மாத்தா-ஹரி – அத்தியாயம் 8

This entry is part [part not set] of 24 in the series 20070503_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


நடையிற் காலெடுத்து வைக்கையில், “என்னதான் தோழியைப் பார்க்க என்றாலும், கொஞ்சம் முகத்தை அலம்பிட்டு, நெற்றியில் ஒரு பொட்டை வச்சுகிட்டு போயேன், வெறும் நெற்றியோட பார்க்க நல்லாவா இருக்கு”, என்று அக்கறையுடன் ஒலித்த பாட்டியின் குரலில் நியாயமும் இருப்பது போலத் தோன்றியது. குளியலறைக்குள் நுழைந்தவள், பித்தளைவாளியை குழாய்க்கு நேராகத் தள்ளி முழுக்குழாயையும் திறந்துவிட்டாள். ஆவேசத்துடன் வெளிப்பட்டு வாளியில் விழுந்தத் தண்ணீரின் அளவில் திருப்தி அடைந்தவளாய், குழாயைத் திருகி அடைத்தாள். தரையில் பாசிமெழுகியதுபோல படர்ந்திருந்தது. துடைப்பம் எடுத்து தரையைத் தேய்த்து தண்ணீர்விட்டு அலசினாள். சுவரில் ஒட்டியிருந்த கரப்பானைச் சுவரைத் தட்டிப் பயமுறுத்தினாள். ஓடி மறைந்தது. கூடுதலாகத் தலைகாட்டிய புடவைக் கொசுவத்தை கால்களுக்கு இடையிற் பிடித்துக்கொண்டு, பிளாஸ்டிக் குவளையில் தண்ணீர் மொண்டு வலது கையில் குவித்து வாங்கி முகத்தில் அறைந்தாள். பின்னர் சோப்பினை நுரைவரக் குழைத்து முகத்திலிட்டு, மீண்டும் குவளையில் தண்ணீரை எடுத்து ஒருமுறைக்கு இருமுறையாக முகத்தை அலம்பியவளிடம் பாட்டி துண்டை நீட்டினாள். வாங்கி முகத்தைத் துடைத்துக்கொண்டவள் கூடத்தில் நிறுத்தியிருந்த அலமாரியின் மேலே கிடந்தச் சீப்பினை எடுத்து கண்ணாடியில் பார்ததபடி நேர்வகிட்டினைத் தவிர்த்து தலைசீவிக் கொண்டாள். கூந்தலை, தளர்த்தி ஒற்றைச் சடையாகப் பின்னிக்கொண்டு, முகத்திற்கு, எவ்வளவு குறைத்துப் பவுடர் போடமுடியுமோ, அவ்வளவு போட்டுக்கொண்டு, அலமாரி கண்ணாடியில் ஒட்டிக்கிடந்த ஸ்டிக்கர் பொட்டை, எடுத்து ஒட்டியபடி திரும்ப, பாட்டி தன்னுடைய இருகைகளாலும் அவள் கன்னத்தைத் தடவி கண்ணேறு கழித்தாள்.

– அப்போ நான் புறப்படறேன் பாட்டி.

– இரண்டு நாளா தொடர்ந்தாற்போலக் கட்சிக்காரர்களை பார்க்கலை.

– உண்மைதான் பாட்டி, எனக்குக் கவனம் இருக்கு. நான் போன பிறகு யாராச்சும் வந்தா நாளைக்கு வரச்சொல்லேன்.

பாட்டி தலையாட்டினாள். கடந்த ஓராண்டாக எல்லாவற்றையும் மறந்து பவானி இயல்பான வாழ்க்கை நடத்தி வந்தவள், இரண்டு நாட்களாக எதையோ பறிகொடுத்தவள் போல இருக்கிறாள். என்ன நடந்திருக்கும்? ஏகாம்பர கிராமணி வீட்டுப் பெண்ணைக் கேட்டால் ஏதாவது தகவல் கிடைக்கலாம்- என்று பாட்டியின் மனம் யோசனையில் ஆழ்ந்திருந்தது.

– வரேன் பாட்டி- என மீண்டும் பவானி சொன்னபோது அவள் தெருக்கதவைத் தாண்டிக்கொண்டிருந்தாள்.

மழை உண்ட பூமியைக் காற்று சீராட்டிக்கொண்டிருந்தது. சிலுசிலுவென்று உடல் தழுவும் காற்றுடன் நடக்க அத்தனைச் சுகம். கம்பன் கலை அரங்கத்தைக் கடந்து, வலப்புறம் திரும்பி, லால்பகதூர் சாஸ்திரி வீதியில் காலடி வைத்தபோது, வழக்கம்போல அவ்வீதியில் வாகனங்கள், பாதசாரிகள், ஆட்டோக்கள் டெம்போக்கள் துவம்சம் செய்து கொண்டிருந்தன. வீதியிலும் கடைகளிலும் மின்சார விளக்குகள் முன்னதாகவே ஏற்றப்பட்டு ஒளி ஆங்காங்கே தேங்கிக் கிடக்க, இடையிடையே தன்னைக் வெளிக்காட்டத் தயங்கியதைப்போல சன்னமான இருள். கிளினிக்குகளில் காத்திருக்கும் நோயாளிகள். பிரெஞ்சு மற்றும் தமிழில் ஓரளவு நல்லப் புத்தகங்களை வெளியிடுவதோடு விற்பனையும் செய்துவரும் பிரெஞ்சு நூலகத்தைக் கடந்தபோது ஏதேச்சையாகத் திரும்பினாள். ஆச்சரியமாக இருந்தது அவரேதான், மிஸியே சிங்காரம் பாருக்குள் தள்ளாடியபடியே நுழைந்து கொண்டிருந்தார். அவர் தனியே எங்கும் வெளியிற்போவதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறாள். அவருக்குத் துணையாக எடுபிடி ஒருவன் இருப்பான். அவளுடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்வதுபோல அருகிலேயே மருந்துக் கடையொன்றில், பத்மா மருந்துகளை வாங்க்கொண்டு திரும்பியவள், தனது அப்பாவைத் தேடிக்கொண்டிருப்பதைக் கண்டு, அவளை நோக்கி நடந்தாள்.

– பத்மா?

– வாடி..! எங்கே இந்தப்பக்கம்.

– உன்னைப் பார்க்கத்தான் வந்து கொண்டிருந்தேன். இன்றைக்குப் பிரெஞ்சு வகுப்பிற்கு நீ போகவில்லையென்று கேள்விபட்டேன். எனக்கும் வீட்டில் போரடித்தது. உன்னைப் பார்க்கலாம் என்று புறப்பட்டு வந்தேன்.

– நானும் உங்க வீட்டுக்கு இரண்டொரு முறை டெலிபோன் செய்தேன். உங்க பாட்டி சொல்லலையா. தேவசகாயம் வேற இரண்டுமுறை போன் பண்ணினான். சரி கொஞ்சம் பொறு, அப்பாவை அழைத்துக்கொண்டு டாக்டரிடம் வந்தேன், காண்பிச்சாச்சு. மருந்துகள் எழுதிக்கொடுத்தார். அதைத்தான் வாங்கிக் கொண்டிருந்தேன். மருந்தை வாங்கிக்கொண்டு திரும்பினால் அவரைக் காணோம். எந்த பாருக்குள் நுழைஞ்சாரோ தெரியலை. அங்கே பாரு, எங்கள் ரிக்ஷாக்காரர் வழக்கம்போல தூங்கிக் கொண்டிருக்கிறார்.

– வெங்கிட்டு அண்ணே.. எழுந்திருங்க.. அப்பாவை பார்த்தீங்களா?

– பத்மா பதட்டப்படாதே! பெயர்ப்பலகையில் சிவப்பு விளக்கைப் போட்டுக்கொண்டு மின்னுகிறதே அந்தப் பாருக்குள் உங்கள் அப்பா நுழைந்ததைச் சற்றுமுன்னர் பார்த்தேன். ரிக்ஷாக்காரரை அனுப்பிப் பார்க்கச் சொல்.

– என்ன மனுஷன் இவர், பணங்கூட என்னிடத்தில்தான் இருக்கிறது.

பக்கத்தில் நின்றிருந்த ரிக்ஷாக் காரரிடம் இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளையும், கையில் வைத்திருந்த மருந்துப் பையயையும் கொடுத்தாள்.

– நீங்கள் அப்பாவை பத்திரமாக வீட்டிற்கு அழைத்துபோங்கள். அம்மாவிடம், நானும் பவானியும் கோவிலுக்குப் போய்விட்டு அப்படியே பீச்சு வரை சென்றுவிட்டுத் திரும்புவதாகச் சொல்லுங்கள் – என்றாள்.

இருவரும் மீண்டும் வீதிக்கு வந்தனர். ஆட்டோ ஏதாவது தென்படுகிறதா எனப் பார்த்தார்கள்.

– காந்திவீதி முனையில் ஆட்டோக்கள் இருக்கும். அங்கே போகலாமா?-பத்மா கேட்க இவள் தலை ஆட்டினாள்.

தோழியர் இருவரும் காந்திவீதி லால்பகதூர் சாஸ்திரி சாலைச் சந்திப்பை அடைந்தார்களோ இல்லையோ, ஆட்டோக்கார இளைஞன் ஓடிவந்தான். பத்மாவைப் பார்த்து:

– எங்கம்மா போகணும், வீட்டுக்கா?- என வினவினான்.

– இல்லை. பீச்சுக்குப் போகணும்.

– உட்காருங்கம்மா,- என்றவன் அடுத்த பத்துநிமிடத்தில் புதுச்சேரி நகரசபைக் கட்டிடத்திற்றருகே வந்தபோது, தோழியர் இருவரும், ஆட்டோவை நிறுத்தச் சொல்லி இறங்கிக் கொண்டார்கள். ஆட்டோவுக்கான கட்டணத்தைப் பத்மாவே கொடுத்தாள்.

திங்கட்கிழமை, தட்பவெப்ப நிலையும் உகந்ததாக இல்லை, எனினும் கூட்டம் இருந்தது. தடுப்புச் சுவரின் மறுபக்கம், இருட்டில் படுத்திருக்கும் கடற்பாம்பு தோலுரித்து அடையாளப்படுத்துபோல அலைகள். கவனிப்பாரற்ற வான் நிலா. நியோன் விளக்குகளில் முட்டிச்சோரும் ஈசல்கள். கடற்காற்றினால் பெருமை இழக்கும் தென்றல். பெரும்பாலான மக்கள் உறவுகள் அல்லது நட்புகள் சூழ இருந்தனர். எல்லோரிடத்திலும் சந்தோஷத்தின் சாயல். அந்தச் சந்தோஷத்தினைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தத்தெரிந்த ஐஸ்வண்டிக்காரர்களும், சுண்டல் முறுக்கு, வேர்க்டலை விற்பவர்களும் சில்லறை பார்த்துக்கொண்டிருந்தார்கள். பெரியவர்களின் நிதானமான உரையாடல், இளைஞர்களுடைய உரத்த விவாதம், வெடிச் சிரிப்பு, காதலன் அல்லது புதுக் கணவனின் கொஞ்சல் மொழி, அவரவர் துணைகளின் சிணுங்கல் அல்லது பொய்க்கோபம், அடம்பிடிக்கும் குழந்தைகள், கண்டிக்கும் பெரியவர்கள். ஊர்க்கதைகள், அரசியல், சினிமா என அத்தனை நாடகத்தையும் கிழக்குக் கடற்கரையோடு சேர்ந்து காலமும்; சிலையாக இருந்த காந்தியும் நேருவும் ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

– பார்த்தியா உலகம் எத்தனை சந்தோஷமாக இருக்கிறது?

– இப்போது இவர்கள் தனிமையில் இல்லை, கூட்டத்தோடு இருக்கிறார்கள். கூட்டத்தில் இருக்கிறபோது நம்மால் மகிழ்ச்சியாய் இருக்கமுடிகிறது, நமது துயரங்களை மறக்க முடிகிறது. இவர்களும், கூட்டத்திலிருந்து விலகந்த் தனிநபராகிறபோது கூடவே அவரவற்குப் பாதகமான எல்லா விஷயங்களும் தலைகாட்ட ஆரம்பிக்கின்றன.

– நீயும் இந்தக் கூட்டத்தில் ஒருத்திதானே, கொஞ்சம் கலகலப்பாய் இறேன், அல்லது அது மாதிரியான விஷயங்களைப் பேசேன். நான் ஒன்று சொல்லட்டுமா? சந்தோஷமோ துக்கமோ எதற்கும் நாமதான் மூலம்.

-இல்லைண்ணு சொல்லலை.. நீ இப்படிப் பேச எனக்கும் மகிழ்ச்சி. நல்லவேளை சந்தோஷத்துக்கும் துக்கத்துக்கும் சினிமாதான் மூலம்ணு சொல்லாதவரைக்கும் நான் பிழைத்தேன். ஆனால் பிரச்சினைகளைக் கண்டு பயந்து ஒதுங்குகிறவர்களைக் காட்டிலும், அதன் பிடரியைப் பிடிக்கத் துணிச்சலுடன் முன்வருபவர்களுக்குத்தான், சிராய்ப்புகளும், காயங்களும்.. இங்கிருக்கிற பெரும்பான்மையான கூட்டத்துக்கு அவை ஆறாப் புண்கள்.

– கவிஞரம்மா, என்ன நீங்கள் இன்னும் நல்ல மூடுக்கு வரவில்லையா? ஏதோ எனக்குத் தெரிஞ்சதைச் சொன்னேன். நீங்க என்னடாண்ணா பெரிய பெரிய விஷயங்களா எடுத்து விடறீங்க. நான் விரல் சூப்பரவ. எனக்குத் தெரிஞ்ச மொழியிலே பேசுங்க.

-என்ன சொன்ன விரல் சூப்பறவளா? ஏதாச்சும் சொல்லிடப்போறேன். முதலில் நீ என்னைப் பார்த்துப் பேசு. அங்கே என்னப் பார்வை..

– ஆள் நல்லா இருக்கான் இல்லை.

– வாயை கழுவு. உங்கம்மாகிட்டச் சொல்லி சீக்கிரம் கல்யாணம் ஏற்பாடு பண்ணணும். எதற்காக நீ இப்படி அலையற.. யாரோ சொந்தக்காரப் பையன் பிரான்சுல இருக்கிறாண்ணு சொன்னியே. அவனை ஏமாத்திடாத..

– பவானி, அவன் கற்போடு இருக்கிறானா இல்லையா என்றகேள்விகள் எனக்கு இல்லை, அதுமாதிரியே அவனுக்கும் இருக்கக்கூடாதுண்ணு நினைக்கிறேன். சரி தேவசகாயம் விஷயத்தில என்ன முடிவு எடுத்த?

– எப்படிச் சொல்றது பத்மா.. எனக்கு எதையும் நேரடியாச் சொல்லத் தெரியாது. அதிகமாகச் சிந்திப்பதும், வாசிப்பதும் எனது பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கலாம். உனக்கும் தேவசகாயத்திற்கும் அறிமுகமாகாத பவானி ஒருத்தி என்னிடத்தில் இருக்கிறாள். அவள் எனது மூளை நரம்புகளில் முடிச்சாக இருக்கிறாள். மேற்கொண்டு சிந்திக்காதே என்கிறாள். என்னை இறுகக் கட்டிக்கொண்டு, இயங்கவிடாமற் செய்கிறாள். அதை உனக்கு விளக்கிச் சொல்லமுடியாது. அப்படிச் சொல்வதில் எந்த லாபமும் இல்லை. புண்ணைக் கீறுவதால் வேதனைகூடுமே தவிர குறையாது. நிலத்தில் எப்போது இருக்கிறேன், நீரில் எப்போது இருக்கிறேன் என்பதை அறிந்து அதற்கேற்ப வாழ எனக்கு மட்டுமே முடியும். இரண்டு நாட்களாக யோசித்ததில், என்னால் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. அவனிடத்தில் தற்போதைக்கு சம்மதம் இல்லை என்று சொல்லிவிடு.

– என்ன குழப்பற.. தற்போதைக்குச் சம்மதமில்லைண்ணு சொன்னா.. இரண்டு நாள் கழித்து வாடா மன்மதாண்ணு சொல்ற மாதிரி எனக்குத் தோணுது.

– அப்படியும் வச்சுக்கலாம். உண்மையில் இந்தக் கணத்தில் அவனை வெறுக்கிறேன். அதுதான் உண்மை. வாழ்வின் உன்னதங்களையும், குதூகலங்களையும் உணர்ந்து அனுபவிக்கும் தருணங்களில் அதைவெளிப்படுத்தச் சொற்களின்றி எப்படித் தவிப்போமோ அவ்வாறே, அவலமும், இழிவும் நம்மை வேதனைப்படுத்தும்போதும் சொற்களின்றி தவிப்போம். எனது நிலைமையும் அதுதான். வாக்கியத்தின் நீளம் உன்னைக் கடந்து தேவசகாயத்தை எட்டத்தான் செய்கிறது. ஆனால் அவை சொற்களின்றி மரித்துப்போகின்றன. பூகோளத்தில், சில ஊர்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் நேர்வதில்லை என்றாலும் தெரிந்துகொள்வதில்லையா? அப்படி கேட்பதாக நினைத்துக்கொள். தேவசகாயம் பிரான்சுக்குப் போகாமல் இங்கேயே இருக்கவும் முடியும் என்றான். அப்படிநேர்ந்தால் இந்தியாவில் இருந்து வாழ்க்கையைத் தொடர ஏதேனும் திட்டங்கள் அவனிடம் இருக்கின்றனவா?

– அவன் படித்த படிப்புக்கு பிரான்சுல என்ன வேலை பார்க்கமுடியும், இங்கே என்ன சம்பாதிக்க முடியுமென்று எனக்குத் தெரியாது. உன்னுடைய கேள்விக்கு எனது பதில் உதவுமா என்றும் தெரியாது. ஆனால் ஒன்றைமட்டும் உறுதியாச் சொல்வேன். அவனால பத்து பெண்களுக்குத் தாலி கட்டவும், நூறு பிள்ளைகளைப் பெத்துக்கவும் முடியும். என்னுடைய தகப்பனாரைவிட அவனுடைய அம்மா வாங்கிக்கொண்டு இருக்கிற பென்ஷனும் அதிகம், இருக்கும் சொத்தும் அதிகம். எனக்கு அவன் மேல ஆர்வம் இல்லை. அப்படி இருந்திருந்தா, அவனை இழுத்துக்கொண்டு எப்போதோ பிரான்சுக்கு ஓடி இருப்பேன்.

– வேறு அவனைப் பற்றி நல்லதா நாலு விஷயங்கள் உனக்குத் தெரியாதா? அதைசொல்லேன் கேட்போம். என் மனசுக்குப் பிடிச்சமாதிரி. மீண்டும் நினைவு படுத்தறேன்

– அதுக்கு என்ன அர்த்தம்?

– எந்தப் பொருளுமில்லை. நீ பாட்டுக்கு எதையாவது கற்பனை பண்ணிக்காதே. இங்கே பீச்சுல கூட எத்தனையோ தப்பான காரியங்கள் நடக்கலாம், இருந்தும் அதனுடைய சில நல்ல குணாதிசயங்கள் பெரும்பாலான மனிதர்களை இங்கே கொண்டுவந்து சேர்த்திடுது. அப்படி தேவசகாயத்திடமும் உனக்குத் தெரிந்த நல்ல விஷயங்கள், அவை எனக்கும் நல்லவைகளாக இருக்கிறனவா என்று பார்க்கலாமே…

– அவன் கவிதைகளெல்லாம் எழுதுவானென்று நீ சொல்லித்தான் எனக்குத் தெரியும். வேறு எதைச் சொல்லலாம். தேவசகாயத்தை வெகு காலமாகவே எனக்குத் தெரியும். அவன் கொஞ்சம் வித்தியாசமானவன். ஒருசமயம் ரஜனி படத்தை முதல் நாளே பார்க்கணும் என்பான், இன்னொரு சமயம் மார்க்கோ •பெரேரி என்ற இத்தாலிய இயக்குனரின் படங்கள் பார்த்திருக்கிறாயா என்பான். தனது பிறந்த பிறந்த நாளைக்கு ஒரு பெரிய ஓட்டலில் எங்களுக்கு டின்னர் கொடுத்துவிட்டு மறுநாள், மடத்துக்குச் சென்று அநாதைப் பிள்ளைகளோட சாப்பிடப் போகிறேன் என்பான். எனக்கு அவனைப் பிடிக்காமற்போனதற்கு அதெல்லாங்கூடக் காரணமாக இருக்கலாம்.

– பரவாயில்லையே, நிறைய நல்ல விஷயங்களாச் சொல்றியே..

– உன்னுடைய மனசை மாத்திகிட்டேண்ணு சொல்லு.

– மனசெல்லாம் மாறவில்லை. அது அத்தனை சீக்கிரம் மாறவும் மாறாது. சிலபேர் பிறர் தவறுகளை அறிந்து வாழ்க்கையில் பாடம் கற்றவங்களாக இருப்பாங்க, எனக்கு, எனது தவறே பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறது. அதனால முடிந்த அளவு அந்தத் தவற்றை மீண்டும் செய்யக்கூடாதென்று நினைக்கிறேன். அவ்வளவுதான்.

– என்ன அது? எதையோ மறைக்கிற நீ? அதற்கும் தேவசகாயத்துக்கும் என்ன சம்பந்தம்..

– இருக்கு. நேரம் வரும்போது சொல்றேன். அல்லது சொல்லாமலேகூட இருந்துவிடுவேன். நீ வருத்தப்படவேண்டாம். நாம் அனைவருமே அடுத்தவரிடம் சொல்வதற்கென்றும் மறைப்பதற்கென்றும் சில தககவல்களை வைத்துக்கொண்டே பழகுகிறோம்., உரையாடுகிறோம். இருந்தும் என்னைப் புரிந்துகொண்டதாக நீயும், உன்னைப் புரிந்துகொண்டதாக நானும், நம்புகிறோம். எனக்குள் இருக்கும் இரண்டாவது பவானி உனக்கு அறிமுகம் ஆகாததுபோல உனக்குள் இருக்கும் இன்னொரு பத்மாவை எனக்கும் தெரியாது.

– எதையோ சொல்லிப் பயமுறுத்துர.. எனக்குப் பசிக்குது. எதிரே இருக்கும் ஓட்டல்ல எதையாவது சாப்பிடலாம்..

– இல்லை என்னை மன்னிச்சுடு.. பாட்டி தனியா இருக்காங்க. நான் கோவிலுக்குப் போறேண்ணு சொல்லிட்டு வந்தேன். மணக்குள விநானயகர் கோவிலுக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பலாம்.

– ஹலோ…கொஞ்சம் முன்னாலே பார்த்து நடங்க.. எங்க மேலே மோதிட்டு, பிறகு நாங்கதான் இடிச்சோமென்று சத்தம் போடாதீங்க.

தோழியர் இருவரும் குரலுக்கு உரியவனை நிமிர்ந்து பார்த்தனர். தேவசகாயம் சிரித்தபடி நின்று கொண்டிருந்தான். பக்கத்தில் ஒரு பெண்.

– நீங்க எப்போ வந்தீங்க? கடந்த அரைமணி நேரமாக நாங்க பேசியபடி நடக்கிறோம்.

– கழுதைக் கெட்டாக் குட்டிச் சுவருங்கிறமாதிரி, புதுச்சேரிவாசிகளுக்கு சினிமா கொட்டகைகளும், இந்தப் பீச்சும் தவிர வேறு என்ன இருக்கிறது.

– உங்களை கழுதைண்ணு சொல்லிக்கிறதுல எங்களுக்கு மறுப்பில்லை. ஆனால் எங்களை அந்தப் பட்டியலில் சேர்க்கவேணாம்.

எல்லோரும் கலகலவென்று சிரித்தனர். தேவசகாயம் அதிரச் சிரித்தான். நடந்து கொண்டிருந்த சிலர் திரும்பிப் பார்த்தனர். பவானி அச் சிரிப்பினை ரசிக்கவில்லை எனபதைப் புரிந்துகொண்டவன்போல,

– என்னை மன்னிச்சுக்குங்க, கொஞ்சம் அதிகமாச் சிரிச்சுட்டேண்ணு நினைக்கிறேன். இவள் என்னோட சித்தப்பா பொண்ணு. பேரு ஷர்மிளா. பத்மாவுக்குத் தெரிஞ்சவதான்.

– வணக்கம்- என்றாள் பவானி. பதிலுக்கு அந்தப் பெண்ணும் தலையாட்டினாள்.

– நாங்கள் காப்பி குடிச்சுட்டு வீட்டுக்குத் திரும்பலாம் என நினைத்துப் புறப்பட்டோம். நீங்களும் வாங்களேன்.

பத்மா யோசிப்பதைப் பார்த்த பவானி,

– பத்மாவும் சித்தெ முன்னே ஏதாச்சும் சாப்பிடவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தாள். நீங்கள் மூவரும் வேண்டுமானால் போங்களேன். நான் ஆட்டோ பிடிச்சு போயிடறேன்.

– பவானி, எதுவும் சாப்பிடப் போறதில்லை. ஆளுக்கொரு காப்பிமட்டும் குடிச்சிட்டு போயிடலாம். வா.

பத்மா வற்புறுத்த பவானி சேர்ந்து நடந்தாள். தேவசகாயமும், அவனுடைய உறவுக்காரப் பெண்ணும் முன்னால் நடந்தனர். இரணடு நாட்களுக்கு முன்பு பத்மாவின் வீட்டுத் தோட்டத்தில் கண்ட தேவசகாயத்தை நினைவுபடுத்திக்கொண்டாள். அன்றைய தினத்தைப் பார்க்கிலும் இரண்டு மூன்று அங்குலம் வளந்தவனாகத் தெரிந்தான். மனம் , ‘கவனம் கவனம்’ என எச்சரிக்க, இவள் நடந்தாள்.

(தொடரும்)


Series Navigation