வரலாறு மாற்றப்படலாம் – அறிவியல் புனைக்கதை

This entry is part [part not set] of 28 in the series 20060106_Issue

குந்தவை வந்தியத்தேவன்


மோகனுடைய காத்திருப்பு ஒரு முடிவுக்கு வந்திருந்தது. இன்றோடு அவன் காத்திருக்கத் தொடங்கி சரியாய் ஏழாண்டு நிறைவடைகிறது. இன்று அவனுக்கு விடுதலை நாள், தான் செய்த கொலைக்கான தண்டணைக்காலம் இன்றோடு முடிவடைகிறது என்பதற்காக மட்டும் அவன் இந்த நாளுக்காக காத்திருக்கவில்லை. அவன் செய்த கொலையையே இல்லாமல் செய்துவிடும் வல்லமை பெற்ற நாள்தான் என்பதற்காகவும்தான்.

இன்னும் அந்த நாள் பசுமையாக அவன் மனதில் இருக்கிறது. அவனுடைய நண்பனுக்கும் அவனுக்குமிடையில் ஏற்பட்ட தொழில்முறை பிரச்சனைகளின் காரணமாக, ஒரு அசாதாரணமான சூழ்நிலையில் மோகன் அவன் நண்பனை கொன்றுவிட்டான். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஒரு நிமிட குழப்பத்தில் அவன் அந்தக்கொலையை செய்துவிட்டான். அணுஆயுதப்போரால் உலகமே பேரழிவுக்கு உட்பட்டிருந்த காலமது. உயிரின் மதிப்பு மிக அதிகமாகயிருந்தது. அவனுடைய நண்பன் அவனை ஏமாற்றியிருந்த பொழுதும் அது சரிவர நிரூபிக்கப்பட்ட பொழுதும் அவனுக்கு ஏழாண்டு காலம் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. மனித குலமே அழிவின் பிடியில் இருந்ததால், உலகின் எல்லா நாடுகளிலுமே மரணதண்டனை இல்லாமல் இருந்தது.

முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் என்று மோகன் படித்திருந்த உலகப்போர்கள் நடந்துமுடிந்த மூன்றாவது நூற்றாண்டில் பூமியை பெரும் ஆபத்திற்குள்ளாக்கிய அணுஆயுதயுத்தம் நடைபெற்றது. ஒரு நூற்றாண்டாகவே எதிர்பார்க்கப்பட்ட யுத்தம் நடந்தது பலருக்கு வியப்பை அளித்திருக்கவில்லை. ஆனால் அதன் பிறகு கணிணித்துறை மிக அபரிமிதமான வளர்ச்சியை அடைந்திருந்தது. ஐன்ஸ்டினின் புவியீர்ப்பு விசையையும், க்வாண்டம் சக்திகளையும் ஒரே சமன்பாட்டில் ஒருமித்து அறியும் ஆசை நிறைவேறியிருந்தது. க்வாண்டம் கம்ப்யூட்டர்கள் செயல்பாட்டிற்கு வந்திருந்தன.

ஸ்டிரிங் தியரி என அறியப்படும் பல பரிமாணக் கொள்கை அதன் எல்லைகளைத் தொட்டிருந்த காரணத்தினால், வார்ம்ே ?ால் எனப்படும் மனிதன் கடந்த காலத்தை நோக்கி பயணம் செய்யும் உதவும் இயந்திரங்கள் உருவாக்கபட்டிருந்தன. இதன் காரணமாக ஐன்ஸ்டனின் சில கோட்பாடுகள் தவறானவை என்றும் நிரூபிக்கப்பட்டிருந்தன. அதாவது விண்வெளி வளைந்திருக்கிறது என்று சொன்ன ஐன்ஸ்டின் விண்வெளியை நீட்டவோ மடக்கவோ முடியுமென்றார். ஆனால் விண்வெளியை சிறிய அளவில் வெட்டுவதென்பது முடியாதென்று நம்பியிருந்தார். ஆனால் ஸ்டிரிங் தியரி விண்வெளியை சிறிய அளவில் வெட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை நிரூபித்திருந்தது. நாம் சாதாரணமாய் அறிந்திருந்த முப்பரிமாணங்களை விடவும் அதிகமான பரிமாணங்களாலும் நாம் இதுவரை அறிந்திராத இடங்களாலும் நாம் சூழப்பட்டிருக்கிறோம் என்பதான ஒன்றை ஸ்டிரிங் தியரி விளக்கியது.

கடந்த காலத்தை நோக்கி பயணம் செய்யும் ஊர்திகள் கண்டறியப்பட்டிருந்தாலும், அதன் துணை கொண்டு வரலாற்றை மாற்ற நினைக்கும் முயற்சிகளை அடியோடு நிறுத்திவிடும் எண்ணத்தால் இதன் அத்தனை செயல்பாடுகளும் கணிணிமனிதர்களால் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. அதாவது ஆரம்பக்காலத்தில் நடைபெற்ற பரீட்சிதார்த்த முயற்சிகள் உட்பட்ட, மனிதனால் நடைபெறக்கூடிய சிறு தவறுகளும் நடைபெற்று விடாமல் இருப்பதற்காக கணிணிமனிதர்களால் கட்டுப்படுத்தப்பட்டு, வரலாறு மாற்றப்படுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, சோதனை முயற்சியாக கொலைகள் நடந்து அதற்கான தண்டனையை கொலைசெய்த நபர் அனுபவித்துவிட்ட நிலையில் கடந்த காலத்திற்கு செல்லும் ஊர்திகளைப் பயன்படுத்தி அந்த கொலை நடந்ததற்கு சில விநாடிகளுக்கு முன்னர் சென்று அந்தக் கொலைகளை நிறுத்திவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டுவந்தன. ஆனால் இதிலும் சில விதிமுறைகள் இருந்தது, அதாவது கொலை செய்த மனிதனின் மனதிலிருந்து, அவன் கடந்த காலத்தில் கொலை செய்த அந்த நொடியிலிருந்து சோதனை முயற்சிக்கான காலம் வரையிலான நினைவுகள் அகற்றப்படும். அவன் அந்தக்கொலை செய்த குறிப்பிட்ட நிமிடத்தில் எப்படிப்பட்ட மனநிலையில் இருந்தானோ அதே மாதிரியான ஒருமனநிலையை அவர்கள் உருவாக்குவார்கள்.

வரலாற்றை தாங்களாகவே மாற்றாமல் அந்த மனிதனின் மனம் அந்த குறிப்பிட்ட சூழ்நிலையில் தானாகவே மாறி கொலை செய்வது தடுக்கப்படுகிறதா ? இரண்டாவதாக ஒரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் கொலை செய்யாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் எப்படிப்பட்டவை என்பதற்கான ஆராய்ச்சி நடந்துவந்தது. அப்படி அந்த சூழ்நிலையில் கொலை செய்யாமல் இருந்தால் அவர் அந்த நொடியிலிருந்தே தன்னுடைய வாழ்க்கையை மீண்டும் வாழலாம். அப்படியில்லாமல் மீண்டும் கொன்றுவிட்டால், அவர் தண்டனைக்காலம் முடிந்த நொடியிலிருந்து தன் வாழ்க்கையை தொடரலாம். இதனுடைய ஒரே பயனாக அந்த கொலை செய்த நபரின் சமுதாய மதிப்பு மாற்றப்படும். அதாவது அவர் கொலை செய்யாதவராக சமூகத்தில் மீண்டும் வாழ்வதற்கான ஒரு சூழ்நிலை அமையும்.

ஆனால் இதுவரை ஏறத்தாழ ஆயிரம் மனிதர்களிடம் நடைபெற்ற இந்த சோதனையில் இதுவரை எவருமே மீண்டும் அந்தக்கொலையை செய்யாமல் இல்லை. ஆனாலும் ஒவ்வொரு கொலையாளியும் அந்த முயற்சியை செய்யவே விரும்பினர், மோகனைப்போல.

‘நீங்கள் சோதனை முயற்சிக்குத் தயாரா ? ‘ கணிணிக்காவலர்கள் கேட்டதும், ஒருவழியாய் மீண்டும் சுயநினைவிற்கு வந்தான் மோகன்.

அவன் தயார் என்று சொல்ல அந்த கணிணிக்காவலர்கள் மோகனை வார்ம்ே ?ால் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். மோகன் இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தான். அந்த முயற்சி இதுவரை வெற்றியை சந்தித்திருக்காத நிலையில் கூட அவன் முழுமனதாக தான் அந்த கொலையை மீண்டும் செய்துவிடமாட்டோம் என்று நம்பினான்.

அதற்காக அவன் தீவிரமான மனப்பயிற்சி எடுத்துவந்தான். தன்னுடைய நினைவை அவர்கள் அழித்துவிடுவார்கள் என்பது அவனுக்குத் தெரியும். இருந்தாலும் மனதை ஒருவிதமாகப் பக்குவப்படுத்திவிட்டால் அந்த கொலைசெய்யும் நேரத்தில் மனமானது அன்னிச்சையாக கட்டுப்பட்டுவிடும் என்று நினைத்திருந்தான். இதற்காக அவன் இது போன்ற ஒரு சோதனை முயற்சி செய்கிறார்கள் எனத்தெரிந்த நாளிலிருந்தே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறான். மோகனை பொறுத்தவரை அவன் கொலை செய்தது சற்றும் எதிர்பாராமல் நடந்த ஒரு தவறு. சூழ்நிலைக்கைதியாக அவன் அன்று கொலை செய்துவிட்டான் ஆனால் இன்னொறு சந்தர்ப்பம் கிடைத்தால் அந்த கொலை நிச்சயமாக நடக்காது என்று அவன் மனம் கணக்குப்போட்டது.

மோகன் இவ்வாறு மனதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது சிறை நிர்வாகத்திற்கே தெரிந்திருந்தது. அவர்களுக்கும் ஒருவாறு இந்தமுறை அவன் நிச்சயமாய் சூழ்நிலையை வென்றுவிடுவான் என்றே தோன்றியது. அப்படி அவன் வென்றுவிட்டால் வரலாற்றை மாற்றிய முதல் மனிதன் என்ற பெயர் அவனுக்குக் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக அரசாங்கம், சிறை நிர்வாகம், கடந்த காலத்திற்கு செல்வது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அனைவருமே ஒருவாறு இந்த நாளுக்காக காத்திருந்தனர். அவன் அப்படி சூழ்நிலையை வென்றுவிட்டால் என்ன நடக்கும் என்பதைப்பற்றி கடந்த சில மாதங்களாகவே விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். கேயாஸ் தியரியின் படி ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்புக்கூட பெரும்மாற்றத்தை உருவாக்கிவிடும் சூழ்நிலையில் அந்த கொலை இல்லாமல் போனால் என்னாகும் என்பதற்கான ஆராய்சிகள் தீவிரமாக நடந்துவந்தது.

அந்த சோதனை முயற்சியின் பொழுது இரண்டு கணிணிமனிதர்கள் அவனுடன் கடந்த காலத்திற்கு வருவார்கள். அவன் அந்த கொலையை மீண்டும் செய்துவிட்டால் மீண்டும் அவனை நிகழ்காலத்திற்கு கொண்டுவரும் பொறுப்பு அவர்களுடையது. இதுவரை நடந்த முயற்சிகள் அனைத்திலும் இது சற்றும் தவறில்லாமல் நடந்துள்ளது. கணிணி மனிதர்கள் மோகனை அழைத்துக்கொண்டு வார்ம்ே ?ாலிற்கு வந்திருந்தார்கள். அந்த வார்ம்ே ?ாலின் ஒரு பகுதியை அதிநுட்பம் வாய்ந்த விண்வெளி ஊர்தியின் மூலமாக ஒளியின் வேகத்திற்கு முடுக்கிவிடப்பட்டு பின்னர் சாதாரணமான நிலைக்கு வரும், இப்பொழுது கிடைக்கும் நேரயிடைவெளியின் பயனாய் மற்றொரு பக்கம் இருக்கும் மோகன் பழங்காலத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறாக மோகனும் அந்த இரண்டு கணிணி மனிதர்களும் கடந்த காலத்திற்கு வந்திருந்தனர். மோகனின் நினைவுகள் அந்த நிமிடம் வரை மட்டும் விட்டுவிட்டு மற்றவை முழுமையாக அழிக்கப்பட்டிருந்தது. மோகனைப்பொறுத்த வரை நிகழ்காலத்திற்கு வந்திருந்தான், அவனுக்கு மற்ற சம்பவங்கள் முற்றிலுமாக நினைவில் இல்லை. கோபமாக தன்னை ஏமாற்றிவிட்ட நண்பனை பழிதீர்ப்பதற்காக, அவனுடைய அடுக்கு மாடி குடியிறுப்பை நெருங்கிக் கொண்டிருந்தான். மோகன் நிச்சயமாய் அவனுடைய நண்பன் இப்படிச் செய்வான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. இதன் காரணமாக ஏற்பட்டிருந்த நஷ்டத்தை அவனால் பலகாலம் கடுமையாக உழைத்தாலும் அடைக்க முடியாதென்பது நன்றாகத் தெரிந்துவிட்டது.

நண்பனுடைய அறைக்குள் நுழைந்தவன் நேராய் அவன் கொண்டு வந்திருந்த ஆதாரங்களைக் காட்டினான்.

‘ஏன் என்னை ஏமாத்தின, உன்னை எவ்வளவு நம்பியிருந்தேன் தெரியுமா ? ‘ அவன் கேட்க நண்பனால் பதிலெதுவும் சொல்லமுடியவில்லை.

‘என்னை மன்னிச்சிறு மோகன், தெரிஞ்சு நான் இதை செய்யலை. நான் போட்டிருந்த கணக்குகள் தப்பாயிடுச்சி. இன்னும் ஒரு வருடம் டைம் கொடு எல்லாவற்றையும் சரிசெய்து தர்றேன். ‘ அவன் சொல்லிக் கொண்டிருக்க மோகனுடைய கோபம் அளவுக்கதிகமாகியது. தன்னை தெரிந்தே ஏமாற்றியது மட்டுமில்லாமல் இவ்வளவு நடந்தபிறகும் தன்னிடம் நடிக்கிறானே என்று நினைத்தவன் தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து கைத்துப்பாக்கியை எடுத்தான்.

‘உன்னையெல்லாம் மன்னிக்கவே கூடாது, நீ பண்ணினது நம்பிக்கைத் துரோகம் அதற்கு ஒரே ஒரு தண்டனை தான். அது நீ சாகறது மட்டும்தான். ‘ சொல்லியவன் அவனை நோக்கி துப்பாக்கியில் குறிவைத்தான். அந்த நிமிடம் அவன் மனது இந்த கொலை அவசியமா என் ஒருமுறை யோசித்துப்பார்க்க வைத்தது. ஆனால் அந்த நினைவுகளை ஓரங்கட்டியவனாய் துப்பாக்கியின் குதிரையை அழுத்தினான். மூன்று குண்டுகள் வலது தோல்பட்டையில் ஒன்றும், கன்னத்தில் ஒன்றும் இடுப்பில் ஒன்றுமாய்ப் பாய, அவனுடைய நண்பன் ரத்தச்சேற்றில் அந்த இடத்திலேயே உயிரிழந்தான்.

மீண்டும் ஒருமுறை மனிதனால் வரலாறு மாற்றப்படாமல் நிகழ்காலத்திற்கு மோகனுடன் திரும்பினர் கணிணிமனிதர்கள். மோகன் அவனுடைய தண்டனைக்காலம் முடிவடைந்ததால் விடுவிக்கப்பட்டான். முன்பு மோகனால் அவனுடைய நண்பன் கொல்லப்பட்டதற்கும் தற்சமயம் சோதனை முயற்சியில் கொல்லப்பட்டதற்குமான நிமிடக்கணக்கில் மைக்ரோ செகண்டுகளில் வித்தியாசம் இருந்தது. அதாவது மோகனுடைய பயிற்சியால் முன்பில்லாதது போல் தற்சமயம் ஒரு மைக்ரோ நிமிடம் அவனுடைய மனம் யோசித்தது. ஆனால் அதற்கான பலன் கிடைக்காவிட்டாலும் அந்த ஒரு மைக்ரோ நிமிட வேறுபாட்டை ஆராய்ச்சியாளர்கள் குறித்துக்கொண்டனர். பிற்காலத்தில் வேறுவொரு மனிதனால் வரலாறு மாற்றப்படுமா என்ற கேள்வியுடன் அவர்கள் தங்கள் ஆராய்ச்சியை இன்னும் தீவிரமாகத் தொடர்ந்தனர்.

—-

kundavai@gmail.com

Series Navigation