யசுகுனி ஆலயம் – பாகம் 2

This entry is part [part not set] of 36 in the series 20061006_Issue

கே.ஜே.ரமேஷ்


ஆக சீனாவின் இந்த மறக்கமுடியாத பாதிப்புகள் அவர்களை இந்த விஷயத்தில் மிகுந்த நுண்ணிய உணர்வுள்ளவர்களாக மாற்றி விட்டதில் வியப்பேதுமில்லை.

கொரியாவைப் பொறுத்த வரை, ஜப்பானிய ராணுவம் பல கொரியப் பெண்களை கடத்திச் சென்று சரீர சுகமளிக்கும் அடிமைகளாக வைத்திருந்தனர். இது நாள் வரை ஜப்பானியரிடமிருந்து குற்றத்தை ஏற்றுக் கொண்டு அதிகாரப்பூர்வமான, தகுந்த மன்னிப்பு கேட்கப்படவில்லை.

மேலும் இவ்விரு நாடுகளுக்கும் யசுகுனிக்குக் கிடைக்கும் இந்த அங்கீகாரம் ராணுவ ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான எழுச்சியாக மாறுவதற்கு ஒரு வாய்ப்பாக மாறக்கூடும் என்ற பயமும் உண்டு. அவ்வாறு ஒரு வாய்ப்பு கிடைத்தால் ஜப்பான் பழைய ஏகாதிபத்திய முறைக்கு மாறி தங்கள் நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற அச்சமும் அவர்களின் எதிர்ப்புக்கு ஒரு காரணமாகும்.

1980களின் மத்தி வரை சம்பிரதாயமான எதிர்ப்பையே காட்டி வந்த சீனா, அதற்குப் பிறகு மிகத் தீவிரமாக எதிர்க்கத் தொடங்கியதற்கும் காரணங்கள் உண்டு. 1978ம் ஆண்டு இந்த பதினான்கு பெயர்களை யசுகுனியில் பொதிந்து வைத்த பின்பு மூன்று ஜப்பானிய பிரதமர்கள் மொத்தம் இருபது முறை அவ்வாலயத்திற்கு சென்று வழிபட்டுள்ளனர். அப்போதெல்லாம் சீனா அந்த நிகழ்ச்சிகளைப் பெரிது படுத்த வில்லை. ஆனால் 1985ம் ஆண்டு அப்போதைய பிரதமர் திரு.நாகசோனெ பிரதமராக, உத்தியோகப் பூர்வமாக, அதிகாரப் பூர்வமாக யசுகுனி ஆலயத்திற்குச் செல்லப் போகிறேன் என்ற அறிவித்தது தான் இந்த சர்ச்சைக்கு மூல காரணம் என்று கூறலாம். அவ்வாறு அறிவித்துவிட்டு மேற்கொண்ட ஆலய விஜயத்தை ஜப்பானியப் பத்திரிகைகள் உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாகப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தவும் சீனா பலத்த எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தது. தன் எதிர்ப்புக்கு ஆயுதமாக ராஜதந்திர உறவை கையிலெடுத்துக் கொண்டது. உள்நாட்டிலும் பிரதமரது ஆலய விஜயத்திற்கு மிகப் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்த உச்சகட்ட எதிர்ப்பினால் அடுத்த பதினோரு வருடங்களுக்கு எந்த பிரதமரும் அதிகாரபூர்வமாக ஆலயத்திற்கு வருகை மேற்கொள்ளவில்லை.

பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு 1996ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஹஷிமோடோ மீண்டும் யசுகுனி ஆலயத்திற்கு வருகை புரிந்தார். ஆனால் இம்முறை அவரது பிறந்த தினத்தில் வருகை புரிந்ததால் பிரச்சினை பெரிதாகவில்லை.

பிறகு தற்போதைய பிரதமர் திரு.கொயிசுமி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு யசுகுனி ஆலயத்திற்கு ஆகஸ்ட் 15ம் நாள் வருகை புரிவதாக சூளுரைத்தார். ஆகஸ்ட் 15ம் நாள் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய ராணுவம் சரணடைந்த தினம். ஆனால் அவர் எதிர்ப்பார்த்ததை விட எதிர்ப்பு பலமாக இருக்கவே, நிலைமையைச் சாந்தப்படுத்தும் முயற்சியாக 15ம் தேதியை விடுத்து ஆகஸ்ட் 13ம் தேதியன்று (2001ம் ஆண்டு) ஆலயத்திற்கு வருகை மேற்கொண்டார். மேலும் ஷிண்டோ பாரம்பரிய வழக்கப்படி இருமுறை தலை தாழ்த்தி வணங்காமல் ஒரே ஒரு முறை தலை தாழ்த்தி வணங்கினார். ஆலயத்திலும் சிறிது நேரமே இருக்குமாறும் பார்த்துக் கொண்டார். ஆனாலும் அவரது இந்த நடவடிக்கைகள் எதிர்ப்பின் உக்கிரத்தை குறைக்க முடியவில்லை.

அரசியல் மற்றும் இரண்டாம் உலகப்போரின் சரித்திரம் பற்றிய மாற்றுக் கருத்துகளால் சீனாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே ராஜதந்திர உறவு அடிமட்டத்தை தொட்டிருக்கும் இந்த கால கட்டத்தில் திரு. கொயிசுமியின் வருடாந்திர ஆலய வருகை சர்ச்சையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தூண்டிவிட்டு விட்டது. இவரது இந்த செய்கையால் வெகுண்டெழுந்த சீன அரசு மேல்மட்ட பேச்சு வார்த்தைகளை நிறுத்திக்கொண்டன. இரு நாட்டு அரசியல் தலைவர்களின் அதிகாரப்பூர்வமான வருகைகள் இரத்து செய்யப்பட்டன. ஆசியான் ப்ளஸ் த்ரீ (Asean Plus Three) சார்பில் நடக்கும் சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய மூன்று நாடுகளுக்கான முத்தரப்புப் பேச்சு வார்த்தைக் கூட்டமும் 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

“சீனாவுடன் ஜப்பான் நட்புறவு மேற்கொள்ளவே விரும்புகிறது. ஜப்பானிய ராணுவத்தின் கடந்த கால போர்க்கால நடவடிக்கைகளை நான் நியாயப்படுத்த முயலவில்லை. ஆனால் இறந்தவர்களை நினைத்து துக்கப்படுவதும் அவர்களுக்கு உரிய கவுரவத்தை அளிப்பதும் எனது கடமை. இதில் எவரும் தலையிட முடியாது. யசுகுனியை ராஜதந்திரத் துருப்புச் சீட்டாக பயன்படுத்தக் கூடாது” என்று கொயிசுமி கூறுகிறார்.

இவ்வேளையில் திரு.கொயிசுமி இந்த மாதம் பதவியிலிருந்து விலகுகிறார். அவரைத் தொடர்ந்து பதவி ஏற்கப்போகும் புதிய பிரதமரின் இவ்விஷயம் குறித்த கொள்கை எவ்வாறு இருக்கும் என்பதே இப்போதைய மிகப் பெரிய கேள்வி. இதில் உலக நாடுகளும் தத்தம் பங்கிற்கு அறிவுரை வழங்கத் தொடங்கியுள்ளது. இந்த கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்த அமெரிக்கக் காங்கிரஸின் பங்களிப்பும் இதன் பிண்ணனியிலேயே வழங்கப்பட்ட ஒன்று.

ஆனால் செல்வாக்கு மிக்க ஜப்பானிய தலைவர்கள் சிலர் இவ்விஷயத்தில் சீனாவையே குற்றம் சாட்டுகின்றனர். சீனா இந்த விஷயத்தை கையிலெடுத்திருப்பதே ஜப்பானுடனான ராஜதந்திர உறவில் சீனாவின் கை ஓங்கியிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் என்று கூறுகிறார்கள்.

இதற்கிடையில் சென்ற வாரம் ஜப்பானிய ஆளும் கட்சியான LDPயின் உட்கட்சித் தேர்தலில் 52
வயதான திரு.ஷின்சோ அபே பிரதமராக போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜப்பானிய பார்லிமெண்டில் நடந்த வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்று விட்டார். திரு.கொயிசுமியிடமிருந்து வரும் செப்டெம்பர் 26ம் தேதியன்று பிரதமருக்கான அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வார் என்று தெரிகிறது. இவர் இரண்டாம் உலகப் போருக்குப் பின் பதவியேற்கும் ஆக இளைய பிரதமாராவார். இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்த பிறகு பிறந்த முதல் பிரதமுரும் இவரே ஆவார்.

திரு. அபேயின் தாத்தா, திரு.நொபுசுகே கிஷி இரண்டாம் உலகப் போர் நடந்த சமயம் அப்போதைய மந்திரிசபையில் மந்திரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பானிய ராணுவம் சரணடைந்த பிறகு கிஷியும் போர்க் கைதியாகச் சிறையிலடைக்கப்பட்டார். ஆனால் அவர் மீது போர்க்கால குற்றம் புரிந்ததற்கான விசாரணை ஏதும் நடத்தப்படவில்லை. பின்பு 1957 முதல் 1960 வரை ஜப்பானிய பிரதமராகவும் பதவி வகித்தார். இந்தப் பிண்ணனியில் வளர்ந்த அபே நடந்த போர் மற்றும் அதைத்தொடர்ந்த பேரழிவுக்கும் போர்க்கால தலைவர்களை குற்றம் கூற மறுப்பதில் ஆச்சர்யமேதுமில்லை. மேலும் கொயிசுமியின் யசுகுனி ஆலய விஜயத்திற்கும் தனது ஆதரவைத் தெரிவித்தவர் இவர்.

சீனா, தென் கொரியா, வட கொரியா ஆகிய நாடுகளும் ஜப்பானிய புதிய பிரதமரை வரவேற்க எந்த அவசரத்தையும் காட்டவில்லை. கொரிய நாடுகள் இப்போதிருக்கும் நிலையில் எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் எதிர்ப்பார்க்கவில்லை என்றே தோன்றுகிறது. சீனா ஜப்பானுடனான வர்த்தகத்தைத் தொடரவே விரும்பினாலும், டோக்கியோவிலிருந்து தகுந்த சமிக்ஞைகள் வருவதற்காகக் காத்திருப்பது போல் படுகிறது. ஆனால் அபே பிரதமரான பிறகு யசுகுனி ஆலயத்திற்குச் செல்வதைப் பற்றி எதுவும் கூற மறுத்துவரும் நிலையில் டோக்கியோவிலிருந்து சீனாவிற்கு ஆறுதலான சமிக்ஞைகள் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வட கொரியாவைப் பொறுத்தவரை அபேயின் வரவு நல்வரவாக இருக்கமுடியாது. ஜப்பானிய மக்களை கடத்திய விஷயத்திலும், ஏவுகனை சோதனை விஷயத்திலும் வட கொரியாவின் மீது அபேயின் நிலைப்பாடு மிகக் கடுமையாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் புதிய பிரதமராக பதவியேற்பதற்கு முன்னரே எதிர்க்கட்சிகளிடமிருந்து அபேயின் கொள்கைகளுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அவரது கொள்கைகளில் பள்ளிச் சிறுவர்களிடம் தேச பக்தியை ஊட்டும் திட்டமும் அடங்கும்.

பொறுத்திருந்து பார்ப்போம் – புதிய பிரதமர் யசுகுனி விஷயத்தை எவ்வாறு கையாளுகிறார் என்று.

கே.ஜே.ரமேஷ்
kjramesh@pacific.net.sg

Series Navigation