ராஜ்குமார் மறைவும் பெங்களூர் வன்முறையும்

This entry is part [part not set] of 41 in the series 20060421_Issue

கூத்தாடி


ராஜ்குமார் மறைவும் பெங்களூர் வன்முறையும்

ராஜ்குமார் மறைவை ஒட்டி நடந்த வன்முறை உலக அளவில் கவனிக்கப் பட்டது.கலிபோர்னியா வளைகுடாப் பகுதியில் CRON 4 செய்திகளில் சொல்லும் அளவுக்கு கவனிக்கப் பட்டது. அதற்கு காரணம் பெங்களூர் இப்ப எல்லாம் buzz word for VCs. startup கம்பெனியிலிரிருந்து கார்ப்பரேட் பெரும் தலைகள் வரை ஒரு தடவையாவது பெங்களூருக்கு போய் இருக்கிறார்கள்.பெங்களூர் இப்படி கெட்டப் பெயர் வாங்கியதில் பெங்களூரில் 2 வருடம் இருந்தவன் என்ற முறையிலும் இந்தியன் என்ற முறையிலும் வருத்தம் தான்.

ஆனால் இங்கு நான் எழுத விழைவது இந்தியர்களின் இதயங்களில் அடக்கி வைத்திருக்கும் வன்முறையைப் பற்றித்தான்.இந்த வன்முறையை கன்னடர்களின் வெறி என்று பிரச்சினையை குறுகிய வட்டத்தில் பார்ப்பது சரியில்லை.

இது மாதிரியான பிரச்சினைகளை இந்தியா பல வருடங்களை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறது. இந்திராகாந்தி கொலையுண்ட போது நடந்த படுகொலைகளும் ,குஜராத் படுகொலைகளும் இன வெறி யென்று ஒதுக்கி விட்டாலும். எம்ஜி யார் மரணத்தின் போது சென்னையில் நடந்த வெறியாட்டத்தை எதை வைத்து வகைப்படுத்துவீர்கள். எம்ஜி யார் மேல் இருந்த அன்பு என்று சொல்ல முடியுமா என்ன ?

வன்முறை என்பது நம் வாழ்க்கையில் இணைந்த ஒன்று . வன்முறையை வீரம் என்று பார்ப்பவர்கள் இன்னமும் நம் சமூகத்தில் பெரும்பான்மையோராக இருக்கிறார்கள். அதுவே நம் திரைப்படங்களிலும் எதிரொலிக்கிறது . ஒரு அரசியல்வாதி கைதுச் செய்யப்பட்டாலே கடைகளை மூடச் சொல்லும் மூடத் தொண்டர்கள் எங்கிருந்து வந்தார்கள். இது இந்தியா எங்கும் நடந்து கொண்டு இருக்கும் கூத்துதானே.இதில் கன்னடர் ,தமிழ், குஜராத்தி என்றெல்லாம் கிடையாது ,வாய்ப்பு கிடைத்தால்/சட்டத்தின் கையில் மாட்டாமல் இருப்போம் என்ற பயம் இல்லாமல் இருந்தால் பஸ்சில் கல்லை எடுத்து எறிவதை எந்த உறுத்தலும் இல்லாமல் செய்வார்கள். இந்த வன்முறையை தர்க்க ரீதியாக எதிர்கொள்ள முடியாது . அது நம் இரத்ததில் ஊறியது.விலங்கு உணர்ச்சியின் மிச்சம். வன்முறையை அடக்குவதற்கு ஆன்மீகம் உதவும்.ஆனால் ஆன்மீகத்தை வளர்க்க உதவி செய்ய வேண்டிய மதமோ வன்முறையைத் தூண்டுவது முரண்நகை.

இப்போது பெங்களூரில் நடந்த வெறியாட்டத்தை இப்படியும் பார்க்கலாம். பெங்களூரின் பெரும் வளர்ச்சி எல்லா பெங்களூர் மக்களை சென்று அடைந்துள்ளதா ? குறிப்பாக கன்னட நடுத்தர ஏழை மக்கள் பெங்களூர் வளர்ச்சியில் தாங்களும் ஒரு பகுதி என்று உணர்கிறார்களா ? இல்லை என்பதே உண்மை . அங்கேயே பிறந்து வளர்ந்த மக்களுக்கு ஒரு சொந்த வீடு வாங்குவது கனவில் கூட நடக்காதத் தூரத்தில் விலை கோடிகளில் இருப்பதும் வாடகை வீடு கூட பல ஆயிரங்களில் இருப்பதால் லோக்கல் மக்கள் ஒரு வெறுப்புடன் கீரிம் லேயரில் டிஸ்கோத்தே பார் என அலையும் மேல் தட்டு வர்க்கமாக் முயற்சிக்கும் சாப்ட்வேர் IT மக்களை ஒரு வெறுப்புடன் தான் பாக்கிறார்கள். அதிலும் அவர்கள் IT யில் பெரும்பான்மையோர் வேற்று மொழிப் பேசும் மக்களாக இருப்பதால் அவர்கள் கன்னட எழுச்சி என்ற பேரில் மற்றவர்களை வெளியே போக சொல்லுவது அதிகம் ஆயிருக்கிறது . அது இதுமாதிரியான் சமயங்களில் வெளிப்படுகிறது. தாங்கள் போக முடியாத கார்களை உடைக்கவும் தீ வைக்கச் சொல்லுகிறது. முடிந்தால் பிடிக்காதவர்களை நாலு சாத்து சாத்தவும் சொல்லுகிறது .

இந்த வன்முறை மொழி/சாதி/மத வெறி யென பல வழிகளில் வெளிவருகிறது. வன்முறையே தன் சாதியின் /மதத்தின் / மொழியின் மூலமாக தாங்கள் கோழை அல்ல வீரர்கள் தான் என உறுதி செய்கிறார்கள்.இவர்களை தூண்டி விட்டவர்களுக்கு சில ஆதாயங்கள் இருந்தாலும் இதை செய்யும் கலவரக்காரர்களின் மனதில் உள்ள வன்முறையை புரிந்து கொள்வது தான் சரியானதாக இருக்கும். இந்த வன்முறையாளர்கள் வழக்கமான நேரங்களில் சாதாரணமாக இருப்பவர்கள் தாம். இவர்கள் சமூக அக்கறை இல்லாத சமூகத்தின் மோசமான முன்னுதாரணங்கள். படித்தவர்களுக்கு கூட எந்த சமூக அக்கறையும் இருப்பதில்லை. நம் மேல்த் தட்டு வர்க்கம்த் தான் எங்கெங்கு சட்டத்தை மீற முடியுமோ அங்கெல்லாம் மீறுகிறார்கள். அவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத அளவுக்கு நம் சட்டமும் அதிகாரமும் தூங்கிக் கொண்டு இருக்கிறது நம் துரதிருஷ்டம்.அதுவும் பெங்களூரில் அரசுச் சக்கரத்தில் இருக்கும் லஞ்சம் தமிழகத்தை விட பல மடங்கு அதிகம். போலிஸ் முன்னாலேயே பஸ் உடைப்பதை நானேப் பார்த்து இருக்கிறேன். போலிஸ்காரர்கள் ராஜ்குமார் ரசிகர்கள் என்று சொல்லும் கூட்டத்தை எதுவும் செய்ய முடியாது.

நமது கார்ப்பரேட் தலைவர்கள் பிரேம்ஜி ,மூர்த்தி நந்தன் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம் . எனக்கொன்னவோ அவர்கள் பத்திரிகைகளில் எதுவும் சொல்ல மாட்டார்கள்.சொல்லிவிட்டு அவர்கள் பெங்களூரில் தொழில் செய்ய முடியாது . ஆனால் அரசை அவர்கள் கார்ப்பரேட் மசலால் சொல்லுகிற விதத்தில் சொன்னால் வரும் காலங்களிலாவது இந்த மாதிரி வன்முறைகளை தவிர்க்க அரசு முயற்சிக்கலாம். இந்த தடவை வன்முறை இரண்டு நாள்களாகத் தொடர்ந்தது அரசின் மெத்தனத்தைக் காட்டுகிறது.அதுவும் ராஜ்குமாரின் மரணம் கலவரத்தை உருவாக்கலாம் என்பதை யூகிப்பது கஷ்டமல்ல.அரசு அதைச் செய்யாதது அதன் கையாலாகத் தன்மையை அல்லது அதன் உள் நோக்கத்தைக் காட்டுகிறது .

தமிழர்களின் மேலான வெறுப்புக்கு காவேரி மற்றும் 60 70 களில் பெங்களூர் தமிழர் எல்லா அலுவலகங்களிலும் ஆக்ரமித்து இருந்ததின் மேலான வெறுப்பு என பலக் காரணங்கள் இருக்கிறது.அது இப்போது எல்லா வெளி யாள்களிடமும் வெறுப்பாக வளர்ச்சியடைந்துள்ளது.

கன்னட மக்கள் கன்னட மொழிமேல் பற்றாக இருப்பதை குறைச் சொல்ல முடியாது . நாமும் அப்படி இருக்கிறவர்கள் தாமே . அவரவர் தம் தாய் மொழியில் பற்றாய் இருப்பது வரவேற்கத் தக்கதே .ஆனால் அது அடுத்தவர்கள் மேல் வெறுப்பு வளர்ப்பது தவறுதான். ஆனால் அதைத் தான் நாம் செய்து கொண்டு இருக்கிறோம் ,நாம் கூட இந்த பிளாக்குகளில் அடுத்த மதத்தைத் திட்டி எழுதுவதும் ,சாதி வெறுப்பைக் காட்டுவதையும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம். சாதியபிமானமும் /மதப் பற்றும் அதிகம் உள்ளவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக் கிடைத்தால் அவர்களும் ஒரு மனிதனை அது அடுத்த மதக்காரனாகவோ சாதிக்காரனாகவோ இருந்தால் கொல்வதற்கு தயங்க மாட்டார்கள்.அவர்களின் வன்முறை அவர்களின் எழுத்துக்களில் வெளிப்படுகிறது அவ்வுளவு தான் .

ஆதலால் இந்த வன்முறையில் நமக்கும் சிறிது பங்கு இருக்கிறது. எண்ணங்களிலோ எழுத்துக்களிலோ நாம் வன்முறை பண்ணியிருப்போம் . சமூகத் தவறுகளுக்கு அச்சமூகத்தின் எல்லாருக்கும் பங்குண்டு. நமக்கும் கூட..
koothaadi@gmail
http://koothaadi.blogspot.com

Series Navigation

author

கூத்தாடி

கூத்தாடி

Similar Posts