மாத்தா-ஹரி – அத்தியாயம் இரண்டு

This entry is part [part not set] of 32 in the series 20070322_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


மதாம் க்ரோ முப்பத்தைந்து வருடங்கள் பிரெஞ்சு அரசாங்கத்தில் சமூகநலத் துறையில் ஊழியராகாப் பணிபுரிந்த பெண்மணி. கடந்த ஜனவரிமாதத்திலிருந்து 50 வயது. அவளாகச் சொன்னாலன்றி பிறர் அவள் வயதை நம்புவது அரிது. அப்படித்தான் பாருங்களேன், இவளைப் பார்க்கிறபோதெல்லாம் முகத்தைத் திருப்பிக்கொள்கிற, எதிர்வீட்டு ஆசாமி (அவன் வயதைத்தெரிந்து என்னவாகப் போகிறது) சென்ற வாரம் கதவினைத் தட்டி, ஒற்றை ரோஜாவைக் கொடுத்து, ‘பெண்கள் தின’ வாழ்த்தினை தெரிவித்தவன், ”இரவு டின்னருக்கு வரமுடியுமா?”, என தடுமாற்றத்துடன் கேட்டிருக்கிறான். இவள் சிரித்துக்கொண்டே, “அதற்கெல்லாம் நேரமில்லை, மன்னிக்கவும்”, என நாகரீகமாக மறுத்துவிட்டாள். அவன்மீது குற்றமில்லை. அவளது சுருக்கமற்ற முகம், உதடுகளுக்குக் கவர்ச்சியூட்டும் நாசி, உடற்பயிற்சிக் கூடத்தின் ஆயுள் உறுப்பினர் அட்டை, அதன் உபயோகம், வருடந்தோறும் ஜூலை மாதத்தில் பிரான்சிற்கு தெற்கிலிருக்கும் வலான்ஸ் நகரத்தின் உடற் பராமரிப்பு விடுதியொன்றில் பதினைந்து நாட்களுக்குக் குறையாமல் தங்குதல், அங்கே, உடலைப் பிடித்துவிட்டுக்கொண்டு நீராவிக்குளியல் எடுத்தல், பிறகு பெண்ணுடலுக்கென்றேயுள்ள பிற சமாச்சாரங்கள் என அவளை அறிந்தவர்கள் அவள் இளமையின் ரகசியத்தையும் அறிந்து வைத்திருந்தார்கள்.

க்ரோவுக்கு இன்னொரு முகமுமுண்டு: அந்த முகத்திற்கு, ‘இந்தியாவில் நிலவும் பெண் சிசுக்கொலைகள், வரதட்சனை கொடுமைகள், ஆப்ரிக்க அராபிய நாடுகளிலுள்ள பலதார மணமுறை, செம்மறியாடுகளுக்காக பெண்களைப் பண்டமாற்றுச் செய்யும் ஆப்கானிஸ்தான வழக்கம், வளர்ந்த நாடுகளில் பெண்கள் மீதான உள, உடல் ரீதியான வன்முறைப் பிரயோகங்கள் ஆகியவற்றின் மீது எரிச்சலுண்டு. அவள் கோபப் பட்டியலில் ஆண்களைப் போலவே மதங்களும் இருக்கின்றன, மதங்கள் பெண்களுக்கானது அல்ல என்பது அவளது வாதம். அவள் வரையில், ‘பெண்கள் மதங்களின் விசுவாசிகளாக இருக்கும் அளவிற்கு, மதங்கள் பெண்களின் விசுவாசிகளாக இருப்பதில்லை’, என்கிறாள்.

எல்லா அநாதைக் குழந்தைகளையும்போலவே, பிரெஞ்சு அரசாங்கத்தின் மாவட்ட நிர்வாகம் பவானிதேவசகாயத்தின் மகள் ஹரிணியை, வளர்க்கும் பொறுப்பையும், ஒரு குடும்பத்திடம் ஒப்படைத்து, அதற்கான பொருளுதவிகளையும் செய்து வந்தது. பவானி தேவசகாயத்தின் திடீர் இறப்பிற்குப் பிறகு, அவளது ஆறுவயது பெண்குழைந்தையாக இருந்த ஹரிணியை, வளர்க்கும் பொறுப்பை அரசாங்கம் எடுத்துக்கொள்வதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்தவள். உரிய வயதில் ஹரிணியைச் சந்திக்கவேண்டிய தார்மீகக் கடமையும் அவளுக்கு இருப்பதாக எண்ணவும் செய்தாள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பெயினிலிருக்கும் தனது சகோதரியைப் பார்த்துவரச் சென்றாள். திரும்பிவந்ததும் மாவட்ட நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு, அங்கிருந்த தனது தோழியை விசாரிக்க, ஹரிணி தற்சமயம் அவளை வளர்த்த குடும்பத்திலோ அல்லது மாவட்ட சமூக நலத்துறையின் கட்டுபாட்டிலோ இல்லை என்கிற தகவலைச் சொன்னாள். அன்றையிலிருந்து தொடர்ந்து ஹரிணியைப் பற்றிய தகவல்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறாள். இரண்டு நாட்களுக்குமுன்பு பவானி தேவசகாயத்தின் பழைய தோழியொருத்தியைச் எதிர்பாராமல் சந்திக்க இப்படியொரு தகவல் கிடைத்தது, அதன்படி, ‘பிப்ரவரி மாதங்களில் பத்தாம் தேதியன்று, பவானி தேவசகாயத்தின் கல்லறைக்குச் சென்றால் ஹரிணியை சந்திப்பதற்கான வாய்ப்பு அமையலாம் என்பது அந்தத் தகவலின் சாரம். அதை நம்புவதா? கூடாதா என்கிற குழப்பம் மதாம் க்ரோவுக்கு. இளம் வயதிலேயே தாயைப் பிரிந்து அரசாங்கத்தின் ஆதரவில் வளர்ந்த குழந்தைகளில் எந்த ஒன்றுக்காகவாவது உயிரோடிருக்கிற தாயைப் பார்ப்பது இருக்கட்டும், உண்மையில் கல்லறையைத் தேடிச் செல்லும் எண்ணம் வருமா? அப்படியே வந்தாலும் ஒவ்வொரு வருடமும் அந்தக் கல்லறையைத் தேடி செல்லும் அளவிற்கு பவானி தேவசகாயத்தின் நினைவுகளின் தாக்கம் இருக்கமுடியுமா எனத் தனக்குத்தானே பலமுறை கேட்டுக்கொண்டாள்.

சனிக்கிழமை காலை ஒன்பது முப்பதுக்கெல்லாம் கல்லறைக்கு வந்துவிட்டாள். சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் பவானி தேவசகாயத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவள் என்றாலும், உடனடியாக அவளை அடக்கம் செய்த இடத்தைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபத்தில் இல்லை. நல்லவேளை, கல்லறை பராமரிப்பு ஊழியரை விசாரிக்க, அவர், அழைத்துக்கொண்டுபோய் சமப்ந்தப்பட்ட இடத்திலேயே நிறுத்தினார். “இறந்த பெண்மணிக்கு மகளாக இருக்கவேண்டும், ஓர் இளம்பெண் அவ்வப்போது வந்துபோகிறாள், இன்றைக்கு அவசியம் வரக்கூடும் காத்திருங்கள்”, என்றார். வானம் தூறலிட ஆரம்பிக்க, குடையை விரித்துக்கொண்டு காத்திருந்தாள். பத்து நிமிடங்கள் கடந்திருக்கக்கூடும். அவளுக்குக் கிடைத்த தகவற்படி இளம்பெண்ணொருத்தி கையிற் பூங்கொத்துடன் நடந்து வருவது தெரிந்தது.

வந்தவள் பவானி தேவசகாயத்தின் கல்லறையை குறிவைத்து நடந்து வருவதைப் பார்க்க அந்தப் பெண் ஹரிணியாகத்தான் இருக்கவேண்டும் என்பது உறுதியாயிற்று. கல்லறைக்கு வந்தவள், ஒரு சில விநாடிகளை அதைச் சுத்தம் செய்வதற்கு ஒதுக்கினாள். பிறகு நட்டுவைத்திருந்த சிலுவையின் அடியில் மலர்க்கொத்தைப் பிரித்து பரப்பியபின், அமைதியாகப் பிரார்த்தனை செய்வதைக் கவனித்தாள். ஹரிணியை சின்ன வயதில் பார்த்தது. இறந்த பவானி தேவசகாயத்தின் சாயலைப் போலவும் இல்லை. ஒருவேளை இவளுக்குத் தந்தையின் சாயலோ? இறுதிச்சடங்கு தினம் நினைவில் வந்தது. திருப்பலி ஒரு சிறிய தேவாலயத்தில் வைத்து நடபெற்றது. பெரிதாக கூட்டமென்றில்லை. வந்திருந்தவர்களில் மிஸியே தேவசகாயத்தின் உறவினர்களே அதிகம். பாரீஸிலிருந்து பவானி தேவசகாயத்தின் நெருங்கிய தோழி – இரண்டு நாட்களுக்கு முன்பு க்ரோ சந்திக்கநேர்ந்த பத்மா – தனது கணவனோடு வந்திருந்ததாக ஞாபகம், பிறகு பவானி தேவசகாயத்தின் ஒன்றுவிட்ட சகோதரன் குடும்பமென்று ஒன்று வந்திருந்தது. அந்த ஆசாமிதான், ஆறுவயது சிறுமியாகவிருந்த ஹரிணியை விடாமற் கையிற் பிடித்திருந்தான். சிறுமியின் கையில் மண்ணைக்கொடுத்து சவப்பெட்டியின்மீது போடச்சொன்னபோது, பெரும்பாலோர் கலங்கிவிட்டனர். மதாம் க்ரோவும் கலங்கித்தான் போனாள், விம்மி அழுததும் பிறகு கூச்சத்துடன் அடங்கிபோனதும் நினைவுக்கு வர சட்டென்று பொருமினாள், கைக்குட்டையை வாயிற் பொத்திக்கொண்டு தேம்பினாள். ஹரிணி திரும்பிப்பார்க்கிறாள், என்றவுடன் அமைதியானாள்.

மத்மசல்(மிஸ்) ஹரிணி..?

– உய்..(யெஸ்)

– என்பெயர், எலிஸபெத் க்ரோ. உன்னுடைய அம்மாவை நன்கு அறிந்தவள். வெகுகாலமாக உன்னைச் சந்திக்க நினைத்துத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

– ஐந்து நிமிடம் பொறுங்களேன், அம்மாவிடத்தில் கொஞ்சம் நேரம் பேசணும்

– புரியுது வெளியில் காத்திருக்கிறேன்

மதாம் க்ரோ புறப்பட்டுச் சென்றாள். ஹரிணி இங்கே அம்மாவின் நித்திரையை கலைத்து எழுப்பும்போது மதாம் க்ரோவின் காலடிகள் நடைபாதை குறுங்கற்களில் புதைந்து எழுவது அடங்கியிருந்தது.

அம்மா…

இவள் குரலைக் காதில் வாங்கியவள்போல மெல்ல அசைந்துகொடுக்கிறாள்.

மனப்படிமங்களில் ஒளிந்திருக்கும் அம்மாவிடமும், படுக்கை அறையின் நிழற்பட அம்மாவிடமும், சொல்லாத தகவல்கள், படிக்காத தலைப்புச் செய்திகள், கசடுகளாக ஹரிணின் நினைவில் படிந்திருக்கின்றன, அந்தக் கசடுகளில் எதுவேண்டுமானாலும் இருக்கலாம்: மூன்று நாட்களுக்கு முன்பு தனது விற்பனை பிரிவு இயக்குனரோடு நடத்திய வாதம்; நேற்று மாலை நிர்வாக இயக்குனரான இளைஞன் டேனியலோடு, பாதுகாப்பு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் உறவு கொண்டது; சைனிஸ் நூடில்ஸ் வாணலில் தீய்ந்து போனது; திறந்திருந்த சாஸ்பாட்டில் இரவல் வாங்கிவந்திருந்த புத்தகத்தின் பக்கங்களை நனைத்துவிட, சாப்பிடாமற் படுத்தது; குறிப்பிட்ட பிராண்டு சானிட்டரி நாப்கின் உபயோகித்த நாளிலிருந்து தனது அந்தரங்கத்தில் ஏற்படுகிற எரிச்சல். இவள் சொல்லச்சொல்ல அம்மா கேட்டுக்கொண்டிருக்கிறாள். இடைக்கிடை வறட்டு இருமலால் பாதித்திருக்கிறவள்போல தொடர்ச்சியாக இருமவும் செய்கிறாள்.

– அம்மா…

– ம்…

– அம்மா, நான் புறப்பட்டாகணும்.

– ம்

– யாரென்று தெரியவில்லை. எனக்காகக் காத்திருக்கிறேன் என்கிறாள். எதற்காகவென்று விசாரித்து, பிறகு உன்னிடம் சொல்கிறேனே..

ஹரிணியின் அம்மா, அமைதியாக இருந்தாள். அவளது கையைத் தொட்டு, மெல்ல எடுத்து மார்பில் அணைத்துக்கொண்டாள். கை சில்லிட்டிருந்தது. விரல்கள் இவள் மார்பைத் தேடிப்பிசைந்தன. இதயம் குளிரில் வெடவெடத்தது., அக்குளிர் மெல்லமெல்ல திசுக்கள், இரத்த நாளங்கள், நரம்புகளென்று, சிற்றெறும்புகள் கூட்டம்போல ஊர்ந்துபோகின்றன. உடல் விறைத்துக்கொள்கிறது. கால்களிரண்டும் மரத்து இரும்பாகக் கனத்தன. முதலில் வலம் பின்னர் இடம், என்று காலை நீவிவிட எழுந்திருக்க முடிந்தது. எழுந்தாள். கல்லறையிலிருந்த பூஞ்செடிகளுக்குத் தண்ணீர் தேவையோ என்ற கேள்வி பிறந்தது. வானம் தூறல்போட்டுக்கொண்டிருந்தாலும், தனது வழக்கமான பணியினை மாற்றிக்கொள்ள விருப்பம் இல்லாதவள்போல, அருகிலிருந்த குழாயடிக்கு ஹரிணி சென்றாள். அங்கிருந்த பிளாஸ்டிக் பூவாளிகளில் ஒன்றை எடுத்து, தண்ணீரைப் பிடித்துவந்து, செடிகளுக்கு ஊற்றினாள். இதயத்திற்கு நிறைவாக இருந்தது.

வழியில் கல்லறை ஊழியர் ‘ஒர்வார் மத்மசல் – மறுபடியும் சந்திப்போம் -என்கிறான். கல்லறையில் கேட்கக்கூடாத சொல். ஹரிணி நின்றவள், தனது பர்சைத் திறந்து இரண்டு யூரோ நானயமொன்றை அவனிடம் நீட்டினாள். வாங்கியவன் நன்றி என்றான், இவள் பதிலேதுமின்றி நடந்தாள்.

கல்லறையின் வடக்கு வாசலுக்கு வந்தபோது, பழையமாடல் ரெனோ காரொன்று வலப்புறம் நிறுத்தி இருந்தது. வாகனஓட்டியின் இருக்கையில் சற்று முன்பு கண்ட பெண்மணி. ஹரிணி வாகனத்தை நெருங்கவும், பயணிகளுக்கான முன் இருக்கையில் இவளை எதிர்பார்த்தவள்போல,

– கதவு திறந்திருக்கிறது, உட்கார்!- என்றாள்

இவளிடம் மறுப்புமில்லை. தயக்கமுமில்லை. சட்டென்று கதவைத் திறந்துகொண்டு காரில் அமர்ந்தாள்.

– போன் ழூர்! என்னுடைய பேரு எலிஸபெத் -சற்று முன்பு தெரிவித்திருந்தேன்- கையை நீட்டினாள்.

ஹரிணியின் கீழுதடு அசைந்துகொடுத்தது, “ம்”…என்றாள். உடலை முப்பது டிகிரி இடப்புறம் திருப்பி வலது கையை நீட்ட, இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர்.

-நீங்க?

– ஒரு வகையில் உன்ன்னுடைய அம்மா எனக்குத் தோழிபோல. ஆரம்பத்திலே எனக்கும் அவர்களுக்குமான சந்திப்புபென்பது, ஒரு அரசாங்கத்தின் பிரதிநிதிக்கும், அரசு உதவியை எதிர்பார்த்துவந்த பெண்ணுக்குமான தொடர்பாகத்தானிருந்தது. பிறகுவந்த காலங்களில் நாங்கள் மிகவும் நெருக்கம்…மற்றதை என் வீட்டில் நிதானமாகப் பேசலாமா? மறுக்கமாட்டாயென்று நினைக்கிறேன்.

– உங்கள் இருப்பிடம்?

– ப்ருமாத்?

– அவ்வளவு தூரம்போகணுமா? பிறகு நான் எப்படி திரும்பிவருவது? வேண்டுமானால், உங்கள் காரை இரயில்வே நிலையம்வரை விடுங்கள், நான் வில்சன் அவென்யூவில்தான் இருக்கிறேன். ஒரு பத்து நிமிடம் அனுமதிப்பீர்களென்றால், எனது காரை எடுத்துவருவேன்.

– அதற்கு அவசியமல்ல, எனது காரிலேயே போகலாம். மாலை நான் திரும்பவும் அழைத்துவந்து விட்டுவிடுகிறேன், ஸ்ட்ராஸ்பூர் வரவேண்டிய வேலை இருக்கிறது.

ஹரிணியின் பதிலுக்குக் காத்திராமல், சாவிகொண்டு எஞ்சினை உயிர்ப்பித்தாள், தடதடவென அடித்துக்கொண்ட எஞ்சின் ஒரு நில நிமிடங்களுக்குப் பிறகு நிதானத்திற்கு வந்தது. ஸ்டியரிங்கை இடதுபுறம் அரைவட்டமடித்து, ஆக்ஸிக்லேட்டரை மிதிக்க, வேகத்திற்கான முள் நிதானித்து முப்பதைத் தொட்டது, இடபுறம் திசையில் சாலையில் தலைக்குமேலே நீலநிற அறிவிப்புப் பலகை அதில் பாரீஸ், மெட்ஸ் என்று எழுதியிருந்தது. மிறகு மீண்டும் ஒரு வட்டம், சிறிது தூரம் நிதானமாக ஓடிய வாகனம், வலப்புறம் திரும்பி அதிவிரைவுச்சாலை எண் A4 எடுத்து, வேகமெடுத்தது. பழைய மாடல் காரென்பதால் எஞ்சின் மோசமாக உறுமியது. சாலைப் போக்குவரத்து காவலர்கள் எந்த நேரமும் வண்டியை நிறுத்தி அபராதத் தொகையை விதிக்கலாம் என்பதுபோல அப்படியொரு சத்தம். ஹரிணிக்கு தலைவலித்தது. சுமார் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு அதிவிரைவுச் சாலையைவிட்டு விலக இருபுறமும் பரந்து கிடக்கும் கோதுமை வயல்கள், தூரத்தில் வயல்களின் எல்லையில் வேலிபோட்டதுபோல வளர்ந்திருக்கும் மரங்கள். ஈரச் சோலைகளுடன் சலசலத்தபடி இருக்கிறது. காற்று அதன் மகரந்தகளை சீய்த்தபடி விளையாடுகிறது. இடது பக்கம் பச்சைவெளியின் ஊடாக, பண்ணை வீடொன்று, அருகில் பாய்போல சுருட்டபட்ட கோதுமை வைக்கோற் கட்டுகள் கொட்டகையொன்றில் அடுக்கிவைக்கபட்டிருந்தன, புல்வெளிகளில் தலை கவிழ்ந்தபடி பசுமாடுகள், இரண்டொரு குதிரைகள், ஓடுவதும் நிற்பதுமாயிருக்கிற ஒரு குதிரைகுட்டி.. வானம் வெளுத்திருந்தது. கார்க் கண்ணாடியை இறக்க, குளிர்காற்று இரைச்சிலிட்டபடி நுழைந்தது, மீண்டும் கார்க் கண்ணாடியை ஏற்றினாள். அதை விரும்பியவள்போல மதாம் க்ரோ இவளிடத்தில் ‘நன்றி’ யென்றாள்.

மதாம் க்ரோவின் கவனம் முழுக்க சாலையிலிருந்தது. அடுத்த பத்து நிமிடங்களில், ப்ருமாத் நகரத்திற்குள் நுழைந்த வாகனம், வலம் இடமென்று குழப்பிக்கொண்டு, இறுதியாக சிறிய வீதியொன்றில் பிரான்சு நாட்டின் கிழக்குப் பகுதிக்கேயுரிய அல்ஸாஸ்(Alsace) பிரதேச அடையாளத்துடனிருந்த வீட்டின் முன் நின்றது: சீராய் உடைத்தெடுக்கபட்ட வோழ்மலைக் கற்கள்கொண்டு எழுப்பப்பட்ட அடித்தள சுவர்கள். சுவர்களின் சந்திப்புகளில் சிறியகற்கள்கொண்டு கட்டியிருந்தனர். இடையில் செதுக்குகள் நிறைந்த வலிமைவாய்ந்த மரக்கதவுகள். அதற்குமேலே பலம் வாய்ந்த மரங்களை ஒரு வித பின்னலைப்போல கட்டுமான சட்டங்களாக அமைத்து எழுப்பப்பட்ட சுவர்கள், ஓடுகள் வேய்ந்த கூரை. முன்பக்கம் சரிந்திருந்த கூரையில் புறாக்கூண்டினைப்போல மென்மாட சிற்றறைகள். வாகனத்தின் எஞ்சினை நிறுத்திவிட்டு, மதாம் க்ரோ இறங்கவும், ஹரிணியும் இறங்கிக்கொண்டாள்.

– என்ன அப்படிப் பார்க்கிறாய், இரண்டு நூற்றாண்டுகள் கண்டவீடு, நானே நினைத்தாலும் இடித்துவிட்டு வேறுமாதிரி கட்டிவிவிட முடியாது. உள்ளூர் நகரசபையும் அனுமதிக்காது.

ஹரிணியின் பதிலுக்குக் காத்திராமல், பெரிய கதவினைத் திறந்தவள், இருகைகொண்டு தள்ளினாள். உள்ளே வீடு விசாலமாக இருந்தது. வரவேற்பறையில் நுழைந்தவுடன் மதாம் தான் அணிந்திருந்த அனோராக்கை கழற்றியவள், ஹரிணியின் லெதர் ஜாக்கெட்டையும் வாங்கிக் கொண்டுபோய் அங்கிருந்த தாங்கியில் தொங்கவிட்டாள்.

– உன்னுடைய வீடுபோல நினைத்துக்கொள். என்ன கொண்டு வரட்டும்? முதலில் உட்கார்..

சோபாவில் அமர்ந்த ஹரிணி, – எதுவென்றாலும் பரவாயில்லை, என்றாள்.

– நல்லது காப்பியே கொண்டுவருகிறேன், சென்றவள் ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு, இரண்டு கோப்பைகளில் பால் கலவாத காப்பியை ஒரு தட்டில் கொண்டுவந்து வைத்தவள், மீண்டும் உள்ளே சென்று, சர்க்கரைகட்டிகள் நிரப்பிய கிண்ணமும், ஒரு சிறிய குவளையில் சூடாக்கியபாலும் கொண்டுவந்து அருகில் வைத்தாள். இருவரும் பாலைத் தவிர்த்துவிட்டு சர்க்கரைமட்டும் சேர்த்துகொண்டு கோப்பையை எடுத்து நிதானமாக குடிக்க ஆரம்பித்தனர். முதலில் வாய் திறந்தவள் ஹரிணி.

– அரசாங்கத்தின் சமூக நலத்துறை ஊழியையாகச் சேவகம் புரிந்தவரென்ற வகையில் எனது அம்மாவை நீங்கள் பார்த்த்திருக்கலாம். பணிக்காலத்தில் தங்கள் வாழ்வியல் பிரச்சினைகளுக்கென்று உங்களைத் தேடிவந்தவர்களென்று பலரை சந்தித்தும் இருக்கலாம். ஆனால் இத்தனைகாலத்திற்குப் அவர்களின் வாரிசுகளையும் தேடிச்சென்றுப் பார்ப்பது முரணில்லையா?

– இதற்கான பதிலை என்னால் சுருக்கமாக ஒன்றிரண்டு வாக்கியங்களில் சொல்வதென்பது முடியாத காரியம். அப்படிச் சொன்னாலும் உனக்குப் புரியவும் புரியாது. எனக்கே எங்கே ஆரம்பிப்பது, எப்படி ஆரம்பிப்பது என்பது குறித்துத் தெளிவில்லாமல் இருக்கிறேன். மேடையில் ஏறிய நடிகை ஒத்திகைபார்த்தவற்றை மறந்ததுபோல, நிலைமை. வசனமனைத்தும் நினைவிலிருக்கிறது. ஆனால் எந்தக் காட்சியில் எதைபேசுவதென்பதிலே குழப்பம். 1985ம் ஆண்டு அவளை முதன் முதலில் அலுவலகத்திற் சந்தித்த அன்று, மயக்கமடையாத குறை, அப்படியொரு அழகுப் பெண்மணியை என் வாழ்நாளில் அதற்கு முன்பு சந்தித்தது இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்களும் சரி, அன்றைக்கு அக்கட்டிடத்தில் வேறுபணியில் இருந்த மற்ற ஊழியர்களும் சரி சிலையாக சமைந்துபோனார்கள். வாளிப்பான உடல், பட்டினைப்போன்ற முகம், நாசிதுவாரங்களை ஒளித்த மூக்கு, உலர்ந்திராத சிவந்த உதடுகள், இடையில் நிழலாடும் வெண்பற்களின் உதவியோடு அவ் உதடுகள் சிரிக்கமுயல்வதுபோல ஒரு பாவனை, வெல்வெட்போல இரண்டு விழிகள், தீப்பொறிபோல கண்மணிகள், எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியதுபோல, தலைமுதல் இடைவரை நீண்டிருந்த கூந்தல், இந்தியர்களுகென்றே அமைந்த இளங் பழுப்பு நிறம், மொத்தத்தில்..

– மாத்தா ஹரிபோல…அப்படித்தானே?

(தொடரும்)

Series Navigation

author

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts