வள்ளி வோட்டு போட போறா!

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

சுபாபாலாஜி


‘இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு ?காலையிலேருந்து இந்த மாதிரி குதியாட்டம் போட்டுக்கிட்டிருக்கா ?….பேசாம இவ மாமன்காரன் பேச்சை கேட்டுக்கிட்டு சமஞ்ச மருவருஷம் கல்யாணம் கட்டி குடித்திருக்கோணும்….இவ பள்ளிக்கோடம் போறேன்,காலேசுக்கு போறேன் ‘னு சொன்னத கேட்டுக்கிட்டு இப்படியே விட்டது தப்பா போச்சு போல…. ‘ மனதுக்குள் கவலையாய் புலம்பிக்கொண்டிருந்தாள் சின்னம்மா.

மீண்டும் ஒருமுறை வாசலுக்கு சென்று தெருமுனைவரைப் பார்த்தாள்….ம்ஹும்….மகள் வள்ளி வரும் சுவடே காணோம்….சாயங்கால தெருவிளக்குகூட போட்டாச்சு….மீண்டும் வீட்டினுள் வந்தவள்,

‘என்னவோ மைசூர் மகாராசனுக்கு பொறந்தவளாட்டமா ‘எனக்கு பதினெட்டு வயசாச்சு,ஆச்சு ‘னு குதிக்கறா….உலகத்துலயே இவளுக்குத்தான் பதினெட்டு வயசான மாதிரி….இவருக்கிட்ட சொன்னாக்க ‘நீ தாம் ‘ல பொட்டபுள்ளைன்னாலும் படிக்கோணும் ‘னு காலேசுக்கு அனுப்புன ‘ம்பாரு…. நான் யாருக்கிட்ட போயி சொல்ல….அவரு வரதுக்குள்ள இவ வந்துட்டா தேவலையே ‘, சத்தமாகவே புலம்பினாள். இன்னும் சாமி விளக்குகூட ஏற்றவில்லை.

‘என்ன சின்னம்மா பொலம்பிக்கினு கீறே….பீச் ‘ல இன்னிக்கு கூட்டதுக்கு போவலியா….எங்க எம்மருமவ….வீட்டுல இல்லையாக்கும்…. காலையிலே சீவி முடிச்சிக்கிட்டு போனாப்போல…. இன்னும் வரல்லயா ?…. ‘, என்ற படி வீட்டினுள் நுழைந்தாள் பக்கத்து வீட்டு பரிமளா.

‘அவள பத்திதான் பொலம்புவேன்….வேறென்ன எனக்கு இருக்கு ?…. உங்க வீட்டுல அவரு இன்னும் வரல்லியா ? ‘, என்று சின்னம்மா கவலையாய் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வள்ளி வீட்டினுள் நுழைந்தாள்.

‘ஐ….அத்தை,எப்படி இருக்கீங்க….பாத்து ரொம்ப நாளாச்சு ?…. ‘, என்றபடி பரிமளாவின் அருகில் வந்து உட்கார்ந்தாள் வள்ளி.

‘எனக்கென்ன கண்ணு நல்லாகீரேன்…. நீ இம்புட்டு நேரமாவ வெளியிலே சுத்துரது….பாவம்….உங்காத்தாகவலையாயிட்டா…. ஊர்,உலகம் கெட்டுக்கிடக்குதுல்ல…. ‘, என்றாள் பரிமளா பரிவாய்.

‘இல்லயே…. நான் அம்மாகிட்ட சொல்லிட்டுதான் போனேன்….அப்பாக்கும் தெரியும்…. நீங்க இன்னிக்கு கூட்டத்துக்கு போறீங்களா அத்தை…. அப்பா பெரியவங்க துணையிருந்தாதான் என்னை போகலாம் ‘னு சொன்னாரு….நீங்க போறதாயிருந்தா சொல்லுங்க ‘, முகம் முழுக்க ஆர்வம் மின்ன கேட்டாள்.

‘அதெல்லாம் இனிமே எங்கயும் போவேண்டாம்….உங்கப்பாக்கு என்ன….அவர் பாட்டுக்கு சொல்லிட்டு போய்டுவாரு…. நீ வர்றதுக்கு லேட்டானாக்க கவலை பட்டு ரத்த கொதிப்பு எனக்குதான் அதிகம் ஆவுது…. பொட்டபுள்ளையாய் லட்சனமா வீட்டோட கிட…. ‘, என்றாள் சின்னம்மா.

‘அட என்னம்மா நீ…. பொம்பளை ஆளுற ஊருல இருந்துக்கிட்டு என்னய வீட்டுல முடக்குற…. உன்னால தானம்மா நான் பெரிய படிப்பெல்லாம் படிக்கணும்னு நினைக்கிறேன்…. ‘, என்றபடி சின்னம்மாவின் கழுத்தை கட்டிக்கொண்ட வள்ளி பரிமளாவை பார்த்து கண்களை சிமிட்டினாள்.

சின்னம்மாவின் முகம் லேசாக மலர்ந்தது.

‘ம்கும்…. இந்த கொஞ்சலுக்கு ஒரு குறைச்சலும் இல்லை…. போயி சாமி விளக்கேத்து….உன்ன படிக்க வச்சது தப்போன்னு இப்ப பயப்படறேன்…. என்ன பரிமளாக்கா…. நீங்களாச்சும் சொல்ல கூடாதா இவளுக்கு…. ‘, என்றாள் சற்றே அலுப்பாய்.

‘ நல்லஆத்தாக்காரி… நல்லபொண்ணு போ…. நான் இன்னாத்த சொல்ல…. ஏ பொண்ணு…. நீ இன்னா பீச் ‘சாண்ட டிராமா காட்டப்போறாங்க ‘னு நினைச்சியா ?…. அரசியல் கூட்டத்துல இன்னா செய்யப்போறே நீயி…. ‘, விளக்கு திரியை பக்குவமாய் தூண்டிவிட்டுக்கொண்டிருக்கும் வள்ளியை பார்த்துக் கேட்டாள் பரிமளா.

கையில் ஒட்டிய திரியின் அழுக்கை பக்கத்தில் வைக்கப் பட்டிருந்த துணியில் துடைத்தவள், ‘பகலெல்லாம் என்ன பண்ணுறேன் ‘னு நினைச்சுக்கிட்டிருக்கீங்க நீங்க…. போன மாசம் எனக்கு பதினெட்டு வயசாச்சு தெரியுமில்ல…. இப்ப வரப்போற தேர்தல் ‘ல முதன் முதலா ஓட்டு போடப்போறேன்…. அதான் நம்ம ஊர் ‘ல என்னன்ன கட்சி இருக்கு,யாரல்லாம் தேர்தல்ல வேட்பாளராய் நிக்கிறாங்க ‘னெல்லாம் தேடி,தேடி அத பத்தியெல்லாம் படிச்சுட்டு வார்றேன்…. இன்னிக்கு நீலக்கட்சி கூட்டம் இருக்குல்ல…. அதுல போய் பேச்செல்லாம் கேட்கணும்…. நாங்கல்லாம்தான் இந்தவாட்டி நம்ம நாட்டை ஆளப்போறவங்கள தேர்தெடுக்கப் போறோம்…. அடுத்தவங்க சொன்னத மட்டும்தான் இவ்வளவு நாளா கேட்டுக்கிட்டு இருந்தேன்…. ஆனா நான் ஓட்டு போடனும் ‘னு வரும்போது அலட்சியமா இருக்கக்கூடாது பாருங்க…. ‘, பெருமிதமாய் சொல்லும் மகளை ஆசையாய் பார்த்தாள் சின்னம்மா.

‘அதான் சேதியா…. ஏய் சின்னம்மா….மத்த புள்ளைங்கள போல வெருமனாக்க சினிமா,டிவிதான் உலகம் ‘னு இல்லாம இருக்காள்ல எம்மருமவ…. புள்ளையை அமுக்காதே…. நல்ல விஷயம்தான…. நீயும் வா இன்னிக்கு பேச்சு கேட்க…. இன்னான்ற நீயி…. ‘, பரிமளாவும் கூற அம்மாவின் முகத்தை ஆர்வமாய் பார்த்தாள் வள்ளி.

‘ நீங்களும் இவகூட சேர்ந்துக்கிட்டாங்களாக்கா…. இனி நான் என்னத்த சொல்றது ?…. உங்க மவ மாதிரி இவளும் நல்லபேரு எடுக்கணும் போற இடத்துல…. வேறென்ன எனக்கு…. அரசியல் கூட்டதுல போயி என்னாடி செய்யப்போற நீயி…. ‘, என்றாள் சின்னம்மா.

‘ஆமாம்மா…. கண்டிப்பாய் போணும்மா நாமெல்லாம்…. ஒவ்வொரு வருஷமும் ஒட்டு எண்ணிக்கை குறைஞ்சுக்கிட்டே வருதாம் தெரியுமா ?…. பாதிபேரு ஓட்டே போடரது இல்லை…. படிச்சவங்கதான் அதுல அதிகமாம்…. நாம ஓட்டு போடல்லைன்னா கண்டபடி கள்ள ஓட்டு போட்டுடுவாங்க ‘னு எங்க காலேஜு ‘ல சொல்றாங்க…. இதுக்கு மட்டும் நீங்க கூட வாங்கம்மா…. மத்த கட்சி கூட்டமெல்லாம் பகல்லதான்…. என் தோழிகளெல்லாம் சேர்ந்து பாதுக்காப்பா போய்க்குவோம்…. ‘,சொல்லும் மகளை உள்ளுக்குள் பெருமை பொங்க பார்த்தாள் சின்னம்மா.

‘படிக்காட்டி இந்த மாதிரியெல்லாம் யோசிக்கத்தோணுமா ?….ம்ம்ம்ம்….அந்த காலத்துல எல்லாம் நாங்க எந்த கூட்டத்த கண்டோம்….வீட்டு ஆம்பளைங்க சொன்ன சின்னத்துல குத்திட்டு,கையில மை வாங்கிட்டு வந்திடுவோம்…. இல்லாட்டி குடம், குத்துவிளக்கு ‘னு குடுத்து ஆட்கள் ஒட்டு வாங்கிடுவாங்க…. ‘,மனதுக்குள் நினைத்துக் கொண்டவள் மகளைப் பார்த்து சொன்னாள்.

‘ஏதோ ரெண்டு பேரும் சொல்றீங்க….சரி வர்றேன்…. ஒரு சீட்டுல எழுதி மேசை மேல வை நாம கூட்டத்துக்கு போறோம் ‘னு….உங்கப்பா சீக்கிரம் வந்துட்டு, நம்மள காணோம் ‘னு பயப்படப் போறாரு….நாமளும் சீக்கிரம் வந்துடணும் சரியா…. ‘, என்று சின்னம்மா சொல்ல வள்ளி தனது பையிலிருந்து பேனாவை எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.

‘பார்த்தியா பரிமளாக்கா….இவளை நல்லா நாலு போடணும் ‘னு நினைச்சுக் கிட்டு இருந்தேன்…. வந்து என் மனசை எப்பிடி மாத்திட்டா பாரு…. ‘,என்றாள் பெருமிதத்தை கட்டுபடுத்த முயன்றவளாய் சின்னம்மா தன் மகள் தனது அறைக்குள் போன சமயமாய் பார்த்து.

‘பின்ன…. எம்மருமவளை இன்னான்னு நினைச்ச…. அவ மூஞ்சியிலே எவ்ளோ பெருமை,சந்தோஷம் பாத்தியா ?…. ஓட்டு போடறது முக்கியமான விஷயம் ‘னு அவள பார்த்தாதான் எனக்கே நினைப்புக்கு வருது…. கட்டிக்க போறவன் குடுத்து வச்சவன்…. எனக்கு மட்டும் ஒரு மவன் இருந்திருந்தா இந்நேரம் பரிசம் போட்டு நிச்சயம் பண்ணி வச்சிருப்பேன், நீ எப்ப வேணாலும் அவ படிப்ப முடிச்சிட்டு கண்ணாலம் கட்டிக்குடுன்னு…. ம்ம்ம்ம்….எல்லாத்துக்கும் ஒரு குடிப்பினை வேணும் ‘ல ‘, என்றாள் பரிமளா பெருமூச்சு விட, தன் அறையிலிருந்து வந்த வள்ளி தான் எழுதிய சீட்டை மேசை மேல் வைத்துவிட்டு கிளம்பினாள்.

அப்போதிருந்தே கடற்கரை களைக் கட்டத் தொடங்கியிருந்தது. நல்ல கூட்டம்…. வழக்கமாய், சொன்ன நேரத்திற்கு அரை மணி கழித்தே கூட்டம் ஆரம்பித்தது…. நீலகட்சிக்குரிய சின்னம் போல போடப்பட்டிருந்தது மேடை,விளக்கு வெளிச்சத்தில் மினுமினுக்க வள்ளியின் கண்கள் மின்னின பளபளப்பாய்.

எல்லாரும் பேச,பேச ஆர்வமாய் கேட்டாள் வள்ளி, அந்த ஆர்வத்தை ரசித்துக்கொண்டிருந்தாள் சின்னம்மா.

கூட்டம் முடிந்து வீடு திரும்பியவுடன் கேட்டாள் மகளிடம்.

‘ நீலக் கட்சிக்குதான் ஓட்டு போடப்போறியா…. ‘, என,

‘யாருக்கு ஓட்டு போடப்போறோம் ‘னு வெளியிலெ சொல்ல கூடாதும்மா…. ‘, என்றுவிட்டு கண்களை சிமிட்டி,சிரித்தபடி சென்ற மகளை யோசனையாய் பார்த்தாள் சின்னம்மா.

நல்லவேளையாய் அவளது கணவர் இவர்கள் கூட்டம் முடிந்து வீடு வந்தபின்தான் வந்தார்.

அன்று நடந்ததையெல்லாம் சொல்ல சொல்ல அவருக்கும் ஆச்சரியம் மகளை நினைத்து. ஆனால் பதிலேதும் சொல்லவில்லை எப்போதும்போல.

சிவப்பு கட்சி மாநாடு,மற்ற கட்சிகளின் மேடைப் பேச்சுக்கள் என்று ஒன்றையும் விடவில்லை வள்ளி. அதில் எல்லா தோழிகளும் சேர்ந்துகொண்டு நிறைய வாக்குவாதம்,பேச்சுக்கள் என நாட்கள் ஓட சின்னம்மாக்கு பெருமை பிடிபடவில்லை தனது மகளை நினைத்து.

தேர்தலுக்கு முந்தய தினம். பலத்த யோசைனைகளுடன் உட்கார்ந்திருந்த மகளிடம் மெல்ல பேச்சு கொடுத்தாள் சின்னம்மா.

‘ஆமா… நீயும் இப்படி எல்லா கட்சிகளின் கூட்டம்,மாநாடு ‘னு போயிட்டு வந்த…. அப்புறம் என்ன…. சுரத்தில்லாம் உட்கார்ந்திருக்க….முடிவு பண்ண முடியல்லயா…. ‘.

அமமாவின் முகத்தை ஆழமாய் பார்த்தாள் வள்ளி.

‘ஆமாம்மா…. முடிவு எடுக்க முடியல்ல…. ரொம்ப வருத்தமாயிருக்கும்மா நம்ம நாட்டை நினைச்சா….எல்லா செல்வமும் நிறைய இருந்தும் ஏன் இன்னும் ‘முன்னேற வேண்டிய நாடாவே இருக்கு ‘னு இப்பதான் தெரியுது…. ஒரு பக்கம் நல்லா படிச்சிட்டு கை நிறைய சம்பாதிக்கறாங்க…. நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவங்கதான் நிறைய இருந்தாங்க ஒரு காலத்துல…. இப்ப முன்பைவிட ‘உயர் நடுத்தர வகுப்பு மக்கள் அதிகம் ‘னு சொன்னாங்க…. சந்தோஷமா இருந்துச்சு…. ஆனா அதுல முக்காவாசி பேரு அயல்நாட்டுல குடியுரிமை வாங்க போறவங்களாம்…. ஏன் இங்க இல்லாம போறாங்க ‘னு இப்பதான் புரியுது….

அரசியல்வாதிகள் அக்கிரம் செய்யறாங்க, தங்களோட வசதியை மட்டும் பெருக்கிகிறாங்க ‘னு எல்லாரும் சொன்னப்போ நான் பெரிசா எடுத்துக்கலை…. ஆனா இப்ப எல்லா கூட்டத்துலயும் அவுங்க பேசுரத கேட்டப்போ தெரியுது அதையெல்லாம் விட பெரிய தப்பை அவுங்க செய்றாங்க ‘னும்மா…. தொழிலதிபர்கள்,விவசாயிகள்,படித்து பட்டம் பெற்ற,படிக்காத மக்கள் ‘னு எல்லா தரப்புகளையும் விட இவங்க தங்களுக்கு பொறுப்பு அதிகம்,எல்லா தரப்பு மக்களையும் இணைத்து நாட்டை முன்னேற்ற வேண்டியது இவங்கதான் என்பதை உணர்ந்தமாதிரியே தெரியலை…. நம்ம நாட்டுல என்னிக்கு ஒரு அரசியல்வாதியை தனது வழிகாட்டியாய்,மேற்கோளாய் வைத்து நாமெல்லாம் வாழ நினைப்போமோ அப்போதாம்மா நாடு நல்ல நிலைமைக்கு வரும்….ஆனா இங்க,

நீலக்கட்சிக்காரன் சிவப்புகட்சிக் காரனை குத்தம் சொல்றான்,சிவப்பு கட்சிக்காரன் நீலக்கட்சிக்காரனை பற்றி கன்னா,பின்னா ‘னு பேசறான்…. தான் என்ன நல்லது பண்ணுவோம் மக்களுக்கு ‘னு யாருமே அக்கறையா இருக்கவோ,பேசவோ இல்லை…. அவுங்க உபயோகிக்கற வார்த்தைகள் அடுத்தக் கட்சிகாரனை மட்டப்படுத்தி…. ஐயய்யோ….அராஜகம்மா…. நாட்டை ஆள பெரிய படிப்பெல்லாம் தேவை ‘னு நான் சொல்லல…. இயல்பான மனுஷதன்மை,டாசென்ஸி,பக்குவம் கண்டிப்பாய் வேணும்மா…. மனுஷனுக்கு வேண்டிய இயல்பான ஒரு நல்ல குணம்கூட இல்லாதவங்க கையிலே இவ்வளவு பெரிய நாட்டை எப்படிம்மா ஒப்படைக்கிறது…. நம்ம நாட்டை உலக அரங்கத்துல, மற்ற வளர்ந்த நாடுகளின் முன்னால ‘ரெப்ரசண்ட் ‘ பண்ணவேண்டியவங்க இவங்க….கேட்டா அரசியல் மேடைகளிலே இப்படித்தான் பேசணுமாம்….என்ன ‘னு சொல்ல…. அந்த பேச்சுக்கெல்லாம் கைத்தட்ட ஒரு கூட்டம் வேற….மத்தவங்களை மாதிரி வெறுத்துபோய் ஓட்டு போடாம இருக்க என்னால முடியல்ல…. என்னோட உரிமை மட்டுமல்ல,கடமை கூட…. அதாம்மா என்ன பண்றது ‘னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்…. ‘, என்று கண்களில் வேதனையாய் கண்ணீர் எட்டிப் பார்க்க பேசிய மகளிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை சின்னம்மாக்கு.

‘எல்லாம் நேரங்காலம்,வந்தா மாறிடும்…. நீ உன்னிய ரொம்ப கஷ்டப்படுத்திக்காதே தாயி…. ‘, என

‘காலம் யாரை மாற்றும் ? ‘ என்று யோசித்தவளாய், சமையலறையுள் செல்லும் அம்மாவையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் வள்ளி.

-சுபாபாலாஜி.

Series Navigation

சுபா பாலாஜி

சுபா பாலாஜி