This entry is in the series 20020120_Issue

கே ஆர் விஜய்


தோட்டத்தில் உள்ள மலர்களில் எல்லாம்
இன்று முகம் புதைத்து மகிழ்கிறேனே…
உன்னால் தான்..

உன்னை எனக்கு நினைவில்லை..
உன் முகமும் எனக்கு நினைவில்லை.
உன் கைகள்..கன்னங்கள்…உதடுகள்..
அதில் பதித்த முத்திரைகள்…எதுவுமே நினைவில்லை..

சிலைகளுக்கு வாயில்லை என்று தெரிகிறது..
இருந்தும் பேசுகிறேன்.
ஓவியங்கள் உயிர்பெறாது என்று புரிகிறது
இருந்தும் அவைகளுடன் நடக்கின்றேன்.
உன்னால் தான்…

உன்னை எனக்கு நினைவில்லை…
உன் கண்கள்..புருவங்கள்..எதுவும் எனக்கு நினைவில்லை..
உன் குரல் கூட எனக்கு சரியாக நினைவில்லை..

என்னுள் ஏற்பட்ட ஊமைக்காயங்களுக்கு
இன்று மருந்து தேடிக்கொண்டிருக்கிறேன்…
மலர்களின் வாசனை பிடிக்கவில்லை..
சிலைகளின் பாஷை புரியவில்லை…
உன்னால் தான்…

வாசனை கொண்டு பூக்களை அடையாளம்
காணுதல் போல
உன் நினைவுகளைக் கொண்டு
உன்னை அடையாளம் காண முயல்கிறேன்..
நீ எங்கே ?
இன்னும் ஒவ்வொரு சன்னல்களிலும் தேடிக் கொண்டு தான் இருக்கிறேன்…

**
21/11
vijay_r@infy.com

Series Navigation