முருகாற்றுப்படையில் கடவுளர் வழிபாடும், நம்பிக்கையும்

This entry is part 30 of 30 in the series 20100425_Issue

முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை,


‘‘‘‘


E.Mail. sethumalar68 yahoo.com
திருமுருகாற்றுப்டை குமரப்பெருமானின் பெருமைகளை எடுத்துரைக்கும் பழந்தமிழ் நூலாக அமைந்துள்ளது. நக்கீரரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் திருப்புகழ், கல்லாடம், திருவிளையாடற்புராணம், திருப்பரங்கிரிப் புராணம், சீகாளத்திப் புராணம், ஆகியவற்றில் காணப்படுகின்றது. திருப்பரங்குன்றத்தில் நக்கீரரின் உருவச்சிலை உள்ளது.
சங்க்காலத்தில் வாழ்ந்த நக்கீரர் வேறு. பதினாராம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களைப் பாடியவர் வேறாக இருக்கலாம். மேலம் பதினோராம்திருமுறையைப் பாடியுள்ள நக்கீரரே, புராணங்களில் வழங்கப்படும் வரலாறுகளுக்கு உட்பட்டவர் என்றும் கூறுவர். சங்க்காலத்து நக்கீரனாரின் பெயரால் வேறொரு புலவர் பதினோராந் திருமுறையில் உள்ள பிரபந்தங்களைப் பாடியிருக்கலாம். இவரின் சிறப்புக்களைக் கருதிஅவரைப் பற்றி பல வரலாறுகளைக் கூறியிருக்கலாம் என்று கருத இடமுண்டு. நக்கீரனாரின் இத் திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டில் முதற்பாட்டாக அமைந்திருப்பதே நக்கீரனாரின் பெருமையை எடுத்துரைக்கும் எனலாம்.
அறுபடை வீடுகளின் சிறப்பு
திருமுருகாற்றுப்படை வீடுபேறு பெறுவதற்குரிய வழிமுறைகளைப் பற்றி எடுத்துரைக்கிறது. இந்நூலில் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திவாவிநன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை ஆகிய முருகனின் ஆறுபடை வீடுகள் பற்றிய சிறப்புகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
முருகன் திருப்பரங்குன்றத்தில் விருப்புடன் வாழ்கிறான். இப்பரங்குன்றம் மதுரைக்கு மேற்கில் உள்ளது. பாண்டிய மன்ன்ன் ஒவ்வொரு நாளும் இத்தலத்திற்கு வந்து முருகப்பெருமானை வழிபடுவான் எனப் பரிபாடல் எடுத்துரைக்கின்றது.இப்பரங்குன்றம் பழைமைச் சிறப்பு வாய்ந்த்து. திருச்செந்தூர் என்ற திருச்சீரலைவாயில் அமர்ந்து அடியவர்களு முருகன் அருள்புரிகிறான்.
திருவாவிநன்குடி என்பது பழநியம்பதியாகும். இப்பதி வரலாற்றுப் பெருமை வாய்ந்த்தாகும். இத்தலத்தில் அடியவர் பலர் குழுமி முருகப்பெருமானை வழிபடுகின்றனர். திருவேரகம் என்பது தஞ்சை வட்டாரத்தில் உள்ள காவிரிக்கரையில் உள்ள சுவாமிமலை ஆகும் என்று தற்போது கூறுகின்றனர்.
‘‘சீர்கெழு செந்திலும் செங்கோடும்வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்’’
என்று சிலப்பதிகாரம் குன்றக்குரவையில் சுவாமிமலை பற்றி குறிப்பிடுகின்றது. இதில் வெண்குன்றம் என்பதற்குச் சுவாமிமலை என்று அரும்பதவுரை ஆசிரியர் பொருள் கூறுகிறார். இதனால் சுவாமிமலை வேறு திருவேரகம் வேறு என்பதனை அறியலாம்.
பிற கடவுளர்கள்
திருமுருகாற்றுப்படையில் முருகனைப் பற்றி மட்டுமல்லாது திருமால், சிவபெருமான், இந்திரன், பிரம்மன் ஆகிய கடவுளர்களைப் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
பாம்பு இறக்குமாறு கொல்லுகின்ற பறவையான கருடப் பறவையைக் கொடியாகக் கொண்டவர் திருமால் என்பதை,
‘‘பாம்புபடப்புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்
புள்ளணி நீள்கொடிச் செல்வன்‘‘ (திருமுருகு. 150-151)
என்ற வரிகள் தெளிவுறுத்துகின்றன.
காளையுருவை எழுதிய கொடியை வலப்பக்கதில் உயர்த்தியவன், இடப்பக்கத்தில் உமையம்மையை வைத்துக் கொண்டிருப்பவன், மூன்று கண்களையுடையவன், திரிபுரத்தை அழித்தவன் சிவபெருமான். இதனை,
‘‘வெள்ளேறு
வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்
உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வன்‘‘ (திருமுருகு.,151-154)
என்ற அடிகள் எடுத்துரைக்கின்றன.
ஆயிரம் கண்களை உடையவன் என்றும், பல வேள்விகளைச் செய்தவன் என்றும், நான்கு தந்தங்களை உடைய பெரிய யானையின் பிடரியில் உள்ள அம்பாரியில் ஏறிச் செல்லும் செல்வத்தில் சிறந்தவன் என்றும் இந்திரனை (155-159) திருமுருகாற்றுப்படை குறிப்பிடுகின்றது.
மேலும்,
‘‘தாமரை பயந்த தாவில் ஊழி
நான்முக ஒருவன்‘‘ (திருமுருகு.164-165)
என நான்முகனைப் பற்றிய குறிப்பு திருமுருகாற்றுப்படையில் இடம்பெறுகின்றது. மேலும், ஆதித்தர் பன்னிருவர், உருத்திரர் பதினொருவர், வசுக்கள் எண்மர், இரு மருத்துவர் ஆகிய தேவர்கள் பற்றிய குறிப்பும் நக்கீரரால் குறிப்பிடப்படுவது நோக்கத்தக்கது. தேவர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், கிம்புருடர், இயக்கர், விஞ்சையர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், பூதர், பைசாசர், காராகணம், நாகர், ஆகாய வாசிகள், போக பூமியோர் என்ற பதினெண்கணங்களும் இந்நூலுள் குறிப்பிடப்படுகின்றனர். இதனுள் விநாயகப் பெருமான் பற்றிய குறிப்பு ஏதும் இடம்பெறவில்லை.
கோவில்கள்
சங்க காலத்தில் சிறுசிறு கோயில்களே இருந்தன. அக்காலத்து மக்கள் எங்கும் கடவுள் இருப்பதாகக் கருதி இயற்கை அழகினை வழபட்டு வந்தனர். பண்டைத் தமிழ் மக்கள் முருகனைக் காட்டிலே வைத்து வணங்கினர். சோலைகளிலும், ஆற்றின் நடுவில் அமைந்த அரங்கங்களிலும், ஆற்றங்கரை, குளத்தங்கரை, முச்சந்தி, நாற்சந்தி, ஐஞ்சந்தி, கடம்ப மரம், மரத்தடி, ஊரம்பலம், மரக்கட்டைகள் ஆகியவற்றில் முருகனை மக்கள் வழிபட்டனர் (திருமுருகு. 223-226).
முருக வழிபாடு
பண்டைத் தமிழர் முருகனை உருவமாகச் செய்து வழிபட்டனர். ஆறுமுகமும், பன்னிரண்டு கைகளும் உடைய தோற்றத்தைச் செய்து வணங்கினர். இவ்வுருவங்கள் புராண வரலாற்றைக் கொண்டு அமைக்கப் பெற்றிருந்த்து.
முருகனின் ஒரு முகம் சூரியனைப் போன்று ஒளி வீசிக் கொண்டிருக்கின்றது. ஒரு முகம் தன்னை வணங்கும் அடியவர்களுக்கு வரம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. ஒரு முகம் அந்தணர்களின் வேள்விகளைப் பாதுகாக்கின்றது. ஒரு முகம் உண்மையறிவை அடியவர்களுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. ஒரு முகம் அடியவர்களின் பகைவர்களை அழித்து அவர்களுக்குப் போரில் வெற்றியைத் தருகின்றது. ஒரு முகம் வள்ளியுடன் மகிழ்ந்து பேசிக்கொண்டிருக்கிறது என்பதனை,
‘‘பல்கதிர் விரிந்தன்று ஒரு முகம், ஒருமுகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினிது ஒழுகிக்
காதலின் உவந்து வரங்கொடுத்தன்றே ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒருமுகம்
எஞ்சிய பொருள்களை ஏமுறநாடித்
திங்கள் போலத் திசை விளக்கும்மே ஒருமுகம்
செறுநர்த் தேய்த்துச் செல்சம்ம் முருக்கிக்
கறுவு கொள்நெஞ்சமொடு களம்வேட்டன்றே
ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந்தன்றே‘‘ (திருமுருகு.92-102)
என்ற வரிகள் எடுத்துரைக்கின்றன. இதில் முருகப்பெருமானுடைய ஆறுமுகங்களின் செயல்கள் விளக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
முருகனின் திருக்கைகளுள் ஒன்று வானத்தில் திரியும் முனிவர்களைத் தாங்குகின்றது. மற்றொரு கை இழடயிலே ஊன்றியிருக்கின்றது. மற்றொன்று அழகிய ஆடையை அணிந்த துடையின்மேல் கிடக்கின்றது. அங்குசத்தை ஏந்திக் கொண்டிருக்கின்றது ஒருகை. ஒரு கை கேடகத்தை ஏந்தியிருக்கின்றது. ஒருகை வேலைச் சுழற்றிக் கொண்டிருக்கின்றது. ஒரு கை மார்புக்கு நேரே ஞானக் குறிப்புடன் விளங்குகின்றது. ஒரு கை மார்பிலணிந்த மாலையோடு சேர்ந்து கிடக்கின்றது. ஒரு கை கொடியுடன் மேலே சுடலும். ஒருகை மணிகளை ஆட்டி ஒலிக்கச் செய்கின்றது. ஒரு கை மேகத்தைப் பிடித்து மழையைப் பெய்விக்கின்றது. ஒரு கை தேவ மகளிர்க்கு மணமாலை சூட்டி மகிழ்ச்சி செய்விக்கின்றது (திருமுருகு. 107-117) என முருகனுடைய பன்னிரு கரங்களும் செய்யும் செயல்களை நக்கீரர் விளக்குகின்றார். இவற்றிலிருந்து பண்டைத் தமிழர்கள் உருவ வழிபாடு நிகழ்த்தியமை புலனாகிறது.
இறைவழிபாட்டு முறைகள்
பண்டைத் தமிழர்களிடம் தெய்வங்களுக்கு உயிர்களைப் பலியிட்டு வணங்கும் வழக்கம் இருந்த்து. அவர்கள் மலர்களிட்டும் கடவுளர்களை வணங்கினர். குருதி கலந்த அரிசியைப் பலியாக வைத்து வழிபாடியற்றினர். சிறிய தினை அரிசியை மலரோடு கலந்து வைத்தும், ஆட்டினை அறுத்தும், கோழிக் கொடியோடு முருகனை வரிசையாக நிறுத்தியும், ஊர்கள் தோறும் முருகனுக்குச் சிறப்பாக விழாவெடுப்பர். உயிர்ப்பலி இட்டு முருகனை பழந்தமிழர் வழிபட்டனர் என்பதை திருமுருகாற்றுப்படையின்,
‘‘மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள்ளரிசி
சில்பலி செய்து பல்பிரப்பு இரீஇ‘‘(திருமுருகு. 232-234)
என்ற வரிகள் எடுத்து மொழிகின்றன.
வேள்வி செய்தல்
தமிழகத்தில் அந்தணர்கள் வாழ்ந்தமை பற்றிய செய்தியை திருமுருகாற்றுப்படை மூலம் அறியலாம். அந்தணர்கள் வேதங்களைக் கற்றவர்கள். வேள்விகள் பலவற்றை அவர்கள் செய்தனர். மேலும் அவர்கள் தமிழருடன் இரண்டறக் கலந்துவிட்டதால் ஆரியர்-தமிழர் என்ற வேறுபாடு காணப்படவில்லை. அந்தணர்களின் வாழ்க்கையை,
‘‘இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது,
இருவர் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி, இளமை நல்லியாண்டு
ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை
மூன்றுவகை குறித்த முத்தீச் செல்வத்து
இரு பிறப்பாளர், பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத்தடக்கிய அருமறைக் கேள்வி
நாவியன் மருங்கின் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிது வந்து
ஏரகத்துறைதலும் உரியன்‘‘ (திருமுருகு.177-189)
என நக்கீரர் மொழிகிறார்.
அந்தணர்களை இருபிறப்பாளர் என்று ஆசிரியர் குறிப்பிடுவது நோக்கத்தக்கதாகும். முப்புரி நூலணிவதும், ஆறெழுத்து மந்திரத்தை ஓதி முருகளை நறுமலரால் வணங்குவதும் ஆகிய இறைவழிபாட்டை அந்தணர்கள் நிகழ்த்தினர் என்ற அந்தணர்களின் பழக்க வழக்கங்களை திருமுருகாற்றுப்படை எடுத்துரைக்கின்றது.
கடவுள் பற்றிய நம்பிக்கை
அறிவு நிரம்பிய புலவர்களும், பெரியோர்களும் பொதுமக்களும் கடவுளர் மீது நம்பிக்கை கொண்டு வழிபட்டனர். அவர்கள் கடவுளரை வழிபட்டு வந்தால் செய்யும் செயல்களில் வெற்றிபெறலாம் என்று நம்பினர். வேண்டுவனவற்றைக் கொடுக்கும் ஆற்றல் கடவுளுக்கு உண்டு என்றும், இறைவனை வணங்கினால் துன்புற்றவர்களின் துயரங்கள் பனிபோன்று விலகிவிடும் என்றும் இன்பம் பெருகும் என்று தமிழர்கள் நம்பினர். இவ்வுண்மையானது,
‘‘விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக்கிழவர்
பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே!
அரும்பெறல் மரபின் பெரும் பெயர்முருக!
நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபேராள!
அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்புண் சேஎய்!‘‘
(திருமுருகு. 267-271)
என்ற முருகாற்றுப்படையின் அடிகள் மூலம் நக்கீரரால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
சங்க காலச் சான்றோர்கள் பல கடவுளர்களை வணங்கினாலும் அவர்கள் ஒற்றுமையுடன் ஒருவரை ஒருவர் வெறுக்காது வாழ்ந்தனர். இறைவழிபாடு காரணமாக அவர்களிடையே பிரிவினைகள் ஏற்படவில்லை என்பது நோக்கத்தக்கது. பண்டைத் தமிழரின் இத்தகைய உன்னதமான வாழ்வு இன்றைய சமுதாயத்திற்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக அமைந்திலங்குகிறது.

Series Navigation<< இணையத்தில் தமிழ்

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.