோக்கி வரும் பெனால்டி கிக்கை எதிர்கொண்டு, உலகத்திலிருந்தே விலகி ஒற்றைப்பட்டு நிற்கும் ‘கோல் கீப்பரின் தனிமை ‘ ‘ யை என்.எஸ்.மாதவனின் மலையாளச் சிறுகதை மூலம் உணர்ந்திருக்கிறேன்.

வெற்றி பெற்ற கணத்தில் உயிர் துறக்கும்போது கிறிஸ்தியானோ அனுபவித்த தனிமை எப்படி இருந்தி

ருக்குமோ!

****

போன ஆன்றணி மந்திரிசபையில் அமைச்சராக இருந்து, ஒரு வழியாக நூறாவது நாள் கொண்டாடும் உம்மன் சாண்டி அரசிலும் தொடரும் கேரள காங்கிரஸ் தலைவர் கே.எம்.மானியிடம் நிருபர்கள் வாயைப் பிடுங்கினார்கள்.

‘ஆன்றணி அவைக்கும் சாண்டி சர்க்காருக்கும் என்ன வேற்றுமை சாரே ? ‘

‘ஆன்றணி தோசை கொடுத்தார். சாண்டி சப்பாத்தி கொடுக்கிறார். ரெண்டும் புரதச் சத்து நிறைந்தது தான். ‘

மானி கம்பீரமாக முழங்க, நிருபர்கள் விடாமல் பிடித்தார்கள் –

‘சரிதான், அதோட ஐஸ்கிரீம் எதுக்குத் தரணுமாம் ? ‘

ஐஸ்கிரீம் பார்லர் சம்பந்தப்பட்ட குஞ்ஞாலிக்குட்டி விவகாரம் தீரும்வரை கேரளம் வரவேண்டாம் என்று பிரதமர் மன்மோகன் சிங்கும் சோனியாம்மாவும் தீர்மானித்திருப்பதாகச் செய்தி.

****

eramurukan@yahoo.com

Series Navigation