யுத்த விமானம் ஒன்று

This entry is part [part not set] of 14 in the series 20010115_Issue

மோகன் கருப்பையா


32 வருடங்கள் – ஒரு ‘சிறு யுத்த விமானம் ‘

அதன் மாதிரி 32 வருடங்களுக்கு முன்பு தயார் செய்யப் பட்டது. இத்தனை வருடங்களுக்குப் பின்பு தான் இந்த சிறு யுத்த விமானம் (Light Combat Aircarft) தயார் நிலைக்கு வந்துள்ளது. ஜனவரி 5-ம் தேதி இந்த முதல் விமானம் தன் முதல் அடியை வானில் எடுத்தி வைத்தது. இந்தியா இதனைக் கட்டுவிக்க ஏன் 32 வருடங்கள் ஆயின என்பதைப் பலரும் கதை கதையாய்ச் சொல்கிறார்கள். ஒரு காரணம் நமக்கு ‘உதவி ‘ புரியும் மேலை நாடுகள் பலவும் இந்த விஷயத்தில் மட்டும் உதவி செய்யத் தயாரில்லை. இதற்குக் காரணம் இல்லாமலில்லை. வெளிப்படையாகச் சொல்லும் காரணம் இந்த உதவி இந்தியாவின் யுத்தத் தயார் நிலையை அதிகப் படுத்தி, இந்திய உபகண்டத்தில் ஏற்கனவே உள்ள பிரசினைகளைக் கூர்மைப் படுத்தி விடும் என்பது. ஆனால், இந்தக் காரணம் சொல்பவர்களும் கூட நமக்கு யுத்த விமானங்களை விற்கத் தயாராய் இருந்தார்கள். ஆக இது ஒரு பொருளாதார விஷயமும் கூட . யுத்த தளவாடங்களில் மேலை நாடுகள் பெறும் ஆதாயம் மிக மிக அதிகம் அதை அவர்கள் விட்டுக் கொடுக்கத் தயாராய் இல்லை.

1980-வாக்கில் மிக்-21 ரக போர் விமான விமானங்களுக்கு மாற்றாக விமானம் தயார் செய்யப் பட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடத் துவங்கினார்கள். ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனியின் எஃப்-4 ரக எஞ்சின்கள் இவற்றுக்குப் பயன்படுத்தத் திட்டம். ஆனால் 1998-ல் அணு குண்டு சோதனை முயற்சிக்குப் பிறகு அமெரிக்கத் தடைகளால் இந்த எஞ்சின் இறக்குமதி பாதிக்கப் பட்டுள்ளது. இதற்கு முன்பே இறக்குமதி செய்யப் பட்ட 12 எஞ்சின்கள் தான் இப்போது கையிருப்பு.இந்த எஞ்சினுக்குத் தகுந்தாற்போல் விமானத்தின் மற்ற பாகங்களூம் செயல்முறைகளூம் திட்டமிடப் படுவதால், இந்த எஞ்சின் கிடைக்காத நிலையில் விமானத் தயாரிப்புக்கு பாஹ்டிப்பு ஏற்படும் .எனவே , வாயு மிகுவேக ஆய்வு மையம் என்ற இந்திய அரசு அமைப்பு காவேரி – ஜி டி எக்ஸ் 35 என்ற பெயரில் ஒரு எஞ்சின் தயாரிக்கவும் முயன்று வருகிறது. இந்த எஞ்சினின் ஐந்து முன்மாதிரிகளும் நம் விமானத்தில் சோதனை செய்யப் பட்டு வருகின்றன.

இந்த விமானம் ஒரு விமானஓட்டி மட்டும் உள்ள மாதிரி தயார் செய்யப் பட்டது. 4 டன் எடையுள்ள ஆயுதங்களையும் , ஏவுகணைகளையும் ஏற்றிச் செல்லவும் திறன் கொண்டது. அணு குண்டும் கொண்டு செல்லப் பயன் படலாம். கீழ்ச் சிவப்புக் கதிர்களால் முன்னுள்ள குறிகளைச் சரியாய் இனம் காணூம் வசதியும் இந்த விமானத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 300 கோடி செலவு ஆகியுள்ளது என்கிறார்கள். ஒரு விமானத்தின் விலை 75 கோடி ரூபாய் ஆகலாம். இது மற்ற இதே போன்ற விமானங்களுடன் ஒப்பிடும் போது விலை குறைவு தான்.

மிக் விமானங்கள் ஏற்கனவே பழையவை ஆகி விட்டதால், செயல் திறன் இழந்து போகிற அபாயம் இருப்பதால், இந்த விமானம் வெகு சீக்கிரம் அதன் முழுத் திறனுடன் அமைக்கப் பட்டால் நல்லது.

இந்த ஆராய்ச்சி வெற்றி பெற வேண்டும் . நமக்காக மட்டும் அல்லாமல் தேவைப் படுகிற பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிற விதமாய் இத்தகைய விமான உற்பத்திகள் பெருகினால் பொருளாதார ரீதியாகவும் பலன் கிட்டும்.

Series Navigation

மோகன் கருப்பையா

மோகன் கருப்பையா