மாயா ஏஞ்சலு: நிறவெறியை வென்ற சாதனையாளர்

This entry is part [part not set] of 39 in the series 20080306_Issue

தேவமைந்தன்


இரண்டாம் உலகப் போருக்கு மிக முன்பே, பால் லாரென்ஸ் தன்பார் என்ற கவிஞர் படைத்த ‘கருணை’ என்று பொருள்படும் ‘சிம்பதி” என்ற பாடல் புகழ் பெற்றிருந்தது. ஜே. ரோசமான்ந் ஜான்சன் என்ற இசையமைப்பாளர் அந்தப் பாடலுக்குச் சிறப்பாக இசையமைத்தார். பாடகர் ஜேம்ஸ் வெல்டன் ஜான்சன், “லிஃப்ட் எவ்’ரி வாய்ஸ் அண்ட் சிங்!’ என்று கம்பீரமாகத் தொடங்கி அதைப் பாடினார் என்றால் கேட்டு உருகாதவரே இருக்க முடியாது. அந்தப் பாட்டில் இடம்பெற்ற ஒரு வரி, “கூண்டில் அடைக்கப்பட்ட பறவை ஏன் பாடுகிறது என்று எனக்குத் தெரியும்!” என்பது. தன் நண்பர் அப்பே லிங்கன் ரீச் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, “மாயா! ஏன் அந்தப் பாடல் வரியையே உங்களின் தன் வரலாற்றுக்குத் தலைப்பாக வைத்துவிடக் கூடாது? என்று அவர் கேட்க, அதுவே தலைப்பானது.

இதெல்லாம் ஒரு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால்……

அதற்கும் பற்பல ஆண்டுகளுக்கு முன்பே, தனக்கு மூன்று வயதாகவும் தன் சகோதரன் பெய்லி ஜான்சனுக்கு நான்கு வயதாகவும் இருக்கும்பொழுதே, பாட்டியாரிடம் வளர அனுப்பப்பட்டவர் மார்க்கெரித்… ஆம், அதுதான் மாயா ஏஞ்சலுவின் சொந்தப் பெயர். கலிஃபோர்னியாவின் ‘நீண்ட கடற்கரை’ என்ற பெயருடைய ‘லாங் பீச்’தான் மார்க்கெரித்தின் தாயார் விவியன் பாக்ஸ்டர் வாழ்ந்த நகரம். ‘மதர் டியர்’ என்று மாயாவும் பெய்லியும் தாயாருக்குப் பெயர் சூட்டியிருந்தார்கள். தன்னைப்போன்ற அழகு பெற்றவளாகத் தன் மகள் இல்லாததால்தான் அம்மா தன்னைச் சகோதரனுடன் பாட்டி வீட்டுக்கு அனுப்பி விட்டதாக வேடிக்கையாக மாயா இந்தப்புத்தகத்தில் சொல்லுவார்கள். மாயா ஏஞ்சலு’வின் சிறப்பே, சொல்லுவதற்கு மிகவும் உறுத்தலான சேதிகளையும் ஒருவகையான நக்கலடிப்புடன் சொல்லிச் செல்வதுதான். நிறவெறி பற்றி வரும்பொழுதுங் கூட உணர்ச்சி மிகுந்த சொல்லாடலுடன் இதே நக்கலடிப்புத்தான் கைகோத்துச் செல்லும்.

தன் பாட்டியின் நகரத்துக்குப் பயணம் செய்த பொழுது, நீகிரோவர்களான சக பயணிகளிடமிருந்து மாயா முதன்முதலாக ஒன்றைத் தெரிந்து கொண்டார். அவர்கள் கனத்த உணவுப் பாத்திரங்களோடு வந்திருந்தனர். தங்களுடன் பயணம் செய்யும் ஆதரவற்ற நீகிரோக் குழந்தைகளுக்குக் குளிர்ந்துபோன – வறுத்த சிக்கனும் உருளைக்கிழங்கு சாலட்டும் அன்புடன் தருவதில் முனைப்பாக இருந்தனர். மாயாவும் பெய்லியும் அந்தச் சமயத்தில் தம் தாயுடன் பயணம் செய்யாததால் அவர்களுக்கும் அதே அன்பு கிடைத்தது. பிற்காலத்தில்தான் அது ஏன் என்பது மாயா ஏஞ்சலுவுக்குத் தெரிந்தது. அச்சமுற்ற ஆயிரமாயிரம் நீகிரோ சிறுவர்கள், அமெரிக்க நாட்டின் வடக்கு-தெற்குக் குறுக்காக, நாள்தோறும், தங்களைப் புதிதாகத் தத்து எடுத்துக் கொண்ட பெற்றோர்களைத் தேடி வடக்கு நகரங்களுக்கோ அல்லது தத்து நீங்கி மீண்டும் தங்கள் பாட்டிமார்களை நாடித் தெற்கு நகரங்களுக்கோ பயணம் செய்து கொண்டே இருந்தனர். பொதுவாக, ‘வடமாநிலங்களின் நகரத்துவம், தனது பொருளாதார வாக்குறுதிகளைக் காப்பாற்றாத பொழுது ‘ இவ்வாறான பயணங்கள் நிகழ்ந்தன.

மாயாவின் பாட்டியாரின் பெயர் திருமதி ஆன்னி ஹாண்டர்சன். அர்கன்சாஸிலுள்ள ஸ்டாம்ப்ஸ் என்ற நகரில் பண்டசாலை நடத்தி வாழ்ந்தவர். ‘மிகுந்த மதப்பற்றும் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையும் கொண்ட தென்னமெரிக்க நீகிரோ அம்மையார் ‘ என்று தன் பாட்டியைக் குறித்து மாயா ஏஞ்சலு குறிப்பிடுவார். பாட்டியின் ஒரே மகன் வில்லீ, ஊனமுற்றவர். இந்தத் தன்வரலாற்றில் கடைசியாக அவர் குறிப்பிடப்பெறும் பொழுது அவருக்கு வயது நாற்பத்திரண்டு ஆகியிருக்கும். அவர்தான் பாட்டியாரின் பண்டசாலையைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்பவர். அதன் பின்கட்டில் தங்கிக் கொள்வார். அதுவே அவர் வாழ்க்கை. ‘வில்லியம் ஜான்சன் பொது வணிகப் பண்டசாலை’ என்பது அதற்கு வைத்த பெயர். பலகையில் ‘விம்.ஜான்சன் பொது வணிகப் பண்டசாலை’ என்று இருக்கும்.

மாயாவும் பெய்லியும் ஸ்டாம்ப்ஸ் நகருக்கு வருவதற்கு இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பே[இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம்], அந்தப் பண்டசாலையைப் பாட்டியார் தொடங்கியிருந்தார். கிழக்கு ஸ்டாம்ப்ஸைச் சார்ந்த மரமறுக்கும்தொழிலாளிகளுக்கும் மேற்கு ஸ்டாம்ப்ஸைச் சார்ந்த பருத்தித் தொழிலாளிகளுக்கும் உணவுப் பண்டங்கள் விற்பதிலிருந்து தன் வியாபாரத்தைத் தொடங்கினார். தொழிலில் விசுவாசமுள்ளவர் ஆதலால் அவர் சுவையாகச் செய்து அவர்களுக்கு விற்ற மொறுமொறுப்பான புலால் பணியாரங்களும் குளிர்ந்த எலுமிச்சைச் சாறும், ஒரே சமயத்தில் அந்த இரண்டு வெவ்வேறு இடங்களிலும் நேரம் தவறாமல் ஏற்பாடு செய்து கொடுத்த விதமும் அவருக்கு வெற்றி தேடித் தந்தன. சில ஆண்டுகள் தொடர்ந்து மேலும் அந்தத் தொழிலாளர்களுக்குத் தேவைப்பட்ட பண்டங்களை, அவர்கள் எளிதாக வந்து போகக் கூடிய இடத்தில், மரப்பலகைகள் வைத்துக் கடைபோன்ற அமைப்பில் கட்டி விற்றார். மேலும் வளர்ந்தபின், நீகிரோவர் வசிப்பிடங்களுக்கு நடுவாக பண்டசாலையை நிறுவினார். காலஞ் செல்லச் செல்ல, நீகிரோவர் வந்து கூடுமிடமாகவும் செயல்பாடுகள் பலவற்றை அவர்கள் திட்டமிடும் மையமாகவும் அது முக்கியத்துவம் பெற்றது. சனிக்கிழமைகளில் மட்டும் காட்சி வேறுபடும். அந்தப் பண்டசாலையின் விறாந்தையருகே உள்ள மரநிழலில் முடிதிருத்துபவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை அமரச் செய்வார்கள். நெடுந்தொலைவு பயணம் செய்து வந்த ‘ட்ர்யூபதூர்’கள் எனப்பட்ட நாடோடிக் கலைஞர்கள் தங்களின் ‘தெ பிரெஃஸோஸ்’ சோக கீதங்களைக் கொட்டாங்கச்சி யாழ்களிலும் சிகரெட்-பெட்டி-யாழ்களிலும் வாசிப்பார்கள். பண்டசாலையில் விற்கப்படும் உணவுப் பண்டங்கள், பலவகை வண்ண நூல்கண்டுகள், பன்றிகளுக்கான தீவனம், கோழித் தீவனமான சோளம், விளக்குகளுக்கான கரி எண்ணெய், வசதி படைத்தவர்களுக்கான மின்விளக்கு பல்புகள், ஷூக்கயறுகள், முடியலங்காரப் பொருள்கள், பலூன்கள், பலவிதமான பூச்செடிகளை வளர்ப்பதற்கான விதைவகைகள் முதலியவை அங்கே வாடிக்கையாளர் பலரை ஈர்த்தன. யாராவது அங்கே ஏதாவது இல்லை என்று சொன்னால், உடனே வாங்கி வைக்கப்பட்டுவிடும். அப்புறமென்ன? அந்தப் பண்டசாலை வெற்றிகரமாக நடந்தது என்று சொல்லவும் வேண்டுமா! வெள்ளை இனத்தவர்கூட மாயா ஏஞ்சலுவின் பாட்டியார் திருமதி ஆனி ஹாண்டர்சனிடம் அவ்வப்பொழுது கைமாற்றாகப் பணம் பெற்றுக் கொள்ளும் அளவு வியாபாரத்தில் வெற்றி பெற்றார். பணத்துக்கு நிறமாவது வெறியாவது!

ஆனாலும், நிறவெறி தன் வெவ்வேறு முகங்களை அங்கங்கே காட்டிக் கொண்டுதான் இருந்தது. மாயா சொல்வதிலிருந்து மிகச் சில காட்சிகள்:

“அழுக்காக இருக்கக் கூடாது!” “கீழ்ப்படியாதவர்களாக நடந்து கொள்ளக் கூடாது!” என்ற இரண்டு கட்டளைகளைப் பாட்டியார் எங்களுக்கு இட்டிருந்தார்கள். அவற்றை நாங்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்பதில் மிகவும் கண்டிப்பாக நடந்துகொண்டார்கள். ஏதோ எங்கள்[மாயா, பெய்லி] ஒட்டுமொத்த வாழ்வின் ஈடேற்றமே அந்தக் கட்டளைகளில்தான் தொங்கிக் கொண்டிருப்பதுபோல இருந்தது.

என்ன பனியானாலும் குளிரானாலும் கேணிக்குப் போய் அதன் தூய, சில்லிட்ட நீரால் கைகால்களைக் கழுவிக் கொண்டு, வறண்ட துவாலையால் ஈரம் போகத் துடைத்து, தண்ணீரேபோல் சில்லிட்ட வாசலைனைத் தடவிக் கொண்டுதான் வீட்டுக்குள்ளேயே நுழைவோம். பிறகு வீட்டுப்பாடங்கள்; சோளரொட்டி; சுண்டக் காய்ச்சிய பால்; பிரார்த்தனைகள்; படுக்கை. இந்த வரிசை கொஞ்சமும் மாறலாகாது. நாங்கள் உறங்கியபின் போர்வையை இழுத்து எங்கள் பாதங்கள் தூய்மையாக இருக்கின்றனவா என்று சோதிக்கப் பாட்டியார் ஒருநாளும் தவறியதே இல்லை. அழுக்காக இருந்துவிட்டால், நேரம் காலம் பார்க்க மாட்டார்; படுக்கையறைக் கதவருகே எப்பொழுதும் மூலையில் சாய்ந்து காத்திருக்கும் ஒரு சுள்ளிக் குச்சி .. அழுக்காகப் பாதத்தை வைத்த ‘குற்றவாளி ‘யின்மேல் சுழன்றாடும். நள்ளிரவு நேரத்தில் ஒரு கேணியின் அருகே என்னவெல்லாம் சஞ்சரிக்கும் என்று பரப்பப்பட்ட கதைகளின் பாதிப்போடும் – எதார்த்தமாக அந்த நேரத்தில், அங்கே திரியக்கூடிய ஊர்வனவற்றிலிருந்தும், மெய்யாகவே ஆபத்து விளைவிக்கக் கூடிய சமூக விரோதிகளிடமிருந்தும் அந்தக் ‘குற்றவாளி ‘[அழுக்கான பாதங்களை உடையவர்] தன்னைக் காத்துக் கொண்டு, கைகால்களை அழுக்குப் போகத் தேய்த்து வந்து ஈரம் போக்கி..வாசலைன் தடவி……மீண்டும் படுத்துத் தூங்கலாம். இத்தனைக்கும் பின்னே பாட்டியார், “கடவுள்தன்மைக்கு அடுத்து தூய்மை என்பது மட்டுமே உண்மை அல்ல; ‘அழுக்கு’ என்பதுதான் வறுமையையே கண்டுபிடித்த விஞ்ஞானி என்பதும் அதைவிட உண்மையானது” என்று எங்களிடம் வலியுறுத்தத் தவறியதில்லை. மேலும், “கீழ்ப்படியாத பிள்ளையை ஆண்டவர் வெறுப்பார்; அந்தப் பிள்ளையின் பெற்றோர்மேல் அவமானம் கவியும்; அந்தப் பிள்ளையின் குடும்பத்தார் சுற்றத்தார் எல்லோரும் அழிந்தே போவார்கள்!” என்றும் எச்சரிப்பார். பெரியவர்களை – ‘மிஸ்டர்,’ ‘மிஸ்ஸஸ்,’ ‘மிஸ்,’ ‘ஆண்ட்டி,’ ‘கசின்,’ ‘அன்க்,’ ‘அங்கிள்,’ ‘புஹ்பாஹ்,’ ‘சிஸ்டர்,’ ‘பிரதர்’ .. இன்னும் ஆயிரம் மரியாதைப் பெயர்களால் அவரவர் தகுதிக்கேற்பத் தெரிந்தெடுத்து அழைக்க வேண்டும் என்று இன்னும் இன்னும் எத்தனையோ அறிவுறுத்துவார். இப்படிப்பட்ட பாட்டிக்கு எவர்களால் எப்பொழுது எப்படியெல்லாம் சோதனை வந்தது தெரியுமா?

பாட்டி இத்தனை சொன்னார்களே! அவையெல்லாம் எங்களுக்கு… நீகிரோச் சிறுவர்களுக்குத்தான் பொருந்தும். ‘பொவைட்ரேஷ்’ என்றழைக்கப்படும் வெள்ளைச் சிறுவர்களுக்கல்ல…

அவர்கள் பாட்டியாரின் பண்ணைநிலத்தில் வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களின் குடும்பங்களோ, பொருளாதார அடிப்படையில் திருமதி ஹாண்டர்சனுக்குக் கட்டுப்பட்டவை. ஆனால் நிறம் வேறாயிற்றே! சில சமயங்களில் அவர்கள் கூட்டங் கூட்டமாகப் பண்டசாலைக்குள் நுழைவார்கள், மிகுந்த உரிமை எடுத்துக் கொள்வார்கள். எங்களால் தாங்க முடியாத அளவு அழிச்சாட்டியம் பண்ணுவார்கள். “வெள்ளை ஆசாமிகளிடம் எவ்வளவு குறைவாகப் பேசுகிறீர்களோ, அவ்வளவுக்கும் நல்லது!” என்று எங்கள் வாய்களைப் பாட்டியார் அடைத்து விடுவதால் எங்களால் ஒன்றுமே செய்ய இயலாது. வில்லீ மாமாவை மரியாதைக் குறைவாகப் பேசி, அதை இதை எடுக்கச்சொல்லி ஆணை இடுவார்கள். ‘ஆன்னி…!’ என்று அந்தச் சிறுவர் சிறுமியர் பாட்டியைப் பெயர்சொல்லி அழைத்து வேலையிட, பாட்டியாரும் அவர்கள் குறிப்பறிந்து நடந்து கொள்வதைப் பார்த்து அந்த என் பத்து வயதிலேயே எனக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வரும். இன்னும் பல விதங்களில் ஆத்திரப்படுத்தும் அவர்கள், ஒரு சமயம், அநாகரிகத்தின் உச்சத்துக்கே சென்றார்கள்.

அவர்களுள் ஒருத்தி, “இங்கே பார் ஆன்னீ!” என்றழைத்து, என் பாட்டியாருக்கு அருவருப்பான முறையில் ஒழுங்கு காட்டினாள். பாட்டியாரோ உணர்ச்சி வசப் படாமல், தோத்திரப் பாடல்களை முணுமுணுக்கத் தொடங்கினார்கள். இன்னொரு சிறிய பெண் பொம்மலாட்டம் போன்ற ஒரு நடனம் ஆடினாள். மற்ற பிள்ளைகள் அதைப்பார்த்து ஊளையிட்டுச் சிரிக்கலானார்கள். அந்தச் சமயத்தில் அவர்களுள் பருவமடைந்து பெரியவளாக இருந்த ஒருத்தி முன்னே வந்தாள். ஒரு மாதிரி பாட்டியாரைப் பார்த்தாள். அடுத்த கணம் வெகுவேகமாகக் குனிந்தாள். தரைமேல் தன் கைகளைத் தட்டையாக அழுத்தினாள். அப்படியே தன் பாரிய உடலை அந்தரத்தில் உயர்த்தினாள். அவளுடைய அழுக்கான பாதங்களும் நீண்ட கால்களும் வானத்தை நோக்கின. அவளுடைய உடையோ சரிந்து கொண்டே வந்து அவள் தோள்களைச் சுற்றிக் கொண்டது. உள்ளாடை எதையும் அவள் அணிந்திருக்கவில்லை..உயர்த்திய தன் நீண்ட கால்களை ஒன்று சேர்த்து, தன் குறியைப் பாட்டியாருக்குச் சிறிதுநேரம் காட்டினாள். பிறகு கீழே தடுமாறிக்கொண்டு விழுந்து எழுந்து கொண்டாள். மற்ற பெண்பிள்ளைகள் எல்லோரும் அவளைச் சூழ்ந்துகொண்டு முதுகில் தட்டிக் கொடுத்தனர். ‘படபட’வென்று கைகளைத் தட்டிப் பாராட்டைத் தெரிவித்தனர். பிறகு கொஞ்சநேரத்தில் போய்த் தொலைந்தனர். பாட்டியார் அத்தனை அழிம்புகளுக்கிடையிலும் தோத்திரப்பாடல்களை முணுமுணுத்துக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் “ஆன்னி! போறோம்!” என்று கத்திக் கொண்டு போனபொழுதுகூட, “போய் வாருங்கள் மிஸ் ரூத்!” “போய் வாருங்கள் மிஸ் எலோய்ஸ்!” என்று பாட்டியார் மரியாதையாக விடை தந்தபொழுது, நான் ஆடிப்போய்விட்டேன். போயும் போயும் நிறத் திமிருக்கு இவ்வளவு மரியாதை தருவதா?

போதாததற்கு வெள்ளை இளைஞர்களில் போக்கிரிக் கும்பல்களும் இருந்தன. நீகிரோவர் வெள்ளை இனத்தவருக்குச் சிறிது தவறிழைத்தாலும் கும்பலாக வந்து நீகிரோவர் இடங்களைச் சூறையாடிவிட்டுச் செல்வார்கள்; ஆள்களையும்தான். அப்படிப்பட்ட கும்பலிடமிருந்து நீகிரோவர் ஒருவரைப் பண்டசாலையில் மறைத்துப் பாட்டியாரும் மாமாவும் காப்பாற்றினார்கள். நீதிமன்றத்தில் வழக்கு வந்தபொழுது, பாட்டியார் சாட்சி சொல்லப் போயிருந்தார். கூண்டிலேறி, “திருமதி ஆண்டர்சன்” என்று தன் பெயரை அவர் சொன்னபொழுது, ஏதோ நடக்கக் கூடாதது நடந்தது போலவும் சொல்லக் கூடாததை ஒருவர் சொல்லி விட்டது போலவும் அலை அலையாய் நீதிமன்றக் கூடத்தில் சிரிப்பு எழுந்தது. நீதிபதி, குற்றஞ் சாட்டியவர் உட்பட அவையில் இருந்த அத்தனை வெள்ளையரும் உரக்கச் சிரித்தனர். அது மட்டுமா? ஓர் ஊரில், இல்லை இல்லை தன் ஊரான பைன் ப்ளஃப்’பில், பண்டசாலை ஒன்றினுக்கு ‘நிறம்’உடைய ஒருவர் உரிமையாளராக இருக்க முடியுமா என்பதை நினைத்துப் பார்க்கக்கூட முடியாமல் சிரித்ததில், நீதிபதிக்குப் புரையேறியே விட்டதாம். நெடுங்காலம் இதையே சொல்லிச் சொல்லி வெள்ளையர்கள் சிரித்ததில் நீகிரோவருக்குப் பெருமைதானாம். என் பாட்டியாரின் தகுதியும் கம்பீரமும் அதன்மூலம் வெளிப்பட்டுவிட்டதாக அவர்கள் கருதிக் கொண்டார்களாம்.”

ஒருமுறை, மாயா ஏஞ்சலுவுக்குப் பொறுக்க முடியாத பல்வலி வந்தது. ஆஸ்பிரின் மாத்திரைகளைப் பொடித்து வைத்து அடைத்தும் கிராம்புத் தைலம் இட்டும் அடங்கவில்லை. பாட்டியார் வழியை – பிரார்த்தனை முறையைப் பின்பற்றலாமே என்று நினைத்தாராம். வீட்டின் கீழ் தான் உட்கார்ந்திருக்கையில், கட்டடம் இடிந்து, கொடுமையாக வலிக்கும் பற்குழிகளையுடைய தன் இடது தாடைமேல் விழவேண்டும் என்று உண்மையாக வேண்டிக் கொண்டாராம். ஸ்டாம்ப்ஸ் நகரில் நீகிரோவரான பல் மருத்துவர் இல்லை; ஏன், அத்தகைய பொதுமருத்துவரும் இல்லை. முன்பெல்லாம் தனக்குப் பல்வலி வந்தபொழுது பாட்டியார் திடமானதொரு நூலைத் தன் சொத்தைப் பல்லைச் சுற்றிலும் கட்டுவாராம்; அதன் இன்னொரு நுனியைத் தன் வலது கை மணிக்கட்டைச் சுற்றிக் கொண்டு பலமாக இழுத்துப் பிடுங்கி விடுவாராம். இல்லையெனில் வலிநீக்கிகளைத் தருவாராம். அல்லது இருக்கவே இருக்கிறது பிரார்த்தனை, அவருக்கு. இந்த முறை அந்த மூன்றும் பலனளிக்கவில்லை. கெட்டி நூலைக் கட்டத் தேவையான குறைந்த அளவு எனாமல்கூட மீந்திருக்கவில்லை; ‘சமநிலைப்படுத்தும் தேவதை,’ பாட்டியாரின் பிரார்த்தனை வழிகளை அடைத்து விட்டதால் பிரார்த்தனைகளும் பலிக்கவில்லை.

“சரி! வேறுவழியில்லை. நீகிரோவரான பல் மருத்துவர், இருபத்தந்து மைல்கள் தாண்டியுள்ள டெக்ஸர்கானா என்ற நகரில் இருக்கிறார். அவர்தான் நமக்கு மிக அருகில்(!) உள்ள பல் மருத்துவர். அவ்வளவு தொலைவு சென்று உன் பல்வலியை நீக்கித் திரும்புவதற்குள், நான் செத்தே போனாலும் போய்விடுவேன். இங்கே, ஸ்டாம்ப்ஸ் நகரிலேயே டாக்டர் லிங்கன் என்ற வெள்ளையரான பல்மருத்துவர் இருக்கிறார். அவர் என்னிடம் கடன்வேறு வாங்கியிருக்கிறார். அதனால் நமக்கு நல்லது செய்வார்!” என்று அழைத்துப் போன இடத்தில் நிறவெறியின் இன்னொரு குரூரமுகம் மாயாவுக்கு வெளிப்பட்டது.

பல் மருத்துவர் லிங்கனின் மருத்துவ மனைக்குச் செல்லுமுன், வெந்நீரில் மாயாவைக் குளிக்குமாறு செய்த பாட்டியார், தானும் தூய்மையாக நீராடிவிட்டுப் புறப்பட்டார். மாயாவை, உள்ளும் புறமும் துவைத்துக் கஞ்சியிட்டுத் தேய்த்த புதிய ஆடைகளை அணியவைத்தார். ‘லிஸ்டரின்’ கொண்டு வாயைக் கொப்பளிக்க வைத்தார். வலியும் வீக்கமுமுள்ள இடது தாடையை, வேலைப்பாடுள்ள புதிய துண்டைக் கொண்டு மறைத்துக் கொள்ளுமாறு செய்தார். தூய்மையில் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை!

டாக்டர் லிங்கனின் மருத்துவ மனையில் நடந்தவை அந்தத் தூய்மைக்கு முற்றிலும் எதிரானவை. ஒரு மணி நேரம் வெட்டியாகக் காத்திருந்தபின், வெள்ளை நர்ஸ் வேண்டா வெறுப்பாகக் கதவைத் திறந்து விட்டாள்; அலட்சியமாக, “உங்களுக்கு இங்கே என்ன வேலை?” என்பதுபோல் புருவம் நெறித்தாள். அப்பொழுது அங்கே வந்த பல் மருத்துவர் என்னைப் பார்க்கவில்லை; என் இடது தாடையைச் சுற்றிய துண்டையும் பார்க்கவில்லை; வீங்கிப்போன என் முகத்தையும் பார்க்கவில்லை. பாட்டியாரைப் பார்த்து, “நல்லது .. ஆன்னி! உங்களுக்கு என் உதவி என்ன தேவைப்படுகிறது?” என்று கேட்டார். “இதோ பாருங்கள்…இவள் என் பேத்தி! நான்கு நாள்களாக இரண்டு சொத்தைப் பற்கள் இவளைப் பாடாய்ப் படுத்துகின்றன!” என்று அவர் சொன்னதற்கு, அந்த டாக்டர் முகத்தில் எந்த எதிர்வினையையும் காணோம். கரகரத்த குரலில் அவர் பேச்சு மட்டும் வெளிப்பட்டது.

“ஆன்னி…?”
“எஸ், சார்.. டெண்டிஸ்ட் லிங்கன்.”
சிப்பிகளைக் கரைமணலில் தேடுவது போன்ற கவனத்துடன், அவர் சொற்களைத் தேடினார்.
“ஆன்னி..உங்களுக்குத் தெரியும்..’நிக்ரா’க்களுக்கு.. நிறமானவர்களுக்கு நான் வைத்தியம் பார்ப்பதில்லை.. ”
“டெண்டிஸ்ட் லிங்கன், அது எனக்கும் தெரியும்.. ஆனால் இவள் என்னுடைய பேத்தி.. சின்னப் பெண்..செல்லப் பெண்..இவளால் உங்களுக்கு எந்தத் தொல்லையும் வரப்போவதில்லை!”
“ஆன்னி..ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை உண்டு..இந்த உலகத்தில் உங்களுக்கென்று ஒரு கொள்கை இருந்தே ஆக வேண்டும்!..இப்பொழுது, என் கொள்கை என்னவென்றால், நிறமானவர்களுக்கு நான் வைத்தியம் பார்ப்பதில்லை…”

பாட்டியாரின் தோலிலிருந்த எண்ணெய்ப் பசையே காய்ந்து விட்டது போலவும் அவர்களின் தலைமுடியில் தோய்ந்திருந்த வாசலைன் உருகி ஓடுவது போலவும் எனக்குப் பட்டது…

“என்னை நன்றாகப் பார்த்துச் சொல்லுங்கள்..பாவம்.. சிறு பிள்ளை..நீங்கள் அவள் பல்வலியைப் போக்கலாம்… தவிர, நீங்கள் ஓரிரு முறை என்னுடைய உதவிகளையும் பெற்றிருக்கிறீர்கள்……”

பல் மருத்துவர் முகம் லேசாகச் சிவந்தது. “உதவி.. உதவி செய்தீர்கள். எல்லாப் பணத்தையும் திருப்பித் தந்துவிட்டேன்..முடிந்து விட்டது..சாரி, ஆன்னி…” கதவுக் குமிழைச் சுழன்று திறக்க அவர் கை நீண்டது….

பாட்டியார் சொன்னார்: “இதற்குமேல் உங்களை எனக்காக வற்புறுத்த நான் விரும்பவில்லை. ஆனால் என் பேத்திக்கு வைத்தியம் செய்ய மாட்டீர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள மட்டும் என்னால் இயலவில்லை. நீங்கள் உதவி கேட்டு என்னிடம் வந்தபொழுது நீங்கள் பிச்சையெடுப்பதுபோல் வேண்டிக் கேட்க நான் விடவில்லை…நீங்கள் பணம் கேட்டீர்கள். உடனே கொடுத்தேன். அது, என் கொள்கையாக இல்லை. நான் வட்டிக்குக் கடன்கொடுக்கும் ‘மணிலெண்டர்’ தொழில் செய்யவில்லை. இதோ நீங்கள் நின்று பேசுகிறீர்களே… இந்தக் கட்டடமே உங்கள் கைகளை விட்டுப் போக இருந்தபொழுது, இதை நீங்கள் மீட்டுக்கொள்ளும்படி உடனே நான் உங்களுக்கு உதவவில்லையா?”

“நான் அதையெல்லாம் திருப்பிக்கொடுத்துவிட்டேன்!.. சும்மா, உரத்துப் பேசாதீர்கள் ஆன்னி! என் கொள்கை…என் கொள்கை என்னவென்றால்..சொல்லுகிறேன்..கேட்டுக் கொள்ளுங்கள்…ஒரு நாயின் வாய்க்குள் கையை விட்டுப் பல் மருத்துவம் செய்தாலும் செய்வேனே தவிர, ஒரு நீகிரோ வாய்க்குள் அல்ல..”

என்மேல் இதுவரை ஒரு பார்வையைக் கூட அவர் வீசவில்லை.

பாட்டி என்னைப் பார்த்துச் சொன்னார்கள். “சிஸ்டர்![எப்பொழுதும் அப்படித்தான் என்னை அழைப்பார்கள்; நான் அவர்களை ‘அம்மா!’ என்றே அழைப்பேன்]…. படிக்கட்டின் கீழே கொஞ்சம் போய் நில்லுங்கள்.. எனக்காகக் காத்திருங்கள்.. விரைவில் வந்து விடுவேன்!” என்று சொல்லிவிட்டு, அந்தப் பல் மருத்துவர் அறைக்குள் தடாலடியாகப் புகுந்து கதவைத் தாழிட்டுக் கொண்டார்கள். சிறிது நேரத்தில், அந்த அறையை விட்டு வெளிவந்து, படிக்கட்டில் இறங்கி அவர்கள் வந்தபொழுது, அலுப்பும் ஆயாசமுமாகத் தோன்றினார்கள். பிறகு, டெக்ஸர்கானாவுக்குப் பயணம் செய்து நீகிரோ பல்மருத்துவரிடம் எனக்கு முறையாக மருத்துவம் பார்த்தார்கள். பல்வலி போயே போனது. பாட்டியார்மேல் பெருமை பெருமையாக வந்தது. டெக்ஸர்கானாவுக்குப் பயணம் போய்வந்தபொழுது அந்த கம்பீரமான பாட்டியாரின் கைகள் என்னைச் சுற்றி இருந்ததும் நான் அவர்களின் குளிர்ந்த ‘பிரவுன்’ நிறத் தோள்மீது சாய்ந்து வந்ததுமே என் நினைவைச் சுற்றிச் சுற்றி வந்தது. பாட்டியார் அவ்வாறு யாரிடமும் தன் அன்பைக் காட்டியதே இல்லை அல்லவா?

அது சரி!… ‘டெண்டிஸ்ட் டாக்டர் லிங்கன்’ அறைக்கு உள்ளே என்ன நடந்தது? மாயாவின் பாட்டியாரும் தெய்வபக்தி – பொருளாதார வெற்றி – வாழும் நகரில் புகழ் ஆகியவை மிக்க திருமதி ஆண்டர்சன், அந்த அறைக்குள்ளே, இனக்காழ்ப்பு மிக்க நர்ஸும் நிறவெறியைத் தொழில் கொள்கையாக ஏற்றுக்கொண்ட மருத்துவரும் ஒருசேர நடுநடுங்கும்படி சூறாவளிபோல் சுழன்றடித்து, கோடையிடி முழக்கமாய்ச் சொற்களை வீசி, தன் பேத்தி முன்னால் அவர்கள் நடந்துகொண்ட விதத்துக்கு மன்னிப்புக் கேட்க வைத்து, “ஒழுங்கோடும் மரியாதையோடும் இரு! நிறவெறி துறந்து மக்களுக்குச் சேவை செய்! இல்லை என்றால் இன்று மாலையிலேயே இந்த ஸ்டாம்ப்ஸ் நகரைக் காலிசெய்துவிட்டு ஓடிப்போ!” என்று மருத்துவரை எச்சரித்துவிட்டு வந்தார் என்றுதானே மாயா ஏஞ்சலு நினைத்துக் கொண்டிருப்பார்?

மெய்யாக அந்த அறைக்குள் நடந்தது என்ன என்பது, சில நாள்கள் கழித்து, பாட்டியார் தங்கள் உணவைத் தயாரித்துக்கொண்டிருந்த ஒரு மாலைப்பொழுதில், அவர் மகனும் தன் மாமனுமான வில்லீயிடம் கமுக்கமாகப் பேசிக் கொண்டிருந்ததைத் தற்செயலாக மாயா கேட்க நேர்ந்தபொழுது தெரியவந்தது.

பாட்டியார், மாமாவிடம் சொல்லிக் கொண்டிருந்ததாவது: ” அன்று என்ன நடந்தது தெரியுமா!… டெண்டிஸ்ட் லிங்கன் என்னிடம் ஏக்கழுத்தமாகப் பேசினார். நீகிரோவின் வாயில் கையை விடுவதை விட, தன் கையை ஒரு நாயின் வாய்க்குள் விடுவதே மேல் என்று சொன்னார். அவருக்கு நான் செய்திருந்த உதவிகளை நினைவுபடுத்திய பொழுது, காயத்துக்குக் கட்டுப்போட்ட துணிகளைக் குப்பையில் கிடாசுவதுபோல் அவற்றை அலட்சியப் படுத்தினார். சரி. இருக்கட்டும்…… சிஸ்டரை[மாயாவை] படிக்கட்டுகளின் கீழ்த் தளத்தில் இருக்கச் சொல்லி அனுப்பினேன். டெண்டிஸ்ட் அறைக்குள் நுழைந்தேன். அவரும் நர்ஸும் திருடர்களைப்போல் முழித்தனர். நிமிர்ந்த ஊசியின்மேல் உட்கார நேர்ந்தவர்போல என்னை அங்கு பார்த்துக் குதித்த டாக்டர் லிங்கன் ஆவேசத்துடன் சொன்னார்: “ஆன்னி! நான் சொல்லவில்லையா?.. எந்த நீகிரோவின் வாய்க்குள்ளும் நான் கைவிடப்போவதில்லை என்று…”

நான் கேட்டேன்: “யாராவது அதைச் செய்தாக வேண்டும் அல்லவா?”
அவர் சொன்னார்: “அவளை டெக்ஸர்கானாவுக்கு அழைத்துக்கொண்டுபோய் நிறமுள்ள பல்மருத்துவரிடம் காட்டுங்கள்!……”
உடனே நான் சொன்னேன்: “என் பணத்தை நீங்கள் தந்துவிட்டால், அவளை டெக்ஸர்கானாவுக்கு நான் அழைத்துப் போக இயலும்!”
அவர் சொன்னார்: “ம்..ம்..எல்லாம் திருப்பித் தந்தாயிற்று!”
நான் மறுத்தேன்: “வட்டி இன்னும் வரவில்லையே!…”
அவர் சொன்னார்: “அப்பொழுது வட்டி பற்றி நீங்கள் பேசவில்லையே1”
நான் சொன்னேன்: “அப்பொழுது வட்டிக்கான தேவை உண்டாகவில்லை..ம்..பத்து டாலர் கொடுங்கள்..நீங்கள் முழுவதுமாய்க் கடனைத் திருப்பித் தந்துவிட்டீர்கள் என்று எழுதிக் கொடுத்து விடுகிறேன்!”

மாமாவைப் பார்த்து மேலும் பாட்டியார் சொன்னார்: “என்ன இருந்தாலும் அது சரியில்லைதான்..வில்லீ! ஏனென்றால், கடன் தந்தபொழுது நான் வட்டி பற்றிப் பேசவே இல்லை!..” “அப்புறம், குச்சித் துண்டு போன்றிருந்த குட்டி நர்ஸிடம் லிங்கன் சொன்னார் – “ஒரு பத்து டாலரை அந்த அம்மாவிடம் தந்துவிடு…. முழுவதுமாய் நான் கடனைத் திருப்பிச் செலுத்தி விட்டதற்குத் தாளில் இரசீது எழுதி அவர்களின் கையொப்பத்தை அதில் வாங்கிக் கொள்!”…அந்த நர்ஸும் அவ்வாறே செய்தாள்..இரசீதுத்தாளில் கையொப்பமிட்டேன்…அவருக்குள்ள உரிமைப்படி, அந்த டாக்டர் முதலிலேயே கடன்தொகையைத் திருப்பிக் கொடுத்துவிட்டார் என்பதுதான் சரி…இருந்தாலும் அவர் நடந்துகொண்ட அசிங்கமான விதமிருக்கிறதே.. அதற்காகவே அவர் அதிகப் பணம் செலுத்த வேண்டி வந்தது!”

சொல்லிவிட்டுப் பாட்டியாரும்; கேட்டுவிட்டு அவர் மகனும் – அந்த வெள்ளை மனிதனின் ஈவிரக்கமற்ற தன்மையையும் அதற்குப் பழிவாங்குதலாகப் பாட்டியார் நிகழ்த்திய பாவச் செயலையும் நினைத்து நினைத்துச் சிரித்தார்கள்.

அவற்றைக் கேட்க நேர்ந்த மாயா ஏஞ்சலு, தன் கற்பனையில் பாட்டியார் அந்த வெள்ளை மருத்துவர் அறைக்குள் சூறாவளியாகச் சுழன்று கோடையிடி போல முழங்கினாரல்லவா.. அதுவே மெய்யாக நிகழ்ந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்…

******
தன் வாழ்வில் நான்கு வயது முதல் பதினைந்து வயது முடிய நிகழ்ந்தவற்றையே, “கூண்டில் அடைக்கப்பட்ட பறவை ஏன் பாடுகிறது என்று எனக்குத் தெரியும்!” என்ற இந்தத் தன்வரலாற்றில் மாயா ஏஞ்சலு எழுதினார். அந்தப் பள்ளிப் பருவத்துக்குப் பின்னர் தன் வாழ்வில் நிகழ்ந்தவற்றை, ‘என் பயணத்துக்கு எதையும் நான் எடுத்துச் செல்லப் போவதில்லை,’ ‘என் பெயரில் ஒன்று கூடுங்கள்,’ ‘ஒரு பெண்ணின் இதயம்’ போன்றவற்றில் குறிப்பிட்டார். ‘குடிக்கக் கொஞ்சம் குளிர்ந்த நீர் தாருங்கள்!” முதலாக ஐந்து கவிதைத் தொகுதிகள் படைத்தார். நாடக அரங்கில் ‘சுதந்திரத்துக்காக காபரே’ என்பதைத் தயாரித்து, இயக்கி, அதில் நடிக்கவும் செய்தார். திரை உலகிலும் தொலைக்காட்சியிலும் ‘ஜார்ஜியா, ஜார்ஜியா!’ என்ற புகழ் மிக்க படத்துக்கான மூலத்திரைக்கதை வடிவத்தை எழுதியதுடன் இசையமைப்பையும் கவனித்துக் கொண்டார். அமெரிக்க வாழ்க்கையில் இடம்பெற்ற ஆப்பிரிக்கர் மரபுகளைப் பற்றி, பத்துப் பகுதிகளைக் கொண்ட தொலைக்காட்சித் தொடரை உருவாக்கினார். சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில், டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, தென்னமெரிக்க கிறித்தவத் தலைமை மாநாட்டுக்கான வடமாநிலங்களின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார். 1975ஆம் ஆண்டில் மக்கள் தொடர்பியல் துறைக்கான ‘லேடீஸ் ஹோம் ஜர்னல்’ விருது பெற்றார். பற்பல கெளரவப் பட்டங்களைப் பெற்றார். அதிபர் ஜிம்மி கார்ட்டராலும் அதிபர் ஜெரால்ட் ஆர். ஃபோர்டாலும் தமக்கே உரிய உயரிய பதவிகள் கொடுத்துப் பெருமைப்படுத்தப் பெற்றார். ‘அமெரிக்க ஃபிலிம் இன்ஸ்டிடூட்’டின் நெறியாளர் குழுவில் இடம்பெற்றுப் பணிபுரிந்தார். அமெரிக்கத் திரை இயக்குநர் சங்கத்தின் மிகச்சில பெண் உறுப்பினர்களுள் முதன்மையானவராய்த் திகழ்ந்தார். ‘கிங்: ட்ரம் மேஜர் ஃபார் லவ்’ என்ற இசைப் படைப்புக்கான பாடல்களை எழுதியவர் இவரே. “கூண்டில் அடைக்கப்பட்ட பறவை ஏன் பாடுகிறது என்று எனக்குத் தெரியும்!” என்ற இந்தத் தன்வரலாறு, தொலைக் காட்சித் தொடராக எடுக்கப்பட்டபோது அதன் திரைக்கதையையும் மாயா ஏஞ்சலுவே எழுதினார். ‘சகோதரிகள்’ என்ற தொ.கா. தொடரின் திரைக்கதையும் இவரெழுதியதே. “மாயா ஏஞ்சலுவின் அமெரிக்கா: ஓர் இதயத்தின் பயணம்” என்ற புகழ்மிக்க செய்திப்படத்தை கய் ஜான்சனுடன் இணைந்து தயாரித்தார். கடைசியாக, வட கரோலினாவிலுள்ள வின்ஸ்டன்-சேலம் நகரின் வேக் ஃபாரஸ்ட் பல்கலைக் கழகத்தில் ரெனால்ட்ஸ் பேராசிரியராகப் பணி புரிந்தார்.

****
karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்