மாறி வரும் செவ்வாய் கிரகம்

This entry is part [part not set] of 19 in the series 20011210_Issue


தட்ப வெப்ப நிலை மாறுதல்களால்,செவ்வாய் கிரகத்தின் பரப்பில் நீண்டகால மாறுதல்கள் நடந்து வருகின்றன என்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

அதிக நுட்பமான பிம்பங்கள் மூலம் செவ்வாயின் தெற்கு துருவம் ஆராயப்பட்டு வருடம் முழுவதும் இருக்கும் உறைந்த மேற்பரப்பு மாறிவருகிறது என்பது அறியப்பட்டிருக்கிறது.

இந்த துருவத்தில் உறைந்திருப்பது நீர் அல்ல. கரியமில வாயு. இந்த கரியமில வாயு கரைந்து செவ்வாயின் வாயுமண்டலத்தில் சேர்ந்து கொண்டே வருவது இந்த கிரகத்தையே வெகுவாக மாற்றிவிடும்.

‘இந்த கண்டுபிடிப்புகள் செவ்வாயைப் பற்றி ஆராய்வதில் புதிய யுகத்தை தோற்றுவித்திருக்கிறது ‘ என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த டேவிட் பேஜ் கூறுகிறார்.

கடந்த இரண்டு வருடங்களில் செவ்வாயின் தெற்கு துருவத்தில் இருந்த பனிமூடி மாறிவந்திருப்பதை குலோபல் சர்வேயர் என்ற செவ்வாயை சுற்றிவரும் செயற்கை துணைக்கோள் காண்பித்திருக்கிறது.

இந்த படங்களை ஆராய்ந்ததில், செவ்வாயின் வாயு மண்டலத்துக்கும் உறைபனிக்கும் இடையே வாயு மாறுதல்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதும் தெரிகிறது.

‘இந்த வாயுமண்டலத்தில் இருக்க வேண்டிய அத்தனை கரியமிலவாயுவும் இந்த வாயு மண்டலத்தில் இல்லை ‘ என்று கூறுகிறார் மாலின் விண்வெளி அறிவியல் அமைப்பின் மைக்கேல் மாலின். ‘இது தொடர்ந்து தட்பவெப்பம் மாறிகொண்டே இருப்பதையே குறிக்கிறது ‘ என்றும் கூறுகிறார்.

இந்த பனி மூடி மாறுவது, செவ்வாயின் பரப்பில் இருக்கும் தண்ணீரின் அளவையும் பாதிக்கிறது.

வாயுமண்டலத்தின் அழுத்தம் அதிகமானால், செவ்வாயின் பரப்பில் இருக்கும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கும் என்றும் கூறுகிறார் டாக்டர் மாலின்

1999இல் மார்ஸ் குலோபல் சர்வேயர் வட்ட வடிவ குழிகளையும் அதனூடே இருக்கும் பள்ளத்தாக்குகளையும் படம் பிடித்து காண்பித்தது. தெற்கு துருவத்தில் இருக்கும் இந்த வடிவமைப்புகளை படமெடுத்த மார்ஸ் குலோபல் சர்வேயர் மீண்டும் 2001இல் அதே இடங்களை படம் பிடித்தது.

இரண்டு படங்களையும் ஒப்பிட்ட போது, பல குழிகள் பெரியதாகியும், பல சிறு குழிகள் காணாமலும் போய் இருந்ததை பார்க்க முடிந்தது.

இந்த படிவங்களை ஆராயும்போது இவை அதிக அழுத்தமான கரியமிலவாயு உறைபனி என்பதையும், தண்ணீர் பனி இல்லை என்பதும் தெரியவருகிறது.

இந்த கரியமிலவாயு பனிக்கட்டியும்கூட ஒரு பத்தாண்டுகளில் உருவாகியும், அடுத்த பத்தாண்டுகளில் சுத்தமாக காணாமலும் போய்விடும் குணம் கொண்டவை என்பதும் தெரியவருகிறது.

Series Navigation

செய்தி

செய்தி