வண்ணக் கோலங்கள் !

This entry is part [part not set] of 33 in the series 20060714_Issue

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா


எனக்கு கறுப்பு வெள்ளையே பிடிக்காது. ஏனோ வெளிறிப் போன கறுப்பு வெள்ளை படங்கள், சட்டங்களில் வீட்டினில் தொங்குவதால், கலர் வந்தவுடன் நிறம் மாறிப் போனேன். கலர் கனவுகளை வண்ணங்களுடன் வரைய ஆரம்பித்தேன்.

“என் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் “

“கொஞ்சம் பணம், கொஞ்சம் குணம், கொஞ்சம் குலம், கொஞ்சம் கோத்திரம் மற்றும் கொஞ்சம் சிவப்பு நிறம் இருந்தா தேவலை”

“கொஞ்சம் கறுப்பு நிறம் பரவாயில்லீங்களா ?”

“கொஞ்சம் வெள்ளை நிறம் இருக்கா ? அப்போ சரி !”

“கறுப்பா இருந்தா பிறக்கிற பிள்ளைகள் கறுப்பா இருக்கும் ! அப்புறம் ஃபேர் அண்ட் லவ்லி நிறைய வாங்கணும் !”

“அன்ஃபேர் அண்ட் லவ்லியோ அல்லது ஃபேர் அண்ட் நாட் லவ்லியோ சொல்லி விற்கறதில்லை !”

“ஃபேர் என்றாலே லவ்லி தான் !”

“என் மருமகள் தங்கம் தான். ஆனால் மஞ்சள் இல்லை. ஐ மீன் ஜப்பான் காரி இல்லை. ஆனால் நிறம் கொஞ்சம் மட்டு !”

“உன் தலையில் கொட்டு!” என்று கூறவேண்டும் போலிருக்கிறதா ?.

இப்படி பாருங்கள். நிறைய பேர் கீழ்காணும் தொடர்களை எப்போவாவது பேசியிருப்பார்கள்.

“என் மகள் நிறம் வெள்ளை. அவள் அழகு மற்றும் லட்சணமாயிருப்பாள்.”
“என் மகள் நிறம் கறுப்பு. ஆனாள் அவள் அழகு மற்றும் லட்சணமாயிருப்பாள்.”
“என் மகள் நிறம் மாநிறம் தான். ஆனால் அவள் அழகு மற்றும் லட்சணமாயிருப்பாள்.”

அப்போது அழகு, லட்சணம் அனைத்து நிறங்களிலும் கிடைக்கிறது.

கறுப்பு வெள்ளை டிவியில் பார்த்த எம்.ஜி.ஆர் படம் கூட நல்லா இல்லை ! கலரில் “அழகிய தமிழ் மகள் இவள்” பார்த்தால் தான் மனதிற்குப் பிடிக்கிறது. நம்ம ஜெயலலிதா மேடம் கூட சிறு வயதில் நடித்த படங்களில் பிடித்த படங்கள் “ஈஸ்ட்மேன் கலர்” படங்களே ! சிவாகி படங்கள் பிடிக்காமல் போனதற்கு காரணம் “ப” வரிசை படங்கள் “கறுப்பு வெள்ளை” யாக இருந்ததால் தான் !

பார்க்கும் கண்களில், மனதில் அழகு, லட்சணம் குடியிருக்கின்றது.
“மச்சி ! அவள் சூப்பர் அழகிடா ! மாநிறத்தில் சும்மா “ஜிவ்வென்று” இருப்பாள்”
“அவன் கறுப்பு தான். ஆனால் காந்தமாய் இருக்கிறான்”
“அவன் வெள்ளை. ஆனால் லட்சணமாய் இருக்கிறான். இவனைக் கட்டிகிட்டால் வெள்ளையாய் குழந்தை பிறப்பான்”

நிறத்திற்கும், அழகிற்கும் சம்பந்தமில்லை. கறுப்புச் சட்டை, பச்சைசட்டை, வெள்ளைச் சட்டை என்று நமக்கு அனைத்தும் வேண்டியதாக இருக்கின்றது.

சிலரின் போட்டோக்களை, உருவங்களை டிவியில் பாருங்கள்! சினிமாவில் பாருங்கள் ! பத்திரிக்கைகளில் பாருங்கள் ! கறுமை நிறமாக இருந்தாலும் மஞ்சள், பிரவுன் என்று அள்ளித் தெளித்து ஒரு மாதிரி மாநிறத்திற்கு, வெண்மைக்குச் சற்று அருகாமையில் நம்மைக் கொண்டு நிறுத்திவிடுவர்.

“போட்டோ டச் அப் செய்யறேன் சார் !” கறுமையான முகத்தினை பளீரென்று வெளிச்சத்தில் எடுத்து சற்று வெள்ளை, மற்றும் மாநிறக்க கலரைக் கையில் வைத்து முகத்தை டச் அப் செய்வார் போட்டோகிராபர்.

“ஆள், ரஜினி, விஜய்காந்த் போன்று கறுப்பு தான் சார் ! ஆனால் ஒரு கால் இன்ச் மேக் அப் போட்டால் லாங் ஷாட்டில் தெரியாது சார் !” இது காமிராக்காரரின் கைவண்ணம்.

“இந்தப் பெண்ணா ? சார் நம்ம ஆட்களுக்கு கோதுமை நிறம் அல்லது ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராய் மாதிரி பூனைக் கண்களும், வெண்தோலும் வேண்டும் சார் !”. உதவி இயக்குநர் நிறக் கவலையை இயம்புகிறார்.

“தமிழ் பேசுவாங்க ! ஆனால் தமிழ் கலராக இர்க்காங்க ! (கேவா கலர், ஏஸ்ட்மெண்ட் கலர் போன்று தமிழ் கலர் !) ஆனால் இப்போது டிரெண்ட் நமிதா மாதிரி வேண்டும் சார் ! இந்தப் பொண்ணு ரிஜெக்ட் ஆகிடும் சார் !” தயாரிப்பாளர் பகிர்கிறார்.

நான் கார் வாங்கக் கடைக்குப் போனேன்.

கார் கறுப்பாய் அழகாய் இருக்கிறது. கார் வெள்ளைக் கலரில் அழகாய் இருக்கிறது. அந்தப் பச்சைக் கார் கண்களைக் கவரும் விதத்தில் அழகாய் இருக்கிறது.

“நான் ஓட்டுவதற்கு புது கார் பார்க்கிறேன்”

“கொஞ்சம் பணம், கொஞ்சம் நல்லா ஓடும் குணம், நல்ல குடும்பம் (நல்ல தயாரிப்பு), கொஞ்சம் பெட்ரோல், கொஞ்சம் ரிப்பேர் மட்டும் ஆகும் தன்மை, என்று இருந்தால் நல்லா இருக்கும் !”

“நல்ல ஆறு சிலிண்டர் வண்டி. “கும்” மென்று போகும். நல்லா மாடாய் உழைக்கும். நாங்உ சக்கரத்தில் “ஜிவ்வென்று” பறக்கும். மேடு பள்ளங்களை “அட்ஜஸ்ட்” செய்யும். தொட்டால் “ஸ்டார்ட் ஆகும் !”. ”நில்” அப்படியென்று பிரேக் போட்டால் “சட்”டென்று நிற்கும். “மக்கர்” செய்யாது.” என்றெல்லாம் கார் விற்பனையாளன் ( மேரேஜ் புரோக்கர் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. பிளீஸ் !) கதையளந்தான்.

“நிறம் எப்படி சார் வேண்டும் ?’

“கறுப்பாகக் கொடுங்கள் ! பிளாக் பியூட்டி அப்படிப்பாங்களே !”

“அழுக்குப் படிந்தால் தெரியாது சார் ! குட் சாய்ஸ் ! வெள்ளைக் காருக்கு அழுக்குப் படிந்தால் பல்லையிளிக்கும் !”

“சிவப்புக் காராயிருந்தால் பிடிப்பவன் இளவயதுக்காரனாக இருப்பான் ! கண்டபடி ஓட்டி அந்த வண்டியை ஆக்ஸிடண்ட் ஆக்கிடுவான் ! அதனால் இன்சூரன்ஸ் தொகையினை மாதம் அதிகம் வசூலிக்கலாம் !” என்று சிவப்புக் கார் பற்றி இன்சூரன்ஸ் கம்பெனியார் எழுதி வைத்திருந்தனர்.

“மாநிறக் கலராயிருந்தால் நல்லது. எங்க ஊரில் புழுதி சார் ! அதான் சரியாயிருக்கும் !”

அம்மாக்களின் அங்கலாய்ப்புகளைப் பாருங்கள் !

“பிறந்த குழந்தை நல்லா கலரா இருக்கு !” எப்படி வெள்ளையாயிருந்த குழந்தை வெயில் பட்டு இப்படிக் கறுமைநிற கார் வண்ணண் போன்று ஆகிவிட்டானே !” என்று அம்மா அங்கலாயித்தாள்.

“என் குழந்தை முகம் நல்லா கலரு ! ஆனால் உடம்பு தான் கொஞ்சம் கறுப்பு !” தன் குழந்தை வெள்ளைக்காரர்களுடன் ( சும்மா அக்கம் பக்கம் மற்றும் வட இந்தியர்களுடன் பிற்காலத்தில் போகணுமாம் அதான் !)

“என் குழந்தை வெயில் பட்டு முகம் தான் கொஞ்சம் நிறம் மட்டு ! மற்றபடி உடம்பில் துணியில்லாவிட்டால் நல்லா எம்ஜியார் கணக்கா இருப்பான் !”

“ராசா ரோசாவாக இருப்பார் ! என்னா சேப்பு ?”

நம் வாயிலிருந்து வரும் பல்வேறு வண்ணக் கோலங்களைப் பாருங்கள் ! வண்ணத் திண்டாட்டங்களைப் கண்டு களியுங்கள் !

கடைக்கு அரிசி வாங்கலாமென்று போனேன்.

“நல்லா வெள்ளையரிசியாய்ப் போடுங்கள் ! உமியுடன் மாநிறமாக இருக்கும் அரிசி லாயக்கில்லை !”

பருப்பு மஞ்சளாக இல்லாமல் வெளுப்பாக இருக்கிறதே ?

பச்சை பயிறு இப்படி கறுத்திருக்குதே ?.

வெள்ளை உப்பு, மற்றும் வெள்ளைச் சக்கரையைத் தான் கேட்டு வாங்குவோம் !

எல்லாம் வண்ணங்கள் செய்யும் மாயம் !

காய் வாங்கப் போனேன்.

“கத்திரிக்காய் எப்படி கலர் போய் வெள்ளையாய் வெளிறிப் போயிருக்கு ! பாருங்கள் !” அது நீர் வற்றிப் போனது !”

“என்ன அந்தக் . . . காய் வெளுத்திருக்கு. காளானோ ?!”

“என்ன அந்தக் . . . காய் கறுத்திருக்கு ! வெள்ளை உருளையில் கறுப்பா ஏதோவொன்று . . .”

எல்லாம் வண்ணங்கள் செய்யும் மாயம் !

டாக்டர் அலுவுலகத்தில் கேட்டேன். “டாக்டர் என் முகம் பிரேதம் மாதிரி வெள்ளையாக வெளுத்துப் போயிருக்கின்றது ! கொஞ்சம் கறுப்பாக இருந்தால் சுகமோடு ஜீவனத்தோடு நோயில்லாமல் இருப்பேனல்லவா ?”

“ரத்தம் சுண்டி எப்படி வெளுப்பாயிருக்கான் பாரு !”

நர்ஸுகளும், டாக்டர்களும் வெள்ளைக் கோட்டை போட்டுக் கொண்டு தூயமானவராகக் காட்சியளித்தனர்.

எல்லாம் வண்ணங்கள் செய்யும் மாயம் !

ஹைகோர்ட்டில் கேட்டேன்.

“பேயடிச்சது போல வெளுத்திருக்கான் பாரு ! உண்மையெல்லாம் வெளியே வந்து பொய் சொல்லி மாட்டிக்கிட்டான் போல !”
“பச்சையாய் பொய் சொல்லாதடா ! மாட்டிக்குவே !”

கறுப்புக் கோட்டை மாட்டிக் கொண்டு வெள்ளை உண்மையைக் கொணர வக்கீல் பாடுபட்டார்.

வெள்ளை உடையணிந்த சிப்பந்தி வாசலில் மூன்று முறை கூவியழைத்தார்.

சட்டமன்றத்தில் அனைவரும் வெள்ளையில் இருந்தனர். “வெள்ளை அறிக்கை” இருக்கா ? என்று காட்டமாகக் கேட்டவுடன் ஆளுங்கட்சி அணித்தலைவர் முகம் இருளடைந்தது. காக்கிச் சட்டைக்காரரை வைத்து எதிர்கட்சியினரை வெளியேறச் செய்தார்.

எல்லாம் வண்ணங்கள் செய்யும் மாயம் !

ஃபவ் ஸ்டார் ஹோட்டலுக்குப் போனேன். அனைத்து சர்வர்களும் வெள் உடையணிந்து காட்சியளித்தனர். கையில் வெள்ளை கிளவுஸ் அணிந்து பறிமாறினர். அப்படி பண்ணினால் வெள்ளைக்காரனுக்குப் பிடிக்குமாம்.

கறுப்பு கிளவுஸ் அணிந்து பறிமாறினேன் அதே சுத்தம் வந்தது. ஆனால் யாரும் பார்ப்பதற்கு முன்னால் அதே கையினால் தலையைச் சொறிந்து விட்டேன். யாரும் கண்டுக்க மாட்டார்கள். அழுக்கு தெரியாதே !

எல்லாம் வண்ணங்கள் செய்யும் மாயம் !

கதையெழுத்தாளர் சொன்னார் : ““சட்டென்று அவன் முகம் மேகமூட்டமாய் கறுத்தது !” “வெள்ளந்தியாய் வெண்மை முகப் பாலகனாய் காட்சியளித்தான் !”

“அவன் உள்ளம் வெண்மையானது !” ( அனைத்தையும் நம்பும் வெள்ளைக் குணமாம் !)

“என்னதான் இருந்தாலும் இப்படி உன் உள்ளம் கறுப்படையக் கூடாது !”

எல்லாம் வண்ணங்கள் செய்யும் மாயம் !

புராணப் பிரசாகர் சொன்னார்:

வெள்ளைத் தேவர்களும் ( விஷ்ணு கறுப்பாகக் கிருஷ்ணராகக் காட்சியளித்தாலும் என்.டி.ராமராவ் பச்சை அல்லது நீலமாகத் தான் காட்சியளித்தார் !), கறுப்பு அரக்கர்களும் சந்தாமாமாவில் காட்சியளித்தனர். வெள்ளை = தேவர், கறுப்பு = அரக்கர்.

ராவணன் கறுப்பா, வெளுப்பா ? கறுப்பாகத் தாண் இருக்க வேண்டும். ராமன் வெளுப்பாகத் தான் இருக்க வேண்டும். இயற்கையின் நியதி. இலங்கை வெப்பம் உலகறிந்தது. அயோத்தியா குளிரும் மிகுந்ததே !

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பவள் ! கலைமகள்.

ராகு, கேது கறுப்பாகச் சாயம் பூசி புராணப் படங்களில் வலம் வருவார்கள்.

ஏ.பி. நாகராஜன் சார்!, மேலுலகம் போய் ஏதாவது மாற்றம் தெரிந்தால் பாமரர்களுக்குச் சொல்லி அனுப்புங்கள் !

சனீச்வரா ! உன்னை வணங்கிடுவேனே ! ஓ.ஏ.கே தேவர் கறுப்பாக சாயம் பூசிக் கொண்டு வருவார்.

எமனாக வரும் பலரும் கறுப்புச் சாயம் பூச வேண்டும். எம தூதர்கள், கிங்கரர்கள் அனைவரும் அப்படியே !

பாரதிராஜா படத்தில் வெண் பட்டு தேவதைகள் வருவார்கள்.

சாவா ? கறுப்பு கட்டம் போடு !

எல்லாம் வண்ணங்கள் செய்யும் மாயம் !

வெள்ளை ரோஜோவில் வெள்ளை உடையணிந்து பாதிரியார் சிவாஜி “மை சன்” என்று அடித் தொண்டையில் கமறுவார் !

வேட்டியே வெள்ளையும் சொள்ளையுமாக இருந்தால் தான் நமக்குப் பிடிக்கிறது !

எல்லாம் வண்ணங்கள் செய்யும் மாயம் ! என்ன ஆச்சரியம் ?

புது டைரக்டர்கள் மற்றும் கதாநாயகர்கள் கூறினார்கள்
“எங்களுக்கு கறுப்பெல்லாம் ஒரு கலரே இல்லை ! மாடலை நடிகையாகப் போட்டாலும் நாங்கள் விரும்புவது வெள்ளை “அமுல்” டப்பாக்களே !”

ஆர்ட் பட டைரக்டர்கள் சொன்னது வேறு மாதிரி இருந்தது.

“கறுப்பு வெள்ளைப் படத்தில் தான் ஒரு ஜீவிதம் தெரிய வருகிறது ! எனக்குக் கலர் படம் பிடிக்காது! வறுமையை படம் பிடித்து வெளி நாட்டில் காசு பண்ண கறுப்பு வெள்ளை தான் லாயக்கு ! கலர் கலராக சுவிட்சர்லாந்தில் ஆட்டம் பாட்டம் காண்பித்தால் அது “ஆர்ட்” அல்ல ! ”

மெலானின் என்னும் பிக்மெண்ட் தோலில் இருப்பதால் தட்ப வெப்ப நிலைக்கேற்ப நமது உடம்பில் நமது தோல் ஒரு வித மாறுதலை அடைகிறது. அல்ட்ரா வயலட் ( புற ஊதாக் கதிர்கள் ?) கதிர்கள் எவ்வளவு நம்மீது விழுகின்றதோ அதற்கேற்ப நமது தோல் மாறுகிறது.

காலையில் வெண் ஒளி தெரிந்தால் செடி, கொடி, நாம் அனைவரும் சோம்பல் முறித்து எழுந்து புத்துணர்வு கொள்கிறோம் !

இரவு இருட்டு கருமை படர்ந்தால் நம் தப்பு, தண்டா எல்லாம் ஆரம்பித்து விடுகிறோம் ! கள்ளனுக்குத் துணை இருட்டே !

அட ! இயற்கையும் இப்படி தானா ? எல்லாம் வண்ணங்கள் செய்யும் மாயம் ! என்ன ஆச்சரியம் ?

காஷ்மீரில் குளிராக இருப்பதால், தோல் வெளுப்படைகிறது. ராமநாதபுரத்தில் வெயில் காய்வதால் தோல்கறுப்படைகிறது. ராமநாதபுரத்து இன்ஜினியர் காஷ்மீர் கன்னியைக் கப்பற்றுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர்களின் வாரிசுகளில் இரண்டும் கலந்து மாநிறமாகவோ, அல்லது கறுப்பாகவோ அல்லது வெளுப்பாகவோ பிறக்கும். பிறகு அது வாழும் இடத்தை வைத்து மெதுவாக தோல் நிறம் மாறும். பிறகு அதன் சந்ததிகள் மீண்டும் கன்யாகுமரி வந்து வாழ்ந்தால் மீண்டும் வெயிலிற்கேற்ப மாறும். இது பரம்பரை பரம்பரையாக வரும் விஷயம். இதை வைத்து நிறவேற்றுமைக்காரர்கள் “நீ அப்படி நான் இப்படி” என்று தங்களையே வகுத்துக் கொள்வார்கள்.

நீங்கள் கைரிக்க்ஷா ஓட்டினால் உங்கள் கையில் பச்சை குத்தினால் கூட வெயில் பட்டு கை கறுப்பாகும். கிரிக்கெட் விளையாடினால் முகத்தில் வெள்ளை சுண்ணாம்பு அடித்துக் கொண்டு வீரர்கள் மைதானம் இறங்குவதைப் பார்க்கலாம். ஊதாக் கதிர்களிடமிருந்து தோலைக் காப்பாற்றத்தான் அவ்வாறு செய்கிறார்கள்.

ஏஸியில் குளிரும் அறையில் இருபது ஆண்டுகள் கீ போர்டில் டப் அடித்து நடுங்கிக் கொண்டு இருங்கள் ! நீங்கள் வெள்ளைக்காரராக வாய்ப்புகள் அதிகம். (சும்மா சொன்னேன் சார் ! இருபது ஆண்டுகளாகியும் என் தோல் அப்படியே இருக்கிறது. கிரிக்கெட் ஒரு நாள் ஆடினால் அத்தனையும் கோவிந்தா !)
Human skin color can range from almost black to nearly colorless (appearing pinkish white due to the blood in the skin) in different people. In general, people with ancestors from sunny regions have darker skin than people with ancestors from regions with less sunlight. However, this is complicated by the fact that there are people whose ancestors come from both sunny and less-sunny regions; and these people may have skin colors across the spectrum. On average, women have slightly lighter skin than men. On a cultural level, color metaphors for race have evolved based upon genetic variations in human skin color.
Skin color is determined by the amount and type of the pigment melanin in the skin. Melanin comes in two types: pheomelanin (red to yellow) and eumelanin (dark brown to black). Both amount and type are determined by four to six genes which operate under incomplete dominance. One copy of each of those genes is inherited from the father and one from the mother. Each gene comes in several alleles, resulting in a great variety of different skin colors.
(நன்றி: http://en.wikipedia.org/wiki/Skin_color)

ஃபேர் அண்டு லவ்லி வாங்கலியோ ! ஃபேர் அண்ட் லவ்லி !

“அழகு ரதம் பிறக்கும். அது அசைந்து அசைந்து நடக்கும்!” என்று ஒரு கவிஞன் எழுதினால் சிவப்பு ரதம், பச்சை ரதம், கறுப்பு ரதம், வெள்ளை ரதம் என்று கொஞ்ச வில்லை. அங்கு நிறத்திற்கு இடமில்லை. வெள்ளைப் பளிங்குச் சிலையானாலும், கறுமைமிகு கார்மேகக் கண்ணனாயிருந்தாலும் ரதம் அசைவது மட்டும் அங்கு அழகு !

அப்புறம் ஆணுக்கும், பெண்ணுக்கும் ஆசையின் உச்சத்தில் விளக்கையணைத்தால் கறுப்பாவது வெள்ளையாவது ?!!! நாம் இந்தியர்கள் ! ஆதலால் நாம் வெள்ளைக்கும், கறுப்பிற்கும் இடையே ஒரு லட்சம் நிறங்களை வைத்துக் கொண்டு இரண்டறக் கலந்து விடுகிறோம் ! சில பேரால் அப்படி முடியவில்லை ! இன்னும் வெள்ளை, கறுப்பு உலகத்திலேயே இருந்து விடுகிறார்கள் !

“நான் வெட்டு ஒன்று ! துண்டு இரண்டு ! என்றிருப்பேன்!” எல்லாம் எனக்கு வெள்ளை அல்லது கறுப்பு தான் ! பைனரிக் கணித மொழியில் 0 அல்லது 1.” என்றூ பறைசாற்றுவோர் இருக்கிறார்கள். ஆனால் நிஜத்தில் இரண்டிற்குமிடையில் நிலைகள் இருப்பதைக் காண்பார்கள். கண்டும் காணாமல் நடிப்பார்கள் !

எல்லாவிதத்திற்கும் பொருந்தும் ஃபேர் அண்ட் லவ்லி கிரீம் இருந்தால் செளகரியமாக இருக்கும் !

கோஜிக் ஆஸிட் இருக்கும் ஆயிண்ட்மெண்ட்களில் (ஃபேர் அண்ட் லவ்லி போன்று ) மெலானின்னை தடைப்படுத்தி கறுப்புத் தன்மையை தோலில் இருந்து நீக்குமாம் !

சொல்லி விற்று கம்பெனிகள் பாடுபட்டு காசு பார்க்கின்றன.!

அவர்களின் முயற்சி வெற்றியா ? தோல்வியா ?

வாங்கிப் பயனடைந்து வெள்ளையாகி வளர்க வளமுடன் ! 200 ஆண்டுகள் கழித்து,

“வெள்ளையா “ஸ்கின் கான்சர் வரும் !”, குழந்தை கொஞ்சம் கறுப்பானால் தேவலை” என்று கூறினால் ஆச்சரியமில்லை !

ஆக்டிவார் கார்ப்பரேஷன், மற்றும் எமாமி வளரட்டும் ! வளரும் வளமுடன் !

தூரிகை எடுத்தாயிற்று ! வண்ணங்களைத் தீட்டி அரிதாரம் பூசலாமே ?.

ஹோலி மட்டு விதிவிலக்கா என்ன ? ஹோலி ஹை ! ஹ ! ஹா !

அனைவரும் வெள்ளைகளாகிவிடுவோம் ! சினிமாவில் கோடம்பாக்கத்தில் சான்ஸ் கிடைக்கும். டிவி மெகா சீரியல் சான்ஸ் கிடைக்கும் ! ஜாலி !

kkvshyam@yahoo.com

Series Navigation

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா