முள்பாதை 29

This entry is part [part not set] of 26 in the series 20100516_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

போட்டோ ஸ்டூடியோ யஜமானி இறந்து போய் விட்டதால் ஸ்டூடியோ தற்காலிகமாக மூடப்பட்டு விட்டது. அந்த போட்டோக்கள் என் கைக்கு வரவில்லை. அவை மறுபடியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை. அந்த விதமாக மெலட்டூர் நினைவுகளில் ஒன்று சிதிலமடைந்து விட்டது.
இரண்டு வாரங்கள் கழிந்து விட்டன. சாரதி டில்லிக்குப் போய் விட்டான். கிளப்பின் ஆண்டு விழா நெருங்கி விட்டதால் அம்மா அந்த ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தாள். அப்பாவும் கோர்ட் வேலைகளில் பிசியாக இருந்தார். வீட்டில் தனிமையால் சலிப்படைந்த நான் மதிய வேளைகளில் அடிக்கடி மாமியின் வீட்டுக்கு போகத் தொங்கினேன். மாமியிடம் எனக்கு ரொம்ப நெருக்கம் ஏற்பட்டது.
கடைசியில் எப்படியோ ராஜிக்குக் கடிதம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு நாட்கள் இரவும் பகலும் யோசித்துப் பிறகு நான் ஒரு முடிவுக்கு வந்தேன். மாமியிடம் இப்போ எனக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. மாமியின் முகவரியைத் தந்து ராஜேஸ்வரிக்குக் கடிதம் எழுதினால் என்ன? அவள் பதில் கடிதம் போட்டாலும் பரவாயில்லை. அம்மாவின் கண்ணில் பட்டு விடுமோ என்று பயப்பட வேண்டாம்.
அன்று மதியம் மாமியிடம் போன நான் ஒரு பேப்பரையும், பேனாவையும் கேட்டு வாங்கிக் கொண்டு அங்கேயே உட்கார்ந்து கடிதம் எழுதினேன்.
ராஜீ!
இத்தனை நாட்களாக கடிதம் எழுதவில்லையே என்று என்மீது கோபமாக இருக்கிறாய் இல்லையா. என்னை மன்னித்துவிடு ராஜீ! அம்மாவின் கிளப் ஆண்டு விழா நெருங்கி விட்டது. வீட்டில் யாருக்குமே ஒரு நிமிடம் கூட ஓய்வு இல்லை. நான் உன்னை மறக்கவே இல்லை. சதா உன்னுடைய நினைப்புதான். கோபத்தை மறந்துவிட்டு உடனே அங்கே என்ன நடக்கிறதென்று விவரமாகக் கடிதம் எழுது. உன் திருமண விஷயமாக என்ன முடிவு செய்யப்பட்டது? அத்தை எப்படி இருக்கிறாள்? குழந்தைகளைக் கேட்டதாக சொல்லு. உன் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
உன் மீனா
பி.கு. :- உங்கள் வீட்டு நாட்டு வைத்தியருக்கு என் நமஸ்காரங்கள். அவனை முற்றிலும் மறந்து விட்டேன் என்று தெரிவிக்கவும்.
கடிதம் எழுதிவிட்டு ஓரிரு முறை படித்துப் பார்த்தேன். எனக்குக் கடிதம் எழுதிப் பழக்கம் இல்லை. இதைவிட நன்றாக எழுதுவது எப்படி என்று தெரியவில்லை. சிலர் கடிதம் எழுதினால் எதிரே நின்று பேசுவதுபோல் இருக்கும்.
கடிதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சமையலறைப் பக்கம் போனேன். மாமி பஜ்ஜி தயாரிப்பதற்காக வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தாள்.
“மாமி! ஒரு சின்ன வேண்டுகோள்” என்றேன்.
“என்ன விஷயம்? சொல்லு” வெங்காய நெடிக்கு நீர் நிறைந்த கண்களுடன் நிமிர்ந்து பார்த்தாள் மாமி.
“என்னுடைய பிரண்டுக்கு உங்கள் வீட்டு முகவரியைத் தருகிறேன். என்னுடைய கடிதங்கள் இங்கே வரும்.”
மாமி புரியாதவள் போல் சந்தேகமாக பார்த்தாள்.
“அந்த பிரண்டுக்கு நான் கடிதம் எழுதுவதில் எங்க அம்மாவுக்கு விருப்பம் இல்லை.” மாமி கேட்காமலேயே விளக்கம் தந்தேன்.
“உங்க அப்பாவுக்குத் தெரியுமா?”
“தெரியும்.”
“அப்போ எழுது” என்றாள்.
ராஜிக்குக் கடிதம் எழுதிய பத்து நாட்கள் வரையில் மாமியின் வீட்டுப் பக்கம் போகும் வாய்ப்பே கிடைக்கவில்லை. அன்று மாலை அப்பா கோர்ட்டிலிருந்து வரும்போதே “மீனா!” என்று அழைத்தார்.
அம்மாவுடன் கிளப்புக்கு போவதற்காக தயாராகிக் கொண்டிருந்தேன். கூந்தலில் பூச்சரத்தை வைத்துக் கொண்டிருந்தவள் “என்ன டாடீ?” என்று கேட்டுக் கொண்டே வந்தேன்.
“அம்மா எங்கே?”
“மாடியில் இருக்கிறாள்.”
“இப்படி வா.”
அப்பாவிடம் சென்றேன். அப்பா என்னை கண்ணிமைக்காமல் பார்த்துவிட்டு “மெலட்டூருக்குக் கடிதம் எழுதினாயா?” என்றார்.
வியப்படைந்தவளாக ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தேன்.
“கடிதம் எழுதியவள் பதில் கடிதம் வந்ததோ இல்லையோ தெரிந்து கொள்ள வேண்டாமா? பட்டா மாமியின் கணவர் கோர்ட்டுக்கு வந்து கடிதம் கொடுத்துவிட்டுப் போனார்” என்று கடிதத்தை நீட்டினார்.
நான் சட்டென்று அப்பாவின் கையில் இருந்த கவரை பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டேன். அப்பா ஏற்கனவே படித்துவிட்டார் போலும். கவர் பிரிக்கப்பட்டு இருந்தது. உள்ளே இருந்த தாள்களை எடுத்து படிக்கப் போனேன்.
“உன் அறைக்குப் போய் படி. அம்மா இப்போ இங்கே வருவாள்” என்றார் அப்பா.
சட்டென்று மாடிக்கு போகப் போனேன்.
“மீனா!” அப்பா பின்னாலிருந்து அழைத்தார்.
என்ன என்பதுபோல் திரும்பிப் பார்த்தேன்.
“நீ அத்தையின் குடும்பத்துடன் அதிகம் பழக்கம் வைத்துக் கொள்ளாதே. கடிதப் போக்கு வரத்து இருப்பது அவ்வளவு நல்லது இல்லை.” அப்பா எச்சரித்தார்.
நான் சரி என்றோ இல்லை என்றோ சொல்லவில்லை. ராஜேஸ்வரியின் கடிதத்தைப் படிப்பதற்காக என் மனம் தவித்துக் கொண்டிருந்தது. நான் மாடிக்குப் போகும்போது அம்மா கீழே வந்தாள்.
கடிதத்தை புடவைத் தலைப்புடன் சேர்த்து வெளியில் தெரியாமல் பிடித்துக் கொண்டே அம்மாவைத் தாண்டிப் போகணும் என்று நினைத்தேன். ஆனால் அம்மா வழியை மறிப்பதுபோல் நின்று கொண்டாள்.
“மறுபடியும் மாடிக்குப் போவானேன்?”
“இதோ வந்து விடுகிறேன். பேக் மறந்து விட்டேன்.”
“சீக்கிரம் வா. நேரமாகிக் கொண்டிருக்கிறது.” அம்மா வழியை விட்டு கீழே இறங்கிப் போனாள்.
நான் என்னுடைய அறைக்கு வந்து கதவைச் சாத்திக் கொண்டேன். அம்மா பின்னாலேயே வந்து விடுவாளோ என்ற பயம் எனக்கு. அவசர அவசரமாக கடிதத்தைப் படிக்கத் தொடங்கினேன். படிக்கப் படிக்க என் இதழ்களில் முறுவல் படர்ந்தது.
அண்ணீ!
இன்று எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கு தெரியுமா? அதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. நீ போன பிறகு உன்னிடமிருந்த வரப் போகும் கடிதத்திற்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தேன். என் ஆர்வத்தை, எதிர்பார்ப்பைப் பார்த்துவிட்டு அண்ணன் என்னை கிண்டல் செய்யத் தொடங்கினான. ஒரு தடவை வெளியிலிருந்து வந்ததும் என்னை அவசரமாக அழைத்து “இதோ உங்க அண்ணி கடிதம் எழுதியிருக்கிறாள்” என்று கவரை நீட்டினான். நான் அவசர அவசரமாக கவரை பிரித்துப் பார்த்தால் உள்ளே வெள்ளை காகிதம்தான் இருந்தது. என் முகம் போன போக்கைப் பார்த்து அண்ணன் விழுந்து விழுந்து சிரித்தான்.
நான் கோபமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே போய்விட்டேன். அண்ணா என்னை கலாட்டா செய்து அழ வைக்கிறான் என்பதைவிட உன்னிடமிருந்து கடிதம் வரவில்லையே என்ற உண்மைதான் என்னை அதிகமாக பாதித்தது.
ஏமாற்றத்துடன் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கும் என்னைப் பார்த்து அண்ணன் சொன்னான். “அடி பைத்தியக்காரி! கடிதம் வரவில்லையே என்று வருத்தப் படுகிறாயா? உன்னை இன்னும் நினைவில் வைத்திருப்பாளா என்ன? இந்த ஊர் எல்லையைத் தாண்டியதுமே நம் எல்லோ¨ருயும் மறந்து விட்டிருப்பாள்.”
“இல்லை. அண்ணி என்னை ஒரு நாளும் மறக்க மாட்டாள். வேண்டுமானால் பந்தயம் கட்டுகிறேன்” என்றேன் பிடிவாதமாக.
“பார்த்துக் கொண்டே இரு.” வடிகட்டிய முட்டாளை பார்ப்பதுபோல் என்னைப் பார்த்துவிட்டு நகர்ந்து விட்டான்.
இன்று காலையில் அண்ணன் உன்னிடமிருந்து கடிதம் வந்திருப்பதாக சொன்ன போது நான் நம்பவில்¡ல. காதில் வாங்கிக் கொள்ளாததுபோல் நகரப்போன பொழுது “உண்மைதான் ராஜி” என்று என்னைத் தடுத்து கையில் தந்தான்.
என் மனம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது. இருந்தாலும் சுயமாகப் படிக்கும் வரையில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது நீ எழதிய கடிதம்தான். வேகவேகமாகப் படித்துவிட்டு நிமிர்ந்து பெருமையுடன் பார்த்தேன். “பார்த்தாயா. நான் சொன்னால் நம்பவில்லை. பந்தயப் பணம் எங்கே?” என்றேன்.
அண்ணன் சங்கடத்துடன் பார்த்துவிடு “எவ்வளவு?” என்றான்.
“நூறுரூபாய்க்குக் குறையக்கூடாது.”
“அதிகம்தான். இப்போ முடியாது. உன் திருமணத்தின் போது வட்டியுடன் சேர்த்து தருகிறேன்” என்றான்.
“என் திருமணத்தின்போது கொடுக்கத் தேவையில்லை. வட்டி பணம் சேர்த்து இருநூறு ஆன பிறகு கொடு” என்றேன்.
“என்ன செய்யப் போகிறாய்?”
“எனக்கு செலவு இருக்கு. உன்னிடம் சொல்ல மாட்டேன்” என்றேன்.
அண்ணி! அந்தப் பணம் எதுக்காக தெரியுமா? என் உயிர் சிநேகிதியான உனக்குத் திருமணப் பரிசு வாங்குவதற்காக. அந்தப் பரிசு உனக்கு தினமும் உபயோகப்படும் பொருளாக, என்னை நினைவுப்படுத்தக் கூடிய பொருளாக இருக்கணும்.
உன் கடிதத்தை நூறு தடவையாவது படித்திருப்பேன். அண்ணி! ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? யாருக்காவது கடிதம் எழுதணும் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் இதுவரையில் அந்த வாய்ப்பே கிடைத்ததில்லை.
என் இருபது வருட வாழ்க்கையில் எனக்குக் கடிதம் வருவது இதுதான் முதல் தடவை. அதுவும் உன்னிடமிருந்து வருவது எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. இத்தனை நாளாக நீ கடிதம் எழுதாமல் இருந்ததற்கு நான் ஒன்றும் தவறாக நினைக்கவில்லை. சாரதி அங்கே வந்திருக்கிறான் என்று எனக்குத் தெரியும். மாமா கடிதம் எழுதியிருந்தார். கிளப் ஆண்டு விழா ஏற்பாடுகளில் ஓய்வு இல்லை என்று எழுதியிருந்தாயே? அது பொய்தானே. அவனைப் பற்றி எந்த விவரமும் எழுதவில்லையே? வெட்கமா! நம் இருவருக்கும் நடுவில் எந்த ரகசியங்களும் இருக்கக் கூடாது என்று நீதானே சொல்லியிருந்தாய். மறந்து போய்விட்டாயா?
அடுத்த கடிதத்தில் சாரதியைப் பற்றி எழுது. பார்க்க எப்படி இருப்பான்? நீ அவனிடம் பேசுவாயா? முடிந்தால் அவனுடைய போட்டோ ஒன்று அனுப்பி வை. அந்த அதிர்ஷ்டசாலியைப் பார்க்கணும் போலிருக்கு. விவரமாகக் கடிதம் எழுதுவாய் இல்லையா. உன் கடிதம் எனக்கு ஒரு அழகான உலகத்தை ஏற்படுத்தித் தரும் என்பதை மறந்த விடாதே.
அத்தனை பிசியாக இருந்தும் நீ என்னை மறக்காமல் இருந்ததற்கு தாங்க்ஸ். மாமா, மாமிக்கு என் நமஸ்காரங்கள். அம்மா உன்னைக் கேட்டதாக எழுதச் சொன்னாள். அம்மாவுக்கு உன்னை ரொம்பப் பிடித்து விட்டது. உனக்குக் கொஞ்சம்கூட தலைகனம் இல்லையாம். ரொம்ப புத்திசாலியாம். அக்கம் பக்கத்தாரிடம் பேச்சு வாக்கில் சொல்லும் போது காதில் விழுந்த விஷயங்கள் இவை.
உன் பதிலுக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்.
உன் ராஜி
பி.கு. எங்கள் வீட்டு கிராம வைத்தியருடன் புது சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. என்றும் இல்லாத விதமாக என்மீது எரிச்சல் காட்டுகிறான். ஒரு நாள் பேச்சு வாக்கில் சிரித்துக் கொண்டே உனக்குக் கடிதம் எழுதணும் என்ற எண்ணமோ, உன்னை மறுபடியும் பார்க்கணும் என்ற யோசனையோ இருந்தால் முற்றிலும் மறந்து விடச் சொன்னான். நான் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்று உனக்குக் கடிதம் எழுதுவதற்காக கவர் வாங்கி வரச்சொன்னால் உனக்குக் கடிதம் எழுதவேகூடாது என்றும், தேவையில்லை என்றும் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டான்.
காரணம் என்ன என்று கேட்டால் பதில் சொல்லவில்லை. அண்ணாவின் சுபாவத்திற்கு இது நேர்மாறாது. எந்த வேலையாவது செய்யக்கூடாது என்று சொன்னால் முன்கூட்டியே காரணத்தைச் சொல்லி விடுவான். ஆனால் இந்த விஷயத்தில் நான் கேட்ட பிறகும் காரணம் சொல்லவில்லை. எனக்கு நினைவு தெரிந்த பிறகு முதல்முறையாக அண்ணாவின் வார்த்தையை மீறுகிறேன். நீயே சொல்லு. நாம் இருவரும் கடிதங்கள் எழுதிக்கொள்வதால் யாருக்காவது கஷ்டமோ நஷ்டமோ ஏற்படப் போகிறதா? இல்லையே. அதனால்தான் துணிந்து எழுதுகிறேன்.
யாரோ பின்னால் துரத்தி வருவதுபோல் வேகமாக படித்து முடித்துவிட்டேன். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ராஜியிடம் நேருக்கு நேர் பேசுவதுபோல் உணர்ந்தேன். பேசவே தெரியாதோ என்பதுபோல் தென்படும் ராஜி எவ்வளவு ரசனையுடன் கடிதம் எழுதியிருக்கிறாள்!
“மீனா!” கீழே இருந்து அம்மாவின் குரல் பொறுமையற்று ஒலித்தது. சட்டென்று பீரோவைத் திறந்து கடிதத்தை புடவையின் நடுவில் வைத்துவிட்டு கதவைச் சாத்திக் கொண்டு கீழே வேகமாக வந்தேன். கையோடு ராஜிக்குக் பதில் எழுத வேண்டும் என்ற விருப்பத்தை வலுக்கட்டாயமாக அடக்கிக் கொண்டேன்.
நான் கீழே வந்த போது அம்மா, அப்பா எனக்காகக் காத்திருந்தார்கள். அன்று கிளப்பில் டி.கே பட்டம்மாளின் பாட்டு கச்சேரி இருந்தது. அப்பாவுக்கு பாட்டு கச்சேரி என்றால் உயிர். சாதாரணமாக கிளப்பில் நடக்கும் மற்ற நிகழ்ச்சிகளுக்கு வராதவர் பாட்டு கச்சேரி இருந்தால் கட்டாயம் வருவார்.
நாங்கள் போய் சேரும்போது கொஞ்சம் தாமதமாகி விட்டது. வண்ண வண்ண விளக்குத் தோரணங்களால் கிளப்பின் கட்டிடம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதன் வளாகத்தில் விலை உயர்ந்த கார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பட்டுப்புடவை, கழுத்துக்கொள்ளாத நகைகள் அணிந்து கொண்ட பெண்களும், கோட்டும் சூட்டும் அணிந்து கொண்டு ஆண்களும் தங்களுடைய ஆதிக்கியத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்கள். எனக்கு திடீரென்று ராஜி என் பக்கத்தில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது. நான் அனுபவிக்கும் இந்த வாழ்க்கையைப் பற்றி அவளும் தெரிந்து கொண்டால் நன்றாக இருந்திருக்கும்.
பாட்டு கேட்க எனக்குப் பிடிக்கும். ஆனால் கர்னாடக இசையில் அவ்வளவு நாட்டம் இல்லை. இரவு நேரத்தில் ட்ரான்ஸிஸ்டரில் குறைந்த வேல்யுமில் ஹிந்தி திரைப்பட பாடல்களைக் கேட்பது என் வழக்கம்.
அம்மா, அப்பா மற்றும் நான் முன் வரிசையில் அமர்ந்துகொண்டோம். அப்பா கச்சேரி கேட்பதில் ஆழ்ந்து விட்டார். அம்மா கச்சேரியைக் கேட்டுக் கொண்டே நடுநடுவில் தன் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் மிஸெஸ் ராமனுடன் தாழ்வான குரலில் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.
ராஜியின் கடிதத்தை மனதிலேயே அசை போட்டபடி நான் மெலட்டூர் நினைவுகளில் ஆழ்ந்து போய்விட்டேன்.

Series Navigationவிஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தொன்று >>

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்