லா.ச.ரா.வுக்கு அஞ்சலி – 3 அம்பாளின் தொப்புள்கொடி

This entry is part [part not set] of 41 in the series 20071122_Issue

எஸ். ஷங்கரநாராயணன்எப்போது அவரை நான் போய்ச் சந்தித்தாலும் என்ன எழுதறே, என்று கேட்பார். இந்தப் பத்திரிகை, இன்ன கதை, என்பேன். எவ்ள குடுக்கறான்? – என்று கேட்பார். எனக்கும் அவ்ளதான் குடுக்கறான், என்பார். (எனக்கு சந்தோசமா இருக்கும்.) பத்திரிகைகள் தன்னிடம் கதை கேட்டுக் கேட்டுப் போடவேண்டும் என்று ஆசைப்பட்டார் அவர். எழுதிக் கிட்டிய பணம் தோள்ப்பூமாலை. To be in the limelight, என்பார்கள். பத்திரிகை அலுவலகங்களுக்கும் சில சமயம் போய்வந்தார். எல்லாப் பத்திரிகை ஆசிரியர்களிடமும் தேடினால் அவர் கதை கையெழுத்தில் கிடைக்கும்.

எல்லா ஆசிரியர்களுக்கும் அவர்மேல் அபிமானம் உண்டு. மரியாதை உண்டு. கட்டாயம் உண்டு. லா.ச.ரா. அஞ்சலிச் செய்தியைத் தமிழில் பரவலாய் நிறைய இதழ்கள் வெளியிட்டிருக்கின்றன. ஆனந்த விகடன் அவரை தமிழில் நனவோடை உத்தியின் தந்தை என்றுகூட எழுதியிருக்கிறது. மாலன் இந்தியா டுடேயில், தனிப்பாணியைக் கொண்டிருந்த மாமேதை, என்கிறார். தீராநதி இதழில் அபி எழுதுகிறார். மேலும் செய்திகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. (இதை எழுதிய நாள் 10 11 2007.) தமிழக முதல்வர் லா.ச.ரா குடும்பத்துக்கு ரூபாய் ரெண்டு லட்சம் நிதி என கெளரவித்து, செய்தி கிடைத்ததும் மதுரையில் இருந்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, அறிவிப்பு தருகிறார். எல்லாருக்கும் அவர் அருமை தெரிகிறது. ஆனால் அவரது சிக்கலான மொழிநடையை வெளியிட பத்திரிகைகள் தயங்கின. புத்தக வாசிப்பு வேறு. பத்திரிகை வாசிப்பு வேறு, என நினைத்தன. ஆபிரகாம் லிங்கன் சொல்வாரே, for the people by the people… அதேபோல ப்ராம்ணாளால் ப்ராம்ணாளுக்காக, என்கிற நிலை பத்திரிகை உலகில் மாறியிருக்கிறது.

தவிரவும் இருண்மை சார்ந்த கதைகளையும் லா. ச.ரா. எழுதினார். வார்த்தைகள் உக்கிரப்பட்டு வாழ்க்கை திடுதிப்பென்று மூர்ச்சையான கணங்களை அவர் தரிசன இருண்மை என்று ஏனோ கொண்டாடினார். நனவோடையில் ஒரு சுயைழப்பில் இது சாத்தியம், மற்றும் தவிர்க்கவொண்ணாதது போலும். வார்த்தைகளின் எதிரொலி காதடைக்க, மொத்த சப்த நிசப்தம். ஷோ முடிஞ்சு போச், என்கிறாப் போல.

மாலனே சொல்கிறார் – இந்தியா டுடே இரங்கல் உரை – அந்த சிலிர்ப்பு நெருப்பை வாரிக் கொட்டித்து, என்பது போன்ற முரண்கள் வரும். தனக்குத் தானே போல நம்மை எதிரில் இருத்திப் பேச ஆரம்பிப்பார். திடீரென்று மெளனிப்பார். வார்த்தைகள் எல்லாமே மெளனத்தை நோக்கித்தான் ஓடுகின்றன, என்பார்…

முன் குனிந்து என்னிடம் லா.ச.ரா. ”சங்கர், என் கதை உனக்குப் புரியறதோ?” என்று கேட்டதில் அவரில் கொஞ்சம் பெருமிதம் கூட இருந்தது. ”புரியாது என்று எதிர்பார்க்க வேணாம். எந்தப் பகுதி புரியாது என நினைக்கிறீர்கள்?” என நான் கேட்டதும் ஞாபகம்.

லா.ச.ரா. விட்டுச்சென்ற சிதம்பர ரகசியம்.

வாஸ்தவத்தில் இருண்மை சார்ந்தே நகர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை. எல்லாருக்கும் எல்லாம் தெரிந்துவிட முடியாது. தெரிந்ததில் தெரியாதது, தெரியவில்லை என்று தெரிய வேண்டும். அதை சகஜமாக நாம் அங்கீகரிக்கவும் செய்கிறோம். எளிய உதாரணமாக, என் அலுவலகத்தில் என்னுடன் அநேக நண்பர்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் பாதிப்பேரின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி எனக்கு நிறையத் தெரியாது. நான் அறிந்த அவர்களின் முகம், அதுபோதும், இறுதிவரை அலுவலகத்தில் நான் இன்முகத்துடன் அவர்களோடு வாழ்கிறேன்.

ஒரு மனிதன், இன்னொரு மனிதன் – என் சிறுகதை. ஒரு புதிய பத்திரிகையின் முதல் இதழுக்குத் தந்தது. ஒரு கிராமத்துப் பைத்தியம், யாரோடும் பேசாதது. அந்த வழியே போய்வருகிற லாரி டிரைவர். பஸ் ஸ்டாண்டில் அந்தப் பைத்தியம் டவுண்பஸ் ஒன்றின் பக்கவாட்டில் காணப்பட்ட நிற்குமிடம் பட்டியல் பார்த்துவிட்டு, அவசர அவசரமாய்க் கரிக்கட்டியைத் தேடி எடுத்து, இடையே தன் ஊர் பேர் எழுதுகிறான். லாரிடிரைவர் ஆச்சர்யத்துடன் பார்க்கிறான். பின்னாளில் டிரைவர் அந்த வழிபோகிற ஞாபகத்தில் இவனைக் கூட்டிப்போய் சொந்த ஊரில் இறக்கி விட்டுவிட்டுப் போகிறான். கண்ணில் நீர் வழிய அவன் சொந்த மண்ணை மிதிக்கிறான். இந்தப் பைத்தியம் கடைசிவரை ஒரு வார்த்தை கூட டிரைவருடன் பேசாது. என்றாலும் அவர்களிடையே மெல்லிய உறவு, என்பதாக அமைந்த கதை.

இருண்மையைப் பொருண்மையாய்க் கையாண்ட கதைகள் தமிழில் அரிதே. என் கண்ணில், காதில் படவில்லை.

லா.ச.ரா. காட்டும் இருண்மை, வார்த்தைத் திகைப்பு. அது தத்துவார்த்த பிரமிப்பு என்று எனக்குக் கிடைக்கவில்லை, என் அறிவு அவ்வளவுதானா? ஆனால் அசோகமித்திரன், தினமணி இரங்கல் உரையில், ‘(சிந்தாநதி சகாப்தம்.’) கீழ்க்கண்டவாறு பிரகடனப் படுத்துகிறார்.

”தமிழ் வரையில் இந்துமத தெய்வங்களை அவர்போல் இலக்கியக் குறியீடாகப் பயன்படுத்தியவர் எவருமே இல்லை எனலாம். அதேபோல இந்தியத் தத்துவச் சொற்களையும் அவர்போலக் கையாண்டவர் தமிழில் கூற முடியாது.”

இந்துத் தத்துவங்களை விவரப்படுத்துவது அவர் நோக்கமாய் என்றுமே இருந்ததில்லை. தத்துவ மரபில் அந்தச் சரடில் சிந்தனைப் பூ தொடுக்கிறார் லா.ச.ரா. இந்தியத் தத்துவம் அல்ல, அவர் கையாண்டது, தத்துவச் சொற்கள்.

”அவருடைய ‘புத்ர’ மற்றும் ‘அபிதா’ நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும்” என்றும் அசோகமித்திரன் மொழிகிறார். கதாபூர்வமான இலக்கிய ஆளுமை இந்த நாவல்களில் அவருக்குக் கிடைக்கவில்லை.

சுந்தர ராமசாமி ‘கலைகள், கதைகள், சிறுகதைகள்’ எனக் கட்டுரை தந்தபோது லா.ச. ரா. பற்றியும் எழுதியது கவனத்தில் வருகிறது.

”லா.ச.ராமாமிருதம் வாசனைத் திரவியங்களின் நறுமணங்களைத் தமிழாக மாற்றிக்கொண்டு வந்தவர். இவருடைய கதைகளில் மரபு, பிச்சமூர்த்தியைப் போல் விடுதலை பெற்று மனிதத்தன்மையின் சாராம்சத்தை எட்டாமல், வைதிக வாழ்வின் சாயல்களில் அழுந்திக் கிடக்கிறது. நெருக்கடிகளை உருவாக்கித் தீவிர அனுபவங்களைத் தர வல்லவர் என்றாலும், இவ்வனுபவங்களின் அர்த்தம் நமக்குப் புரிவதில்லை. பதற்றங்கள் கொண்ட உணர்ச்சிப் பிழம்பான இவரது கதாபாத்திரங்கள் கூடக் குடும்பத்துக்குள் முட்டி மோதிக்கொண்டு கிடக்கிறார்களே தவிர, எந்தத் தளைகளையும் அறுப்பதில்லை. உணர்ச்சிகரமான சம்பவங்களை உச்ச ஸ்தாயியில் வெளிப்படுத்தும் திறனிலும் மொழியின் புதிய பரிமாணங்களிலும் பிணைந்து கிடக்கிறது இவரது உயிர்.” (1985. ‘மாதவன் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பின் முன்னுரை. கலைஞன் பதிப்பகம்.)

நனவோடை உத்தி பற்றியும் ஜெயமோகன் கருத்து மாறுபடுகிறது. (நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் ଭ ஜெயமோகன். காவ்யா வெளியீடு.)

பக். 164. ”லா.ச.ராமாமிர்தத்தின் நடை தமிழ்ப் படைப்பாளிகளிடையே தீவிரமான பாதிப்பைச் செலுத்தியது. மொழியைக் கச்சிதமாகவும் கூர்மையாகவும் பயன்படுத்துவதற்குப் பதிலாக அதைத் தன்போக்குக்கு விட்டு, அதன் தன்னிச்சையான பாய்ச்சல் கொண்டுசேர்க்கும் புதிய இடங்களை அடைவது என்பது அவருடைய பாணி. பன்னிப் பன்னிச் சொல்வது, ஒலியொழுங்கை மட்டும் நம்பிச் சொற்றொடர்களை அடுக்கியபடியே சொல்வது போன்றவை பிரதான உத்திகள். லா.ச.ராமாமிர்தத்தின் ஆரம்ப காலச் சிறுகதைகள் இவ்வகையில் மொழியின் அற்புதமான சாத்தியங்களைத் தொட்டுக்காட்டிய படைப்புகளாகும். ‘ஜனனி’, ‘இதழ்கள்’ ஆகிய இரு தொகுப்புகளிலும் தமிழின் மிகச் சிறந்த சிறுகதைகள் சில அடங்கியவையாகும். பிற்பாடு வந்த தொகுப்புகளில் லா.ச.ரா. தன்னையே பிரதியெடுப்பது தெரியும். இருந்தாலும் ‘உத்தராயணம்’ குறிப்பிடத்தக்க தொகுப்பு. லா.ச.ரா. நாவல்களாக எதையும் எழுதவில்லை. சற்று நீண்டுவிட்ட சிறுகதைகளான ‘புத்ர’, ‘அபிதா’ இரண்டும் அவருடைய விசேஷமான இலக்கிய பாணியின் வெற்றிக்குச் சான்று கூறுபவை. பிற்பாடு அவர் பெரிதும் தன் மொழிக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வருபவராகத் தோற்றம் தருகிறார். மொழியின் தன்னிச்சையான போக்கை நம்பி எழுதும் படைப்பாளிகளில் அது தவிர்க்க முடியாத விஷயம். காரணம் ஒருவரின் மனமொழியே படைப்பு மொழியாகிறது. அம் மனமொழியோ பல சமயம் ஒரே தடத்தில் இயங்கும் தன்மை கொண்டுள்ளது. இதை நாமே உணரலாம். நம்மையறியாது எதையாவது கூற முனையும் போது நாம் பெரும்பாலும் வழக்கமான சொற்றொடர் எதையாவதுதான் கூறுவோம். ஆகக்குறைந்த தூரமுள்ள பாதையை நகரவே எப்போதும் முயல்கிறது. படைப்பாளி தன் மொழியை இயல்பாக நகர அனுமதிக்கவில்லை யென்றால் அது புதிய இடங்களை ஏதும் சென்றடையாத இறுகிய மொழியாக அமையும். முற்றிலும் அதன்போக்கில் விட்டுவிட்டால் சில பாய்ச்சல்களுக்குப் பிறகு அப் பாய்ச்சலின் பாதையையே திரும்பத் திரும்ப பின்தொடரும். உடைப்பெடுத்து நீர் அப்பாதையில் மேலும் மேலும் பாய்ந்து கால்வாய் ஆவதுபோல, மொழிமீது கவனமும் அதற்கு விரைய வாய்ப்பளிக்கும் சிரத்தையும் படைப்பாளியிடம் இருக்க வேண்டும்.”

வார்த்தைகளால் தனக்குத்தானே சங்கிலியிட்டுக் கொண்டார் லா.ச.ரா. நனவோடை எனும் மனமொழி அவரை இருண்மைக்கே இட்டுச் சென்றிருக்கிறது.

லா.ச.ரா. சொல்லுவாராம் – ”கதை எழுதுவது பெரிய விஷயமல்ல. அந்த அழகிய சிற்பத்தை இழைத்து இழைத்து தட்டித் தட்டி கண்மூடாமல் நகாசு வேலைசெய்து சிற்பத்தின் கண் திறந்து உக்ரஹத்தை வரவழைக்க வேண்டும்.” சரி சார். அப்படி இழைத்து இழைத்து தட்டிச் செப்பனிட்டுச் செய்வது நனவோடைக்கு சரிவருமா? ரெண்டும் வேறு தினுசில் எதிர் திசையில் சஞ்சரிக்கும் உத்திகள் ஆச்சே!

தன்னைச் சுற்றி வாசனையான வார்த்தைகளை ஊதுபத்தியாய்ப் படர விட்டபடியே உள்தவம் கொண்டவர் லா.ச.ரா. இதன் பவித்ர பாவனையில்தான் பாத்திரங்கள், முன்னோர்கள், அம்மா… என எல்லாமே தெய்விகத் தன்மையுடன் தேவதாஸ்வரூபம் கொள்கிறார்கள். சவுக்கு விஷ்க்காய், கிலுகிலுப்பை ஜிலீராய், ஒரு கண்சிமிட்டும் பாத்திர வர்ணனை தருவதிலும் பிரியங் கொண்டவர்.

அம்மா எப்பவும் பேச மாட்டாள். மூடுசூளை, என்பார்.

தாய் வழிபாடு மேலோங்கிக் கனிந்து உள்வஜ்ரப் பட்டு பிற்பாடு அம்பாள் உபாசனை என பிற்பகுதிகளில் இயக்கங் கண்டது. அவள், என பிற்பாடு தினமணிகதிரில் எழுதிய பகுதிகள் முழுக்க அம்பாள் தரிசன யத்தனங்களே. அன்றாடங்களின் அடங்கலில் உள்விழிப்பு ஆன்மிகத்தில் காண்பது இந்தியமரபுதான்.

எங்கள் வீட்டு வாசலில் அப்போது ஒரு செம்பருத்திச் செடி இருந்தது. அதிகாலை அதற்குத் தண்ணீர் ஊற்றும்போது அதிலிருந்து கிளம்பும் பச்சை வாசனை அற்புத அனுபவம். சூரிய வெளிச்சம் படரப் படர செம்பருத்தி குடையை விரிக்கும் அழகு. குடை என்றால் மேலிருந்து கீழ் கவியும். செம்பருத்தி கீழிருந்து வாழைப்பழம் உரிச்சாப்போல விரிந்து கொடுக்கும். பெரும் மழைக்காற்றுக்குக் குடையையும் அந்தப்பாடு படுத்திப் பார்க்கலாம். வெயில் வர செம்பருத்தி மூக்கை வெளியே நீட்டி, இதழ்களை விரிப்பது, ஆப்பிரிக்க யானை தும்பிக்கை நீட்டி, காதுகளை ஆட்டியசைப்பது போல் எனக்குத் தோணியது. பாக்யா தீபாவளி மலரில் ‘சிவப்பு யானைகள்’ என நான் சிறுகதை எழுதினேன்.

லா.ச.ரா. செம்பருத்திப் பூவை, அம்பாளின் அருள் பாலிக்கும் உள்ளங்கை, என்கிறார்.

ஆன்மிகச் சிலிர்ப்புடன், வீட்டில் கிருஷ்ணர் சிலைக்கு அபிஷேகம், பூஜைபுனஸ்காரங்கள் என்று ஒரு பாத்திரம், ‘கறந்த பால்’, அப்போது எனக்கு இந்த தெய்வ வழிபாட்டில் அசுவாரஸ்யம், இருந்தாலும் படித்து சிலிர்த்தேன். கறந்த பால் குங்குமம் இதழில் வெளியானதாக நினைவு. ஆனால் அதிலும் ஒரு அடல்ட்ரி சமாச்சாரம் முடிச்சு.

அடிக்கடி சிறுகதைத் திரட்டுகள் கொணர்வதில் விருப்பம் உள்ளவன் நான். ஆகாயப்பந்தல், பரிவாரம், யானைச்சவாரி, தற்போது முழுக்க சங்கீதம் சார்ந்த கதைகளுடன் ஜுகல்பந்தி. பரிவாரம் இதழில் லா.ச.ரா. ‘அமலி’ என்கிற கதை எழுதினார். ஜுகல்பந்தியில் அவரது பங்களிப்பு ‘ஈ ஜகமுலோ திக்கெவரம்மா.’

இதில் ‘அமலி’ கடைசிக்காலத்தில் தாத்தாவும் பாட்டியும் ஒருவர்மீது ஒருவர் ஆதரவாய்ச் சாய்ந்து வாழ்கிற கதை, பிற உறவுகள் என்னவாயினும் ஒட்டாமல் போய்விடுகின்றன. புளியம்பழ ஓடுகள். அந்த வயதில் அந்த உணர்வு, என அமைந்ததில் நான் பெரும் திருப்தி கொண்ட கதை அது. எழுதிய லா.ச.ரா. வின் மனநிலைதான் அது… என மன ஓசை சொல்வது காதில் விழுகிறது.

முற்போக்கு எழுத்தாளர்கள் மத்தியில் லா.ச.ரா, ஜானகிராமன், சுந்தர ராமசாமி என்றால் இவர்களை விமர்சிக்க, இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விஷயம் வைத்திருந்தார்கள். அந்தக் காலத்தில் குறியீட்டுத் தளத்தில் இயங்குகிறதாக சு.ரா.வின் கவிதை, ‘நகத்தை வெட்டியெறி, அழுக்குச் சேரும்’. இதெல்லாம் கவிதையா என்று மேடைதோறும் பேசுவார்கள். ஜானகிராமனைப் பற்றிய கோபமும் எல்லாருக்கும் தெரியும். லா.ச.ரா. ஒருமுறை ‘வியட்நாம் போரில் அத்தனை பேர் செத்தார்கள், என்ற சேதி என்னை பாதிக்கவில்லை. என் வீட்டுப் பூச்செடியில் ஒரு பூ உதிர்ந்தால் துடித்துப் போகிறது’ என்று சொன்னதாகச் சொல்லி விமரிசனத்தை முன்வைப்பார்கள்.

மன ஓசையில் லா.ச.ரா. பற்றிய கட்டுரையில் இந்த விவரம் இல்லை.

ஒரு நெகிழ்ந்த மனநிலையில் கலைஞன் உணர்ச்சிப்பிழம்பாக எதையோ வெளியிடுகிறான். அதை அந்தக் கணத்தின் போக்காகக் கருத்தில் கொள்வதே நல்லது என்று தோன்றுகிறது. அதை பூதக்கண்ணாடி கொண்டு பெரிசாக்கி, காலமெல்லாம் அதையே சொல்லி அவனே மறந்துவிட்ட அந்த வாக்கியத்தைத் திரும்பத் திரும்ப அவனை நோக்கி, நீதானே சொன்னே, நீதானே சொன்னே, என வீச வேணாம். நான் மாட்டேன்.

‘ஜுகல்பந்தி’யில் அவர் சிறுகதை நல்ல சங்கீத உக்கிரம் பெற்று, பிற்பகுதி போக்குமாறிப் போகிறது. கொழுந்தனையும் மன்னியையும் சேர்த்து, அந்த அருமையான தாய்ଭ சேய்க்கு நிகரான உறவுப் பிணைப்பைப் பொருமலுடன் தறித்துப் போடும் பெண் ஒருத்தியின் முறுக்கம்.

ரெண்டு கதைக்கும் சன்மானம் தந்துவிட்டேன்.

கடைசி காலத்தில் லா.ச.ரா. எழுத்தும் பேச்சும் அடங்கி, வாசிக்கிறதிலும், பிள்ளைகள் வாசிக்க கேட்கிறதிலும் நேரம் செலவிட்டிருக்கிறார். அன்னா கரீனாவை மகன் சந்திரசேகர் 1500 ரூபாய் கொடுத்து வாங்கி வந்ததை அட்டைதொட்டு மகிழ்ந்திருக்கிறார். என்னிடமும் எப்பவாவது உலக இலக்கியம் என்று பேசுவார். அப்போது நான் ஹெச். ஈ. பேட்ஸ் எழுதிய Doffadil sky, ஜான் அப்டைக் Pigeon Feathers, என்று படித்துக் கொண்டிருந்தேன். (பின்னாளில் அப்டைக்கின் ஒருகதை – மந்திரவாதி அம்மாவை அடிக்கணுமா? – எனத் தமிழில் மொழிபெயர்த்தேன். கணையாழியில் வந்தது. பேட்சின் கதை ‘େஒ lovely rose’ – தமிழில் ‘சென்றுவா நேச மலரே’. திண்ணை இணைய இதழில் வெளியானது.)

சட்டென்று முகம் மலர்ந்து லா.ச.ரா. அப்டைக்கின் ‘Couples’ நாவலை நினைவுகூர்ந்தார். அப்டைக்கின் புதுக்கவிதையின் எழுத்துமுறைப் புதுமைகளை அப்போது சுஜாதா தமிழில் தொடர்கதைகளில் பண்ணிப் பார்த்தார்.

இலை ஒன்று என்று எழுதி, வீழ்கிறது, என்பதை ஒவ்வொரு எழுத்தாகக் கீழே கீழே எழுதியிருப்பார் அப்டைக். ‘Couples’ நாவலில் ஒரு வரி எனக்குப் பிடித்து அதை என் ‘பூமிக்குத் தலைசுற்றுகிறது’ குறுநாவலில் மேற்கோள் காட்டினேன்.

Sex is like money, only too much is enough.

நான் ஒரு தப்பிதம் செய்தேன். என் குழந்தைகள் பிரசன்னா, வித்யாசாகர் இருவருக்கும் உபநயன வைபவம் நிகழ்த்தியபோது சம்பிரதாய அளவில் லா.ச.ரா. வுக்குத் தபாலில் பத்திரிகை அனுப்பி வைத்தேன். பெரியவர் லா.ச.ரா. ஜம்மென்று முகூர்த்தத்தில் ஆஜரானார். அன்றைக்கு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நெடுஞ்சாண் கிடையாக விழவைத்த அதே மரியாதைக்குரிய லா.ச.ரா. எத்தனை பிரியமான அன்பான மனிதர். நல்ல சாப்பாட்டு ரசிகர். குடும்ப ரீதியான உறவுகளை வெளி மனிதர்களிடமும் தயங்காமல் பேணுகிற லா.ச.ரா.

கவிதாயினி கிருஷாங்கினி வீடு, எழுத்தாளர் ம.ந. ராமசாமி வீடு என அவரை உபசரித்தவர் அநேகம். மனித உறவுகளை இவ்வளவு எளிமையாகக் கைக்கொள்ள அவரிடம் கண்டிப்பாகப் பழகிக் கொள்ளணும். எந்த நேரத்திலும் அன்பான ஒரு ஆதுரம் அவர் பேச்சில் கிளம்பி சூழலை நனைக்கும். நண்பர்களுக்காகக் காத்திருக்கும் மனசு என்று அதைச் சொல்லலாம் அல்லவா? பழகுவதற்கு அவர் சிறு குழந்தை போல. எதைப் பற்றியும் எந்த வேகத்தோடும் பேசலாம். அவருக்குக் கோபம் வருமா? பிள்ளைகளிடம்தான் கேட்க வேண்டும்.

நனவோடை உத்தி என என்பாணி லா.ச.ரா. வடித்தெடுத்த மொழிநடைச் சிமிழுக்குள் அடங்கவில்லை. காலத்தினால் நான் அவரைப் பணிந்து அவர் தோளேறி நின்று கூவிய சேவல் ஆகிறேன்.

தற்காலப் பெண்ணின் வாழ்வியல் அம்சங்களை முன்னிறுத்தி ‘நேற்று இன்றல்ல நாளை’ என நாவல் ஒன்று நான் எழுதினேன். அது பின்னாளில் அக்னி அட்சர விருது பெற்றது. விருதின் citation வருமாறு –

”சமகாலப் பெண் ஒருத்தியின் குழப்பங்களையும், குமுறல்களையும், மன உளைச்சல்களையும் இயல்பாகச் சித்தரிக்கும் நெடுங்கதை ‘நேற்று இன்றல்ல நாளை.’ இரட்டைச்சுமை ஏற்க வேண்டிய இன்றைய பெண்ணின் மனதை வெளிப்படுத்தும் யதார்த்த நடை.”

இன்றைய அன்றாடத்தின் வேகத்தை வார்த்தைகளில் ஏற்றிச் சொன்ன கதை. கதையில் நடைமுறையின் உள்ளங்கைச் சூடு தட்ட வேண்டும். தவிர நனவோடை என்ற அளவில், கதையில் குறுக்குச் சுவர்களை முடிந்தளவு தவிர்த்திருக்கிறேன். ஆமாம், வாழ்வின் ஆகச் சிறு பகுதியைக் கதைநிகழ் காலமாகக் கொண்டேன். கொஞ்சமே கொஞ்சம் பாத்திரங்கள், தேவைப்படி. நாவல் களத்தில் ஒரு நவீன அம்சமாக, காலப்பின்னணியில் ஒரு மழைக்காலத்தை வரித்துக் கொண்டிருந்தேன்.

என்ன கதை? ஒருகுழந்தை பெற்றுக்கொள்ளத் தள்ளிப்போடுவதும், இரண்டாவது வேணவே வேணாம் என்கிறதுமான நகர தம்பதியர். பெண்மை மிச்சமிருக்கிற அந்தக் கதாநாயகி மனசில் சிறு சலனம், ரெண்டாவது குழந்தையை வளர்த்தால் என்ன? முதல் குழந்தையின் பதட்டம் பயம் என்றில்லாமல் இன்னும் நிதானத்துடன் அதன் தேவைகளை கவனிக்கலாம். வாழ்க்கையை ரசிக்கலாம். முதல் குழந்தை என்றேகூட அவன் பெரிதும் கவனக்குவிப்பு கொள்ளவில்லை. ரெண்டாங் குழந்தைக்கும் அவள் எதிர்பார்க்கப் போவதில்லை.

ரெண்டாங் குழந்தை நமக்கு luxury, என்கிறான் கணவன். கலைத்துவிடு, என்கிறான். உனக்கு மேலதிகச் சுமை தர நான் சம்மதிக்க மாட்டேன், என்கிறான். ஏற்கனவே வீடும் அலுவலகமுமாய் நீ அல்லாடறே? இதுக்கு மேலயும் உன்னைத் துன்புறுத்தறது நியாயம்னு எனக்குப் படல்ல, என்கிறான்.

கணவன் என்ற பீடத்தில் இருந்து அவனது வார்த்தைத் தெறிப்புகள். அவளது கருத்து அங்கே ரெண்டாம் பட்சமாகிறது, என்ன சுதந்திரம் கிடைத்து விட்டது பெண்ணுக்கு? வேலைக்குப் போக வெளியே இறங்கியதா? கைநிறையச் சம்பாதிப்பதா? தன் பிள்ளையைத் தான் சுமக்க விரும்பியும் யாசக நிலையில் நிறுத்தி நிர்ப்பந்திக்கிறது சமூகம். எங்கே இருக்கிறது சுதந்திரம்? முகம் நிறைய சந்தோஷத்துடன் உண்டாகி யிருப்பதைச் சொன்னவளுக்கு சாட்டையாய் பதில் தரும் அதிகார புருஷன். நல்லவன்தான். முடிவுகள் அவன் கையில் இருப்பதான மேலாண்மை.

இவனை மறுக்க நினைத்தால் குடும்ப அமைப்பில் இனி இது கணவனின் குடும்பத்தாரிடமே விசாரணைக்கு வரும். அவர்களோடு வாதமிட்டால் அடங்காப்பிடாரி பட்டம். எல்லாம் தாண்டி தன் வீடு என்று ஆறுதல் தேடினால், அவர்களின் ஒரே பதில், கல்யாணம் ஆயிட்டா இனி அதுதான் உன் வீடு.

அவள் அமிர்தவல்லி. அவன் நடராசன். ஒரு கால் தூக்கி நின்றாடும் தெய்வம். காலடியில் அசுரன். சிறு உருவாக, ஆ அது என் குழந்தை… எனப் பதறுகிறாள் அமிர்தவல்லி. இந்தச் சித்திரம் கோவிலுக்குப் போகும்தோறும் வாசக மனசில் அதிரும் என எதிர்பார்த்தேன்.

நாவலுக்கு முன்னுரை தர லா.ச.ரா.விடம் கேட்டேன்.

முன்தலைமுறையினரிடம் பக்திபாவனை கொண்டாடும் லா.ச.ரா. உள்ளூற அதிர்ந்திருக்க வேண்டும். அவருக்கு அபார்ஷனே, ஐயய்யோ! கொலைக்குற்றம், என்கிற மென்மையான மனசு. வாழ்ந்த வளர்ந்த சூழல் அப்படி. அன்னை தெரேசா சொன்னார் – குழந்தை பெறுவதைத் தவிர்க்க முயலுங்கள். கருத்தடை சாதனங்கள் கூட பரவாயில்லை. பிறந்த உயிரை கருக்கலைப்பு செய்யாதீர்கள், என வேண்டிக்கொண்டது ஞாபகம் வருகிறது.

இந்த நாவலை ‘அன்னை தெரேசாவுக்கு சமர்ப்பணம்’ செய்திருந்தேன்.

இந்த நாவல் கருக்கலைப்பை நியாயப்படுத்தவில்லை.

பாவனைகள் அற்றது அல்ல இன்றைய இளமை. ஆனால் மேலதிகத் தெளிவானது. அது விசாரணைகள் கொண்டது. வழிபாடு அல்ல, தேர்வு அடிப்படையில் சிந்திக்கிறது இளமை.

அமிர்தவல்லி மாமனார் மாமியாரிடம் கூட யோசனை கேட்கவில்லை. அவளும் நடராசனும் போய் ஒரு ஆஸ்பத்திரியில் கருக்கலைப்பு செய்து கொள்கிறார்கள்.

லா.சரா.வை அதிரச் செய்திருக்கிறது இது. பெரியவாளை, அதும் குலம், சந்ததி சார்ந்த விஷயத்தில் கூட யோசனை கேட்கமாட்டாளா, என ஆதங்கப் படுகிறார். ‘தன்’ குடும்பம், தன் தேவை மற்றும் வசதி, என்று இளைய தலைமுறை தானே ஒழுங்குகள் செய்து கொள்வதை, தன் தலைக்குத் தானே அட்சதை, அதிர்ந்து பார்க்கிறார்.

கதையில் கதையமைப்புக்கு ஒத்தாசையாக உள்அலட்டல்கள் –

மழை
மேகத்தின் கருச்சிதைவு
வீதியெங்கும் ரத்தம்

அமைதியாய்
உட்கார்ந்திருந்தது பூனை
மீசையோரம் ரத்தக்கறை

”உன் கதைல sympathy இல்லியே சங்கர்? பாத்திரத்தின் மேல் படிக்கிறவாளுக்கு sympathy வர வேணாமா?”

வேணவே வேணாம். கழிவிரக்கம் என்று பிறரை அண்டி, பூனை ஈஷல் நாங்கள், இன்றைய எழுத்தாளர்கள் தவிர்க்கிறோம். அது வாசகனின் மீதான கருத்துத் திணிப்பு. முன் தலைமுறைகளிடம் நாங்கள் ஏமாந்தது இப்படித்தான்…. என்கிறேன் புன்னகையுடன். அவர் முகம் மாறியதை கவனிக்க முடிந்தது.

ஆ அந்த நடராஜ நிந்தனை, அதுவும் உறுத்தியிருக்கலாம்.

அதைவிட ஒரு துள்ளல் உற்சாகத்துடன் கதையோட்டத்தில், ”கடவுள் இருக்கிறார் இல்லை என்பதல்ல அவன் வாதம். அவரைப் பற்றி சிந்திக்கிறதே மியர் வேஸ்ட் ஆஃப் டைம். விஞ்ஞானத்தை நம்பிண்டே கோவிலைச் சுத்தறது எதுக்குன்னு அவனுக்குப் புரியவில்லை. டார்ச் வந்தாச்சி. கற்பூரம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் இன்னும்” – என எழுதியிருந்த வாசகங்களில் அவர் உடம்பு துடித்ததைக் கண்டேன்.

”கேரளாலல்லாம் இன்னுங் கூட இந்த பவித்ர பாவனைல கண்டிப்பா இருக்கா, சங்கர். கர்ப்பகிரக இருட்டுக்குன்னு ஒரு விசேஷம்…”

”அதான் என்ன சாந்நித்தியம், சொல்லுங்கோ. நாங்களும் தெரிஞ்சிக்கலாம்ல. பாவுள்ளுக்கும் (கிராமத்து வீடுகளின் store room) கர்ப்பகிரகத்துக்கும் என்ன வித்தியாசம்?”

அவர் பதில் சொல்லவில்லை.

கி.ரா. சொல்லுவார் – எழுத்தாளன்றவனே மோசமான ஜாதி. ரெண்டு கொரங்கு சேந்தா எப்ப உக்காந்து பேன் பார்க்கும், எப்ப காதைக் கடிக்கும் சொல்லேலாது.

”ஐயா உங்கள் தலைமுறை இந்த விஷயத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? நாங்கள் எப்படிப் பார்க்கிறோம்?… என வித்தியாசப் படுத்தவே இந்தக் கதையும், உங்களிடம் முன்னுரையும் கேட்கிறேன்” என்கிறேன்.

மறக்குமுன் ஒரு விஷயம் சொல்லி விடுகிறேன். அவர் அபார்ஷன் என்ற வார்த்தையைச் சொல்ல நா கூசினார். Excavation, என்றே குறிப்பிட்டார். அருமையான சொற்பிரயோகம். வெல்டன் லா. ச.ரா.

முன்னுரை முதல்வரியில் அதிர வைக்கிறார் லா.ச.ரா. ”இந்தக் கதை ஒரே வரியில் – ஒரு கரு சிதைக்கப் படுகிறது.” பின்னால் இப்படிக் குறிப்பிடுகிறார்.

”சங்கரநாராயணன் என் கண்ணெதிரிலேயே எழுதத் துவங்கி சீக்கிரமே முன்னணிக்கு வந்துவிட்ட இளைஞர். அவருக்கென்று ஒரு நோக்கும் நடையும் அமைந்துவிட்டன. ஆனால் எனக்கும் அவருக்கும் பரம்பரை இடைவெளி என்று ஒன்று இருக்கிறதே! நாளடைவில் அவருடைய எண்ணமும் கலையும் கனிகையில், எனக்கு வாழ்க்கையைப் பற்றித் தோன்றுவது போல அவருக்கும் தோன்றுமோ என்னமோ?

நாளைய நம்பிக்கையில்லாமல், இன்றின் மெட்டீரியலிசத்தில் முழுக்க மூழ்கிவிட்ட வாழ்க்கையின் அவலத்துக்கு இந்தக்கதை எடுத்துக்காட்டாக விளங்குகிறது.”

நிகழ்காலம் கேடுகாலம், பழங்காலம் பொற்காலம் என்ற பெரியவர்களின் அதே முத்தாய்ப்பு. நான் எதிர்பார்த்ததுதான்.

ஆனாலும் முதல் வரி, அந்தக் கிள்ளல் – ஒரு கரு சிதைக்கப் படுகிறது. அதில் நான் தூக்கிவீசப் பட்டதாக உள்காயம் ஏற்பட்டது எனக்கு.

”நேற்று இன்றல்ல நாளை. நேற்றைக்கு லா.ச.ரா. இன்றைக்கு நான். நாளைக்கு நீங்கள் பேசலாம்.” – இப்படி ஒரு எடுப்பு கொண்டேன் நான் என்னுரையில்.

”நிகழ்காலத் தளத்தில், ஒரு நிகழ்காலப் பிரச்னையை, நிகழ்காலப் பாத்திர வார்ப்போடு அது உரசிப் பார்க்கிறது. கடந்த காலத்தின் பல்வேறு அம்சங்களை அது சீர்தூக்கிப் பார்த்து, இப்போது நாம் நிற்கிற இடத்தை கவனப்படுத்தி, பாதையமைத்து, எதிர்காலத்துக்குப் போகிற நுழைவாயிலைக் காட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறது.”

முன்னுரைக்கு நன்றி லா.ச.ரா. அக்னி அட்சர விருது என மூத்த எழுத்தாளர் விருது பெற்றவர் லா.ச.ரா. இந்த நாவலுக்காக எனக்கு ஆண்டின் சிறந்த எழுத்தாளர் என்கிற அக்னி அட்சர விருது கிடைத்தது. விருதில் நேற்றைக்கு லா.ச.ரா. இன்றைக்கு நான் ଭ என ஆகிப்போனது மகிழ்ச்சியே.

நாவல் வெளியான பின் அவரிடம் நூல் தரப் போயிருந்தேன். பிறகு அதற்கு விருது கிடைத்தபோதும் அவரிடம் தொலைபேசியில் பேசிய நினைவு. பலமுறை அன்போடு அவர் அழைத்ததை, ஏனோ நான் சிரமேற்கொள்ளவில்லை.

மன ஓசையில் ‘லா.ச.ரா. ஒரு கண்ணோட்டம்’ கட்டுரை வெளியான சமயங்களில் நான் அரும்பு இதழில் பத்திகள் எழுதிக் கொண்டிருந்தேன். அதில் குறிப்பிட்டிருந்த லா.ச.ரா. பற்றிய ஒரு முக்கியமான விஷயத்தை மன ஓசையோடு கடிதம் மூலம் பகிர்ந்து கொள்ள நேர்ந்தது.

மனசை மீட்டியபடி தளர விடுவது என்பது எப்பவுமே நல்லதல்ல. மனம் எப்போதும் நல்ல விஷயங்களை அசைபோடும் என்று என்ற உத்திரவாதமும் கிடையாது. உண்மையில் மனசை அடக்கி நெறிப்படுத்தி வெற்றிக்குக் குவிப்பதே சாதனை.

நாற்காலியில் உட்கார்ந்து கண்மூடி யிருக்கையில், திடுதிப்பென்று மின்விசிறி அறுந்து தலைமேல் விழுகிறதாகத் தோன்றுகிறது சில சமயம். அந்த நினைவை உதறி சமாளித்துக் கொள்கிறோம். சு.ரா.வின் ‘ஜெ.ஜெ. சில குறிப்புகள்’ நாவலில் தெருவில் போகிற எருமை மாட்டின் மேல் ஒருவன் எச்சில் துப்பிவிட்டுப் போவான், என எழுதியிருப்பார். சும்மா தெருவோடு போகிற நாய். தெருவோடு போகிற பையனுக்கு அதைப் பார்த்ததும் ஏன் கல்லால் போட்டுச் சாத்த ஆவேசம் வருகிறது?

திறந்த நிலையில் மனதின் வக்கிரங்கள்.

லா.ச.ரா.வின் கதைகளை ஒருசேர வாசிக்கையில் ஓர் அதிர்ச்சியைச் சந்தித்தேன்.

ஒரு கதை – ரெண்டு பேர் பேசிக் கொண்டிருப்பார்கள். ஒருவன் வாழ்க்கை என்பது என்ன? – என்று கேட்பான். தலைமேல் ஓடிக் கொண்டிருக்கும் மின்விசிறி. ஜன்னல் வழியே அறைக்குள் வந்த குருவி மின்விசிறியில் அடிபட்டு மற்றவன் மடியில் விழும். பதிலாக, இதுதான், என மற்றவன் எடுத்துக் காண்பிப்பான்.

ஒரு பறவையின் ஒடிந்த சிறகாய் அவன் கையில் வெற்றிலை கெளளி, என்பார்.

பாலத்தில் இருந்து கூவம் நதியில் குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறான் ஒருவன். தலையில் அடிபட்டு முகம் தலை எங்கும் ரத்தம். செஞ்ஜடாதரன், என அவரது வர்ணிப்பின் நிதானம்…

வீட்டில் கொலு வைத்திருக்கிறார்கள். கொலுப்படியில் வெண்துணி போர்த்தி பொம்மைகள் அடுக்கி யிருக்கிறார்கள். ஒரு குழந்தை தவழ்ந்துபோய் அந்தத் துணியை இழுக்க கொலுப்படி சரிந்து மேலே விழுந்து குழந்தை இறந்து போகிறது.

அப்பனின் ரெண்டாம் சம்சாரத்தின் குழந்தையை முதல் சம்சாரத்தின் பிள்ளை பிரியத்துடனேயே கவனித்துக் கொள்கிறது. குழந்தை தவழ்ந்து விலகிப்போகிறது. எதோ விளையாட்டு சுவாரஸ்யம். கவனிக்கவில்லை முதல் சம்சாரத்தின் பிள்ளை. தரைமட்டக் கிணறு ஒன்றில் தவழ்ந்து போய்க் கவிழ்ந்து விடுகிறது குழந்தை. இறந்து மிதக்கும் குழந்தையின் தலை தென்னை மரத்தில் இருந்து விழுந்த குறும்பையாகத் தெரிகிறது லா.ச.ரா.வுக்கு.

திருப்பித திருப்பிச் சுற்றிச் சுற்றி மரணம், அதன் கோர முகங்கள். விபரீதக் கற்பனைகளின் அதிதம்.

உத்தராயணம் – கதை முடிவுப் பகுதி கூட இப்படித்தான். கதாநாயகப் பெரியவர் மொட்டைமாடி ஏறுகையில் ஏணி சரிந்து அப்படியே அடைமுள்ளில் விழுகிறார். பீஷ்மரின் அம்புப்படுக்கை, வடக்கிருந்து உயிர்நீத்தல். என் உத்தராயணம் இதுதானா?… என நினைக்கிறார். எந்தத் தத்துவச் சரடின் உள் அழுத்தமும் இல்லாத ஒப்புவமை. ஒரு சகஜமான காட்சி மனதில் திரிந்த பாலாய்ப் போகிறது.

முன்பே சொல்லியமாதிரி, லா.ச.ரா. எனும் பாற்கடலில் அமுதும் உண்டு. நஞ்சும் உண்டு.

மன ஓசையில் என் பதில் கடிதத்தைப் படித்ததாகவும், தன்னை வந்து பார்க்கும்படியும் லா.ச.ரா. சொல்லியனுப்பியிருந்தார். பெரியவரிடம் நேரில் பேசுவது, அன்புமுறியப் பேசியதாகக் கொண்டுவிடுவாரோ என்று, தயக்கமாய் இருந்தது. நான் தவிர்த்தேன் அப்போது.

பிற்காலத்தில் நான் புதுவை ஸ்ரீ அரவிந்த அன்னையின்பால் பற்றுக் கொண்டதும், தனியே ஆன்மிகக் கதைத் தொகுதி ‘பெண்கொற்றக்குடை’ தந்ததும், ஸ்ரீ அன்னை பற்றி ஒரு இசைத்தகடு ‘நிசப்த ரீங்காரம்’ ஆறு பாடல்கள் எழுதி வெளியிட்டதும், நானே எதிர்பாராத நிகழ்வுகள். லா.ச.ரா. கேள்விப்பட்டால் சந்தோஷப் பட்டிருக்கக் கூடும்.

நான் அவருக்குத் தகவல் சொல்லியிருக்க வேண்டாமா?

தமிழ்ச் சிறுகதை உலகில் கடைநி நிமிடம் வரை சில பிரமிப்புகளை, தனித்தன்மையான ஆளுமையை நிகழ்த்திச் சென்றிருக்கிறார் லா.ச.ரா. நனவோடை என்கிற ஜேம்ஸ் ஜாய்சின் மேற்கத்திய உத்தியை தமிழில் தந்ததற்கு, தமிழ்ப்படுத்தித் தந்ததற்கு இலக்கியம் அவரைக் குறித்துக் கொள்கிறது.

முடிகிறது
>>>
storysankar@gmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்