முள்பாதை 12

This entry is part [part not set] of 24 in the series 20100108_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

காலை பத்துமணி. ராஜேஸ்வரியும், நானும் குளியலை முடித்துக் கொண்டு சாப்பிட உட்காரும் போது, “கமலா! வீட்டில் இருக்கிறாயா?” என்று வாசலில் குரல் கேட்டது.
அத்தையும், ராஜேஸ்வரியும் உள்ளே இருந்தார்கள். முன் அறையில் இருந்த நான் வெளியே எட்டிப் பார்தேன். வாசலில் வந்திருக்கும் அம்மாளுக்கு அறுபது வயது இருக்கக் கூடும். தலை முழுவதும் வெள்ளியாக நரைத்திருந்தது. நடுவகிடு எடுத்து கூந்தலை முடித்து கொண்டை போட்டிருந்தாள். முக்கில் எட்டுக்கல் பேசரி, காதில் வைரத்தோடு, கழுத்தில் இரட்டைவடச் சங்கிலி. அரக்கு நிறத்தில் அகல கரையிட்ட ஜரிகையில் ஒன்பது கஜப் புடவையை உடுத்தியிருந்தாள். தலைப்பின் அழகு தெரியும்படி முன்னால் சொருகியிருந்தாள். பழுத்த சுமங்கலியாக, காவியங்களில் வர்ணிக்கப்படும் மகாலக்ஷ்மியாக காட்சி தந்த அந்த அம்மாளை நான் கண்ணிமைக்காமல் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன்.
“ஆனந்தனின் மகள் நீதானே? உங்க அத்தை உள்ளே இருக்கிறாளா?” என்று கேட்டுக் கொண்டே அந்த அம்மாள் உள்ளே வந்தாள்.
“இருக்கிறாள். வாங்க, உட்காருங்க.” அந்த அம்மாளை மரியாதையுடன் வரவேற்றுக் கொண்டே உள்பக்கம் திரும்பி “அத்தை! உங்களுக்காக யாரோ வந்திருக்காங்க” என்றேன்.
“உட்காரச் சொல்லு. வருகிறேன்.” அத்தை பதிலளித்தாள், சலிப்பு கலந்த குரலில். சாப்பிடும் நேரத்தில் யாராவது வந்துவிட்டால் அவர்களுடன் சாவகாசமாக பேசவும் முடியாது. போகச் சொல்லவும் முடியாது. வேலையிருக்கும்போது வெளியாட்கள் யாராவது வந்து விட்டால் அத்தைக்கு சலிப்பு ஏற்படுவதை ஏற்கனவே கவனித்திருக்கிறேன்.
அந்த அம்மாள் என்னை பரிசீலிப்பது போல் பார்த்துக் கொண்டே கட்டில் விளிம்பில் உட்கார்ந்து கொண்டாள். “உங்க அம்மா, அப்பா நன்றாக இருக்கிறார்களா?” என்று ரொம்ப நாள் பழக்கம் இருப்பவள் போல் என்னிடம் கேட்டாள்.
நன்றாக இருக்கிறார்கள் என்பதுபோல் தலையை அசைத்தேன்.
“யார் வந்திருக்காங்க அண்ணீ?” என்று கேட்டுக்கொண்டே ராஜியும், அவள் பின்னாலேயே அத்தையும் அங்கே வந்தார்கள்.
“அட! நீங்களா! நான் வேறு யாரோ என்று நினைத்துவிட்டேன்.” அந்த அம்மாளைப் பார்த்ததும் அத்தை பதற்றத்துடன் அருகில் வந்தாள். “நீங்கன்னு நினைக்கவில்லை.” தாமதம் செய்ததற்கு நொந்து கொள்வதுபோல் சொன்னாள்.
“மாலையில் மகளுக்கு பூச்சூட்டல் சடங்கு வைத்திருக்கிறோம். ஊரில் மற்றவர்களை அழைக்க குழந்தைகள் போயிருக்கிறார்கள். நம்ப ஆனந்தனின் மகள் வந்திருக்கிறாள் என்று தெரிந்தது. வந்து பார்த்தாற்போலவும் இருக்கும்னு நானே கிளம்பி வந்தேன். மாலையில் தாம்பூலம் வாங்கிக்கொள்ள ராஜியுடன் அந்தப் பெண்ணையும் அனுப்பு” என்றாள்.
அத்தை சரி என்பதுபோல் தலையை அசைத்தாள். அந்த அம்மாள் ரொம்ப நேரம் உட்காரவில்லை. இருந்த கொஞ்ச நேரத்திலேயும் ராஜேஸ்வரியின் கல்யாணத்தைப் பற்றித்தான் பேச்சு நடந்தது.
“ராஜீக்கு வரன் பார்த்துக் கொண்டு இருக்கிறாயா?” அந்த அம்மாள் கேட்டாள்.
“பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நம்மைப் போன்றவர்களின் வீடுகளில் பெண் கழுத்தில் தாலி ஏறுவது என்றால் வெறும் பேச்சு இல்லையே?” என்றாள் அத்தை.
திருமணப் பேச்சு வந்ததும் ராஜி மெதுவாக அங்கிருந்து வெளியேறினாள். அத்தையின் முகத்தில் வேதனையும், கவலையும் குடி கொண்டிருப்பதை கவனித்தேன்.
அந்த அம்மாள் கிளம்பிப் போய்விட்டாள். ராஜியும், நானும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது அத்தை சொன்னாள். சற்று முன்னால் வந்த அம்மாளின் பெயர் மகாலக்ஷ்மியாம். அவளுடைய கணவரும், அப்பாவும் குருவும் சீடனுமாக பழகியவர்களாம். அப்பா அந்த அம்மாளை அண்ணி என்றும், அவளுடைய கணவரை அண்ணா என்றும் அழைப்பாராம். அத்தை சொன்னதை எல்லாம் சிரத்தையுடன் கேட்டுக் கொண்டிருந்த நான் இடையில் ராஜியிடம் “ராஜீ! அந்த அம்மாளை ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள முடியுமா?” என்று கேட்டேன்.
“போட்டோவா? அந்த அம்மாளையா? எதுக்கு?” வியப்புடன் கேட்டாள்.
“அழகாக, வித்தியாசமாக தென்படும் மனிதர்களை, காட்சிகளை போட்டோ எடுப்பது என் வழக்கம். அது என் ஹாபியும்கூட. அதோடு ஏதாவது போட்டிக்கும் அனுப்பலாம்.”
“போட்டியா? என்ன போட்டி?”
“சில பத்திரிகைகள் புகைப்பட போட்டிகள் நடத்தும். அதுபோன்ற போட்டிகளுக்கு போட்டோவை பொருத்தமான தலைப்பு சூட்டி அனுப்பி வைக்கலாம்.”
ஒரு தடவை பத்திரிகை ஒன்றில் நான் அனுப்பிய சூரியாஸ்தமனம் என்ற புகைப்படத்திற்கு முதல்பரிசு கிடைத்த செய்தியை அவர்களிடம் சொன்னேன்.
மாலை ஆகிவிட்டது. குழந்தைகள் எல்லோரும் மூன்று மணி முதல் தயாராகத் தொடங்கினார்கள். ராஜேஸ்வரி அவர்களுக்கு தலைவாரிவிட்டு, உடைகளை மாற்றிவிட்டாள். ஐந்து மணியாகும் போது நானும் முகம் அலம்பிக் கொண்டு மளமளவென்று தயாரானேன். பெட்டியைத் திறந்து இரண்டு புடவைகளை எடுத்தேன்.
ஒன்று சந்தன கலரில் கறுப்பு பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட காஷ்மீர் சில்க் புடவை. மற்றொன்று ரோஜா நிறத்தில் ஜரிகை வேலைபாடு செய்யப்பட்டிருந்த ஜார்ஜெட் புடவை. இரண்டையும் எடுத்துக் கொண்டு ராஜேஸ்வரியிடம் சென்று “உனக்கு எது வேண்டுமோ எடுத்துக்கொள்” என்றேன்.
ராஜேஸ்வரி வியப்புடன் பார்த்தாள். கண்கள் அகல விரித்து “எதுக்கு?” என்றாள்.
“அந்த மாமி வந்து அழைத்தாளே தாம்பூலம் வாங்கிக்கொள்ள. ஒன்றை நீ உடுத்திக் கொண்டால் இன்னொன்றை நான் கட்டிக் கொள்கிறேன்.”
“நீயும் வருகிறாயா?”
இந்த முறை வியப்படைவது என் பங்காயிற்று. “ஆமாம். ஏன்? நான் வரக்கூடாதா?” சந்தேகமாக கேட்டேன்.
ராஜேஸ்வரியின் கண்கள் மின்னின. “ஏன் வரக்கூடாது? இது போன்ற இடங்களுக்கு நீ வருவாயோ மாட்டாயோ? உனக்கு பிடிக்காதோ என்னவோன்னு நினைத்தேன். கொஞ்சம் இரு. ஐந்து நிமிடங்களில் தயாராகி விடுகிறேன்.”
அங்கிருந்து ஓடப்போன ராஜேஸ்வரியின் தோளைப் பற்றி நிறுத்திவிட்டு “முதலில் இதில் எது வேண்டுமோ சொல்லு” என்றேன். ராஜேஸ்வரி நான் ஊகித்தது போலவே காஷ்மீர் சில்க் புடவையை எடுத்துக் கொண்டாள்.
அரைமணியில் இரண்டு பேரும் ரெடியாகிவிட்டோம். நான் ராஜேஸ்வரியை வற்புறுத்தி என்னைப் போலவே லூசாக ஒற்றைப் பின்னல் போட்டு, ஒற்றை ரோஜாப் பூவை தலையில் வைத்தேன். என்னுடைய தொங்கட்டான்களை ராஜேஸ்வரி மறுத்தபோது கேட்காமல் அவள் காதுகளில் அணிவித்தேன்.
அழகான சில்க் புடவையில், லூசான ஒற்றைப் பின்னலுடன், தலையில் ரோஜாப் பூவுடன் ராஜேஸ்வரியின் தோற்றமே மாறிப் போய்விட்டது. ஆரோக்கியமும், இளமையும் சேர்ந்துகொண்டதில் செதுக்கிய சிற்பம் போல் காட்சி தந்தாள். அவள் கையைப் பற்றி அழைத்துப் போய் அத்தையின் முன்னால் நிறுத்தினேன். “அத்தை! பார்த்துக் கொள்ளுங்கள் உங்கள் மகளை” என்றேன்.
ராஜேஸ்வரி வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டாள். அத்தையின் கண்களில் தென்பட்ட திருப்தியும், அன்பையும் பார்த்த பிறகு நான் ஏதோ பெரிய காரியத்தைச் சாதித்து விட்டது போல் சந்தோஷமாக உணர்ந்தேன்.
அம்மா சொன்னது எவ்வளவு உண்மை! கொஞ்சம் சிரத்தை எடுத்தக் கொண்டால் அழகு இல்லாவிட்டாலும் தோற்றத்தை மெருகேற்றிக் கொள்ள முடியும் என்று அம்மா அடிக்கடி கிளப் மெம்பர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பாள். ராஜேஸ்வரியின் விஷயத்தில் அது முற்றிலும் உண்மையாகிவிட்டது. நானும் அவளும் ஏறக்குறைய ஒரே வயது. ராஜேஸ்வரி கொஞ்சம் குள்ளமாகவும், பூசினாற்போலவும் இருப்பதால் பெரியவளாகத் தென்படுவாள்.
நாங்க இருவரும் வீட்டை விட்டு வெளியே வரும்போது கிருஷ்ணன் எதிரே வந்தான். தோட்டத்திலிருந்து வருகிறான் போலும். கையில் இருந்த கூடை நிறைய புதிதாக காய்கறிகள் இருந்தன. எங்கள் இருவரையும் பார்த்துவிட்டு ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டான். அவன் கண்களில் வியப்பும், பிரமிப்பும் ஸ்பஷ்டமாக தென்பட்டது. அவன் பார்வை என்மீது அரை வினாடிக்கு மேல் நிலைக்கவில்லை. தங்கையைக் கண்குளிர பார்த்துக் கொண்டு உலகத்தையே மறந்து விட்டாற்போல் நின்று விட்டான். எனக்கு உடல் பற்றி எரிவது போல் இருந்தது. முழங்கையால் ராஜேஸ்வரியை இடித்துவிட்டு “கிளம்புவோமா?” என்றேன்.
என் குரலை கேட்டு இந்த உலகத்திற்கு மீண்டு வந்தவன்போல் “எங்கே போறீங்க ராஜீ?” என்று கேட்டான்.
“கர்ணம் மாமா வீட்டில் விசேஷம். தாம்பூலம் வாங்க போய்க் கொண்டிருக்கிறோம் அண்ணா.”
பின்னாலிருந்து வந்த அத்தை “வேறு எங்கேயும் போகாமல் நேராக வீட்டுக்கு வந்து விடுங்கள். ராஜீ! சுப்பலக்ஷ்மி வீட்டில் மீனாவை தங்கள் வீட்டுக்கு வரச் சொல்லி கட்டாயப் படுத்துவார்களோ என்னவோ. பைத்தியம் போல் அழைத்துப் போய்விடாதே. நீங்களே வாங்க எங்க வீட்டுக்குன்னு சொல்லு” என்று எச்சரித்தாள். நாங்கள் போய்க் கொண்டிருந்தபோது கிருஷ்ணனின் குரல் கேட்டது. “அம்மா! நல்ல துனிமணியும், ஓரளவுக்கு நகைகளும் இருப்பது பெண் பிள்ளைகளுக்கு எவ்வளவு அவசியமோ இப்போ புரிகிறது.” அந்தப் பேச்சில், கம்பீரமாக இருந்த குரலில் ஏதோ ஆதங்கமும், இயலாமையும் மறைந்திருப்பதுபோல் தோன்றவே என்னையும் அறியாமல் திரும்பிப் பார்த்தேன்.
கிருஷ்ணனின் கண்கள் உலகத்தையே மறந்து விட்டு ராஜேஸ்வரியையே பார்த்துக் கொண்டிருந்தன. அந்தக் கண்களில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த அன்பு என் கவனத்திலிருந்து தப்பவில்லை. ஏனோ தெரியவில்லை. எனக்கு உடல் தீப்பற்றி எரிவதுபோல் இருந்தது. ராஜேஸ்வரி அழகாக இருக்கிறாள். அந்த விஷயத்தை எல்லோரையும்விட நானே முதலில் ஒப்புக்கொள்கிறேன். அவள்மீது எனக்கு எந்த விதமான பொறாமையும் இல்லை.
ஆனால் இப்போ நான் கட்டியிருக்கிற புடவை ரொம்ப அழகானது. அதைக் கட்டிக் கொண்டால் என் அழகு இரு மடங்காகிவிடும் என்றும், சாதாரணமாக எந்தப் புடவையாக இருந்தாலும் நான் உடுத்திக் கொண்டால் அந்தப் புடவைக்கு அழகு வந்து விடும் என்றும், ஆனால் இந்தப் புடவை என் அழகை மேலும் அதிகப்படுத்திக் காட்டுகிறது என்றும் பலபேர் பலமுறை சொல்ல நானே கேட்டிருக்கிறேன்.
என்றுமே ஆடைகள் விஷயத்தைப் பொருட்படுத்தாத அப்பாகூட இந்தப் புடவையை நான் உடுத்திக் கொண்டபோது “இது உனக்கு ரொம்ப நன்றாக இருக்கு மீனா” என்று சிலாகித்தார்.
அப்படி பலபேரின் பார்வையைக் கவர்ந்துவிட்ட இந்தப் புடவை கிருஷ்ணனின் கவனத்தைக் கொஞ்சம் கூட ஈர்க்காதது கண்டு எனக்கு எரிச்சலாக இருந்தது. ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது. வேகமாக தலையைத் திருப்பிக் கொண்டேன்.
“இந்தப் பட்டிக்காட்டானுக்கு என்ன தெரியும்? அவனும்… அவன் மூஞ்சியும்.” எடுத்தெறிவது போல் மனதில் நினைத்துக் கொண்டு என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்.

(தொடரும்)

Series Navigation