மாத்தா ஹரி – அத்தியாயம் -43

This entry is part [part not set] of 40 in the series 20080103_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


தனது வாழ்நாளில் பகலில் தூங்கியது குறைவு, குழந்தை ஹரிணியின் குரல்கேட்டு கண் விழித்தாள், பக்கத்திலிருந்த மேசையில், தண்ணீர்பாட்டிலின் கீழ் நான்காக மடித்து ஒரு வெள்ளைக் காகிதம். பாட்டிலை அப்புறப்படுத்திவிட்டு, காகிதத்தைப் பிரித்தாள்.

அன்புள்ள பவானி, நான் குளோது வீட்டுவரை போகணும். பயப்படாதே மறுபடியும் நீ நினைக்கிறமாதிரில்லாம் ஒண்ணுமில்லை. போதைமருந்துக்கு அடிமை என்பதையெல்லாம் அடியோட மறந்துட்டேன், அவரும் என்னை வற்புறுத்தமாட்டார். நீ நினைக்கிறமாதிரி குளோதும் ரொம்பவும் தப்பான ஆசாமி அல்ல. ஒரு சில விஷயங்கள் பேசவேண்டியிருக்கு, கொஞ்சம் லேட்டானாலும் ஆகும், ஹரிணியை மதியம் நீயே ஸ்கூலில் விட்டுட்டு, நாலுமணிக்கு நீயே அழைச்சு வந்திடு. அவளை ஸ்கூலில் காக்கவச்சுடாதே. நாம லேட்டாப்போனா குழந்தை அழத்தொடங்கிடுவா. -தேவா.

நடப்பதெதுவும் கனவில்லை. தேவசகாயம் மாறியிருக்கிறான். போதை மருந்திலிருந்து இத்தனை சீக்கிரம் விடுபட முடியுமா? அவன் பெற்ற விடுதலை, மாத்தா ஹரியின் மயக்கத்திலிருந்தும் பெற்ற விடுதலையா? முடியுமா? “என்னையும் என் குணத்தையும் பொறுத்துக்கொண்டு இருக்க முடிந்தால் இரு, இல்லையெனில் டிக்கெட் வாங்கித் தருகிறேன், நாளைக்கே இந்தியாவுக்குபோய்ச் சேர்”, எத்தனை முறை சத்தம்போட்டிருப்பான். சில நேரங்களில், அவனோடு வாதிட்டும்; பல நேரங்களில், அவனது பைத்தியக்கார நடவடிக்கைகளையும், உடல்மீதான வன்முறைகளையும்; சகித்துக்கொண்டதற்கான பலனா? இன்றா நேற்றா?இருபது ஆண்டுகளாக கனாபிஸ், மரியுவானாக்கள் சகவாசமென்றும், தன்னால் அதனை விடமுடியாதென்றும் சொல்வானே? இவளால் கூட முடியாதது, க்ரோவால் எப்படி முடிந்தது? எந்தவகையில்? என்னைப்போல சங்கடப்படுகிற குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் உதவிக்கரம் நீட்டுவதுதானே க்ரோவின் தொழில்? அவளிடம் உதவிகேட்கிற அவ்வளவு குடும்பத்திற்கும் இப்படித்தான் ஓடிஓடி உதவிகள் செய்கிறாளா? நேற்று குளியலறையில், என்னைக் கண்டதும் அவர்கள் விலகிக்கொண்ட மாதிரி இருந்ததே. ஒருவேளை தேவா சொல்வதைப்போல நான் தான் தப்பு தப்பா எதையாவது கற்பனை செய்துகொள்கிறேனோ? பத்மாவை பகைத்துக்கொண்டதும் இப்படிப்பட்ட சந்தேகப்புத்திதானே? கடந்தகாலங்களில் தேவசகாயம் என்னை சந்தேகித்தபோது, எத்தனை முறை அது தவறென்று கதறி இருப்பேன். இன்றைக்கு நானும் அவனைப்போலவே சந்தேக நோய்க்கு ஆட்பட்டு, உடலையும் மனதையும் எதற்காக துன்புறுத்திக்கொள்ளணும். தேவாவின் கண்களில் இதுவரை காணாத ஒளி. அவனுடைய பேச்சில் கொடுங்கனவுகளையெல்லாம் மறக்கச்செய்யும் உண்மையின் தீண்டல்: உள்ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகுமில்லையா? இதுவரை அனுபவித்த வேதனைகளும் நரகங்களும் பாதங்கள் வழியாக கடந்தபல நிமிடங்களாக வடிந்துகொண்டிருக்கின்றனவே. தேவசகாயம் திருந்தி இருக்கிறான்; பத்மா நல்லவள், க்ரோ நல்லவள் இந்த உலகம் உயர்ந்தது. அம்மா தாழ்ந்தவள், அவள் வழிவந்த நான் தாழ்ந்தவள், பாட்டி பைத்தியம், அப்பா பைத்தியம், நான் பைத்தியம். உடம்பைச் சந்தோஷப்படுத்திவிட்டான், பெண் ஜென்மத்திற்கு வேறென்ன வேண்டும், காய்ந்துகொண்டிருந்த செடிக்கு நீர்பாய்ச்சிவிட்டான், இனி எழுந்து நிற்கவேண்டும், நின்றுவிடுவேன், பூக்கவேண்டும், காய்க்கவேண்டும், பெண்ணென்றால் கடமைகளுக்கா பஞ்சம்? காலங்காலமாய் பெண்ணுக்கு இதுதானே நடக்கிறது. நேரம்பார்த்து ஆறுதல், அணைத்துக் கொண்டு ஒரு தேறுதல்: மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! வஞ்சகமற்ற அழைப்பு, விரல் பிடித்துக் கூட்டிவந்தான். கட்டில் விரிப்புகளில் தழுவிக்கிடந்த இடங்களில், குளிர்ந்திடாத வெப்பம் சாட்சியாக இன்னமும் மிச்சமிருக்கிறது. வியர்வையில் நனைந்து சிந்திய முத்தும், பவளுமும், தரையெங்கும் சிதறிக்கிடக்கின்றன. விழியோரங்களில்; தலையொதுங்கிய மயிர்கற்றைகளில்; பெருமூச்சிட்ட நேரங்களில் விடைத்த நாசி துவாரங்களில்; பல் பதித்த உதட்டோரங்களில், முலைக்காம்புகளில்; விரல் இடுக்குகளில்; கால்களின் ஆடுசதைகளில்; அடிவயிற்றில், காதுமடல்களில்; வாய்த்த இடங்களிலெல்ல்லாம் இவள் சம்மதமின்றி காத்துக்கிடந்த தாபத்தை இறக்கிவைத்திருக்கிறான். வருவான், மீண்டும் வருவான், குரல் கொடுப்பேன்- கிளிக்குஞ்சாய் குரல்கொடுப்பேன். எங்கிருந்து, புலம் பெயர்ந்த பெண்களுக்கென்று பட்டா போட்டு கொடுத்த, கூண்டிலிருந்து… க்றீச்.. கிறீச். சுட்டப் பழமா சுடாத பழமா எதுவேண்டுமென்பான்? இறக்கையைத் தூக்கி படபடவென்று அடித்துக்கொண்டு, கூண்டுக் கம்பியில் தேய்த்து முனை முறிந்த அலகை பிரித்தபடி காத்திருப்பேன்.

உங்களுக்குச் சந்தோஷமா இப்போ? சொல்லுங்கப்பா? இண்டு இடுக்குகளில் பயணித்து மீள எனக்கும் வந்துவிட்டது. நீங்கள் சொல்லச் சொல்ல தலையாட்டினேனே, ஞாபகமிருக்கா? எல்லைக்கோடுகளைத் தாண்டாமல் யுத்தம் செய்யப்பழகென்று சொன்னீர்களே? இதையெல்லாம் ஊகித்துப் பார்த்துத்தானா? இப்படியெல்லாம் நடக்குமென்று முன்பே தெரியுமா?

சின்னசின்னத் துளிகளாக காட்சிகள் விழுந்து தெறிக்கின்றன, ஓரங்கள் மடிந்து, படத்திற்கொரு பழுப்புத்தன்மை கிடைத்திருந்தபோதிலும் தெளிவாய் உருவங்கள் தெரிகின்றன. படத்தில் அப்பா இருக்கிறார், பாவாடை சட்டையுமாய், பவானி இருக்கிறாள், பாட்டி இருக்கிறாள், அம்மா இல்லை, அவள் மட்டுமே இல்லை. அவளைத்தேடித்தான் அப்பா சென்னைக்குப் போயிருந்தார். அவள் பிறப்பதற்கு முன்பெல்லாம் அம்மா சினிமாவில் நடிச்சிருக்காளாம், அதிகமாக இல்லை ஒன்றிரண்டு படங்கள். பள்ளிக்கூட வாசலிலிருந்து தன்னை “அப்படியே அள்ளிக்கொண்டுபோய்விட்டார்கள்”, அம்மா பெருமையாகச் சொல்லி இருக்கிறாள். அவர் பெரிய இயக்குனர், ‘நான் அறிமுகமான முதற்படம், ‘பூங்கொடி’ ஏ செண்ட்டர், பி. செண்ட்டர் அத்தனையையும் கலக்கியது, தினசரிகள், வார இதழ்கள் அவ்வளவிலும் நான்தான் ஆக்ரமித்துக் கொண்டிருப்பேன், என்ன காரணமென்று நினைக்கிற, என்னோட அழகுதான்”, கண்கள் விரிய, மூக்கு விடைக்க சொல்லியிருக்கிறாள். இரண்டாவது படம் கிராமத்திலிருந்த தமது நிலபுலங்களை விற்றுவந்த ஆசாமிக்கென்றானது. ஒரே ஒருவாரம் சென்னையில் மட்டும், மற்ற இடங்களில் அதுகூட இல்லை. பெரிய பேனரின் பெயரில் அறிவிக்கப்பட்ட மூன்றாவது தயாரிப்பு பேச்சுவார்த்தையோடு நின்றுபோயிற்று. ஒரு தேர்தலின்போது தான் சார்ந்த கட்சிக்கென்று பிரசாரம் செய்யவந்தவளை உபசரிக்கும் பொறுப்பு, அப்பாவின் தலையில் விடிந்தது. ஐந்தாறுமாதம், ரகசியமாகத்தான் தங்கள் காதலை வளர்த்திருக்கிறார்கள், வாய்ப்புகளில்லை என்றாகிவிட்டது, பத்திரிகைகாரர்களும் எட்டிப்பார்ப்பதில்லை என்ற நிலையில், இருவருமாகத் திருப்பதியில் மாலைமாற்றிக்கொண்டார்கள். பவானி பிறந்தாள். அம்மாவுக்கும் சினிமாவுக்குமான தொடர்புகளெல்லாம் விட்டுப்போயிற்றென்று அப்பா ஆறுதலடைந்த நேரத்தில் – அம்மாவும் சினிமாவை மறந்துவிட்டாள் என்று நினைத்திருந்த நேரத்தில் அது நடந்தது. அம்மாவை அறிமுகப்படுத்தின இயக்குனரோட, அஸிஸ்டெண்ட் டைரக்டர் வீட்டிற்கு வந்தான். இயக்குனர் மீண்டும் கிராமத்தை அடிப்படையாவச்சு படமொன்று இயக்குகிறாரென்றும், அண்ணன் தங்கை பாசத்தை உருக்கமாச் சொல்கிற கதையென்றும், இந்தப் படத்தாலே டைரக்டர், அம்மா இரண்டு பேருக்குமே போன மார்க்கெட்டுத் திரும்பவும் கிடைக்குமென்றும் என்னென்னவோ சொன்னான். அம்மா உடனே மெட்றாஸ¤க்குப் போகணுமென்கிறாள், அப்பா வந்தவனை வெளியிற் தள்ளி கதவை அடைக்கிறார், நடப்பது எதிலும் தனக்குச் சம்மதமில்லை என்பதுபோல பாட்டி வேடிக்கைப்பார்க்கிறாள், பாட்டியோடு உரசியபடி பவானி. வெளியே வடகிழக்குப் பருவகாற்றின் தீவிரம், வீட்டிற்குள்ளூம் அது எதிரொலிப்பதுபோல அன்றய இரவு முழுக்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வாக்குவாதம். பவானி அச்சத்துடன் பாட்டியைத் தேடிச்சென்று அவளை அணைத்துக்கொண்டு படுத்ததும், பாட்டியின் புடவைத் தலைப்பு அவள் முகத்தில் இறங்கியதும் நினைவிலிருக்கிறது. விடிந்தது. அம்மா வீட்டில் இல்லை, தேடிக்கொண்டு சென்னைக்குப் போன அப்பா, ஒருவாரத்திற்குப் பிறகு திரும்பிவருகிறார்.

வாசலில் சடசடவென்று மழை ஓங்கி அடிக்கிறது. மழையில் தொப்பரையாக நனைந்தபடி அப்பா, வேட்டியும் போட்டிருந்த கதர்சட்டையும் உடலோடு ஒட்டிக் கிடக்கின்றன. பற்கள் தாளமிட தலைக்குமேலே முழங்கைகளை உயர்த்தி கும்பிட்டபடி, ஒற்றையாக நிற்கிறார். மூக்கில் மழைநீரும், கண்களில் கண்ணீரும் வடிகிறது. தெருவாசலுக்கு ஓடுகிறாள். அம்மா கண்ணிற்படவில்லை. மழைமாத்திரம் வீதியில் நடமாடிக்கொண்டிருக்கிறது, துணைக்கு இரண்டொரு குடைகள். திரும்பவும் வீட்டுக்குள் வந்தாள். அப்பாவைப் பார்க்க பயமாக இருக்கிறது, சமையற்கட்டில் படுத்திருந்த பாட்டியை எழுப்பி அழைத்து வந்தாள். பாட்டி நடை, வாத்து நடை, இவள் அவசரத்துக்கு ஈடுகொடுக்காத நடை., இருவருமாக சாரலுக்குப் பயந்து கூடத்துத் தாழ்வாரத்திலேயே ஒதுங்கி நின்று மிரட்சியுடன் பார்க்கிறார்கள்.

– ஏம்பா இப்படி மழையிலே நனையற?- பாட்டி

– நான் செய்த பாவத்தை நாந்தான் கழுவணும், மழைக்குள்ள புனிதம் கங்கைக்குக் கூட இருக்காது, எம்மனசு அறிஞ்சு மழைபெய்யுது, எத்தனை நாள் பெய்யுதோ அத்தனை நாளும் நனையனும்.-அப்பா.

– நம்ம தலையிலே என்ன எழுதியிருக்கோ அதுதான் நடக்கும், மழையிலே நனைஞ்செல்லாம் அதை கரைச்சுட முடியாது, உள்ளே வா. குழந்தை பயந்துபோயிருக்கிறா பாரு- பாட்டி.
அதிகம் பேசி பார்த்ததில்லை, இன்றைய ரேஷன் இதுதான் என்பதுபோல நிறுத்திக்கொண்டாள். குரலில் சுரத்தில்லை. கடைசியாகச் சொன்னது அவள் நெஞ்சிலேயே நிற்பது போலிருந்தது, பாட்டியை ஏறெடுத்துப் பார்த்தாள், முகம் எட்டவில்லை, ஆனால் கண்கள் கலங்கியிருக்கின்றன. அதன்பிறகும் வெகுநேரம் அன்றைக்கு மழையில் நனைந்தார், தூறலாக அடங்கியபிறகுதான், கூடத்தில் கால் வைத்தார். பாட்டி, அப்பாவைக் கையைப் பிடித்து உள்ளே கூட்டிபோய் துவட்டிக்கொள்ள துண்டு கொடுத்தாள், வேட்டியையும், சட்டையையையும் மாற்றிக்கொள்ளசொல்லி அடம் பிடித்தாள். ஒரு வாரம் அப்பா கட்டிலிலேயேக் கிடந்தார்.

– பவானி

– இதோ வந்துட்டேன்பா

– ஸ்கூல்விட்டு எப்ப வந்த?

– இப்பதாம்பா..

– காப்பி குடிச்சியா?

– ம்..

– வேற ஏதாச்சும்?

– பாட்டி ஓமப்பொடி செய்திருந்தா, கொடுத்தா.

– இப்போ எங்க கிளம்பிட்டே, படிக்கிலை?

– பக்கத்துலேதான் பிரண்டு வீட்டுக்கு.

– யாராவது ஆம்பிளைப் பையனா?

– இல்லைப்பா, பத்மா வீட்டுக்குத்தான்.

– அங்கெல்லாம் போகாதே, அவ ஆத்தா உதட்டு சாயம்பூசிக்கொண்டு லொங்குலொங்குண்ணு உலாத்தறவ. பொண்ணையும் அப்படித்தான் வளர்த்திருப்பா.

– என்னப்பா, அறியாக்குழந்தைக்கிட்டே போய் கண்டதையும் பேசிகிட்டு, நீபோயிட்டு வாடா.-பாட்டி.

– பவானி!..

– என்னப்பா? நான் படிக்கணும்.

– எம்மேலே கோபமாடா?

– இல்லைப்பா.

– எங்கே என் பக்கத்துலே வா

பவானி தயங்கினாள்.

– ஏன் என்ன ஆச்சு உனக்கு? எதுக்காகப் பயப்படற.

– தெரியலை, இப்பவெல்லாம் அடிக்கடி நீங்க மழையிலே நனையறத நினைச்சா பயமாயிருக்கு. அம்மா வரமாட்டாளா?

– வரமாட்டாள், நான் நிறைய பாவம் செஞ்சிருக்கேண்ணு நினைக்கிறேன், அவற்றைப் போக்கத்தான் இப்படி மழையிலே நனையுறேன். எப்படித் தேச்சாலும் போகமாட்டேங்குது, நான் என்ன பண்ணட்டும். ஒண்ணு சொல்றேன் கேட்பியா?

-ம்..

– நீ அழகா இருக்கறங்கிற கர்வம் இருக்கா?

– நான் அழகா இருப்பதை நினைச்சு நீங்கதானே முன்னெல்லாம் ரொம்ப சந்தோஷப்படுவீங்க

– அதனாலத்தான் இப்பல்லாம் ரொம்ப கவலையாயிருக்கேன்.

வெளியே தொலைபேசி ஒலிப்பதுபோல சத்தம். பழைய நினைவிலிருந்து கலைந்தவள் போல எழுந்துகொண்டாள். வரவேற்பறையில் ஹரிணியின் குரல் கேட்டது. மெல்ல எழுந்து சாத்தியிருந்த ஜன்னலைத் திறந்தாள், சாம்பல் வண்ணத்தில் பகல் வெளிச்சம் அறையை நிரப்பியது. எழுந்து கதவைத் திறந்தாள்.

– மம்மி தெலிபோன்.. கைகாட்டி பேசிய குழந்தை ஹரிணியை தூக்கிப் பிடித்து முத்தமிட்டபடி, நடந்து சென்று ரிஸீவரை எடுத்தாள்.

– ஹலோ..

– …

– நான் நல்லாதான் இருக்கேன், நீங்க எப்படி இருக்கறீங்க, உங்க தங்கை எப்படி இருக்கறாங்க.

-..

– அவர் வீட்டுலேதான் இருக்கார். இப்ப ரொம்ப மாறிட்டார். காலை முழுக்க வீட்டில்தானிருந்தார், இப்பத்தான் ஹரிணியைக் கொண்டுவந்து வீட்டில் விட்டுட்டு, மிஸியே குளோது வீட்டுவரை போயிருக்கிறார். வர கொஞ்சம் லேட்டாகும்ணு சொன்னார். அவர் கிட்டே ஏதாச்சும் பேசவேண்டியிருக்கா

– ..

– எங்கிட்டேதான் பேசணுமா. அதற்கென்ன தாராளமா வாங்க, அரைமணி நேரத்துலே குழந்தையை ஸ்கூலுக்கு அழைச்சுபோகணும். இரண்டு மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்திடுவேன்.
ஹரிணி அதை வை.. எடுக்காதே.

– ….

– வேற யாரு ஹரிணிதான், கையை வச்சுகிட்டு சும்மா இருக்கமாட்டா, எதையாவது எடுத்து கீழே போட்டாகணும்.

பகல் ஒன்றறை மணிக்கு குழந்தையை ஸ்கூலுக்கு அழைத்துப்போகையில், பக்கத்து அப்பார்மெண்டிலிருந்த கிழவன் கிழவி இருவரும், ‘போன்ழூர்’ என்று சொல்லிக்கொண்டு எதிர்பட்டார்கள். ஹரிணியின் கன்னத்தைக் கிள்ளினார்கள், எத்தனை வயது என்றார்கள். பவானி பதில் அதற்கான பதிலைசொல்லிவிட்டு அவசரகதியில் இறங்கிப்போனாள். வீடு திரும்ப பகல் இரண்டாகியிருந்தது, இவர்கள் அப்பார்ட்மெண்ட் இருந்த கட்டிடத்திற்கு எதிர்த் திசையிலிருந்த ரொட்டிக்கடை பெண்மணி இவளைப் பார்த்து கையசைத்தாள், இவள் பதிலுக்குக் கயை அசைத்துவிட்டு, தடதடவென்று படிகளில் ஏறி, தனது அப்பார்ட்மெண்டை நெருங்க மங்கிய மின்சார ஒளியில் அவன் நின்று கொண்டிருந்தான்.

– போன்ழூர் பிலிப்! நல்ல வேளை ஓடிவந்தேன். நீங்க நேரத்துக்கு வந்திடுவீங்கண்ணு தெரியும்- மூச்சிறைக்க பேசினாள்.

– பரவாயில்லை ஒரு அஞ்சு நிமிஷம் முந்திவந்துட்டேன். வேறொண்ணுமில்லை.

கதவைத் திறந்து உள்ளே அழைத்துப் போனாள்.

– பிலிப் உட்காருங்க இரண்டு நிமிடங்களில் வந்திடறேன்.

– பரவாயில்லை மெதுவாகவே வா.

(தொடரும்)


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா