மாத்தா-ஹரி – அத்தியாயம் 24

This entry is part [part not set] of 29 in the series 20070823_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


ஆளுக்கொரு சாக்லெட் திணித்த ரொட்டியை எடுத்து நிதானமாக மென்று தின்னார்கள். இருவருமே கண்ணாடித் தம்ளரில் ஆரஞ்சுச் சாறு ஊற்றிக் குடித்தார்கள். ஹரிணிதான் விட்ட இடத்தை நினைவுபடுத்திக்கொண்டு உரையாடலைத் தொடர்ந்தாள்.

– அம்மா பவானி இந்தியாவில பிறந்தவங்கண்ணு உங்களுக்குத் தெரியும், மாத்தா-ஹரியும் தனக்கு இந்தியப் பின்புலமுண்டு என்பதுபோலத்தான் சொல்லிவந்திருக்கிறாள். இருவருமே அவரவர் கணவன்மார்களால் வஞ்சிக்கபட்டிருக்கிறார்கள். மாத்தா-ஹரிக்குப் பிறந்ததும் ஒரு ஆண் ஒரு பெண்ணென்றாலும், கொலை முயற்சியில் பெண்குழந்தை மாத்திரம் தப்பிப் பிழைத்தது. பவானி அம்மாவுக்கும் நான் மட்டுமே. இரண்டு பெண்களுமே புலம்பெயர்ந்து குடியேறியது பிரான்சுநாடு. இருவருக்குமே அகால மரணம். ஆக இந்த முயற்சியில் ஓரளவு வெற்றியடைச்சிருக்கேன், முழுமையா நான் ஜெயிக்கணுமென்றால் அம்மாவுடையது தற்கொலையா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளணும். அப்படி இருக்காதுண்ணுதான் என் உள்மனம் சொல்லுது.

– ஏன் அப்படி நினைக்கிற..

– ரொம்பச் சுலபம், இப்பத்தான் சொன்னேன் எல்லாவிஷயங்களிலும் மாத்தா ஹரிக்கும் பவானி அம்மாவுக்கும் ஒற்றுமை இருப்பதா? மாத்த ஹரியுடைய முடிவு கொலைண்ணா அம்மாவும் கொலைசெய்யபட்டிருக்கலாமோண்ணு பயப்படறேன். அப்போ எனது பிரச்சினைகள் மேலும் சிக்கலாகுது.

– நாம ரயிலில் போனப்போ மாத்தாஹரியைப் பத்தின சில தகவல்களை சொன்னே. ஆனால் அவளைக்குறித்து ஆழமா எதுவும் தெரியாது என்பதுபோலத்தான் இருந்தது உன்பேச்சு. நான் என்ன நினைச்சேன்னா, நான் முகம் தெரியாத ஆள் என்பதாலே, முழுசா சொல்ல விருப்பமில்லையோண்ணு நினைச்சேன்.

– உன்னுடைய யூகத்தில் பாதி சரி, பாதி தப்பு. உண்மையில் அப்போதெல்லாம் எனக்கு மாத்தா ஹரியைப் பத்தி எதுவுமே தெரியாது. அவளைப் பத்தின கேள்விஞானம் மட்டுமே இருந்தது. தவிர இணையத் தளங்களில் தட்டி சில தகவல்களை சேகரிச்சிருந்ததும் உண்மை. ஆனால் முதன் முதலில் மாத்தாஹரியை தலைமுதற் கால்வரை அறிமுகப்படுத்தியவள்னு சொன்னா, அது மதாம் குரோ என்பவராகத்தான் இருக்கவேண்டும். அவங்க பவானி அம்மா தன்னோட கணவரோட பிரான்சுக்குவந்து தங்கள் வாழ்க்கையை ஆரம்பிச்சப்ப, நிறைய ஒத்தாசைகள் செஞ்சிருக்காங்க, அதற்கு சமூக சேவகிங்கிற அவர்கள் பார்த்துவந்த உத்தியோகமும் காரணம். அதுவே பின்னர் அவங்களுக்குள்ள ஓரு நெருக்கத்தினை ஏற்படுத்தியிருக்கு. அந்த உறவை ஏதோ, பொதுமக்களில் ஒருத்திக்கும், அரசாங்க ஊழியை ஒருத்திக்குமானதென்று அலட்சியபடுத்திவிடமுடியாது. அவங்க அம்மாவை மாத்தா ஹரிண்ணே நம்பறாங்க, கொண்டாடறாங்க. அவங்கக்கிட்டே நிறைய தகவல்களிருக்கணும், ஏதோ மர்மம் இருக்குண்ணு மனசுக்குள்ளே ஏதோ சொல்லுது. அவங்களை நான் சந்திச்சதுக்கு நான் காரணமில்லை. நான் தேடிப் போகலை. அவங்கதான் என்னைத் தேடி வந்தாங்க. எங்கே தெரியுமா? கல்லறையிலே வச்சு. ஆக என்னை அவசியம் சந்திக்கணுங்கிற ஒரு நிர்பந்தம் இருந்திருக்கிறது. அந்த நிர்ப்பந்தம் எதனாலன்னு தெரிஞ்சுக்கணும். அவங்களை மறுபடியும் பார்க்கணும். ஆனா தனியா போய்ப் பார்க்க பயம். போனமுறை கொடுத்த ட்ரிங்ஸ்ஸ்ல போதை மருந்தைக் கலந்திருப்பாங்களோண்ணு சந்தேகம்..

– அய்யய்யோ?

– ஆமாம். அதுதான் உண்மை. நான் உபயோகிச்சிருக்கேன், இப்ப இல்லை. அதனாலதான் அத்தனை உறுதியா சொல்றேன். தவிர அவங்க தன்னினச் சேர்க்கையில நாட்டமுள்ள பெண்மணியாகவும் இருக்க வேண்டும்.

– அப்படீண்ணா?

– அதாவது அவங்க லெஸ்பியனாக இருக்கணும். என்ன சொன்னேன்.. ஆமாம் உன்னைச் சந்திக்கிறபோது மாத்தா ஹரியைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. அதனாலேதான் எதுவும் சொல்லலை. நீ எனக்கு முகந்தெரியாத ஆள் என்பதால அல்ல. உன்னைச் சந்தித்த பிறகுதான் மதாம் குரோவைச் சந்திச்சேன், மாத்தா ஹரியைப் பத்தின புத்தகங்கள் வாங்கினேன். மதாம் ஷர்மிளியைச் சந்திச்சேன்.

– மதாம் ஷர்மிளியா? அவங்க எங்க இருக்காங்க?

– ஹோத்பியர்ல, பக்கத்திலேதான்.

– அவங்க என்னுடைய அக்கா..

– நானென்ன என்னுடைய அக்காண்ணா சொன்னேன்.

– விளையாடாதே. ரொம்பக் காலமா இங்கேதான் இருக்காங்க. கூடப் பிறந்த அக்கா இல்லை. எங்க பெரியம்மா பொண்ணு. அப்ப நீயும் அவங்களைப் பார்த்தண்ணு சொல்லு. நம்ம ஊருப் பொண்ணு ஒண்ணு என்னை வந்து பார்த்துண்ணு சொன்னப்ப, அது நீயா இருக்கும்னு நினைக்கலை. அவங்களுக்குத் தெரிஞ்சசவங்க ஒருத்தரு திடீர்னு தன்னைத் தானே கொளுத்திக்கிட்டதெல்லாங்கூட சொல்லி இருக்காங்க.. கடைசியிலே, நீயும் நானும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணுண்ணு சொல்லு..

– எனக்குப் புரியலை, நாமெல்லாம் ரொம்ப நெருக்கம்னு சொல்லவறியா, இருக்கட்டும். அவங்க ஏதோ ஜெஹோவாவின் சாட்சிகள் கூட்டத்துலே இருக்காங்கணு சொல்ற. இது எனக்குத் தெரியாத தகவல் ஆச்சே.

– அதற்கு நாம என்ன செய்ய முடியும். மதம் மாறுவதற்கு என்னென்னவோ காரணம். நம்பிக்கையின் அடிப்படையில் தங்களை மாற்றிக்கொள்கிறவர்களைவிட, அச்சுறுத்தல்களுக்கும் ஆசைகளுக்கும் தங்களை மாற்றிக்கொள்கிறவர்கள்தான் அதிகமுண்ணு சொல்றாங்க, அதிலே எங்க அக்காவும் ஒருத்தி. இங்கே தனிச்சு இருக்கா. தீடீர்னு ஒரு கூட்டம் கதவைத் தட்டி நாங்க உங்களுக்காக இருப்போம்ணு சொல்லுது. தங்களோட காருல கடைக்கு அழைச்சுபோய், அவ வாங்கி முடிக்கிறவரைக்கும் எத்தனை மணிநேரம் ஆனாலும் பரவாயில்லைண்ணு காத்திருந்து, வீட்டில் விட்டுட்டுப்போகுது. வீட்டில் குழாய் ரிப்பேரா? சுவற்றுக்குப் பெயிண்ட் அடிக்கணுமா? கூப்பிடால் போதும் வந்து செய்துகொடுத்துவிட்டு போகிறார்கள், வேறென்ன வேண்டும். இவ பதிலுக்கு தமிழர் வீடுகளைத் தேடிப்போய், ‘யுத்தம் வேண்டுமா?’, ‘அன்பிற்கான விலையென்ன?’ என்பது மாதிரியான அச்சடித்தத் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்கிறாள். அவர்கள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் கலந்துகொள்கிறாள். ஓய்ந்த நேரங்களில் தமிழ்ப் படங்கள், தமிழ் நாடகங்கள் பார்க்கிறாள். ஒவ்வொரு வருடமும் சனிப்பெயர்ச்சியின் போது திருநள்ளாருக்குப் போய்வருவாள், தீர்த்தக் குளத்தில் தலை முழுகுவாள்.

– அதுமட்டுமா? இல்லை, நாகூர் ஆண்டவர், வேளாங்கண்ணி மாதாவென்று அங்கெல்லாங்கூட போகறதுண்டா?

– நீ சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை. பிழைக்கத் தெரிந்தவள். இங்கே இருக்கிறவரைக்கும் யெஹோவா. இந்தியாவுக்குப் போயிட்டா ஒரு கோவிலையும் விட்டுவைக்கறதில்லை. டாக்சி வச்சிக்கிட்டு அத்தனை கோவிலுக்கும் போயிட்டு வந்திடுவா. இல்லைண்ணா தலை வெடிச்சிடும்.

– பரவாயில்லையே இப்படியொரு ஷர்மிளி இருப்பாங்கண்ணு எனக்குத் தெரியாதே.

– ஆமா உங்களுடைய மத நம்பிக்கையெல்லாம் எப்படி?

– அதுக்கும் என்னுடைய பதில் ஆம், இல்லை அப்படீண்ணுதான் சொல்லணும். பக்தியே பயத்தினாலே வருவதுதான் என்பவர்கள் கட்சி நான். சிலரை வேகமா காரை ஓட்டாதேண்ணுசொன்னா கேட்க மாட்டான். அதற்குப் பதிலா உனக்கு அபராதம், இல்லை ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுமென்றால் பயப்படுகிறான். அபராதத்திற்குப் பயந்து சாலைவிதிகளை மதித்து நடக்கிறான். விதிகளை மீறுகிறபோது, அவன் செய்த தவறுகள் அல்லது குற்றங்கள் அபராதத்தைக் கட்டினால் மன்னிக்கப்படுகிறது. இவர்களெல்லாம் அபராதத்தைக் கட்டிவிடுவதால், விபத்துகள் இல்லையென்றாகிவிடாது, குற்றங்கள் நேராகிவிடாது. இப்போது சொல்லுங்கள் சட்டங்கள் இருப்பதால் சாலை விபத்துகள் தவிர்க்கப்படுகிறதா, குற்றங்கள் இல்லையென்றாகிவிடுமா? கவனமின்மையாலோ அல்லது வேண்டுமென்றோ சாலை வீதிகளைமீறி அபராதம் கட்டுபவர்களைக்காட்டிலும், எச்சரிக்கையாக காரை ஓட்டுபவர்களை நம்பித்தான் சாலைப்போக்குவரத்து இருக்கிறது என்பது என் கட்சி. உண்டியல்ல காசு போடறதும், கடவுள்கிட்ட மன்னிப்புகேட்கிறதும், சாலைவிதிகளை மீறி அபராதங்கட்டுகிறகூட்டமும் ஒண்ணுதான். மனித அறிவு முழுவளர்ச்சி பெறாத நிலையில் அச்சம், கடவுள் பக்திக்கு காரணமாக இருந்திருக்கலாம். அரசியல் வாதியும், நடிகனும் தெய்வமாக்கப்படுவதுகூட, அறிவு முழுவளர்ச்சி அடையாத தொண்டர்களாற்தான் என்பேன்.

– அச்சமே கூடாதுண்ணு சொல்லிடமுடியுமா. யோசிச்சுப் பாரு என்ன நடக்கும்னு?

– ‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை’, அதெப்படி அச்சம் வேண்டாம்னு சொல்லிடமுடியும். ‘பாதுகாப்பு, எச்சரிக்கைங்கிற’ சொற்களை உபயோகித்து அறிவு அச்சத்திடமிருந்து தப்பிக்க முனைகிறது அவ்வளவுதான். நெருப்புண்ணு தெரியும்போது கவனமாக இருக்கணுமில்லையா?. ஆனா சிவப்பா இருக்கிறதெல்லாம் ‘தீ’ண்ணு நினைச்சுக்கிட்டு அச்சப்படுதல் சரியாண்ணு யோசிக்கணும்.

– அப்போ உங்களுக்கு அச்சமில்லை, அதனாற் கடவுள் பக்தியுமில்லைண்ணு சொல்லு.

– எனது அந்தரங்கங்களைப் பரிமாறிக்கொள்ள ஒருத்தர் தேவை. அதற்கு என்னபேர்வேண்டுமானாலும் நீ வச்சுக்கோ. அவன் வேடிக்கை பார்க்கிறான் அவ்வளவுதான், கொஞ்சம் ஒத்தாசை பண்ணு என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பதில்லை. “தீதும் நன்றும் பிறர் தர வாரா”ண்ணு நம்புகிறவள். எனது பிரச்சினைகளுக்கு நான்தான் தீர்வு காணணும்.

– பேச வந்த விஷயத்தை விட்டுட்டு வெகுதூரம் வந்திட்டோம்ணு நினைக்கிறேன்.

– எனக்குப் புரியலை?

– மாத்தா ஹரியைப் பத்தினத் தகவல்களுக்காக நீ சந்தித்த நபர்களைக் குறிப்பிட்டு பேசினப்போ, எங்க அக்கா பேரையும் சொன்ன. அதற்குப்பிறகு நம்முடைய உரையாடல் வேறுதிசைக்குத் திரும்பிட்டுது.

– இணையத் தளத்திலே நிறைய இருக்குத் தட்டிப் பாரு.

– தட்டிப் பார்த்தேன் அதுலே வேறொரு தகவலும் கிடைச்சுது. அது எந்த அளவிற்கு உனக்கு உபயோகமாக இருக்குமென்று தெரியலை. அது என்னவென்று நேரம் கிடைக்கும்போது சொல்றேன். பொதுவா இணையத் தளங்கள்ல இருக்கிற தகவல்கள் சுருக்கமா இருக்கு, நீ சொன்னதா அக்காவும் மாத்தா ஹரியைப்பற்றிக் கொஞ்சம் செல்லியிருக்கிறாள். எனக்குப் பாரீஸில் என்ன நடந்ததுண்ணு தெரிஞ்சுக்கணும். முடிஞ்சா நானும் உங்களுக்கு உதவப் பார்க்கிறேனே.

– மாத்தா ஹரிமேலே உங்களுக்கென்ன திடீர்னு பக்தி.

– உங்க அப்பா பக்தியோட இதை ஒப்பிடாத.

– அவரை எதுக்காக இங்கே இழுக்கற. உன்னைப் பத்தி பேசு.

– சரி நேரா விஷயத்துக்கு வறேன். சிறையில் இருக்கிற உன்னுடைய அப்பாவைப் பார்த்தியா? நீ பார்க்க வேண்டியவர்கள் பட்டியல்ல அவர் இல்லாதது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியம்.

– உங்க அக்கா சொன்னாங்களா?

– உங்க அப்பாவைப் பத்தி நீ எதுவும் கேட்காததால அவ உங்கிட்டே சொல்லலையாம். அப்ப அவர் சிறையில் இருக்கிறது உனக்குத் தெரியும்.

– ஆமாம் தெரியும். ஆனால் அவரை எனக்குப் பார்க்கப் பிடிக்கலை.

– ஹரிணி இதுசரியில்லை. உனக்கு அதைப்பற்றிய குற்ற உணர்வுகூடவா இல்லை?

– வேண்டாம் அரவிந்தன், அந்த ஆளைத் தகப்பனாகவே நான் நினைக்கலை. வேறு ஏதாச்சும் பேசலாம். மணி பத்தே முக்கால் ஆகுது.. இப்போ இறங்குவோம். நேரம் சரியா இருக்குமென்று நினைக்கிறேன். எழுந்துகொண்டாள்.

(தொடரும்)


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா