மூன்று பேர் – 3 (தொடர் நிலைச் செய்யு:ள்)

This entry is part [part not set] of 22 in the series 20010917_Issue

விக்கிரமாதித்தன்


அகலிகை கூற்று:

எந்த நியாயக் கற்பிதமும்
சொந்த வாக்குமூலமும் சரிதான்
என்றாலும் சொல்ல இருக்கிறது எனக்கும்
அன்னை மடியில் இருந்த போதும் அல்லலில்லை
சின்னஞ்சிறு பெண்ணாய் இருந்த நாளும் சிரமமில்லை
பூத்த பின்னே விடாய் வந்த பின்னே பூகம்பங்கள் எரிமலைகள்
தனம் வளர வளரத் தத்தளிப்புகள் சங்கடங்கள்
உடம்பு ஒரு சுமையாயிற்று
உள்ளம் ஒரு பகையாயிற்று
கள்ளம் எப்படியோ கவிந்து போயிற்று
ஆண் வர்க்கமே அநியாயம் என்று பட்டது
நேருக்கு நேராய் விழிகளைப் பார்ப்பவருண்டா
நினைப்பில் பிழைபடாத ஜன்மம் உண்டா
உடம்பைக் கூச வைக்கும் பார்வைகள் ஒன்றா இரண்டா
உயிரைக் காவு கொள்ளும் வேட்கைகள் எத்தனையெத்தனை
உடம்பு ஓர் அற்புதம் என்பான் ஒருவன்
மனசு ஒரு மாயம் என்கிறான் மற்றொருவன்
இன்னும் தீரவில்லை என்று ஏக்கப் படுகிறவன்
இன்னுமின்னுமென்று கேட்டுக் கொண்டவன்
கொடுக்கப் பிறந்தவள் பெண் என்பான்
கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று புகழ்கிறவன்
அத்தனை ஆண்களும் பெண்ணென்றால் உடம்பென்றே கருதுகின்றார்
வந்து இருந்து சென்றவ்னால்
வருத்தங்கள் அநேகம்
வந்தான் சண்டாளனாக பர்த்தா வடிவில்
இருந்தான் திருட்டு சந்தோஷத்தில்
சென்றான் கள்ளனாக கயவனாக
வந்திருந்து போனவனால்
வாழ்வில் சண்டாளியானேன்
மாமுனியென்பதை மறந்து சபித்தான்
மனிதத் தன்மையே இல்லாது
கருணை மறந்து கடின மனம் கொண்டு
கல்லாய்க் கிடவென்று சாபமிட்டு விட்டான்
கூடியிருந்ததை நினைத்தானா
கொஞ்சிக் கிடந்ததை நினைத்தானா
எடுத்து வைத்ததை மறந்தான்
கொடுத்துச் சிவந்ததை மறந்தான்
இந்தப் பிழைக்கு மன்னிப்பு இல்லையென்றே
இரும்பு மனசோடே சாபமிட்டான்
இருந்ததை மறந்தான்
கிடந்ததை மறந்தான்
நல்லதையெல்லாம் மறந்தான்
நடந்ததை மட்டும் மறக்கவில்லை
இது தான் ஆண் மனசு இது தான் ஆண்புத்தி
ஒருவன் வருகிறான் உடம்புக்காக
ஒருவன் சபிக்கிறான் உடம்பால் பிழை செய்தேனென்று
உடம்பு தேடி வந்தவன் ஒரு ஆண்
உடம்பால் பிழை செய்தேனென்று சபித்தவன் இன்னொரு ஆண்
அத்தனை ஆண்களும் அயோக்கியர்களே
அத்தனை ஆண்களும் யோநிக்கு அடிமைகளே
மாமுனிவன் என்பதும் வேஷம்
தேவராஜன் என்பதும் வேஷம்
ஊர்த்துவதாண்டவமாடி ஒரு காளி மனசைக் கொன்ற
நடராஜபெருமாள் என்பதும் வேஷம்
எல்லா ஆண்களும் ஏகத்துக்கு வேஷதாரிகள்
கலவிக்குக் காளி சபைக்கு மட்டும் சிவகாமியா
இது என்னது வேஷம் இல்லையா
உடம்பில் பாதியை ஒழித்துக் கொடுத்ததும் வேஷம்
உமையொரு பாகன் என்பதும் வேஷம்
மனசையல்லவா காலடியில் கழற்றிக்
கொடுத்திருக்க வேண்டும் மஹாதேவன்
தாக்ஷாயணியைத் தீயில் விழவிட்ட
சண்டாளனா நம் தெய்வம் கொடுமை
தாருகாவனத்து ரிஷிபத்தினிகள்
கற்பைக் களங்கப் படுத்த பிக்ஷாடனனாகப் போனவன் தானே இவன்
பிரம்மனின் தலையைக் கொய்து
பிச்சையெடுத்துத் திரிந்தவன் தானே சிவன்
மன்மதனைச் சுட்டெரித்து ரதியை அமங்கலியாக்கிய
மாபாவி தானே இந்த சர்வேஸ்வரன்
சிவனென்றும் சைவமென்றும் சிறப்புச் செய்தாலும்
சின்னவன் தானே இவன் பெண்ணைச் சீரழித்தவன் தானே சிவன்
இவனே இப்படியென்றால்
எவனைப் பற்றி என்ன வகை வைக்க
அனுசூயாவை நிர்வணமாக்கிப் பார்த்த
அந்த மும்மூர்த்திகளா நம் கடவுள் கேவலம்
தேடிவந்த சூர்ப்பநகையை மூக்கறுத்து
அனுப்பி வைத்தவன் ஓர் அவதாரமாம்
கோபியர்களோடு குலாவி மகிழ்ந்து
கொண்டாடியவன் ஓர் அவதாரமாம்
குருபத்தினியோடு கூடியவனைத் தலையில் வைத்துக்
கூத்தாடுகிறவன் நம் முழு முதற்கடவுளாம்
இந்திரன் மாறுவானாம்
இந்திராணி மாறாளாம்
என்ன அக்கிரமம் இது
பெண்ணைப் பெட்டிப் பாம்பாக்கும்
பித்தர்களின் உலகமிது
சவுக்கை எடுத்து
சரமாரியாக வீசலாம்
செத்துப் போங்கள் மொத்தமாய் என்று
சாபமிடலாம் கோபத்தில்
ஆனாலும் பாவம் தான்
அத்தனை ஆண்களும்
தாயொரு பெண்ணென்று
நினைத்தாலே போதுமே
தமக்கையும் தங்கையும்
பெண்களென்று எண்ணிப் பார்த்தால் போதாதா
கூடப் படுத்துக் கொந்தளிப்புகளையெல்லாம்
கொன்றழிப்பவள் பெண்தானென்று நினைப்பானா
பெற்று வளர்த்துப் பேணிக் காப்பாற்றி பிறகொருவன் கையில்
பிடித்துக் கொடுக்கும்போதாவடு பெண்ணருமை தெரியுமா இவனுக்கு
பெண்ணருமை தெரியாத ஆண்களின் உலகமிது
நிகழ்ந்தது என்ன
நேர்ந்தது என்ன
நெஞ்சுக்கு நீதி பிழைத்ததா
இளம் வயதில் பார்த்தானாம் இந்திரன்
எனைக் கண்டு மையலுற்றானாம்
கைபிடிக்கவும் கருத்துக் கொண்டிருந்தானாம்
கண்டதுண்டு அவனைத் தெரியும்
தேவர்கள் தலைவனென்ற தோரணையும்
பதவியும் அதிகாரமும் சலனப் படுத்தியது தான்
ஆணழகனென்றும் பட்டிருக்கிறது தான்
அடிமைகளுக்கேது தெரிவு
பெண்களுக்கேது தனியிருப்பு
இந்திரனோடு எப்படி இணையுமென் வாழ்வு
மாமுனி பெண் பார்த்தான்
மங்கல நாண் பூட்டினான்
இப்படித்தானே நிகழ்ந்தது
எங்கள் வதுவை
மாமுனியோடு பிணைந்தது
மனசும் வாழ்வும்
அமைதியான நதி போல
அழகாகத்தான் போய்க் கொண்டிருந்தது காலம்
தவசியின் வாழ்க்கையிலென்ன
பெரும் நிகழ்வுகள் இருக்க முடியும்
சாந்தமும் கனிவும் சேர்ந்தாலே
சமாதி நிலைக்கு ஒப்பத்தானே
சலனமற்றிருப்பதும் ஓர் உயர்நிலை
துன்பம் வராதிருப்பதும் ஒரு தூய மனநிலையில்
சிகரங்களுமில்லை சரிவுகளுமில்லை
சமவெளியில் வாழ்வதொன்றும் சாதாரணமில்லையே
இன்பத்துக்கும் துன்பத்துக்கும் இடையேயான கோட்டை
எப்படியோ அழித்து விடுகிறார்கள் மாமுனிகள்
பொங்குதலுமில்லை புழுங்குதலுமில்லை
இருமையைக் கடந்தவன்தானே ஞானி
கெளதமன் ஞானி கெளதமன் நிழலில் நானும்
காற்றோடு கலந்து காற்றாவது போல
நீரோடு சேர்ந்து நீராவது போல
நெருப்போடு கூடி நெருப்பாவது போல
நிலத்தில் விரவி நிலமாவது போல
வானோடு வானாவது போல
இது போதும் இந்தப் பிறவிக்கு
பார்த்ததைப் பற்றிக்கொள்ளும்
பாவி மனசு இந்திரனுக்கு
படையெடுத்து வந்ததுபோல
பாதகன் வந்துவிட்டான்
கிடைத்ததைக் கையகப்படுத்தும்
கிழட்டு மனசு மாமுனிக்கு
கைவிட்டுப் போய் களங்கம் படிந்ததென்று
குணம் மாறி நிறம் மாறி கோபம் கொண்டு சாபமிட்டான்
இரண்டு பேருக்கும் இடையிலா என் வாழ்வு
இரண்டு பேரும் விளையாடும் பந்தா நான்
என்னை வெறும் உடம்பாகத் தான் பார்த்தார்களா
இரண்டு சண்டாளர்களுமே விளங்கவில்லை
மனசென்று ஒன்று மனுஷிக்குண்டென்பதை
மஹாதேவனே மதிக்கவில்லையே
இந்த மாமுனியும் இந்திரனும் என்ன செய்வார்கள் பாவம்
பெண்ணென்றால் கிள்ளுக்கீரையென்று
நினைத்துவிட்டார்கள் பேதைக:ள்
காதலென்று பாராட்டிப் பேசுவார்கள்
காமம் குடி கொண்ட அடிமனசு ஆண்களுக்கு
படுத்துக் கிடக்கையில் புகழ்ச்சி சொல்வார்கள்
படுப்பதற்காகப் பேசும் வார்த்தைகள் அவை
குயிலென்பார்கள் கிளியென்பார்கள்
மயிலென்பார்கள் மானென்பார்கள்
முல்லைப்பல் வரிசை என்பார்கள்
முத்தமழை பொழிகிறதென்பார்கள்
மோகவெறிப் பிதற்றல்கள் எல்லாமே
மூண்டெழும் காமத்தீயின் ஜ்உவாலைகள் அவை
போகம் துய்க்க
பினாத்துகிற பினாத்தல்கள் அவை
சங்குக் கழுத்தென்று சொல்லி
சங்கறுப்பார்கள் சமயம் பார்த்து
ஸ்தனம் பற்றிப் பேசியே
ஸ்தானமழிப்பார்கள் சமய்ம பார்த்து
ஒரு கோடி வார்த்தைகளால் உடம்பை அர்ச்சித்து
உடம்பில் அழுந்திக் கிடப்பார்கள்
மனசை எந்த மனுஷனும் கேட்பதுண்டா
மனசை எந்த மனுஷனும் பார்ப்பதில்லை
மனசை எந்த மனுஷனும் மதிப்பதுண்டா
பெண்மனசு என்றால்
பெரிதில்லை என்ற எண்ணம்
என்னைக் கல்லாக்க இவனுக்கு என்ன உரிமை
என்னை ஏய்த்துக் கெடுக்க
அவனுக்கு என்ன கேடு
இரண்டு பேருமே
ஏகத்துக்கும் திருடர்கள்
ஒருவன் மாமுனியாம்
இன்னொருவன் தேவேந்திரனாம்
என்ன வித்யாசம் இரண்டு பேருக்கும்
பவம் இந்த ஆண்கள்
பரிதாபம் இவர்கள் உடம்பு தேடி அலைவது
காமத்தால் சீரழிந்தான் கழிசடை இந்திரன்
கற்பைக் கட்டிக் காக்க குட்டிச் சுவராய்ப் போனான் மாமுனிவன்
காமத்துக்கும் கற்புக்குமிடையே
காலகாலமாய் போராட்டம்
காவு வாங்கியது என்னை என் வாழ்வை
களங்கம் சூழ்ந்தது என் பெயரிலும்
யார்மீதும் வருத்தமில்லை
எவர் மேலும் கோபமில்லை
துயர் சுமந்து நிற்பது ஆணாதிக்கக் கொடுமையாலே
அலைகிறார்கள் பெண்ணுடம்புக்கு
கரடிகளாய் கழுகுகளாய்
போய்த் தொலையட்டும்
பெண்களுக்கு ஒரு வார்த்தை : ‘கவனம் ‘
சூரியசந்திரர்கள் சாட்சி
சூழ்கடல்கள் சாட்சி
வானமும் பூமியும் சாட்சி
வசந்தமும் கோடையும் சாட்சி
வண்ணத்துப் பூச்சிகளும் வண்டினங்களும் சாட்சி
பிரபஞ்சப் பெருவெளிக் கூத்து நடத்தும்
பெம்மான் சிவபெருமான் சாட்சி
சகித்துக் கொண்டு கூடவே வாழும்
சக்தி திரிசூலி காளியும் சாட்சி
என் கதையோடு முடியுமா
பெண்ணுக்கு இழைக்கப் படும் அநீதி
கல்லில்லை நான் கனிந்த மனசு
கதை முடியட்டும் என்னோடு
ஒத்த மனசோடு
உருப்படியாய் வாழட்டும் தம்பதிகள்
நாயகன் நாயகி
தோழன் தோழியாய் வாழும் நாள் வரட்டும்
நல்ல மனசு வரட்டும்
நாய்கள் நடுவே நுழையாதிருக்கட்டும்
அமிழ்தம் சிந்தக் கூடாது
அற்புதம் அழியக் கூடாது
உமைக்காகவும் காளிக்காகவும் இரக்கப் படுவோம்
மஹாதேவன் ராஜ்யத்தை என்று எப்படி உடைப்பது
அது வரையிலும் தவிர்க்க முடியாது
ஆணாதிக்க அட்டூழியங்கள்
பூமியில் பெண்ணரசு கண்டால் தான்
பொல்லாங்குகள் தீரும் புதுமைகள் தோன்றும்
படைப்பதும் காப்பதும் அழிப்பதும்
பெண் தெய்வத்தின் கையில் வரவேண்டும்
தேவதைகளின் ஆட்சியில் தான்
தேசமெல்லாம் செழிக்கும்
ஆதி சக்தியாலே தான் அனைத்தும் சீர்படும்
ஆதிசக்தியாலேதன் அனைத்தும் நேர்படும்
சிவன் ஆண்டது போதும்
சிவன் ஜெயித்தது போதும்
சக்தி அடங்கிக் கிடந்தது போதும் போதும்
சக்தி ஒடுங்கியிருந்தது போதும் போதும்
எழுக எழுக எங்கள் சக்தி
எழுக எழுகவே எங்கள் தேவி

(முற்றும்)

Series Navigationபாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு. >>

விக்கிரமாதித்தன்

விக்கிரமாதித்தன்