வட்டங்கள் சதுரங்கள்

This entry is part [part not set] of 31 in the series 20061123_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


வீட்டைக் கானல் சதுரம் என்கிறாள் கிருஷாங்கினி. சதுரங்களின் உள்ளிறுக்கம் அவளைத் திகைப்படைய வைத்திருக்க வேண்டும். கனவுகளை ஆர்வத்தோடு, சதுரங்களுக்கு வெளியே தாயக்கட்டைகளைப் போல வீசி உருட்டி விளையாடும் மனிதன் அதற்கேற்ற பலன்களை சதுரங்களில் உணர்கிறாப் போல அவளுக்குத் தோன்றுகிறது.
தனிமையைப் போக்க ஒரு ஜன்னலும் வெளியே அதோ மரமும் அவளுக்கு வாய்த்திருக்கிறது. மரத்தின் சிற்றசைவுகள்தாம் எத்தனை பரவசப் படுத்துகின்றன உடலை…. பூமரம் அல்ல அது. சாமரம் என்கிறான் வைரமுத்து! காற்றுக்கு அப்போது சிறகு முளைத்து அவளை நோக்கி வருகிறது. மரத்தின் பூ தலையாட்டி அவளைப் பார்த்துச் சிரிக்கிறது. வயசுப் பெண்போல…. சிறு காற்றுக்கும் அவை ஒலியற்று தலைநாணிச் சிரித்து விடுகின்றன. இதில் சிரிக்க என்ன இருக்கிறது. அந்த வயசு அப்படி.
ஆவாரம் பூமரம். ஆரவாரப் பூ. கும்மாளக் கொக்கரிப்பு. அப்பா கூட்டிவந்து வீட்டைக் காட்டியதும் அவள் வீட்டைப் பார்க்காமல் மரத்தைப் பார்த்தாள். தலையைச் சிலுப்பிய குதிரையாய் அந்த மர அசைவும், “ஏ வா” என்கிறாப்போல சில பூக்களை அவள்மீது வீசிப்போட்ட வரவேற்பும்….
“பிடிச்சிருக்குப்பா….” என்றாள்.
“இன்னும் கதவைத் திறந்து வீட்டையே பாக்கலியேம்மா?”
“கானல் சதுரம் அது” என்றாள் அவள். “என்னுலகம் இது… இங்கே. வெளியே” என்றாள். “ஊரைவிட்டுக் கொஞ்சம் தள்ளி இருக்கேன்னு மொதல்ல யோசிச்சேன். ஆனா உனக்குப் பிடிக்கும்னு நான் எதிர்பார்த்தேம்மா.” அப்பா அவள் தலையை வருடிக் கொடுக்கிறார்.
பரபரப்பான மனிதர்களை, காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறக்கிறான், என்கிறார்கள். பரபரப்பை விலக்கியது அவள் உலகம். சக்கரங்களே அவளுக்குக் கால்கள். அந்த அறைச் சதுரங்களை, அவள் சக்கரங்களை இயக்கியே வளைய வருகிறாள், சற்றும் பரபரப்பின்றி.
வாசிக்க என ஓர் அலமாரி நிறைய புத்தகக் குவியல். கனவுச் சதுரங்கள் அவை. மௌனத்தின் குவிமையங்கள். கதைகளைவிட அவளுக்குக் கவிதைகள் பிடிக்கிறது. கவிதை எழுதவும், கவிதை படிக்கவும் கொஞ்சம் கனவுகாண வேண்டித்தான் இருக்கிறது. சதுரப் பாதைகளைக் காட்டிலும் வட்டவெளிகளில் நடக்க சற்று சுதந்திரமும் ஆசுவாசமும் கிடைக்கத்தானே செய்கிறது…. வெட்ட வெளிகள்.
அப்பா வேலைக்குப் போயிருந்தால் கூடவும் அவள் தனிமையை உணர்வதேயில்லை. உண்மையில் அவள் இந்த இயற்கையின் மடியில் துயிலும் ஒரு சிற்றுயிர். அம்மாவுக்குப் பின் உறவுகளின் சிறிய வட்டம் சற்று விரிந்தாற்போல சின்னாட்களில் அவளிடம் பிரமை. சற்று மிதக்கவைத்த கனவு அது. அம்மாவைக் கட்டிக் கொண்டு படுத்துக்கிடந்த சின்னப் பெண் என்கிற நிலை எப்போது மாறியது ஞாபகமில்லை. அப்பாவோடு என்னதான் சிரித்தும் கலகலத்தும் பேசினாலும் அம்மா… என்கிற நிலை அற்புதமானதுதானே?
தினசரி அவள் உறங்கி எழும்போது வாசல் நிறைந்திருக்கும். ஈரவாசல். நேர்த்தியான ஒரு கோலம். அம்மாவின் கோலம். என்ன உற்சாகமாக அந்தக் கை அதிகாலையை நம்பிக்கையுடன் வரவேற்றிருக்கிறது. நேர்க்கோடு பிடித்தாற்போல. தன்னம்பிக்கையும் தாளலயமும் கனவுக் குவிப்பும் நிதானமும் எதிர்பார்ப்பும் கவிந்ததோர் குளிர்ந்த மனம்… பிரியமான விரல்கள்…
வெளியே சிறு வெளிச்சம் வானத்தைக் கீறி திரை விலக்க, குயில் ஒன்று கண் விழித்து பெண்ணே எழுந்திராய் என்கிறாப் போல குரல் கொடுத்து அம்மாவை எழுப்புவதாகச் சொல்வாள். வேடிக்கை.
அமைதியான நிச்சலனமான மனம் என்னவெல்லாம் நினைவுகளைக் கோர்த் துச் சேர்த்துக் கொண்டு குதியாட்டம் போடுகிறது. ஒரு கடலைப் போல மனதில் அலைகளை, கண்ணிகளை உருட்டிக் கொள்வதில் வாழ்க்கை பொருள் நிறைந்ததாக, அர்த்தம் நிறைந்ததாக… பருவப்பெண் பாவாடை பரத்தி, கனவுத் தாமரை விரித்து உட்கார்ந்து கொள்வதாக அமைந்து விடுகிறது.
மழைவரும் போலிருந்தது. பொழுது சொன்ன முன்தகவல். வெளிச்சமும் மேகமுமாய் என்னமோ வானத்தில் குசுகுசுவென ரகசியம் பேசிக் கொள்வது கேட்கிறது. அவை என்ன பேசிக் கொள்கின்றன என்றறிய ஆசையாய் இருந்தது. மழைவிடு தூதுக்கு அவள் காத்திருந்தாள். யாசுனாரி கவாபாட்டாவின் ஒரு ஜப்பானிய நாவலை வாசிக்க எடுத்திருந்தாள். இதோ வானமே சேதி சொல்லத் தயாராகி விட்டபோது நாவல் வாசிக்க சற்று ஒத்திப் போடலாமாய் இருந்தது. இந்தவொரு சூழல் ரம்மியத்துக்கு கவாபாட்டாவே எழுதிக் கொண் டிருந்தாலும் நிறுத்தி விட்டு வெளியே வந்து விடுவான்!
மழையிலுங் கூட எத்தனை வகை…. ஐம்பது மீட்டர், இருநூறு மீட்டர் என்று ஓட்டப் பந்தயம் போல…. பூமியை எட்டித் தொட மழைத்துளிகளிடையே போட்டியை யார் நிகழ்த்துகிறார்கள்? சிறு தூரப் போட்டியென வேகவேகமாய் ஓடிவரும் நாட்களை விட, மெல்ல சுருதி சேர்த்து, விஸ்தார ராக தான பல்லவி என அமையும் மழையை அவளுக்குப் பிடிக்கிறது. மனிதனுக்குத்தான் வரவர எதற்கெடுத்தாலும் அவசரம் என்றாகி விட்டது. இயற்கையும் அவசரப் பட்டால் எப்படி?
அந்த ஆவாரம் பூமரத்தைப் பார். மழை வருகிறது என்றதும் தலையை நீட்டி நிமிர்த்தி குதூகலமாய் வானத்தைப் பார்க்கிகறாப் . போல அவளுக்குத் தோன்றியது. எத்தனை வயதானால் என்ன? ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஒரு குழந்தை ஒளிந்து கொண்டுதானே இருக்கிறது?
வெளியே மழையின் முதல் துளிகள் மெல்லச் சிதற ஆரம்பித்தன. இந்த மழை விழுந்த சிலிர்ப்பும் குளுமையுமாய் மரம் தன்னுள் ஒரு வெடவெடப்பை அனுபவித்திருக்கும். அவள் வாய்விட்டுச் சிரித்தாள். தனியே கிடக்கும் மனம் என்னவெல்லாம் யோசிக்கிறது…. மழை மெல்ல ஒரு சீரான வேகத்துக்கு தன்னைப் பொருத்திக் கொண்டு பெய்ய ஆரம்பித்தது. மழை எத்தனை முறை பெய்தால் என்ன? எப்போதும் அது வரவேற்கத்தக்க விருந்தாளியெனவே இருக்கிறது.
காற்றில் குளிர் கலந்து விட்டிருந்தது. மரங்கள் அசைவின்றி மௌனமாகி விட்டன. மழையோடு அவை கூட்டுதியானம் செய்கிறாப் போல. மழையும் பெரும் சத்தமெல்லாம் ஒதுக்கி அமைதிக்கு வழிவிட்டு அடங்கிப் போனது. அப்போதுதான் அவள் எதிர்பாராததோர் நிகழ்ச்சி நடந்தது.
மனிதன் மழைக்கு ஒதுங்கி சதுரங்களுக்குள் ஒடுங்குகிறான். மழைத் தண்ணீர் மனிதனுக்கு பயந்தோ என்னமோ, பூமியின் சிற்றறைகளைத் தேடுகிறது. இதில் விசித்திரமான இன்னொரு நிலை…. மரங்களிலும் மண்ணிலும் பொந்துகளில் வாழும், ஊரும் உயிர்கள் மழைக்கு பயந்து வெளியே கிளம்பி விடுகின்றன.
அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். பாம்பு ஒன்று… ஆமாம் பாம்பேதான். மரத்தின் பொந்துக்குள் இத்தனைநாள் இருந்ததா தெரியவில்லை. மழை சாவிகொண்டு திறந்து விட்டாற்போல பாம்பை வெளியே விட்டிருந்தது.
அவளுக்கு பயமாய் இருந்தது. உலகம் கவிதாமயமாய் இல்லையடி பெண்ணே…. இதோ நிதரிசன உலகு. அது அச்சுறுத்தலானது. நிழல் பிசாசுகள் நிறைந்தது. பாம்பு. ஆ, என் வீட்டில், மரத்தில் இத்தனை அருகில் பாம்பு…. அவளுக்கு பயமாய் இருந்தது. படபடப்பாய் இருந்தது.
கிளையோடு தொங்கியாடுகிறது பாம்பு. நல்ல நீளமான பாம்புதான். அதைப் பார்க்கவே அவளுக்கு அடிவயிற்றோடு ஒரு குலுக்கல்.
பாம்பு முழுக்க நனைந்து விட்டது. மழை உக்கிரமாய்க் கொட்டுகிறது. கிளையில் பாம்பு தொங்கி ஆடுகிறது. பொத்தென்று எப்போது வேணுமானாலும் அது நழுவி விழலாம். ஒருவேளை வீட்டுக்குள் வந்து விடுமோ? நினைக்கவே பரபரப்பானாள். அப்பா வேறு கூட இல்லை. அவசரம் என எழுந்து நடக்க காலிப்பர் கட்டைகள் வைத்திருந்தாள். அவையே அவள் ஆயுதங்கள். மனதில் யுத்த ஆயத்தங்கள்.
கண் அந்தப் பாம்பைவிட்டு நகரவில்லை.
பாம்பு பொத்தென்று தரையில் விழுந்தது.
அவள் ஆசுவாசப் பெருமூச்சு ஒன்றை உதிர்த்தாள். ஒரே நிமிடம் மனம் எப்படி ஆட்டங்கண்டு விட்டது. பாம்பு. இத்தனை அருகிலா? இனி அவளால் அமைதியாய் இயங்க முடியுமா? தன்னைச் சிலிர்த்துக் கொண்டாள். படுக்கையில் கவாபாட்டாவின் நாவல். அவளால் வாசிக்க முடியுமா?
பாம்புகள் தென்பட்ட கணத்திலேயே ஆழ்மனத்தில் கேள்விக்குறிகளைப் படமெடுத்தாட உசுப்பிவிட்டு விடுகின்றன.
அது போயிருக்கும். மற. அதையே நினைத்துக் கொண்டிராதே…. மழையை ரசிக்கிற மனநிலை போய்விட்டது. ஜன்னலைப் பார்க்க முடியவில்லை. கண்ணை மூடிக்கொள்ள முடியவில்லை.
பாம்புகள் அழகானவை. சாரைப் பாம்புகள் சுருதி சேர்ந்துவிட்டால் ஒன்றோ டொன்று பிணைந்து நடனமாடும்… அப்போது உலகமே அவற்றுக்கு ஒரு பொருட்டல்ல. எத்தனை மனிதர்கள் சுற்றிநின்று வேடிக்கை பார்த்தாலும் அவை கவலைப்படாது. மனிதனால் அப்படி இருக்க, அப்படி வாழ முடியுமா?
அந்தப் பாம்பு உள்ளே வந்து விடுமோ? தலையை உதறிக் கொண்டவள் ஒரு பதட்டத்துடன் ஜன்னலைச் சார்த்தப் போனாள். அவளுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. மெல்ல நாற்காலியை உருட்டிக் கொண்டு ஜன்னலை நோக்கிப் போனவள் சட்டென்று பின்வாங்கினாள். பாம்பு…. அந்தப் பாம்பு இப்போது ஜன்னல் வழியே…. உள்ளே நுழைகிறது.
சட்டென்று கை தன்னைப்போல ஊன்றுகோல் கட்டைகளை இறுகப் பற்றியது. வெளியே மழை ஆவர்த்தனம். யாரோ ஜதி சொல்கிறாப் போல. மழைக்குத் தப்பிய உற்சாகம் போல பாம்பு ஜன்னல் கம்பியில் சுற்றிக்கொண்டு குதியாட்டம் போட்டது. அவளுக்கு என்ன செய்ய தெரியவில்லை. ஒரு கணம் பாம்பு ஆட்டத் தை நிறுத்திவிட்டு ஒரு எஜமானனைப் போல அந்த அறையை முழுசுமாய் நோட்டம் விட்டது. அவளுக்கு அந்த மழையிலும் வியர்த்துக் கொட்டியது.
இப்போது அந்தப் பாம்பு அவளைப் பார்த்தது. அவள் அந்தப் பாம்பை விட்டுக் கண்ணை எடுக்கவேயில்லை. ஊன்றுகோல் கட்டைகள்… எப்போது வேண்டுமானாலும் அவற்றை அவள் பயன்படுத்த நேரலாம். மெல்ல அந்தப் பாம்பு அந்த அறைக்குள் பிரவேசித்தது. அவள் பரபரப்பானாள். கட்டையை வீசி ஒரே போடு. அடித்து விடலாமா?….
ஒருவேளை குறி தவறிவிட்டால்?
பிறகு வேறு வினையே வேண்டாம். அந்தப் பாம்பின் சீற்றத்துக்கு முன்னால் என்னால் ‘நிற்க’ தாக்குப் பிடிக்க முடியாது. ஒரே பாய்ச்சலில் அது என்னைத் போட்டுத் தள்ளி விடும். உதவிக்கு வேறு கூட ஆள் யாரும் இல்லை .
அவள் அந்தப் பாம்பைப் பார்த்தாள். அது மெல்ல இடது ஓரம்போய்…
சுவர் ஒதுக்கத்தில் அடங்கிச் சுருண்டு கொண்டது…
வீட்டு நாய் போல.
அவள் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது அது அவளைப் பார்க்கவில்லை. சட்டையே செய்யவில்லை.
ஏ, எங்கள் உலகம் அமைதியானது…. அதைக் கொச்சைப் படுத்தாதீர் மானுடரே…
அவள் அந்தப் பாம்பைப் பார்த்தாள். வெளியே மழையைப் பார்த்தாள். மழை ஒரு விருந்தாளி. மழை அழைத்து வந்த இன்னொரு விருந்தாளி…
அவள் திரும்பி அந்தப் பாம்பைப் பார்த்தாள். நல்லுறக்கத்தில் இருந்திருக்குமோ? மழை அதைத் தொந்தரவு செய்து துரத்தி விட்டதோ?
அவளுக்கு வருத்தமாய் இருந்தது. அப்படியா பாம்பே?… எனக் கேட்கநினைத்தாள். தனக்கே சிரிப்பு வந்து விட்டது. அந்தப் பாம்பைப் பார்க்கப் பாவமாய் இருந்தது இப்போது.
உன் வீட்டில் ஓரமாய், ஒரு பொந்தில் நான் இருந்து கொள்கிறேன். என் தேவை உன் சிறு கருணை… அபிராமியின் கடைக்கண்களே. தனிப் பெருங் கருணை அல்ல.
என்னை நீ பார்க்கக் கூட வேண்டியதில்லை. என்னைச் சட்டைசெய்யாது, கண் டுகொள்ளாது இருந்தால் போதும், என்றது பாம்பு.
வெளியே மழை. பாம்பு அடங்கிச் சுருண்டு கிடந்தது. வீட்டுநாய்போல. கீழே சாக்கு என எதுவும் வாய்த்திருந்தால் இன்னும் சற்று கதகதப்பாய் அது உணரக் கூடும்….
என்ன பாம்பு தெரியவில்லை. விஷமுள்ள பாம்போ…. இருக்கட்டுமே, என நினைத்துக் கொண்டாள். பல்லில் அதற்கு விஷம். எனக்குக் கையில் கட்டை….
அதைக் கையில் தூக்கித் தலையைத் தடவிக் கொடுக்க வேண்டுமாய் சிறு ஆர்வம் கிளைத்தது. நெஞ்சை அழுத்திக் கொண்டாள். பயமாய் இல்லை இப்போது. பாம்பும் எத்தனை இதமாய் என் அருகாமையை உணர்கிறது. இல்லாவிட்டால் அதனால் இப்படி சுருண்டு அடங்கிக் கிடக்கத்தான் முடியுமா?
வெளியே மீண்டும் வெயில் ஓங்க ஆரம்பிக்கிறது. மழை விடைபெறும் சாயலில் மெல்லப் பூரண கும்பத்துடன் பின் வாங்கியது. மழைக்குப் பிந்தைய வெயில்தான் எத்தனை பளீர்.
காய்ந்த திருநீற்றுப் பட்டை!
ஜன்னல் வழியே புத்தொளி. அறையே நிரம்பிப் பால் பொங்கியது உள்ளே.
அந்தப் பாம்பு இப்போது கண்விழித்துக் கொண்டது. தாமரை மொட்டுப்போலும் தலையை உயர்த்தி சுற்று முற்றும் பார்த்தது.. எந்த உயிரானால் என்ன, சூரியன் இயங்குசக்தியாக எத்தனை ஊக்கம் தருகிறது… ஆச்சரியம்.
பாம்பு மீண்டும் ஜன்னலுக்கு ஊர்ந்து வெளியே தலைநீட்டி எட்டிப் பார்த்தது, ஒரு தாவரக் கொடிபோல. திரும்பி அவளை ஒரு கணம் பார்த்தது. சென்று வருகிறேன் பெண்ணே….
சட்டென்று வெளியே நழுவிப் போய்விட்டது பாம்பு.
அவளுக்கு ஏனோ வருத்தமாய் இருந்தது இப்போது. அதை இன்னொரு தரம் அவளால் பார்க்க முடியுமா? என் கண்ணில் படுமா அது? பட்டாலும் என்னை அதற்கு ஞாபகம் இருக்குமா?…
ஒருவேளை அது வேறு யாராவது மனிதர் கண்ணில் பட்டு விடுமோ?… நினைக்கவே சிலீரென்றது அவளுக்கு. பாம்பைக் கண்டு அல்ல…. மனிதரைக் கண்டு பயமாய் இருந்தது.


storysankar@rediffmail.com

Series Navigation