வாத்தியார்

This entry is part [part not set] of 39 in the series 20060609_Issue

அருண் நரசிம்மன்


என் தொழில் வெப்பமும் வெப்பம் சார்ந்த விஷயங்ளை பற்றியும் சிந்தித்து, ஆராய்ந்து, தெளிந்து (சில வேளை தெளியாமலே) மற்றவருக்கு அதை புரியவைக்க முனையும் பகுதி நேர விஞ்ஞானி, பகுதி நேர வாத்தியார் வேலை.

வேலை செய்யும் நிறுவனத்தின் ஆராய்ச்சிக்கூடத்திற்கு மிக அருகிலேயே வீடு வைத்து, லாபிலேயே இருப்பதால் அவ்வீட்டிற்கு சொற்ப நேரமே விஜயம் செய்து, போதாக்குறைக்கு அதில் அலமாரி நிறைய புத்தகங்களை வைத்து, ஞானாணந்தமயம்தேவம் சொல்லி ஸரஸ்வதி பூஜை தினத்திலும் அவற்றில் சிலதை பிடிவாதமாக படித்து, மேலும் பத்தாவதிலிருந்து எழுதிய கணக்கு நோட்ஸ் முதல் பல கோணங்களில் ஆரம்பித்து பாதியிலேயே முடிந்துவிட்டிருக்கும் நேற்று எழுதிய நோட்டுப்புத்தகங்கள் வரை நிரப்பி, அவற்றின் அடித்தல் திருத்தல்களை மனதிற்கொள்ள முயன்று், இரண்டு மூண்று கம்புயுட்டர்களை இருத்தி விளையாடி், எப்பொழுதும் சற்றே எரிச்சலுடனும் அவ்வெரிச்சலுக்கு காரணகர்தா அடியேன்தான் என்பதை மறைக்கும் மிகுந்த பாசத்துடன உலவும் மனைவியின் மேல் அவ்வப்போது முட்டிக்கொண்டு, நெருப்பு நிஜமாகவே சுடுமா என்று அதில் விரலை விட்டு பார்க்கும் என்னை விஞ்ஞானி என்று ஐயம் திரிபட ஒத்துக்கொள்வதில் என்னை சுற்றி இருப்பவர்களுக்கு தயக்கம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

நான் வாத்தியார் என்பதில்தான் பிரச்சினை இருப்பதாக தெரியவருகிறது.

நீ என்ன செய்கிறாய் என்பதற்கு என் வேலையை சொல்ல வாயெடுக்கும்போதே பாதியில் தடுத்தாளப்பட்டு ஒரு மாதிரியான கேலிச்சிரிப்புடன் நீயா, பாடம் நடத்துவியா, யார் கேட்ப்பா என்பதுமுதல் மிகவும் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு தலையை குறுக்குவாட்டில் விரக்தியுடன் ஆட்டிக்கொண்டே what this world has come to என்கிற உச் கொட்டல்கள் வரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

வீட்டிற்குள்ளேயே எல்லம் சரிடா, அது எப்படி நீ பாடம் நடத்தி பசங்கள் எல்லாம் கேட்டுக்கறா? புரியரதாமா அவாளுக்கு, ஏதோ போ, எங்கியாவது டியூஷன் வெச்சுப்பா போல என்று சமாதானம் அடைவாள் அம்மா.

போதாக்குறைக்கு நிறுவனத்திலேயே பக்கத்து டிபார்ட்மென்ட்டுக்கு ப்ராஜெக்ட் எக்ஸாமினராக சென்றால், அங்கு இருக்கும் ஒரு காரியதரிசியாலோ ஏவளாலாலோ நிறுத்தப்பட்டு, ப்ராஜெக்ட் ஸ்ப்மிட் செய்து விட்டாயா, ஏன் லேட் என்று விரட்டப்பட்டு பிறகு நான் “சார், நான் வாத்தியார், ஹி ஹி” என்று வழிந்ததும், ஓ, நீங்கதானா அது, இப்போதான் சார் போன் போட்டேன் உங்கள் ஆபீஸுக்கு, அதற்குள் இங்கு ஏன் சார் வந்துவிட்டீர்கள் என்று மரியாதையாக விரட்டப்பட்டு கான்ஃபரன்ஸ் ரூமினுள் அழைத்துச்செல்லப்படுவேன்.

சக ஆசிரிய நண்பர்கள் இல்லாத அட்மினிஸ்ட்ரேஷன் பில்டிங், ஹாஸ்பிட்டல், கெஸ்ட் ஹவுஸ் போன்ற இடங்களில் நிலைமை இன்னும் மோசம். புகுந்த வீட்டிற்கு முதன் முறையாக போகும் புது மாட்டுப்பெண் (மாற்றுப்பெண் என்பதே சரியான சொல்) போல் ஆகிவிடும் நிலைமை.

ஒவ்வொருமுறையும்.

பார்க்க சற்று சின்னப்பையன் போல் இருப்பதால் இம்மாதிரி பல தொல்லைகள். டெலிபோனில் என்னுடன் பவ்வியமாக பேசியிருக்கும் நிகழ்ச்சிக்கு சீஃப் கெஸ்டாக வருபவர் நேரில் பார்த்ததும் இவனுக்கு கை குடுப்பதா வேன்டாமா என்று தயங்குவதிலிருந்து மாணவர்கள் அசந்தர்பமான வேளைகளில் அவர்களில் ஒருவராக என்னை நினைத்து படுத்தி, குறுகிய மாடிப்படிகளில் நான் நடத்தவேண்டிய க்ளாசிற்கு சென்றுகொண்டு எனக்கே வழிவிடாமல் செல்வதுவரை.

ஆனால் இவர்கள் எல்லோரும் நான் விஞ்ஞானி என்று அங்கீகரிப்பதில் தயக்கம் காட்டுவதில்லை.

விஞ்ஞானி யார் என்பதில் நம் மனப்பிம்பம் அவரைப்போலவே குழப்பமாகவே உள்ளது. ஏனெனில் இந்த விஞ்ஞானி என்பவரை சிறு வயதில் பெரும்பாலும் நாம் நேரில் சந்தித்தது கிடையாது. சட்டென்று நினைவுக்கு வருபவர்கள், Einstein, Abdul Kalam, Ramanujam அப்புறம் ஒரு தலை கலைந்த அழுக்கு உடையணிந்த தெருவில் செல்கையில் லாந்தர்கம்பத்தை தட்டிக்கொண்டு செல்லும் ஒரு ஜெனெரிக் நபர். இவர்களைப்போல் தலையை கலைத்துக்கொள்வது சுலபம். வயது ஒரு குறையில்லை. என் கலைந்த தலைக்கும் பான்ட் zip போட்டிருக்கிறதா என்று சரிபார்க்கும் ஆப்ஸெண்ட் மைண்டெட்னெச்சிற்கும் கிடைத்துவிடுகிற விஞ்ஞானி என்கிற அங்கீகாரம், சற்று ஆச்சரியமானதுதான் என்றாலும் மிகையில்லைதான்.

ஆனால் வாத்தியார் யார் அவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் நம் எல்லோர்க்கும் ஒரு ஆனித்தரமான் மனப்பிம்பம் உள்ளது. அதில் பெரும்பாலும் நாம் பள்ளியில் பார்த்த, பயந்த, மதித்த, சில நேரங்களில் வெறுத்த ஒரு நடுத்தர வயதை தாண்டிய தலை நரைத்த, கண்ணாடி அணிந்த வெள்ளாடை நபர், சாக்பீஸ் வெள்ளை தட்டிய கையில் குச்சியுடன், கந்தலான காகிதக்கட்டுக்களுடன் மிடுக்காக உலவிக்கொண்டு இருக்கிறார். இந்த நபர் பின்னாளில் அமெரிக்காவிலிருந்து லீவிற்கு அம்மா வீட்டில் பழம்புளியோதரை சாப்பிட வந்திருக்கும் நம்மை என்னப்பா ஸௌக்கியமா என்று கேட்டால் சைக்கிளைவிட்டு இறங்கி வேஷ்டியை பிடித்துக்கொண்டு எஸ் சார் என்பது போல் வேகமாக தலையை ஆட்ட நாம் தயங்குவதில்லை.

ஆனால் எக்காரணம் கொண்டும் இந்த நபரை வயசு குறைய விடுவதில்லை நாம். மனதிலோ, நேரிலோ.

இவருக்கு வயது குறைய குறைய இவரின்பால் நம் மரியாதையும அபிமானமும் குறைந்துவிடுகிறது. இவரின புலமையின் பேரில் சந்தேகம் மேலோங்குகிறது. எப்படி இவருக்கு வயது குறைந்தது என்று அப்துல் கலாமிற்க்கு ஒரு சமுதாய சீர்திருத்த மடல் எழுத மனம் விழைகிறது.

இவ்வாறு பல காரணங்களை கொண்டு என்னை வாத்தியார் என்று அங்கீகாரம் செய்ய இவ்வுலகிற்கு கால தாமதம் ஆகும் என்பதை புரிந்துகொண்டு சமாதானம் செய்துகொண்ட ஒரு நாள் வெளியே சென்றுவிட்டு நிறுவனத்தினுள் இருக்கும் வீட்டிற்க்கு இரவு திரும்புகையில், வாசலில் செக்யூரிட்டியினால் நிறுத்தப்பட்டேன். என்ன செய்கிறாய் நீ இங்கு என்பதற்கு, நான் இங்கு வாத்தியார் என்றேன். என்னை ஏற இறங்க பார்த்துச் சிரித்துவிட்டு, என்ன சார் நீங்க, வாத்தியார்னு சொல்லாதீங்க, ப்ரொஃபஸர்னு சொல்லுங்க சார் என்றார்.

இந்த செக்யூரிட்டியின் மனதில் என்ன பிம்பமோ, என்ன வித்தியாசம் இந்த இரண்டு வார்த்தைக்கும் என்று குழம்பிய எனக்கு அவருடைய அடுத்த பதில் தெளியவைத்தது என்னை பற்றிய பல விஷயங்களை

“வாத்தியார்னா எம்ஜியார் ஒருத்தர்தான் சார்”.
————————————————-
Arunn Narasimhan [ommachi@gmail.com]

Series Navigation

அருண் நரசிம்மன்

அருண் நரசிம்மன்