நாகரத்தினம் கிருஷ்ணா
இந்தோனேசிய மக்கள் வெகு காலமாகவே ராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களை நாட்டிய நாடகமாக நடத்திவருகிறார்களாம். வாழ்க்கையே ஒரு கலைதானே? அசைவுதானே உயிர்களின் அடையாளம், மரம் செடிகொடிகள்கூட அசையும்போதுதானே அழகு பெறுகின்றன, தேங்கி நிற்கும் நீரைவிட சலசலத்து ஓடும் நீர்தானே அழகு, காற்றுகூட மெல்ல வீசினால்தானே சுகம். நமது செயல்கள் அனைத்தும் அபிநயங்களிற்றானே ஆரம்பிக்கின்றன? இரு உயிர்களுக்கான உறவுத்தேடுதல்களுக்கும், பிற புரிதல்களுக்கும், பாவமும், முத்திரையும் உலக மொழியல்லவா? வாழ்க்கையில் உள்ள நெளிவு சுளிவுகளை- ரகசியங்களை எத்தனை நளினமாக அசைவுகள் பேசுகின்றன. மேடையில் ஆட்டமும் அபிநயமும்; பின்னணியில் ராகமும் தாளமும்; இடையிடையே சுகபாவமாய் தீர்மானங்கள்; விடிய விடிய ரசிக்கலாம்- உணர்வுக்கான தளத்தினை விரித்து, பார்வையாளர்களைக் கனவுலகில் சஞ்சரிக்க வைக்கிற ஆழ்கடல் அலைகளொத்த அசைவுகளும், சிருங்கார உடல்மொழியும் சுலபத்தில் மறக்கக்கூடியதா என்ன? சமயமும், சடங்கும், பிரதான வெளிப்பாடாக இருந்தபோதிலும், கேட்ட வர்ணமும் பார்த்த கூத்தும், இன்றைக்கும் என்னைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது.
இப்புதிய சாளரம், கடந்த சில மாதங்களாக நான் அறிந்திருந்த சிறைவாழ்க்கையிலிருந்து விடுதலை பெற உதவியது. உள்ளூர்ப் பெண்களைப்போல உடுத்தவும் நடனமாடவும் விரும்பினேன். ருடோல்பும், கிழக்கிந்திய ராணுவ அதிகாரிகளின் காலனிய வாழ்க்கை முறையும் மறந்துபோனது, இந்துமதத்தின் புராணக்கதைகளைக் கேட்கவும், அதன் தாத்பரியங்கங்களை விளங்கிக் கொள்வதிலும் ஏராளமாய் ஆர்வம். ருடோல்ப் இதனை எப்படி எடுத்துக்கொண்டிருப்பாரென்று உனக்குச் சொல்வது அவசியமற்றது. ஓர் ஐரோப்பியப் பெண்மணிக்கான இடம், தொடர்புகள் காப்ரிகள் கூட்டத்தோடு அல்ல என்பதில் அவர் தெளிவாக இருந்தார். வயது குறைந்த தனது இளம் மனைவி, வண்ணவண்ணமாய்ப் பட்டாடைகள் உடுத்திக்கொண்டு தேவதைபோல வலம்வருவதை எந்தக் கணவனால் பொறுத்தக்கொள்ள முடியும். ருடோல்ப் மனதில் வேறொரு எண்ணமும் இருந்திருக்கவேண்டும், எனது இப்புதிய ஆர்வத்தை, அவருக்கு எதிரானதாக, அவரூக்கு எரிச்சலை உண்டுபண்ண, நான் விரும்பியே செய்ததாக நினைத்தார். எனது தரப்பில் எனக்கு விருப்பமானவற்றில் நான் ஆர்வம்காட்ட, அவர்தரப்பில் வழக்கம்போல அவருக்கு விருப்பமானவற்றில் தொடர்ந்து ஈடுபாடுகாட்டிவந்தார். வீட்டிற்கு வந்தால், ருடோல்பின் பேச்சு என்பது:
– என்ன நோர்மன் ஒழுங்காகச் சாப்பிட்டானா?
– நோர்மனுக்காக முயல் குட்டி ஒன்றுக்குச் சொல்லி இருந்தேனே, வந்து சேர்ந்ததா?
– நோர்மனுக்கென்று பிரத்தியேகமாகக் கேக் செய்யச்சொல்லி இருந்தேன், கொடுத்துவிட்டுச்சென்றார்களா?
மகன் நோர்மனை மையமாகவைத்தே இருக்கும். அவன் மேல் அளவுகடந்த பாசம் வைத்திருந்தார் பதிலுக்கு நானும் ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்ற இரண்டு சொற்களில் எனது உரையாடலை முடித்துக்கொள்வேன். பிறகு அவரவர்க்கென்று வழக்கமான தேடல்கள் இருந்தன: எனக்கு கண்ணைப்பறிக்கும் ஆடையில், இந்துக்களின் நடனத்தைக் கற்றாக வேண்டும், அவர்கள் மாயாலோகத்தில் எனக்கான இடத்தை உறுதிசெய்திடவேண்டும். இந்து தேவதைகள் இனிமையான வாக்கு சாதுர்யத்தை உடையவர்கள், சிவந்த மேனிக்குச் சொந்தக்காரர்கள், யௌவன மதர்ப்போடு இருப்பவர்கள், மங்களத்தைக் கொடுப்பவர்கள், எனக்கு அவர்களே கதி. ருடோல்புக்கு, மது முக்கியம், இரவானால் உள்ளூர்ப் பெண்கள் வேண்டும், ஆளுக்கொரு திசையில் நடக்கிறோம், நாட்கள் கழிந்தன. ஒரு நாள் ருடோல்புக்கு உத்தியோக உயர்வு என்று செய்திவந்தது. ஆனால் இம்முறை சுமத்திராவுக்கு கிழக்கிலிருந்த மெடான்(Medan) ராணுவமுகாமிற் பணி. புறப்படுவதற்கான நாளும் நெருங்கியது, என்னிடம் ஒரு வார்த்தை இல்லை. ருடோல்ப் அவரது பொருட்களை மட்டும் எடுத்து அடுக்கிவைத்துக் கொண்டிருந்தார். சில பொருட்கள் தோணியில் பயணிக்கவென்று முதல்நாளே வண்டிகளில் அனுப்பபட்டன. ருடோல்ப் செல்லமாக வளர்த்த நாய் ‘பிளாக்கி’யும் பயணத்திற்குத் தயார் செய்யப்பட்டது. எனக்கு ஆத்திரம், கோபத்துடன் ருடோல்ப் எதிரே போய் நின்றேன்.
– ருடோல்ப், உங்கள் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறிர்கள்? என்னையும் பிள்ளைகளையும் என்ன செய்வதாய் உத்தேசம்?
– இங்கே பார், மார்க்கரீத். உனக்குப் புரியுமென்று நினைக்கிறேன். முதலில் அவ்வளவுதூரம் பயணம் செய்வது நமது பிள்ளைகளுக்கு ஆகாது, அதுவும் தவிர அங்கே என்ன நிலைமை என்றும் தெரியவில்லை. வசதிகள் கூடிய புதிய இருப்பிடம் தருவார்கள் என்பது உண்மை. ஆனால் அதைப் போய்ப் பார்த்து ஒழுங்கு படுத்தவேண்டும், போனவுடனேயே தங்கலாம் என்று நினைத்துவிடமுடியாது. புது இடமென்றால் செய்வதற்கு எவ்வளவோ இருக்கின்றன. அவற்றையெல்லாம் செய்து முடித்தபின்புதான் உங்களை அழைத்துச் செல்லமுடியும். இவைகளெல்லாம் நான் விளக்கிச் சொல்ல முடியாது. நீ அதற்கான பெண்மணியும் அல்ல.
– அதுவரை நாங்கள் இங்கேயே இருக்கலாமா?
– முடியாது, இங்கு மாற்றலாகிவரும் வேறொரு அதிகாரியின் குடும்பத்திற்கு நமது இருப்பிடத்தை விட்டுக்கொடுக்கவேண்டும், அதுதான் சட்டம். வேண்டுமானால் ஓரிரு கிழமைகள் அதுவரை நாம் தங்கலாம்.
– பிறகு எங்கள் கதி?
– நீ நம்பிக்கொண்டிருக்கிற இந்து தேவதைகள் உனக்கு உதவமாட்டார்களென்று எனக்கு தெரியும்.. எனது பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களுக்காவது மாற்று ஏற்பாடு செய்யவேண்டும். நண்பர் ‘வான் ரீட்(Van Rheede)’டிடம் சொல்லி இருக்கிறேன். அவர் வீட்டில் தங்கிக்கொள்ளலாம். அங்கே நிலமை சீரடைந்தவுடன், நான் உங்களை அழைத்துகொள்கிறேன்.
வெகுநாட்களுக்குப் பிறகு எங்களிடையே நடந்த உயிர்ப்புள்ள உரையாடல். ருடோல்ப்பிடம் அதற்குமேல் எதுவும் எதிர்பார்க்கமுடியாது. திருமண நாள்முதல் கவனித்துவருகிறேன், அவரது தீர்மானங்களே வென்று இருக்கின்றன. நான் பேச என்ன இருக்கின்றது. தவிர ருடோல் எடுத்திருந்த முடிவும், ராணுவமுகாமில் நடைமுறையில் இருந்துவந்ததே அன்றி புதிதல்ல. அவசரத்திற்கு ராணுவ அதிகாரிகளில் பலரும் தங்களுக்குள் இப்படித்தான் உதவிக்கொண்டார்கள். ‘வான் ரீட்’டும் அவரது மனைவியும், எனக்கும் ஓரளவிற்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள். அதிகாரிகளுக்கான விருந்துகளின்போதும், விசேடங்களின்போதும் ஓரிரு சம்பிரதாய வார்த்தைகளை அவர்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறேன். அவர்களோடு தங்குவதில் பிரச்சினைகள் இருக்காதென்றே தோன்றியது. தவிர தனது பிள்ளைகளைப் பிரிந்து ருடோல்ப் அதிக நாட்கள் மற்றலாகிப்போகிற இடத்தில் இருக்கமாட்டார், கூடிய சீக்கிரம் ‘மேடான்’ நகரத்திற்கு எங்களையும் அழைத்துக்கொள்வார் என மனதிற்குச் சமாதானம் சொன்னேன். மேடானுக்குச் சென்ற ருடோல்ப் எங்கள் செலவுக்கென்று பணம் அனுப்பியவரல்ல, ‘வான் ரீட்’ குடும்பம் பொறுமையாக எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டபோதிலும் எனக்குச் சங்கடமாக இருந்தது. ஓரிருவாரங்கள் என நினைத்ததுபோக ஆறு மாதங்கள் கழிந்தன. எனக்கான நேரம் வருமென்று காத்திருந்தேன். வந்தது. ருடோல்ப் எங்களை மேடானுக்கு அழைத்திருந்தார். 1899ம் ஆண்டு மே மாதமென்று நினைக்கிறேன், புறப்பட்டுச் சென்றோம். பிரிந்து வாழ்கிற பெண்கள், மீண்டும் தங்கள் கணவனிடம் சேர்கிறபோது கொள்கிற மகிழ்ச்சி எனக்கில்லை, அதற்குக் ருடோல்பும் காரணமாக இருக்கலாம். பெரிய கட்டிடங்கள், நீண்ட அகன்ற வீதிகள், மின்சார வசதி, நயமான தோக்கோக்கள்(1) அழகான சாரட் வண்டிகளென்று மேடான் நகருக்கு வந்து சேர்ந்தபோது விரும்பும்வகையில் இருந்தது, மகிழ்ச்சியாக சிலகாலம் வாழமுடியும் என்கின்ற நம்பிக்கையும் அளித்தது. ருடோல்ப் எப்போதும்போல குடிப்பதும், இரவு நேரங்களில் நேரங்கடந்து வீட்டிற்கு வருவதென்றும் அவரது குணத்தை மாற்றிக்கொள்ளாமலேயே அங்குமிருந்தார். அவற்றை தற்காலிகமாக மறக்கும் வகையில் மேடான் நகரம். தைப்பெங் நகரில் பார்க்காத கடைகளும், கிடைத்திராத பணவசதியும், எனது ஆரம்பகால ஏக்கங்களுக்குத் தூண்டுகோலாக இருந்ததும் உண்மை.
ஒரு நாள், தோக்கோ ஒன்றில், சுமத்திரா பட்டுத் துணியில் நெய்யப்பட்ட சில கெபாயாக்களை(2)வாங்கிக்கொண்டு வெளியேவந்தவள் நிறுத்தியிருந்த குதிரை வண்டியில் அமரப்போகிறேன், நாகரீகமின்றி என்னை இடித்துக்கொண்டு ஓர் இளம்பெண் போகிறாள். கோபத்துடன் கத்துகிறேன். அவள் என்னைத் திரும்பிப் பார்க்கிறாள். என் கண்களைய நம்ப முடியவில்லை. எதிரே தசீமா. அவளுக்கு இங்கென்ன வேலை. தைம்பெங்கிலிருந்து இத்தனை தூரம், அதுவும் தனது பழைய முதலாளி பணிமாற்றம் செய்யப்பட்டிருக்கும் இடத்திற்கு, ஆச்சரியமாக இருந்தது.
– தசீமா இங்கே எப்படி?
நான் வழக்கம்போல டச்சுமொழியில்தான் பேசினேன். தைப்பெங் நகரில் அவள் டச்சுமொழிக்கு நன்குபழகி இருந்தாள். அவள் என்றில்லை, வீட்டுவேலைக்கென வருகிற பெண்கள் அனைவருமே, வந்த சிலநாட்களில் எங்கள் மொழியை மிகச்சுலபமாக பழகிக்கொள்வார்கள். ஆனால் நான் எதிர்பார்த்ததற்கு மாறாக தசீமா, மௌனமாக இருந்தாள். உதட்டைப் பிதுக்கினாள். குதிரை வண்டிக்காரன் உதவிக்கு வந்தான் ஜாவா மொழியில் பேசினான். அதற்கவள், தசீமாவென்று தனக்கு எவரும் தெரியாதென்றாள். எனக்கு வியப்பு. வீட்டிற்குத் திரும்பியதும் மனதை அரித்தது. ருடோல்ப் வரட்டுமென்று, அமைதியாகக் காத்திருந்தேன்.
இரவு நெருங்கியது. ராணுவக் குடி இருப்புகளெங்கும் நிசப்தம். வீதியில் எரிந்த மின்சாரவிளக்குகளால் தீண்டப்படாத இருட்டு, கைவிரல்களால் தொட்டுணரக்கூடிய வகையில் கரும்பட்டுப்போல விரிக்கப்பட்டிருக்கிறது, அவற்றில் நொறுங்கிய வைரக்கற்களாக மின்மினிபூச்சிகள், அதற்குப் பொருத்தமற்று சுவர்க்கோழியின் அச்சுறுத்தும் அசாதரண சீழ்க்கைச் சத்தம். இருட்டை விலக்கிக்கொண்டு, கடக்முடக்கென்று சக்கரங்கள் உருண்டு முன்னேறுவது கேட்கிறது. வாசலில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் சற்று கண்ணயர்ந்தவள் விழித்துக்கொண்டேன். இழுத்து நிறுத்தபட, முன்னிரண்டு கால்களையும், பின்னுக்கு வாங்கியபடி, தலையை ஒடித்துக்கொண்டு குதிரைகள், சக்கரங்கள் முன்னும்பின்னுமாய் அசைந்து, பின் நிற்கின்றன. எங்கள் வீட்டெதிரே இப்போது சாரட் வண்டி. இறங்கிய ருடோல்ப், தள்ளாடுகிறார். அவரிடம் பேசினாலும் பயனில்லை என்று தெரியும். எனினினும் மனம் கேட்கவில்லை. அவரது ராணுவச்சீருடை கசங்கி இருந்ததாக நினைவு. படியேறிவந்த ருடோல்ப் நான் பிடித்துக்கொள்வேன் என நினைத்திருக்கவேண்டும். அவரது கையை எனது தோளில் வாங்கிக்கொண்டேன். உள்ளே அவரை அழைத்துச் செல்லும்வரை பொறுமை இல்லை.
– தசீமாவை கடைத்தெருவில் பார்த்தேன்- நான்
அவரிடமிருந்து பதிலில்லை. உண்மையில் என் கேள்வியை உள்வாங்கும் நிலையில் அவரில்லையா அல்லது அக்கேள்வியைக் காதில் வாங்கிக்கொள்ளும் விருப்பம் அவருக்கில்லையா? எதுகாரணமாக இருக்கும் என்ற குழப்பத்தில் இரண்டாவது முறையாக அவரிடம்:
– தசீமாவைக் கடைத் தெருவில் பார்த்தேன்- என்கிறேன்
மீண்டும் மௌனம். கோபத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் சட்டென்று அவரை அப்படியே விட்டேன், பொத்தென்று விழுந்தார். நான் எனது அறைக்குள் நுழைந்து தாழ்ப்பாள் போட்டுக்கொண்டேன்.
மறுநாள் காலை பதினோருமணிக்கு, நோர்மன் வெளியே விளையாடிக்கொண்டிருக்கிறான், குழந்தை நோனா உறங்கிக்கொண்டிருக்கிறாள், வெளியே, எங்கள் புதிய வேலைக்காரி உள்ளூர் மொழியில் யாருடனோ உரையாடிக்கொண்டிருந்தாள். வெளியில் வந்து பார்க்கிறேன். தசீமாவின் கணவன். ஒரு முறை அவனை தைம்பெங்கில் அவள் அறிமுகப்படுத்திய ஞாபகம்.
– தசீமாவின் கணவன்தானே?
– ஆமாம்மா.. உங்கள் கணவன் என்ன செய்திருக்கிறார் தெரியுமா. என் மனைவியை என்னிடத்திலிருந்து பிரித்து, கடந்த ஆறுமாதாமாக இங்கே மேடானில் குடிவைத்திருக்கிறார். அவரிடத்தில் சொல்லிவையுங்கள், அதற்குரிய தண்டனையை அனுபவிச்சே ஆகணும், நெற்றி நரம்புகள் புடைக்க, கண்களில் தீப்பொறி பறக்க, ஆவேசத்துடன் சத்தமிடுகிறான்- பல தலைமுறைகளுக்கான, பழிவாங்கும் உணர்வு, அக்குரலில் இருந்தது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் காதில் விழுந்திருக்குமோ என்ற எனது பயத்தைப் பற்றிய கவலையின்றி வேகமாய்ப் புறப்பட்டு சென்றான். அவன் சென்றபிறகும் வெகு நேரம் எனது உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அச்சத்துடன் நடந்தது அனைத்தையும் வேடிக்கைப் பார்த்தபடி இருந்த வேலைகாரியை அழைத்தேன்.
– ஏய் இங்கே வா.. உன்னை வேலையில் சேர்க்கிறபோது என்ன சொன்னேன். என்னைக் கேட்காமல் அந்நியர்களோடு பேசகூடாதென்று சொல்லி இருக்கிறேனா இல்லையா? இன்னொரு முறை அப்படி ஏதேனும் நடந்தால் உன்னை வீட்டுக்கு அனுப்பவேண்டியிருக்கும்.
சட்டென்று கால்களில் விழுந்தாள்:
– அப்படியெல்லாம் செய்துவிடாதீர்கள் அம்மா. இனி ஒருபோதும் இதுமாதிரியான தவறுகளைச் செய்யமாட்டேன். ஏதோ அவ்வபோது நீங்கள் கொடுப்பதைவைத்துத்தான் எங்கள் குடும்பம் நடக்கிறது, என அவள் கண்ணீர்விட்டதும் மனம் இளகியது.
மேடான் கடைவீதியில் பார்த்தது தசீமா என்பதை, அன்றைய சம்பவம் உறுதிபடுத்திற்று, ஏதோ விபரீதம் காத்திருக்கிறது என்பதும் விளங்கியது. ஒவ்வொரு நாளும் அச்சத்துடனும் விடிந்தது. ருடோல்ப் மீது எனக்கிருக்கும் கசப்பு வேறு பரிமாணத்தை அடைந்திருந்தது.
இரண்டு நாட்கள் கடந்திருக்கும், காலையில் வீட்டுக்கு வந்த வேலைக்காரி நேராக என் அறைக்கு வந்தாள்.
– என்ன இருந்தாலும் ஐயா அப்படி செய்திருக்கக்கூடாதம்மா.
– இதென்ன தலையுமில்லாம வாலுமில்லாம, சொல்வதைக் கொஞ்சம் புரியும்படி சொல்.
– தசீமா கணவனைப் பிடித்துச் சிறையில் போட ஏற்பாடு செய்திருக்கிறார் ஐயா.
– பின்னே இங்கே அவன் மிரட்டிய மிரட்டலை நீயும் தானே கேட்டுக்கொண்டிருந்தாய்.
– ஆனாலும் இது அதிகம் அம்மா. எங்க மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் தெரியுமா? கணவனைச் சிறையில் போட்டால், அவருக்கு தசீமாவை நிரந்தரமாக சொந்தமாக்கிக்கொள்வதில் எந்தச் சிக்கலும் இருக்காதாம், அதற்காகத்தான் என்கிறார்கள்.
அவளது சொல்வதில் நியாயம் இருப்பதுபோல தோன்றியது. எனினும் ஒரு காலனிநாட்டுப் பெண், ருடோல்ப்பை குற்றம் சொல்ல அனுமதிப்பது சரியாகாது என்பதுபோல:
– சரி சரி.. நீ உள்ளேபோய் வேலையைப் பார். அநாவசியமாக இதில் நீ மூக்கை நுழைக்கவேண்டாம். என்று எச்சரித்தபிறகு உள்ளே போய்விட்டாள்.
பின்னேரம், மதிய உணவுக்குப் பிறகு நோர்மன் உறங்குவது வழக்கம். அன்றைக்கும் வழக்கம்போல உறங்கிக்கொண்டிருந்தவன், தீடீரென்று எழுந்து உட்கார்ந்தான். வாந்தி எடுக்கிறான். ஓடிப்போய் பார்க்கிறேன். உடல் தணலாய்க் கொதிக்கிறது. சற்றுமுன்புவரை நன்றாகப் பேசிக்கொண்டிருந்தவன், தோட்டத்தில் சிறிதுநேரம் முயல்குட்டியோடு விளையாடிவிட்டு வந்திருந்தான். திடீரென்று என்ன நடந்தது. ராணுவ முகாமில் இருக்கும் மருத்துவர் அழைக்கபட்டார். அவர் உடனே மருத்துவமனையில் சேர்க்கவேண்டும் என்றார். மருத்துவமனையில் குழந்தை நோர்மனை அவசரமாய்க் கொண்டுபோய் சேர்த்தோம். கோமாவில் விழுந்த குழந்தை இரண்டு நாட்களுக்குப்பிறகு இறந்துபோனான். நோனாவும் கோமாவில் விழுந்தாள். பிள்ளைகள் மதியம் உண்ட உணவில் விஷம் கலந்திருந்திருக்கவேண்டும் என மருத்துவர்கள் சொன்னார்கள், ராணுவ நிர்வாகம் புதியவேலைக்காரியை விசாரிக்கலாம் என்று நினைத்தபோது, அவள் தலைமறைபவாகி இருந்தாள். உண்மையில் என்ன நடந்திருக்குமென்று உணர அதிக நேரம்பிடிக்கவில்லை.
(தொடரும்)
———————————————————————————-
1. Tokka – Tokkas இந்தேனேசிய கடைகள்
2. kebaya- java பிரதேசத்து பெண்களுகான உடை
- பகுதி நேரக் கடவுளின் நாட்குறிப்பேடு! – அமிர்தம் சூர்யாவின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு
- நாடகர் தாசீசியஸ் 2006க்கான இயல்விருதினைப் பெற்றுக்கொண்டார்
- கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் !
- சுந்தர ராமசாமி என்கிற மாமனிதர்!
- மரணதண்டனை எதிர்ப்பாளர்களை தூக்கில் இட வேண்டும்
- தேசியம் என்பது கதையாடலா?
- சிவாஜி
- உலகத்துக்கு எழுதிய கடிதம்
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் பதினான்கு: ‘வேடிக்கையான குடிவரவுத் திணைக்கள அதிகாரி!’
- உள்ளங்கைச் சூடு
- ஒரு கடிதம்: தலைக்கேறும் மதப் பித்தால் தடுமாறல் சகஜம்
- கடிதம்
- வெசாவின் திண்ணை கட்டுரை எழுப்பிய கருத்துக்கள்
- சிலப்பதிகாரம் -குற்றாலக்குறவஞ்சி இசைக்குறுந்தகடுகள் வெளியீட்டு விழா
- புதுச்சேரி வட்டாரம்-வரலாறு சார்ந்த நாவல்கள்: ‘நீலக்கடல்’ குறிப்பாக…
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 5
- காதல் நாற்பது (25) கனத்துப் போன மனது !
- கருணாகரன் கவிதைகள்
- கடவுளும் கந்தசாமியும் (புதுமைப் பித்தனின் அழியா நினைவுக்கு.)
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 14
- அன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்!
- பெரியபுராணம்-133 (நிறைவு)
- மீண்டு வருவாரோ?
- கோயில்களில் பிறமதத்தார் – ஒரு முரண்பார்வை – பாகம் 2
- கொசு
- தள்ளு வண்டி
- பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
- கால நதிக்கரையில்……(நாவல்)-10
- உருகிய சாக்லெட்