வாடிக்கை கவுடா, வாடிய தாமரை : கர்”நாடக” அரசியல்

This entry is part [part not set] of 41 in the series 20071122_Issue

ஜடாயு“காலையில் மலர்ந்த தாமரைப் பூ இப்படி அந்திக் கருக்கலுக்குள் மறைந்து விட்டதே : (( அல்பாயுசில் போய் விட்டதே? எவன் பெயர் வைத்தானோ கவுடா என்று, கவுடா, கவுடா என்று கவிழ்ப்பதையே தொழிலாய் செய்கிறார்கள்..” – ஏழுநாள்-அதிசயமாக எடியூரப்பா அரசு கவிழ்ந்தவுடன் நகைச்சுவைக்குப் பெயர் போன நண்பர் ஒருவர் அடித்த கமெண்ட் இது.

“இந்தியாவில் நீங்கள் அதிகம் வெறுக்கும் அரசியல்வாதி யார்” என்று இப்போது ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினால் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தேவகவுடா அதில் வெற்றிபெற்று விடுவார். எடியூரப்பா ஆட்சி அமைக்கட்டும், கண்டிப்பாக ஆதரவு தருவேன் என்று கவர்னர் முன்பு எம்.எல்.ஏக்கள் தலை எண்ணி வாக்குறுதி அளித்து விட்டு, நம்பிக்கை ஓட்டெடுப்பு அன்று காலை, காலை வாரிய அவரது நரித்தனம் கர்நாடக சட்டசபை வரலாற்றில் ஒரு மறக்க முடியாத கருப்பு நிகழ்வாக இடம்பெற்று விட்டது.

பொதுவாக கட்சித் தலைவர்கள் என்போர் அரசாட்சி, மக்கள் நலத் திட்டங்கள், மக்கள் பிரசினைகள், கொள்கை வகுத்தல் இவற்றில் ஈடுபடுவதோடு “அரசியல்வாதி” என்ற ஒரு முகமும் கொண்டிருப்பது தான் ஜனநாயகத்திற்கு உகந்தது. ஆனால் தேவ கவுடா தான் ஒரு “365 நாள் அரசியல்வாதி” (நன்றி: யூ.ஆர்.அனந்தமூர்த்தி) என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார். சுரங்கங்கள், பெங்களூர் நகர அபிவிருத்தி முதலான பணம் கொழிக்கும் துறைகளைப் பங்கு போட்டுக் கொள்வதில் ஏற்பட்ட சண்டை அரசைக் கவிழ்த்து விட்டது. இரண்டு கட்சிகளும் ஏன் இந்தத் துறைகளைக் கையகப் படுத்துவதில் குறியாக இருக்கின்றன என்பது நிதர்சனம். ஆனாலும், இந்த ஒளிவு மறைவில்லாத பணவேட்கைப் போட்டியில் கூட, தான் அவுட் ஆனதும், அடுத்தவனுக்கு மட்டையைத் தராமல் அடம்பிடிக்கும் அடாவடி கிரிக்கெட் சிறுவன் போல தேவகவுடா நடந்து கொள்வது மக்களுக்கு பெரும் எரிச்சலை ஊட்டிவிட்டது.

தேவகவுடாவை எதிர்த்து அந்தக் கூட்டத்திலேயே கட்சி எம்.எல்.ஏக்கள் பொருமித் தள்ளியது பற்றிய விவரங்கள் செய்தி ஊடகங்களில் வெளியாயின. “எங்களை பொதுவில் நிர்வாணமாக்கி விட்டீர்கள், இப்போது பொத்திக் கொள்ளவாவது அவகாசம் கொடுங்கள்” என்றார் ஒரு எம்.எல்.ஏ. “பணம் தேவை தான், பதவி தேவை தான், ஆனால் குறைந்த பட்சம் மானம், ரோஷத்தையும் இவற்றுக்காக அடகு வைக்க வேண்டுமா?” என்றார் இன்னொரு எம்.எல்.ஏ. இதோடு, “சே, அதுக்குள்ள தேர்தலா, மறுபடி காங்கிரஸ் கூட்டணி வையுங்கப்பா” என்று அலையும் எம்.எல்.ஏக்களும் காணக் கிடைத்தார்கள். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களிலும் ஒரு பிரிவினருக்கு இன்னும் கவுடாவுடன் சேரலாமா என்று குளிராட்டிக் கொண்டிருந்ததாம். ஆனால் மத்திய அரசின் சட்டசபைக் கலைப்பு ஆணை இன்னும் ஒரு ரவுண்டு கேலிக் கூத்துகள் நடப்பதை நிறுத்திவிட்டது.

தன் தந்தையின் அரசியல் செயல்பாட்டினால் கடுப்படைந்திருப்பதாகக் கூறும் குமாரசாமி, ஒரு மாநிலக் கட்சியைத் துவக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். ஆனால் கர்நாடகத்தில் முளைத்த மாநிலக் கட்சிகளின் வரலாறு தமிழகத்தைப் போல உற்சாகமூட்டுவதாக இல்லை என்பது அவருக்குத் தெரிந்திருக்கும். கெங்கல் ஹனுமந்தையா, தேவராஜ் அர்ஸ், பங்காரப்பா போன்ற பெருந்தலைகள் தனிக்கட்சிகள் தொடங்கி பெரிய அளவில் கையைச் சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். ராமகிருஷ்ண ஹெக்டேவின் “லோக சக்தி” ஓரளவு வெற்றியடைந்தாலும், நீண்டகாலத்திற்கு தனிக் கட்சியாக நிற்க இயலாமல் ஜனதா தளம்(யூ)வுடன் இணைந்துவிட்டது.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரம் என்பதால் பெங்களூர் நிகழ்வுகள் உலக அளவில் உன்னிப்பாகக் கவனிக்கப் படுகின்றன. இந்த அரசியல் கூத்துகள் பெங்களூர் என்ற நகரின் மதிப்பை அதளபாதாளத்தில் தள்ளிக் கொண்டிருக்கின்றன. அரசியல் ஸ்திரத்தன்மை இன்மை காரணமாக கடந்த சில மாதங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை கர்நாடகம் இழந்திருக்கிறது என்று மாநில வர்த்தக, தொழில்துறை வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன. போக்குவரத்து நெரிசல், கட்டமைப்பு குறைபாடுகள், அதிகம் செலவு பிடிக்கும் நகர்ப்புறம் – இந்த எல்லா பலவீனங்களுக்கு நடுவிலும், பெங்களூர் தனது தகவல் தொழில்நுட்ப முன்னணியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அவலட்சண அரசியல் இதைக் குலைக்கும் சாத்தியக் கூறுகளை உருவாக்குவது பெரும் துரதிர்ஷ்டம்.

இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மாநில மக்களுக்கு எல்லாக் கட்சிகளிலும் எல்லாவிதமான பாத்திரப் படைப்புகளும் கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்கிற விஷயம் தெளிவாகப் புரிந்திருக்கிறது. கொள்கையில் உறுதியாக நிற்க விரும்பும் எம்.எல்.ஏக்கள், எந்த சமரசத்திற்கும் தயாராக இருக்கும் எம்.எல்.ஏக்கள், தார்மீக நிலைப்பாடுகளைக் கடைப்பிடிப்பதில் வரையறை வைத்திருக்கும் எம்.எல்.ஏக்கள் இப்படி. ஆனால், மொத்தத்தில் ஒரு மோசமான இயக்குனர் இயக்கிய அபத்த நாடகமாக இது ஆகிவிட்டது.

பாஜகவைப் பொருத்தவரை இந்த இழப்பு, ஏமாற்றம் ஒரு முழுமையான அனுதாப அலையாக மாறும் என்று நம்புவதாகத் தெரிகிறது. திரும்பத் திரும்ப ஜ.தவையும் கவுடாவையும் நம்பி பரிதாபமாக நிற்கும் பாஜக, இந்த ஏமாளித்தனம் ஜ.தவை முழுமையாகத் தோலுரிக்க உதவியிருக்கிறது என்றும் மதிப்பிடுவதாகக் கேள்வி. 2008 பெப்ரவரி மார்ச்சில் தேர்தல் வரும் வரை இந்த அனுதாப அலை இருக்குமா? வாக்காளர்கள் தான் சொல்லவேண்டும்.

http://jataayu.blogspot.com/


jataayu.b@gmail.com

Series Navigation