முறிவு

This entry is part [part not set] of 39 in the series 20060630_Issue

கவனசர்மா


ஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருந்த சுஜாதா, காற்றில் நெற்றி மீது வந்து விழுந்த கேசத்தைப் பின்னால் தள்ளிவிட்டுக் கொண்டாள். மனதில் சூழ்ந்து கொண்டிருக்கும் எண்ணங்களை துரத்த முயற்சி செய்தாலும் மறுபடியும் மறுபடியும் அதைப் பற்றித்தான் யோசிக்கத் தோன்றியது.

தான் இப்பொழுது சந்திக்கப் போகும் லாயர் பிரச்னையை தன்னுடைய கோணத்தில் பார்ப்பாரோ இல்லையோ. பார்க்கவில்லை என்றாலும் ஆச்சரியப்பட வேண்டியது இல்லை. கணவன், மாமியார், மாமனார் இருக்கட்டும். அவளுடைய தாய் தந்தை கூட தவறு அவளுடையதுதான் என்று சொல்லிவிட்டார்கள். அதனால்தான் விஷயத்தைச் சொல்லாமல் லாயர் சுவாமிநாதனிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்கொண்டாள். தன்னுடைய பிரச்னைக்கு தான் தேர்ந்து எடுத்திருக்கும் பரிகாரம் சரியானது என்று அவள் நம்பினாள். லாயரை நம்பவைக்க வேண்டும்.
இதற்கு முன்னால் அவள் சந்தித்த லாயர்கள் மூன்று பேரும் நல்லது என்று தாங்கள் நம்பியதை பாடம் புகட்டாத குறையாக அவளுக்கு அறிவுரை வழங்கினார்கள். அதுதான் அவளுக்குக் கொஞ்சம் தைரியம் குறைவாக இருந்தது.
கதை எழுதுபவன் கதையை எப்படி தொடங்கினால் நன்றாக இருக்கும் என்று பலவிதமாக எழுதிப் பார்ப்பதுபோல், லாயரிடம் தன்னுடைய கேஸை எப்படி எடுத்துச் சொன்னால் சரியாக இருக்குமோ விதவிதமாக மனதிலேயே ஒத்திகைப் பார்த்துக் கொண்டாள். கடைசியில் எதுவும் பிடிக்காமல் அங்கே நேரில் சந்திக்கும்போது தன் மனதிற்கு தோன்றிய விதமாகச் சொல்லி விடுவது என்ற முடிவுக்கு வந்தவளாக மனதிற்கு ஓய்வு கொடுக்க விரும்பினாள். ஆனால் முள்ளாக பதிந்து விட்ட கடந்த கால நினைவுகள் மனதை நிம்மதியாக இருக்கவிடவில்லை.
‘சுவாமிநாதன் அட்வகேட்’ என்ற போர்ட் இருந்த வீட்டின் முன்னால் ஆட்டோ வந்து நின்றது.
சுஜாதா ஆட்டோவுக்கு பணம் கொடுத்து விட்டு உள்ளே நடந்தாள். வீடு நாகரீகமாகவும் கலைரசனையோடும் கட்டப்பட்டிருந்தது. பணக்காரத் தன்மையை பறைச்சாற்றும் எந்த ஆடம்பரமும் தென்படவில்லை. குமாஸ்தாவிடம் தன்னுடைய பெயரைத் தெரிவித்தாள்.
“வக்கீல் சார் உங்களுக்காகத்தான் காத்துக்கொண்டு இருக்கிறார். உள்ளே போங்க” என்று அவளை உள்ளே அனுப்பிவைத்தார்.
அறைக்குள் அடியெடுத்து வைத்ததும் அது ஏ.சி. அறை என்பதை உணர்ந்தாள். சுற்றிலும் மின்சார விளக்குகள் பொருத்திய வெங்கடாசலபதி போடோ ஏதாவது சுவரில் இருக்கிறது¡ என்று பார்வையிட்டாள். அப்படி எதுவும் இல்லாதது அவளுக்கு தைரியமாக இருந்தது. அவளுடைய புகுந்த வீட்டில் அது போன்ற பெரிய போட்டோ ஒன்று இருந்தது. அந்த போட்டோவுக்கும் காலங்காலமாக கடைபிடித்து வரும் பண்பாடுகளுக்கும் இனம் தெரியாத தொடர்பு ஏதோ இருப்பதாக அவள் நம்பினாள். அது போன்ற பண்பாட்டைக் கண்டால் அவளுக்கு பயம்.
“என் பெயர் சுஜாதா.” கைகளை ஜோடித்து வணக்கம் தெரிவித்தாள்.
“லாயர் சுவாமிநாதன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டே அவளைக் கூர்ந்து பார்த்தார். தலைமுடியை பாப் செய்துகொண்டிருந்தாள். எண்ணெய் தடவாத கேசம். கட்டியிருந்த புடவை ஷிபான்தான் என்றாலும் நேர்த்தியாக உடுத்தியிருந்தாள்.
“சமீபத்தில்தான் வெளிநாட்டிலிருந்து வந்தீங்க போலிருக்கு” என்றார் சுவாமிநாதன்.
“ஆமாம்” என்றாள் சுஜாதா வியப்புடன்.
“அமெரிக்கா? ஆஸ்ட்ரேலியா? கெனடா?”
“அமெரிக்கா.”
“முதலில் உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு என்னிடமிருந்து என்ன உதவி வேண்டுமோ சொல்லுங்கள்.”
“எனக்கு விவாகரத்து வேண்டும்.” சுஜாதா நேராக விஷயத்திற்கு வந்தாள்.
“இந்த நாட்டில் வக்கீல்களையும் சேர்த்து விவாகரத்து பெற்றுக் கொள்வதை யாருமே ஊக்குவிக்க மாட்டார்கள்.”
“அனுபவத்தில் எனக்கும் அந்த விஷயம் புரிந்துவிட்டது. ஆனால் அப்படிச் செய்தால் நஷ்டம் உங்களுக்குதானே?”
‘லாயர்கள் பணத்திற்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள் இல்லையா’ என்ற தொனி சுஜாதாவின் பேச்சில் வெளிப்பட்டதை உணர்ந்தாலும், சுவாமிநாதன் அதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டார்.
“உண்மைதான். ஆனால் அந்த நஷ்டத்தை மேரேஜ் கெளன்ஸிலிங் என்ற பெயரில் வசூல் செய்யும் ·பீஸ¤டன் சேர்த்துவிடுவோம்.”
“நான் விவாகரத்து பெற்றுக் கொள்ள விரும்புவதாகச் சொன்னது முதல் எங்கள் வீட்டில் அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி ஒவ்வொருவரும் தம் பக்கத்தில் குண்டு வெடித்து விடுமோ என்பதுபோல் மிரண்டு போய்விட்டார்கள். அப்படிச் செய்யாதே என்று கெஞ்சுகிறார்கள்.”
“அவர்களைச் சொல்லுவானேன்? உங்க அம்மாவோ, அண்ணியோ விவாகரத்து செய்யப் போவதாக சொன்னால் நீங்களே மறுப்பு சொல்லுவீங்க. அப்பாவுக்கு வயதாகிவிட்டது என்றும், இத்தனை நாள் பொறுத்தவள் எஞ்சிய காலத்தையும் பொறுமையுடன் கழிக்கச் சொல்லி அம்மாவிடம் சொல்வீங்க. அண்ணன் நல்லவன் என்றும் அப்படியே அவன் தவறு செய்திருந்தாலும் மேலும் ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்க்கச் சொல்லி அண்ணிக்கு அறிவுரை வழங்குவீங்க. உண்டா இல்லையா? சொல்லுங்கள்.”
சுவாமிநாதன் கேட்ட கேள்விக்கு சுஜாதா உடனே பதில் சொல்லவில்லை. கொஞ்சம் யோசித்துவிட்டு “ஒரு சராசரி பெண்ணாக இருந்தால் அப்படிச் சொல்லியிருப்பேனோ என்னவோ. ஆனால் என்னுடைய அம்மாவோ, அண்ணியோ அந்த முடிவை எடுத்திருந்தால், அவர்களால் இனியும் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில்தான் அந்த முடிவுக்கு வந்திருப்பார்கள் என்று நினைப்பேன். விவாகரத்து பெற்றுக்கொள்வதற்கு ரொம்ப பலமான காரணங்கள் இருக்க வேண்டும் என்று என்னிடம் நிறையபேர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை. தினமும் தொண தொணவென்று நச்சரிக்கும், ஒவ்வொரு வினாடியும் ஆணாதிக்கத்தை நிலை நாட்டும் கணவனுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்வது ரொம்ப கஷ்டம். அதைவிட என்றோ ஒரு நாள் கோபத்தில் அடித்தாலும் தாங்கிக் கொள்வது சுலபம்.”
“உண்மைதான். திருமணம் ஆனவர்களில் நூற்றுக்கு தொன்னூறு பேர் தினமும் விவாகரத்து பற்றி யோசித்துக் கொண்டுதான் இருப்பார்கள். மீதி பத்து பேர் வாழ்க்கைத் துணையை இழந்தவர்களாகவோ அல்லது ஏற்கனவே டைவோர்ஸ் வாங்கிக் கொண்டு சந்தோஷமாக வாழ்கிறோம் என்று நினைப்பவர்களாகவோ இருப்பார்கள். அதாவது இந்த நாட்டில் விவாகரத்து என்பது சாதாரண விஷயம் இல்லை என்றாலும், அதைப் பற்றிய எண்ணங்கள் சர்வசாதாரணம். யாரையோ சொல்லுவானேன்? என் மனைவி நாளில் பத்து தடவையாவது என்னை டைவேர்ஸ் செய்துவிட்டால் என்ன என்று யோசிப்பாள். ஆனால் செய்ய மாட்டாள். ஏன் தெரியுமா? என்னுடைய பெரிய மகளுக்கே இன்னும் திருமணம் ஆகவில்லை. சின்ன பிரச்னைக்கே டைவொர்ஸ் கொடுத்தால் தன் மகளுக்கு திருமணம் ஆகாமல் போய் விடுமோ என்ற பயம். தாய் விவாகரத்து ஆனவள் என்று தெரிந்தால் மகளுக்கு அதே குணம் வந்து விட்டால் என்ன செய்வது என்று பிள்ளை வீட்டுக்காரர்கள் பின் வாங்கக் கூடும் என்ற தயக்கம். அந்த பயம் மட்டும் இல்லை என்றால் என்னையே லாயராக வைத்துக்கொண்டு என்மீது டைவோர்ஸ் கேஸ் போட்டாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அ·ப்கோர்ஸ் அவளுக்கு கணவனாக என் மீது மதிப்பு இல்லை என்றாலும் லாயர் என்ற முறையில் மதிப்பு அதிகம். இந்த வீட்டையும், காரையும் பார்த்தால் யாருக்குமே நல்ல பராக்டீஸ் உள்ள லாயர் என்றுதானே நினைக்கத் தோன்றும்.”
சுஜாதா அப்படித்தான் நினைத்துக்கொண்டு, மற்றவர்கள் சுவாமிநாதனைப் பற்றி உயர்வாகச் சொன்னதைக் கேட்டு அவரைத் தேடிக்கொண்டு இங்கே வந்தாள்.
சுவாமிநாதன் மேலும் சொன்னார். “இத்தனை தம்பதிகள் தினமும் டைவோர்ஸ் பற்றி யோசித்தாலும் இங்கே விவாகரத்து வழக்குகள் குறைவாக இருப்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கு. கோர்ட் மூலமாக பிரிந்து போன தம்பதிகளுக்கு சமுதாயத்தில் மதிப்பு குறைவு. நன்றாக படித்த பெண்குளுக்கே திருமணம் ஆவது சிரமமாக இருக்கும் இந்தக் காலத்தில், விவாகரத்து ஆன பெண்ணுக்கு மறுமணம் என்பது ரொம்பவும் கஷ்டமான விஷயம். மனைவி இறந்து போனால் உடனே பெண்ணை கொடுக்கத் தயாராக இருக்கும் நம் நாட்டில், விவாகரத்து ஆனவன் என்று தெரிந்தால் எப்படிப்பட்டவனோ என்னவோ, சும்மாவே அந்தப் பெண் டைவோர்ஸ் செய்திருப்பாளா என்று பின் வாங்குவார்கள்.”
“அப்படி என்றால் என்னை டைவோர்ஸ் வாங்க வேண்டாம் என்று சொல்றீங்களா?” சுஜாதாவின் குரல் பொறுமையின்றி ஒலித்தது.
“எல்லோரும் சொல்வதைத்தான் நானும் சொல்கிறேன். விவாகரத்து செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லோரும் அதைச் செயல்படுத்தாமல் இருப்பதற்கு பலமான காரணம் ஏதாவது இருக்கும். குழந்தைகளின் எதிர்காலம், சொத்து விஷயம் போன்றவை. உங்க விஷயத்தில் அப்படி எந்த காரணமும் இல்லையோ என்று யோசிக்கிறேன். அவ்வளவுதானே தவிர பெண்களுக்கு திருமண வாழ்க்கைதான் முக்கியம் என்ற கொள்கை எனக்கு இல்லை. இரண்டு மகள்களுக்கு தந்தை என்பதால் நான் எப்போதும் பெண்களின் பக்கம்தான்.”
“எனக்கு டைவோர்ஸ் வேண்டும். அதற்கு உங்களால் உதவி செய்ய முடியுமா?” சுஜாதா நேராகக் கேட்டாள்.
“நாங்க இருப்பதே உதவி செய்யத்தானே. நீங்க உங்க கதையைச் சொல்லுங்கள். என்னுடைய அறிவுரையைச் சொல்கிறேன். அதைக் கேட்ட பிறகு நீங்க முடிவு செய்யுங்கள். அந்த முடிவு டைவோர்ஸ்தான் என்றால் ஒரு லாயராக என்னால் முடிந்த உதவி செய்கிறேன்.”
சுவாமிநாதனின் பேச்சு சுஜாதாவுக்கு தெம்பை அளித்தது. ‘அவர் மற்றவர்களை போல் டைவோர்ஸ் பற்றி நினைப்பதே மாபெறும் தவறு என்று அறிவுரை வழங்கவில்லை’ என்று உள்ளூர சந்தோஷப்பட்டுக் கொண்டாள்.
சுவாமிநாதனின் பெருந்தன்மையே அதுதான். எதிராளியை தாழ்த்தியோ, அவர்கள் மனம் நோகும் விதமாகவோ ஒரு வார்த்தைக் கூட சொல்லமாட்டார்.
சுஜாதா தன்னுடைய கதையைச் சொல்லத் தோடங்கினாள்.

‘சுஜதாவின் கணவன் அமெரிக்காவில் பி.ஹெச்.டி.யை முடித்துவிட்டு க்ரீன் கார்ட் வாங்கி அங்கேயே தங்கிவிட்டான். நல்ல வேலை. புரொ·பஷனல் குவாலி·பிகேஷன் உள்ள பெண்தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து சுஜதாவைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொண்டான். திருமணம் முடியும் போது சுஜாதா பி.இ. முடித்திருந்தாள். அவளுக்கும் அமெரிக்காவில் நல்ல வேலை கிடைத்தது. வேலைக்குச் சேர்ந்த புதிதில் நாட்கள் உற்சாகமாகப் போய்க் கொண்டிருந்தன. ஒரு மாதம் கழிந்த பிறகு ஆபீஸில் வேலை பழகிவிட்டது. சகஉழியர்களுக்குச் சமமாக பொறுப்பு மிகுந்த வேலைகளை அவளிடம் தர ஆரம்பித்தார்கள். பிரச்னையே அப்பொழுதுதான் தொடங்கியது.
சுஜாதாவால் முன்னைப் போல் கணவனுக்குப் பார்த்துப் பார்த்துச் செய்ய முடியவில்லை. சுஜாதா வீட்டுக்கு வரும் வரையில், தான் முன்னாடியே வந்துவிட்டாலும் எலக்ட்ரிக் குக்கரில் சாதம் கூட வைக்கமாட்டான் அவள் கணவன். காபியும் கலந்து குடிக்கமாட்டான். அப்படியே குடித்திருந்தாலும் காபி கோப்பையை சமையலறை சிங்கில் கூட போட மாட்டான். உட்கார்ந்த இடத்திலேயே வைத்து விடுவான்.
சுஜாதா ஏதாவது கேட்டால் “எனக்கு சமையல் வேலை என்றாலே போர். அதற்காகத்தானே உன்னைக் கல்யாணம் செய்து கொண்டேன்” என்று கூசாமல் சொல்லுவான்.
ஐந்து வருடங்கள் சுயமாக சமைத்துச் சாப்பிட்டவன் திருமணம் ஆனதும் காபி கூட கலந்துகொள்ள மறுப்பது ஏன் என்று அவளுக்குப் புரியவில்லை.

***********

“இரண்டு வருடங்களுக்கு முன்னால் அமெரிக்காவில் வேலை பார்க்கும் பையன் ஒருத்தன் என் மகளை பெண் பார்க்க வந்தான். என் மகளிடம் பேசும் போது “சமையல் என்றாலே எனக்கு ரொம்ப போர்” என்றானாம். உடனே என் மகள் “எனக்கும் அப்படித்தான். எல்லோருமே அப்படித்தான் நினைப்பார்களாய் இருக்கும். சாப்பிடாமல் இருக்க முடியாது என்பதால்தான் சமைத்துக்கொள்கிறோம்” என்று பதில் சொன்னாளாம். ‘அடப் பாவமே! சொந்தமாக சமைத்து, சாப்பிட்டு களைத்துப் போய்விட்டாயா கண்ணா! நான் வந்து உனக்கு தளிகை பண்ணி போடுகிறேன். கவலைப்படாதே.’ இந்த மாதிரியான பதிலை எதிர்பார்த்தானோ என்னவோ. என் மகள் இப்படிச் சொன்னதும் திரும்பிப் பார்க்காமல் அப்படியே போய்விட்டான். கடிதம் கூட போட வில்லை. என் மனைவி மகளை நன்றாக கோபித்துக் கொண்டாள், பெண் பார்க்க வந்த பையனிடம் இப்படித்தான் எடக்குமடக்காக பதில் சொன்வார்களா என்று.”
“சமைக்க ஆள் வேண்டும் என்றால் சமையல்காரியைத் தேடிக் கொள்ளணுமே ஒழிய படித்த பெண்ணுக்காக அதிலும் புரொ·பஷனல் குவாலி·பிகேஷன் உள்ள பெண்ணாக தேடுவானேன்?” என் மகளின் வாதம் இது.
இந்தக் காலத்து இளைஞர்களுக்கு தங்களுக்கு சமமாக படித்து வேலைக்குப் போகக்கூடிய, தன்னுடைய அம்மா, அப்பாவுக்கு பணிவிடை செய்வது போல் எல்லாம் செய்யக் கூடிய மனைவி வேண்டும்.” சுவாமிநாதன் சொல்லி முடித்தார்.
“என் கணவரும் உங்க மகளை பெண் பார்ப்பதற்கு வந்த மாப்பிள்ளை போன்றவர்தான். பெண் பார்க்க வந்த போது என்னிடம் தனிமையில் பேச வேண்டும் என்றார். வீட்டைச் சுற்றி காட்டும் சாக்கில் எங்கள் வீட்டார் அவருடைய பெற்றோரை அழைத்துப் போனார்கள். என்னிடம் பேசும் போது ஆங்கிலத்தில்தான் உரையாடினார். எனக்குப் பிடித்த எழுத்தாளர்களைப் பற்றி, கூட்டுக் குடும்பத்தைப் பற்றி என் அபிப்பிராயத்தை கேட்டார். அதற்குப் பிறகு முக்கியமான விஷயத்திற்கு வந்தார். ‘வேலைதான் எனக்கு முதல் மனைவி. அதுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பேன். எனக்கு என்று சில லட்சியங்கள் இருக்கு. வேலையில் முன்னேற கடுமையாக உழைப்பேன். தேவைப்பட்டால் சனி, ஞாயிறுகளில் கூட ஆபீசுக்குப் போவேன். அதனால் இந்த விஷயத்தில் எனக்கு மனைவியாக வரப் போகிறவளின் ஒத்துழைப்பு வேண்டும். என் கம்பெனியை டிமாண்ட் செய்யாதவளாக இருக்கணும். வேலைக்குப் போகக் கூடியவளாக, சுதந்திரமாக செயல்படக் கூடியவளாக இருக்கணும்’ என்று லெக்சர் கொடுத்தார். அப்போ எனக்கு விளங்கவில்லை. மேலோட்டமாக புரிந்துகொண்டு ‘நானும் அப்படிப்பட்டவள்தான்’ என்றேன்.”
“அவருடைய உண்மையான எண்ணம் என்னவாக இருந்திருக்கும் என்று நீங்க நினைக்கிறீங்க?” சுவாமிநாதான் கேட்டார்.
“அவருடைய உண்மையான எண்ணம் என்னவென்றால், மனைவி கணவன் மீது ஆதாரப்படாமல் மார்க்கெட்டுக்குப் போய் வேண்டிய பொருட்களை வாங்கி வரக் கூடியவளாக, வீட்டு வேலைகளை எல்லாம் செய்யக் கூடியவளாக, சுதந்திரமாக செயல்படக் கூடியவளாக இருக்கணும். அதற்காக சுதந்திரமாக எதைப் பற்றியும் யோசிக்கக் கூடாது. கணவனை விட சின்ன வேலையில் இருந்துகொண்டு, வீட்டை நிர்வகிக்க அவருடைய சம்பளத்தை எதிர்பார்த்துக் கொண்டு, எல்லா விதத்திலேயும் அவருடைய ஆளுமைக்குள் அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டும். கணவனின் அதிகாரத்தை சதா சர்வகாலமும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.”
சுஜாதா தன்னுடைய கணவனின் சுபாவத்தை ரொம்ப அழகாக, கச்சிதமாக எடுத்துரைத்தாள். ஆனால் சுஜாதாவின் கணவன் ஒருத்தன்தான் இப்படி என்று இல்லை. ஏறத்தாழ தன் மகளை பெண் பார்க்க வந்த ஒவ்வொரு பயலும் இப்படித்தான் பேசினான். சமுதாயத்தில் வந்து கொண்டிருக்கும் மாற்றம் இது. தன்னுடைய தலைமுறையை விட இந்த தலைமுறைச் சேர்ந்தவர்களுக்கு பொருளாதார தேவைகள் அதிகம். தான் இருபது வருடங்கள் பிராக்டீஸ் செய்து கார், டி.வி., பிரிஜ் போன்றவை வாங்கினால் இந்த காலத்து இளைஞர்களுக்கு இவையெல்லாம் கல்யாணமாகி மனைவியுடன் தனிக்குடித்தனம் போன முதன் நாளன்றே வேண்டும். தன் ஒருத்தனின் சம்பளத்தில் இது சாத்தியமில்லை என்பதால் மனைவியும் வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறான். அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் தன்னைப் போலவே ஆபீஸில் வேலை பார்த்துவிட்டு வரும் மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவிசெய்வது நியாயம் என்று யோசிக்க மாட்டான். அப்படிச் செய்யாமல் இருப்பதற்கு தன்னுடையது பெரிய வேலை என்றும், சம்பளம் அதிகம் என்றும் காரணங்களை காட்டி தன் செய்கைகளை நியாயப்படுத்துவான். மனைவிக்கு வீடு என்ற கூண்டைத் தவிர அலுவலகம், வெளிவேலைகள் என்று மேலும் இரண்டு கூண்டுகளை அமைத்து அவற்றுக்கிடையே குறுகலான பாதையை ஏற்படுத்திவிட்டு பெண்களுக்குச் சுதந்திரம் வழங்கிவிட்டதாக மார்தட்டிக் கொள்கிறான். பெண் விடுதலை என்ற முகத்திரைக்குப் பின்னால் தன்னுடைய சுயநலத்தை சாமர்த்தியமாக மறைத்துக் கொள்கிறான். மூன்று கூண்டுகளுக்கு நடவில் குறுகிய பதையில் நடமாட முடியாமல் இந்தக் காலத்து பெண்கள் களைத்துப் போகிறார்கள். அதனால்தான் சுஜாதா போன்ற பெண்கள் விவாகரத்து கேட்கிறார்கள்.
சுவாமிநாதனின் எண்ண ஓட்டத்திற்கு தடைபோட்டபடி “என்ன லாயர் சார்! யோசனையில் ஆழந்து விட்டீர்கள் போலிருக்கே?” என்றாள் சுஜாதா.
“இரண்டு மகள்களுக்கு தந்தை இல்லையா? பிரச்னையை உங்கள் கோணத்திலிருந்து பார்க்க முயற்சி செய்கிறேன். ஆனால் ஆண் என்பதால் அந்த வேலை கொஞ்சம் சிரமமாக இருக்கு. என் கண்களை மறைத்திருக்கும் ஆணாதிக்கம் என்ற திரை என்னை சரியாக பார்க்க விடாமல் மறைக்கிறது.” முறுவலுடன் சொன்னார் சுவாமிநாதன்.
சுஜாதா விட்ட இடத்திலிருந்து கதையைத் தொடர்ந்தாள்.
சுஜாதா வேலையில் சுறுசுறுப்பாக இருந்ததால் அவள் வேலை பார்த்து வந்த கம்பெனி ஒரு வருடம் கழித்து அவளுக்கு சம்பள உயர்வு கொடுத்ததோடு கூடுதல் பொறுப்புகளையும் வழங்கியது. அதனால் சுஜாதாவால் சில நாட்கள் தாமதமாக வீட்டுக்கு வருவதை தவிரக்க முடியவில்லை. சில சமயம் சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஆபீசுக்கு போக வேண்டிய நிர்பந்தம். தொடக்கத்தில் நேரம் கழித்து வந்தாலும் வீட்டு வேலைகளை எப்படியோ செய்து முடித்து வந்தாள். ஆனால் சில நாட்கள் போன பிறகு கணவன் சம்பந்தப்பட்ட வேலைகளை அவளால் செய்ய முடியவில்லை. விடுமுறை நாட்களில் கணவனின் துணிகளை தோய்த்து இஸ்த்ரி போட்டு வைக்க முடியாமல் போய் விட்டது. அந்த வேலையை கணவனே செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்பது சுஜாதாவின் எண்ணம். ஆனால் அவள் கணவனுக்கோ அந்த வேலை என்றாலே போர். வீட்டு வேலைகளை செய்ய பிடிக்காமல்தானே திருமணம் செய்துகொண்டான். ஆனால் வீட்டு வேலைகள் மட்டுமே செய்யும் மனைவி அல்லாமல் வேலைக்கும் போகக் கூடிய பெண் மனைவியாக வரணும் என்று விரும்பினான். வீடு வாங்குவதற்காக தான் வாங்கியிருக்கும் கடனை சீக்கிரமாக தீர்க்க வேண்டும் என்றால் மனைவியும் சம்பாதிப்பவளாக இருக்கணும் என்று கணக்கு போட்டான். தன்னால் ஆபீஸ் வேலை, வீட்டு வேலை இரண்டையும் செய்ய முடியவில்லை என்றும், வேண்டுமானால் வேலையை விட்டுவிடுவதாக சுஜாதா சொன்னாள்.
“ஆனாலும் உனக்கு சோம்பேறித்தனம் அதிகம். நாள் முழுவதும் வீட்டிலேயே உட்கார்ந்துகொண்டு மாலையில் நான் வந்ததும் வெளியில் அழைத்துப் போகச் சொல்லி என்னைப் பிடுங்கி எடுக்கணும் உனக்கு. அதான் வேலையை விட்டு விடுவதாக சொல்கிறாய்.” குத்தலாக மொழிந்தான்.
“வேலைக்குப் போன பிறகு கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்துதானே ஆகணும். சக ஊழியர்களுக்குச் சமமாக போட்டிப் போடுவதை தவிர்க்க முடியாது இல்லையா. கொஞ்சம் நீங்கதான் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளணும்.” சுஜாதா சொன்னாள்.
“வேலைக்கு போ என்று சொன்னேனே ஒழிய உன்னை பிரமோஷன் மேல் பிரமோஷன் வாங்கிக்கொண்டு கம்பெனிக்கே எம்.டி. ஆக சொன்னேனா? உனக்கு சம்பள உயர்வு தேவையில்லை என்றும், எந்த லட்சியங்களும் இல்லை என்றும் உங்க பாஸிடம் சொல்லு.”
“உங்களுக்கு மட்டும் வேலைதான் முதல் மனைவி. நீங்க மட்டும் வாழ்க்கையில் முன்னுக்கு வரணும். உங்களுடைய மனைவி உங்களுடைய தேவைகளுக்கு தகுந்தாற்போல் சம்பாதித்துக் கொண்டு, நீங்க வீட்டுக்கு வரும் சமயத்தில் காபியும் கையுமாக வரவேற்று, கம்பெனி தேவைபட்ட பொழுது ஒத்துழைப்பு தந்து, நீங்க பசியாக இருந்தால் புரிந்து கொண்டு வீட்டிலேயே கிடக்கணுமா? நானும் உங்களைப் போல் புத்திசாலிதான். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பரீட்சையில் பாஸ் செய்திருக்கிறேன். வேலையிலும் திறமைசாலி என்று பெயர் வாங்கியிருக்கிறேன். எனக்கு மட்டும் ஏன் லட்சியங்கள் இருக்கக்கூடாது?”
“திருமணத்திற்கு முன்னாடியே இதைப்பற்றி சொல்லிவிட்டேன்.”
“என்ன சொன்னீங்க? உங்களுடைய முன்னேற்றத்திற்கு நான் தடையாக இருக்கக் கூடாதுன்னு சொன்னீங்க. வேலைக்குப் போனால் நீங்க சொல்லும் எல்லையோடு நின்றுவிட முடியாது என்றும், என்னுடைய முன்னேற்றத்திற்கு நீங்க தடையாக இருக்கீங்கன்னு இப்போ நான் சொல்கிறேன்.”
இது போன்ற வாத விவாதங்கள், சண்டைகள் அவர்களுக்கு நடுவில் பலமுறை நிகழ்ந்தன. சுஜாதாவின் கணவன் மனைவியின் வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னுடையது பெரிய வேலை, சம்பளமும் அதிகம் என்பதால் தனக்குத்தான் முக்கியத்துவம் இருக்கணும் என்றான். சுஜாதா ஒத்துழைப்பு தரவில்லை என்றால் தன்னுடைய முன்னேற்றம் தடைப்பட்டு விடும் என்றும் சொன்னான்.
இப்போ அவனுக்கு என்ன வயது ஆகிறதோ அந்த வயது தனக்கும் ஆகும் போது தானும் பெரிய வேலையில் இருக்க முடியும் என்றும், இப்போ அவன் பெரிய வேலையில் இருப்பது பெரிய விஷயம் இல்லை என்றும் சுஜாதா வாதம் புரிந்தாள்.
“மனித ரத்தத்தை ருசி கண்டுவிட்ட புலியும் வேலைக்குப் போய் சம்பாத்தியத்தை கண்ணால் பார்த்துவிட்ட பெண்ணும் ஒன்றுதான்.” கணவன் பழித்தான்.
“இருக்கலாம்” என்றாள் சுஜாதா.
அந்த விதமாக இருவருக்குமடையே அடிக்கடி சண்டை வந்து கொண்டிருந்தது. இருவராலேயும் ஒரு அபிப்பிராயத்திற்கு வர முடியவில்லை என்பதால் சுஜாதா இந்தியாவுக்குக் கிளம்பி வந்துவிட்டாள்.
“அவருடைய மனைவியாக வாங்கிய விசாவுடன் அங்கே தங்குவதில் எனக்கு விருப்பம் இல்லை. இந்த முறை போனால் சுஜாதா என்ற தனி நபருக்கு உண்டான தகுதியுடன் போவேன்.” சுஜாதா சொன்னாள்.
“உங்களுடைய பிரச்னையை தீர்ப்பதற்கு மாமியார் வீட்டில் முயற்சி செய்யவில்லையா?” சுவாமிநாதன் கேட்டார்.
“முயற்சி செய்தாங்க. ஆனால் அந்த முயற்சிகள் பயன் தராது என்று எனக்கு முன்னாடியே தெரியும். அப்படித்தான் நடந்தது.”
“பயன்தராது என்று முன்னாடியே எப்படித் தெரியும்?” வியப்புடன் கேட்டார் சுவாமிநாதன்.
“அந்த குடும்ப அமைப்பு அப்படிப்பட்டது. எங்க மாமியார் அதிகம் படித்தவள் இல்லை. அவங்களைப் பொறுத்தவரையில் மாமனார் ஒரு பெரிய ஹீரோ. அவர் அளவுக்கு நல்லவராக, புத்திசாலியாக மற்றவர்கள் கூட இருப்பார்கள் என்று யாராவது ஒரு பேச்சுக்கு சொன்னால் கூட ஒப்புக்கொள்ள மாட்டாள். அவர் உண்மையிலேயே புத்திசாலிதான். கெட்ட குணம் கூட எதுவும் இல்லை. பெரிய வேலையில் இருந்தார். அதனால் எங்க மாமியார் அவரை எந்த வேலையும் செய்ய விடாமல் எல்லாம் தானே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வாள். அந்த அம்மாளுக்கு இரண்டுமே மகன்கள்தான். வீட்டைத் தவிர வேறு உலகம் தெரியாததாலும், ஆணாதிக்கத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதாலும் இரு மகன்களையும் ரொம்ப அபூர்வமாக வளர்த்தாள். சட்டைக்கு பொத்தான் தைத்து தருவது முதல், ஷேவிங் செய்த பிறகு பிரஷ் ரேசர் எல்லாம் அலம்பி வைப்பது வரையில் எல்லாம் செய்வாள். திருமணம் ஆன பிறகு அமெரிக்காவுக்குப் போவதற்கு முன் ஒரு மாதம் புகுந்த வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டு பழக்க வழக்கங்கள் ரொம்ப உயர்வானவை என்றும், அவற்றை நான் கடைப் பிடிக்கவேண்டும் என்றும் அந்த ஒரு மாதமும் எனக்கு பயிற்சி அளித்தாள். புது மருமகள் என்பதாலும், தயக்கம் காரணமாகவும் அந்த அம்மாள் என்னிடம் சொன்ன வேலைகளை எல்லாம் மறுப்பு சொல்லாமல் செய்து வந்தேன், காபி டம்ளர் கையில் கொடுப்பது முதல் குடித்த டம்ளரை திரும்பவும் வாங்கிக்கொண்டு உள்ளே வைப்பது வரையில்.”
“அதாவது உங்க மாமியார், மாமனார் உங்களையே சமாதானமாகப் போகச் சொல்லி அறிவுரை வழங்கினார்களா?”
“அப்படியும் சொல்லலாம். எங்களுடைய ரகளையைப் பற்றி கேள்விப் பட்டதும் மாமியார் கிளம்பி அமெரிக்காவுக்கு வந்தாள். அவங்க வம்சத்தில் எந்த மருமகளும் வீட்டு வேலை காரணமாக விவாகரத்து கொடுப்பதாக சொன்னதில்லை என்றாள். பின்னே எந்த காரணத்திற்காக கொடுப்பதாக சொன்னார்கள் என்று நான் கேட்டதற்கு விவாகரத்து என்ற பேச்சே யாரும் எடுத்ததில்லை என்று பதில் சொன்னாள்.
“இது நாள் வரையில் அந்த வீட்டு மருமகள்கள் அந்த பேச்சை எடுத்தே இல்லை என்றாலும் அந்த பிரஸ்தாபளை எழக்கூடிய காரணங்கள் ஆதி காலத்திலிருந்தே அந்த வீட்டு ஆண்கள் விஷயத்தில் இருக்கக் கூடும் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும்.”
இப்படி நான் சொன்னதும் மாமியார் திகைத்துப் போய் விட்டாள். எப்படியோ வாயைத் திறந்து “இப்படி பேசிய முதலாவது மருமகள் நீதான்” என்று குற்றம் சாட்டினாள்.
அந்த வீட்டு மருமகள்களில் அமெரிக்காவில் குடித்தனம் செய்பவளும், அமெரிக்காவில் வேலைக்குப் போகிறவளும் நான் ஒருத்திதான் என்றேன்.
“ரொம்பவும் பெருமைப்பட்டுக் கொள்ளாதே” என்றாள் கோபமாக.
“நீங்க சரின்னு சொன்னால் வேலையை விட்டு விடுகிறேன்” என்றேன்.
“பெஷாக விட்டு விடு” என்றாள்.
நானும் சரி என்றேன்.
“சுஜாதா வேலையை விட்டுவிட்டால் கடன்களை எப்படி தீர்க்க முடியும்?” அங்கேயே இருந்த என் கணவர் குறுக்கே புகுந்து சொன்னார்.
அப்பொழுதுதான் என் மாமியாருக்கு பிரச்னை லேசாகப் புரிந்தது.
என் மாமியார் தன் மகனை இருபத்தைந்து வயது வரையில் வளர்த்தாளே தவிர புதிய தேவைகள், புதிய சூழ்நிலை இருக்கும் இந்தக் காலத்தில் வாழ்வதற்கு தேவையான பயிற்சியைத் தரவில்லை. ஆனால் நான் அவர்கள் வீட்டில் தங்கியிருந்த முப்பது நாட்களும் தன் மகனுக்கு ஏற்ற மனைவியாக என்னை மாற்றுவதற்கு பாடுபட்டாள். அது போன்ற பாரபட்ச சுபாவம் இருக்கும் இடத்தில் சரியான தீர்வு கிடைப்பது கஷ்டம். அதோடு நான் அந்த அம்மாள் உருவாக்கிய குடும்ப சட்டதிட்டங்களை கடைபிடிக்காமல் எதிர்ப்பு தெரிவித்த போது வேறு வழியில்லாமல் தன் மகனுக்கு காபி கலந்து கொள்வது, சட்டைக்கு பித்தானை தைப்பது போன்ற சின்னச் சின்ன வேலைகளை கற்றுக் கொடுக்க முயன்றாள். இதெல்லாம் தெரியாமல் ஐந்து வருடங்கள் அமெரிக்காவில் எப்படி இருக்க முடியும்? அவருக்கு எல்லாம் தெரியும். ஆனால் மனைவி என்று ஒருத்தி வந்த பிறகு இதையெல்லாம் தான் செய்ய வேண்டியதில்லை என்ற இளக்காரம். மாமியார் தன்னை அறியாமலேயே இது போன்ற எண்ணங்களை மகனின் மனதில் தன்னுடைய வளர்ப்பு முறையில் விதைத்து விட்டாள்.
மாமியாரின் சமாதான முயற்சிகளைப் பற்றி அதிகமாக எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்ளாததால் ஏமாற்றமடையவில்லை. முடிந்தவரையில் கணவனின் சோம்பேறித்தனத்தை பொறுத்துக் கொண்டு, ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் போன பிறகு என்னுயை சம்பளத்தில் டிக்கெட் வாங்கிக் கொண்டு இந்தியாவுக்கு வந்து விட்டேன்.”
“பெற்றோர்கள் உங்களுடைய முடிவுக்கு ஆதரவு தந்தார்களா?” சுவாமிநாதன் கேட்டார்.
“இல்லை. புலம்பித் தள்ளிவிட்டர்கள்.” சுஜாதா சொன்னாள்.
சுஜாதா இந்தியாவுக்கு வந்ததும் அவளுடைய பெற்றோர்கள் சந்தோஷப்பட்டார்கள். அவள் வந்த காரணம் புரிந்ததும் அந்தச் சந்தோஷம் காணாமல் போய்விட்டது. “நீதான் சமாதானமாகப் போகணும்” என்று கிளிப்பிள்ளை போல் திரும்பத் திரும்ப சொன்னார்கள்.
“சுஜாதா உலகம் தெரியாதவள். ஏதோ சிறுபிள்ளைத்தானமாக கோபித்துக் கொண்டு வந்துவிட்டாள். நீங்க பெரிய மனதுடன் அவளுடைய தவறை மன்னித்து அவளை மறுபடியும் குடும்பத்தில் சேர்த்துக் கொள்ளணும்.” சுஜாதாவின் தாய் சம்பந்தி அம்மாளின் கால்களில் விழாத குறையாக கெஞ்சினாள்.
“பெண்ணாக பிறந்த பிறகு நாம்தான் விட்டுக் கொடுத்து வாழணும். நான் வளர்ந்த சூழ்நிலையும், உங்கள் வீட்டுசூழ்நிலையும் மாறுபடவில்லையா. நானும்தானே வேலைக்கு போகிறேன். உங்க அண்ணாவுக்கு எல்லாம் கையில் எடுத்துக் கொடுக்கத்தானே வேண்டியிருக்கிறது.” அண்ணி சொன்னாள்.
“நீங்க சொல்வதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் உங்களுக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்ய அம்மா இருக்கிறாள். தேவைப்பட்டால் ஓய்வு எடுத்துக்கொள்ள உள்ளூரிலேயே பிறந்த வீடும் இருக்கு. அமெரிக்காவில் இந்த இரண்டும் எனக்கு இல்லை. அடித்தாலும், அரவணைத்தாலும் எனக்கு எல்லாமே என் கணவன்தான். உதவி செய்வதாக இருந்தாலும் அவர்தான் செய்யணும். அண்ணாவுடன் சேர்ந்து இருப்பது உங்களுடைய சக்திக்கு மிஞ்சிய காரியமாக இருந்தால், சேர்ந்து வாழணும் என்று மட்டும் அறிவுரை சொல்லமாட்டேன்.” சுஜாதாவின் குரல் திடமாக ஒலித்தது.
சுஜாதாவை புகுந்தவீட்டில் கொண்டு விடுவதற்கு பெற்றோர்கள் முயற்சி செய்தார்கள். சுஜாதா சம்மதிக்கவில்லை. அவளுடைய முடிவில் எந்த மாற்றமும் இல்லை. லாயரை தேடிக் கொண்டு சுவாமிநாதனிடம் வந்தாள்.
“உங்கள் கணவர் அமெரிக்காவில் இருக்கிறாரா? இல்லை இந்தியாவுக்கு வந்திருக்கிறாரா?” சுவாமிநாதன் கேட்டார்.
“அமெரிக்காவில் இருக்கிறார். ஏன் கேட்கிறீங்க?”
“கேஸ் எங்கே போடணும் என்பதை அதைப் பொறுத்துதான் முடிவு செய்யணும். அவர் அமெரிக்காவில் இருந்தால் உங்களுக்கு திருமணம் ஆன ஊரிலேயோ, உங்க சொந்த ஊரிலேயோ கேஸ் போடலாம். இந்தியாவில் இருந்தால் அவர் இருக்கும் ஊரில் அல்லது கடைசியாக நீங்க இருவரும் சேர்ந்து இருந்த ஊரில் போடணும். அதற்காகத்தான் கேட்டேன்.”
“எங்களுக்கு திருமணம் நடந்த இடம் ஹைதராபாத். அப்போ என் தந்தை வேலையின் காரணமாக அங்கே இருந்தார். ரிடையர் ஆனபிறகு இந்த ஊருக்கு வந்து விட்டார். எங்களுடைய சொந்தஊர் இதுதான்” என்றாள் சுஜாதா.
“ஏற்கனவே தாமதமாகிவிட்டது. நீங்க சிரமம் பார்க்காமல் நாளைக்கு வந்தால் தேவையான பேப்பர்களை தயார் செய்துவிடலாம்.” சுவாமிநாதன் சொன்னார்.
சுஜாதா விடை பெற்றுக் கொண்டு கிளம்பினாள். வாதி தன் மனதை மாற்றிக் கொள்ள லாயர் கொடுக்கும் கடைசி வாய்ப்பு அது. சிலர் அடுத்த நாள் வரமாட்டார்கள்.

***********************

இரவு சாப்பாடு முடிந்த பிறகு சுவாமிநாதனின் மனைவி அருகில் வந்தாள். “மூத்த மகளுக்கு இருபத்தைந்து வயதாகிவிட்டது. சின்னவளுக்கும் இருபத்தி மூன்று நிரம்பிவிட்டது. இன்னும் பெரியவளுக்கே திருமணம் முடியவில்லை. அவள் வயதை ஒற்றவர்கள் எல்லோரும் குழந்தை குட்டியுடன் சந்தோஷமாக குடித்தனம் செய்து கொண்டிருக்கும் போது உங்களுக்கு எறும்பு கடித்தாற்போல் கூட இல்லை. ஆனால் ஒரு தாயாக என் மனம் எவ்வளவு வேதனைப் படுகிறதென்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” வழக்கமான ராமாயணத்தைத் தொடங்கினாள்.
“அவளுக்கு என்ன? நிம்மதியாக வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறாள். அவளுக்கு தகுந்த வரன் நம் கண்ணில் பட்டால்தானே? கவலைப்படாதே. எங்கேயோ பிறந்திருப்பான். வேளை வந்ததும் நேராக வந்து நம் வீடடுக் கதவைத் தட்டுவான். நாம் செய்ய வேண்டியதெல்லாம் கடவுள் மீது பாரத்தைப் போட்டு விட்டு காத்திருப்பதுதான்.” சுவாமிநாதன் வழக்கமான பதிலை சொன்னார். பிறகு மனைவியைச் சமாதானப்படுத்தும் எண்ணத்துடன் “நாமும் வரன் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். அவசரப்பட்டு ஏதோ ஒரு வரனை கட்டி வைத்தால் நாளைக்கே டைவோர்ஸ் என்று திரும்பி வரக்கூடும். இன்னிக்கு ஒரு பெண் டைவோர்ஸ் வேண்டுமென்று என்னைத் தேடி வந்தாள். அவளுடைய அம்மா உன்னைப் போல் அவசரப்படுத்தியதால் அவளுடைய அப்பா அந்த கல்யாணத்தை பண்ணியிருப்பாராய் இருக்கும்” என்றார்.
“போதுமே. பேச்சில் உங்களை யாரும் மிஞ்ச முடியாது. அது போகட்டும். உங்க நண்பர் ராமச்சந்திரனின் மனைவி லக்ஷ்மியை இன்னிக்கு கோவிலில் பார்த்தேன். இரண்டு வருடங்களுக்கு முன் பெரியவளை பெண் பார்க்க வந்தானே, அவர்களுடைய உறவுக்கார பையன் ரகு, அவனுடைய மனைவி அவனுக்கு டைவோர்ஸ் தரப் போகிறாளாம். ரகுவின் அம்மா, சுவாமிநாதனின் மகளை கல்யாணம் செய்துகொண்டிருந்தால் இப்போ இந்த பிரச்னை வந்திருக்காதோ என்னவோன்னு லக்ஷ்மியிடம் வருத்தப்பட்டுக் கொண்டாளாம்.”
“அந்தக் கல்யாணம்தான் நடக்கவில்லையே? இப்போ அந்த பேச்சு எதுக்கு? பாவம் அந்தப் பெண்! இவர்களிடம் எவ்வளவு கஷ்டப்பட்டாளோ யாருக்குத் தெரியும்?”
“அப்படி எதுவும் இல்லையாம். அந்தப் பெண்ணுக்கு முன்னாலிருந்தே இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லையாம். ஏதோ காதல் விவகாரம் இருக்கிறதாம்.” சுவாமிநாதனின் மனைவி நீட்டி முழக்கினாள்.
சுவாமிநாதனுக்கு ரகு வந்து தன் மகளை பெண் பார்க்க வந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.
ராமச்சந்திரனும் வக்கீல்தான். சுவாமிநாதனும் அவரும் நல்ல நண்பர்கள். அவர்தான் சொன்னார். “எங்க உறவில் ரகு என்ற பையன் அமெரிக்காவில் இருக்கிறான். தங்கமான பையன். அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரப் போகிறானாம். அந்த சமயத்தில் திருமணம் முடித்துவிடலாம் என்று நினைப்பதாகவும், நல்ல வரன் ஏதாவது இருந்தால் சொல்லச் சொல்லியும் ரகுவின் பெற்றோர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.”
“பையன் என்ன செய்கிறான்?” சுவாமிநாதன் கேட்டார்.
“நல்ல வேலையில் இருக்கிறான். பிராஸ்பெக்டிவ் க்ரீன் கார்ட் ஹோல்டர். அவனுக்கு புரொ·பஷனல் குவாலி·பிகேஷன் உள்ள பெண்தான் வேண்டும். உங்க மகளை அவர்களுக்கு கட்டாயம் பிடிக்கும். மற்ற விஷயங்களை நான் பேசி முடிக்கிறேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் இந்த அட்ரெஸ¤க்கு கடிதம் போடுங்கள்” என்றார் ராமச்சந்திரன்.
சுவாமிநாதன் ரகுவின் தந்தைக்கு வரன் விஷயமாக கடிதம் எழுதினார். தன் மகளுடைய விவரங்களைத் தெரிவித்தார். அதற்கு பதில் வரவில்லை. ராமச்சந்திரன் மூலமாக விசாரித்த போது, “ஒரே ஒரு வரன்தான் வந்திருக்கு. குறைந்தபட்சம் பத்து பன்னிரெண்டாவது வந்தால், அதில் நாலோ ஐந்தோ நாங்கள் தேர்ந்தெடுத்து மகனுக்கு அனுப்புவோம். அதில் அவன் ஒரு பெண்ணை செலக்ட் செய்து கொள்வான்” என்று ரகுவின் தந்தை சொன்னாராம். அந்த விஷயத்தை அவரே தனக்கு நேராக தெரிவித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சுவாமிநாதான் நினைத்துக் கொண்டார்.
ரகுவின் உறவினர்கள் எல்லோரும் “எங்களுக்கு வேண்டிய பையன் ஒருவன் அமெரிக்காவிலிருந்து வருகிறான். உங்க மகளுக்கு பார்க்கலாம். உங்க பெண்ணை அவனுக்குக் கட்டாயம் பிடிக்கும்” என்று புரொ·பஷனல் குவாலி·பிகேஷன் உள்ள பெண்ணுக்காக மாநிலம் முழுவதும் வலையை வீசினார்கள்.
அதற்குப் பிறகு அவனுக்கு பிரமோஷன் வர வேண்டிய நேரம், இப்போ வர முடியாது என்றும், க்ரீன் கார்டுக்கு அப்ளை செய்திருக்கிறான், அமெரிக்காவை விட்டு இப்போ வெளியேற முடியாது என்றும் சாக்கு போக்கு சொல்லி வந்தார்கள்.
திடீரென்று ஒரு நாள் ரகுவின் தந்தையிடமிருந்து கடிதம் வந்தது. நாங்க தேர்வு செய்து வைத்த நான்கு பெண்களில் உங்க மகளும் ஒருத்தி. ஜாதகங்களும் பொருந்தியிருக்கிறது. எங்கள் மகன் தன்னுடைய பர்சனல் கம்ப்யூட்டரில் உங்க மகளின் தகுதிகளை, அவனுயை தேவைகளை மேட்ச் செய்து பார்த்து கொண்டபோது கோரிலேஷன் கோஎ·பிஷியன்ட 0.9 வரையில் இருக்கிறது. உங்க வரனைப் பற்றி நாங்கள் ரொம்ப சீரியஸாக இருக்கிறோம். ஆனால் எங்க மகன் இந்தியாவில் முப்பது நாட்கள்தான் இருப்பான்.அதில் முதல் பத்து நாட்களில் பெண்ணை செலக்ட் செய்துகொண்டு, அடுத்த பத்து நாட்களில் திருமணம் முடித்துக்கொண்டு கடைசி பத்து நாட்களை எங்களுடனும், வேட்டாத்திலும் கழித்துவிட்டு அமெரிக்காவுக்கு கிளம்பி விடுவான். அதனால் உங்க மகளையும் அழைத்துக் கொண்டு ஹைதராபாத்துக்கு வர முடிந்தால் பையனுக்கு நேரம் மிச்சமாகும். மேலும் ரகு ஜெட்லாக், ·புட் அண்ட் வாட்டர் பிரச்னையால் கஷ்டப்படுகிறான்” என்று எழுதியிருந்தார்.
சுவாமிநாதன் முதலில் தயங்கினாலும் பிறகு யோசித்துப் பார்த்தார். சம்பிரதாயம் என்ற பெயரில் பிகு செய்து கொள்ளாமல் “மகளையும் அழைத்துக்கொண்டு ஹைதராபாதுக்கு வந்து உங்களை வீட்டில் சந்திக்கிறோம்” என்று கடிதம் போட்டார்.
மறு தபாலில் ரகுவின் தந்தையிடமிருந்து கடிதம் வந்தது. “அது சம்பிரதாயம் இல்லை. நீங்க ஹைதராபாதில் எங்கே தங்கியிருக்கீங்களோ தெரிவித்தால் நாங்களே பெண் பார்க்க வருகிறோம்” என்று எழுதியிருந்தார்.
“மூன்று பேர் வெளியூருக்கு போய் இரண்டு மூன்று நாட்கள் இருந்துவிட்டு வருவதற்கு குறைந்த பட்சம் ஆயிரமாவது ஆகும். அதை நான் செலவழித்தால் அந்த பெரிய மனிதர் ஆட்டோவுக்கு இருபது ரூபாய் செலவு செய்து சம்பிரதாயத்தை கடைபிடிக்கப் போகிறாராம்.” சுவாமிநாதன் ராமச்சந்திரனிடம் முணுமுணுத்தார்.
“அவர்களுடைய சங்கடம் நியாயமானது. நீங்க போயிட்டு வாங்க” என்று சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தார் ராமச்சந்திரன்.
சுவாமிநாரன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு ரகு பெற்றோருடன் வந்தான். நல்ல உயரமாக, கண்ணுக்கு லட்சணமாக இருந்தான். அறிமுகப்படலம் முடிந்த பிறகு சற்று நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
“நான் உங்க மகளுடன் தனியாக பேச விரும்புகிறேன். கொஞ்சம் வெளியில் போய்விட்டு வருகிறோம். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையே?” ரகு கேட்டான்.
“எங்க மகள் வேலை பார்க்கிறாள். சுபாவத்திலும் தைரியசாலி. ஆண்களுடன் சகஜமாக பேசவும் தெரியும். அதே சமயத்தில் ஒரு எல்லையுடன் நிறுத்தவும் தெரியும். உங்களைப் பற்றி தெரியாது என்றாலும் எங்க மகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. யு கேன் டேக் ஹர்” என்றார் சுவாமிநாதன்.
அந்த பதிலை கேட்டதும் ரகுவின் முகம் ஒரு மாதிரியாகி விட்டது. சுவாமிநாதனின் மனைவி இதையெல்லாம் மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது ரகுவின் தாய் தங்களுடைய குடும்பத்தைப் பற்றி விலாவாரியாகச் சொன்னாள். அவர்கள் வீட்டில் பெண்கள் படித்து வேலைக்குப் போவதை ஊக்குவிப்பார்களாம். ஆனால் கிளப்புகள், பார்ட்டீ, டிஸ்கோ போன்றவை கூடாது. மருமகளாக வருபவள் தினமும் சுவாமிக்கு விளக்கேற்றுபவளாக இருக்கணும். ஆனால் பூஜை, விரதம் என்று ரொம்ப மடி ஆசாரம் பார்க்கிறவளாக இருக்கக் கூடாது. அதற்காக கடவுளே இல்லை என்று நாத்திக வாதம் பேசுபவளாக இருக்கக் கூடாது. அவர்களுக்கு நல்ல சம்பிரதாயமான, நாகரீகம் தெரிந்த பெண் மருமகளாக வர வேண்டுமாம். பட்டிக்காடாக இருக்கக் கூடாது. அதற்காக மாடர்ன் என்ற பெயரில் தான்தோன்றித் தனமாகவும் இருக்கக் கூடாது. சமநிலையில் இருக்கணும், எங்கள் வீட்டில் இருப்பது போல் என்று விளக்கமாகச் சொன்னாள்.
சமநிலைக்கு உதாரணமாக அந்த அம்மாள் தங்களுடைய குடும்ப பழக்க வழக்கங்களைப் பற்றிச் சொன்னதைக் கேட்ட பிறகு சுவாமிநாதனுக்கு சிரிப்புதான் வந்தது. தாங்கள் கடைபிடிக்கும் வாழ்க்கை முறைதான் சிறந்தது என்று யாருமே நினைத்துக் கொள்வார்கள். ஆனால் “நாங்கள் எது செய்தாலும் அதுதான் உலகத்திற்கே எடுத்துக்காட்டு” என்று தண்டோரா போடக் கூடிய ஹிபோகிரஸி மகனை பெற்றவர்களுக்கு மட்டும்தான் இருக்கும்.
ரகு சுவாமிநாதனின் மகளை திரும்ப அழைத்து வந்து விட்டு விட்டு, தன் பெற்றோர்களுடன் கிளம்பிப் போனான்.
“எங்களுடைய முடிவை விரைவில் தெரியப் படுத்துகிறோம். இன்னும் இரண்டு பெண்களைப் பார்க்கணும்.” கிளம்பும் முன் ரகுவின் தந்தை சொல்லிவிட்டு போனார்.
‘பெண்ணை பிடித்திருக்கு என்று இவர்கள் சொன்னால் மேற்கொண்டு பேசுவதற்கு மறுபடியும் இந்த ஊருக்கு வரவேண்டியிருக்கும்!’ சுவாமிநாதன் பெருமூச்சு விட்டுக் கொண்டார்.
பிள்ளை வீட்டார் கிளம்பிப் போனபிறகு, சுவாமிநாதனின் மனைவி “பையன் உன்னிடம் என்ன பேசினான்?” என்று மகளிடம் கேட்டாள்.
“எனக்கு அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க விருப்பம்தானா என்று கேட்டான். அவன் க்ரீன் கார்ட் ஹோல்டர் என்பதால் கல்யாணம் செய்து கொண்டாலும் எனக்கு விசா கிடைப்பதற்கு இரண்டு வருடங்கள் ஆகுமாம். அதனால் ஸ்டூடெண்ட் விசாவை பெற்றுக்கொண்டு நான் அங்கே வந்தால், மறுபடியும் ஒப்புக்காக திருமணம் செய்துகொண்டு க்ரீன்கார்ட் பெற முடியுமாம். சமையல் வேலை தனக்கு ரொம்ப போர் என்றான். எனக்கும் போர்தான் என்றேன். கொஞ்சம் ஹர்ட் ஆன மாதிரி முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டான்.
எனக்கு பிடித்த ஆங்கில எழுத்தாளர்களைப் பற்றி கேட்ட போது வுட்ஹவுஸ் என்றேன். அவனுக்கு சீரியஸ் எழுத்தாளர்களைதான் பிடிக்குமாம். பார்ட்டீகளில் எப்பொழுதாவது குடிப்பானாம். பார்ட்டீயில் குடித்தாலும், வீட்டில் குடித்தாலும் ஒன்றுதானே என்றேன். அளவோடு குடித்தால் அது குடிபழக்கம் இல்லை என்றும், தான் எது செய்தாலும் லிமிட்டாக செய்வேன் என்றும் சொன்னான். ‘வாட் ஈஸ் யுவர் லிமிட் தென்?’ என்று நான் கேட்டதும் முகம் விழுந்து விட்டது அவனுக்கு. என்னைப் பார்த்து கொஞ்சம் மிரண்டு விட்டான் என்று நினைக்கிறேன்.” மகள் சொன்னாள்.
“ஏன் அப்படி செய்தாய்?” மகளைக் கடிந்துகொண்டாள் தாய்.
“அம்மா! அந்த ஆள் அமெரிக்காவிலிருந்து கிளம்பி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. வழியில் யூரோப் எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு, ஹாங்காங்கில் ஷாப்பிங்கையும் முடித்துக் கொண்டு இந்தியாவுக்கு வந்திருக்கிறான்.”
“நல்ல கதைதான் போ. வெளிநாடுகள் எல்லாம் சுற்றிப் பார்க்க நேரம் இருக்கிறதாமா? பெண் பார்க்க அந்தந்த ஊர்களுக்கு போகணும்னால் மட்டும் நேரமே இல்லையாமா? அத்தனை ஊர்களை சுற்றிப் பார்த்த போது வராத வயிற்றுவலி நம் ஊருக்கு வந்தால் மட்டும் வந்து விடுமா?” சுவாமிநாதானின் மனைவி கன்னத்தில் கையை வைத்துக்கொண்டாள்.
“பையன் நாலு பேரை பார்க்கணும்னு அவங்க சொன்னது நாலு இடங்களைச் சுற்றி பார்க்கணும் என்ற அர்த்தமும் இருக்கலாம் இல்லையா?” சுவாமிநாதன் ஜோக் அடித்தார்.
ரகு உண்மையிலேயே மிரண்டு போய் விட்டான். அந்த செய்தியை ராமச்சந்திரன் வந்து தெரிவித்தார். நேராக அப்படிச் சொல்லாமல் “உங்க மகள் சுதந்திரமான போக்கு கொண்டவள் என்று பிள்ளை வீட்டார் நினைக்கிறார்கள்” என்று சுற்றி வளைத்து சொன்னார்.
மனைவி சொன்னதைக் கேட்ட பிறகு சுவாமிநாதனுக்கு பழைய விஷயங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன. சுஜாதா விவாகரத்து செய்யப் போவதாக சொன்னது ரகுவைத்தானோ என்ற சந்தேகம் வந்தது. ரகு ஒருத்தன் மட்டுமே அமெரிக்காவில் இல்லையே? அது போன்ற இளைஞர்கள் அங்கே நிறைய பேர் இருப்பார்கள் என்று மனதைச் சமாதானப் படுத்திக் கொண்டார்.
மறுநாள் சுஜாதா வந்தாள். “என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. நேற்று ஒரு விஷயம் சொல்ல மறந்துவிட்டேன். என் கணவர் என்னை பெண் பார்க்க வரும் முன், ஜெர்மனி, சுவிட்ஜர்லாண்ட் எல்லாம் சுற்றிப் பார்த்து விட்டு வந்தார்” என்றாள்.
“ஜெட்லாக், வயிற்றுவலி என்று அவதிப்படுவதாகச் சொன்னாரா?” சுவாமிநாதன் சந்தேகத்துடன் கேட்டார்.
“அவை இல்லாமலா? பெண் பார்க்க வரும் முன் காஷ்மீரை சுற்றிப் பார்த்து விட்டு வரும் இளைஞனை பற்றி நீங்க என்ன நினைப்பீங்க? மோஸ்ட் அன் ரொமாண்டிக் ·பெலோ என்றுதானே. யாராக இருந்தாலும் கல்யாணம் செய்துகொண்டு மனைவியுடன் புது ஊர்களுக்குச் சுற்றி பார்க்கப் போவான். அதற்காக விடுமுறையை, பணத்தை சேமித்து வைத்துக் கொள்வான். என் கணவர் அதற்கு நேர் எதிர். ரொம்ப சுயநலவாதி.”
“உங்க கணவரின் பெயர் ரகு இல்லையே?” சுவாமிநாதனின் குரலில் சந்தேகம் வெளிப்பட்டது.
“ஆமாம். ஏன் கேட்கிறீங்க? அவர் பார்த்த டஜன் கணக்கான பெண்களில் உங்க மகளும் இருந்தாளா?” முறுவலுடன் கேட்டாள் சுஜாதா. அவள் முகத்தில் நேற்று இருந்த கவலை இப்போது இல்லை.
ஆமாம் என்பது போல் சுவாமிநாதன் தலையை அசைத்தார்.
“அவர் இந்தியாவுக்கு வந்த பிறகு அவருடைய உறவினர்களும், குடும்ப நண்பர்களும் அவர் முன்னால் புரொ·பஷனல் தகுதியுள்ள பெண்களை அழகு போட்டியில் செய்வது போல் வரிசையாக காண்பித்தார்கள. உங்க மகளுக்கு அந்த தகுதியிருந்து, திருமணம் ஆகாமல் இருந்திருந்தால் அவர்கள் வீசிய வலையில் நீங்க சிக்காமல் இருந்திருக்க முடியாது.”
“மாட்டிக் கொண்டோம்.” சுவாமிநாதன் சொன்னார்.
“நினைத்தேன். அப்படிச் செய்யக் கூடியவர்கள்தான். ஏற்கனவே என்னைப் பார்த்துவிட்டு பிடித்திருப்பதாக தெரிவித்து மற்ற பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்த இடைப்பட்ட நேரத்தில் உங்களுடைய மகளை பார்க்க வந்திருக்கிறார்கள். இதில் அவர்களுக்கு சிரமம் எதுவும் இல்லையே. நீங்க கஷ்டப்பட்டு செலவு செய்து மகளையும் அழைத்து வந்து பெண் பார்க்க ஏற்பாடு செய்திருக்கீங்க. வேண்டாம்னு சொல்லுவானேன்? ஒருக்கால் உங்க மகள் என்னை விட அழகாக இருந்தால் ஏதோ ஒரு காரணம் சொல்லி என்னை மறுத்திருப்பார்கள். பெண் பார்க்கவந்த போது எங்க மாமனார் லெக்சர் கொடுத்தார், பெண் பார்ப்பது செலக்ஷன் பிராஸஸ் இல்லை என்றும் மேட்சிங் பிராஸஸ் என்றும். அது உண்மை என்றால் பிடித்திருக்கு என்று சொன்ன பிறகு இன்னொரு பெண்ணை பார்ப்பானேன்? இதைவிட அது நன்றாக இருக்கலாமோ என்ற எண்ணம்தானே. இதற்கு பெயர் ஹிபோகிரஸி இல்லாமல் வேறு என்னவாம்?” சுஜாதா ஆவேசமாக மொழிந்தாள்.
சுவாமிநாதன் மறு பேச்சு பேசாமல் கோர்ட் காகிதங்களை எடுத்து பைல் மீது “சுஜாதாவின் விவாரத்து வழக்கு” என்று எழுதினார்.

முற்றும்

தெலுங்கில் திரு கவனசர்மா [Telugu Title VIDAKULU]
தமிழாக்கம் திருமதி கெளரி கிருபானந்தன் [tkgowri@gmail.com]
கணையாழி, ஏப்ரல் 2005 ல் பிரசுரிக்கப்பட்டது

Series Navigation

கவனசர்மா

கவனசர்மா