மலேசியாவின் மறுக்கப்பட்ட இந்தியப் பாரம்பரியம்

This entry is part [part not set] of 21 in the series 20020120_Issue

அந்தோனி ஸ்பேத்


பலகலாச்சார மலேசியாவில் பெருமைப்படத்தக்க மூன்று பாரம்பரியங்கள் இருக்கின்றன. மலாய், சீன, இந்திய பாரம்பரியங்கள். வடக்கு கெடா மாநிலத்தில் புஜாங் பள்ளத்தாக்கில் இந்தியாவின் வேர்கள் காணக்கிடக்கின்றன. இந்து புத்த மத நம்பிக்கைகளோடு இங்கு ஒரு பழங்கால அரசு 4ஆம் நூற்றாண்டில் இருந்தது. இது வியாபார மையமாகவும், பிரயாணிகளின் மைய துறைமுகமாகவும் இருந்தது. இந்தியாவுக்கு படகோட்டும் தூரத்தில் இருந்த இந்த பள்ளத்தாக்கு, பின்னர், சுமத்ராவுடைய மாபெரும் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் பகுதியாக ஆனது. 1930இல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டபின்னர், சுமார் 50 கோவில்கள் இந்த பள்ளத்தாக்கில் அகழ்வாராய்வு செய்யப்பட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால், இதுவே மலேசியாவின் மிகப்பெரிய அகழ்வாராய்வுப் புதையலாக அறியப்பட்டுள்ளது.

ஆனால், ஒரு இந்திய வம்சாவளி மலேசியர் புஜாங் பள்ளத்தாக்குக்குச் செல்வாரேயானால், அவர் பெருமையோடு திரும்பி வர மாட்டார். அவமானம் அடைந்துதான் திரும்பி வருவார். அதுவும் ஒரு விபத்தல்ல. அரசாங்கம் சில கோவில்களை சுத்தப்படுத்தி, அருகில் ஒரு பழம்பொருள் காட்சியகம் கட்டி புஜாங் பள்ளத்தாக்கின் அகழ்வாராய்வு கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி இருக்கிறது. செவ்வண்ணம் கொண்ட இந்த கோவில்கள், இந்திய தமிழக வடிவமைப்புடனும், அழகாகவும் இருந்தாலும், இவை காலவழக்கொழிவதற்கு முன்னர் எவ்வளவு பெரியதாகவும், சிறப்பானதாகவும் இருந்தன என்பதைச் சொல்ல அங்கு எந்த ஒரு செய்தியும் இல்லை. காட்சியகத்தில் புத்த மற்றும் இந்து சிலைகள் கண்ணாடியின் பின்னால் வைக்கப்பட்டுள்ளன. பசுக்கள், பிள்ளையார் சிலைகள், லிங்கங்கள் போன்றவை. ஆனால் அரசாங்கத்தின் கையேடுகள், இந்திய பாரம்பரியத்தை கீழ்த்தரப்படுத்தியும், மட்டப்படுத்தியுமே எழுதப்பட்டுள்ளன. காட்சியகத்தின் சுவரில் இருக்கும் ஒரு அறிவிப்புப்பலகை, ‘ஒரு பழைய மலாய் அரசு ‘, புஜாங் பள்ளத்தாக்கில், ‘வெவ்வேறு கலாச்சாரமும் சூழ்நிலைகளும் கொண்ட பலதரப்பட்ட மக்களுடன் தொடர்பு கொண்டிருந்தது ‘ என்று கூறுகிறது. காட்சியகத்தின் வெளியீடோ இன்னும் கொஞ்சம் அதிகம் சென்று வெளிப்படையாகவே கூறுகிறது. கடல் வழி வியாபாரத்தொடர்பால், புஜாங் பள்ளத்தாக்கு ‘இந்தியமயமாகி ‘ விட்டது என்று, அங்கிருந்த மக்களின் இயற்கையான கலாச்சாரம் இதனால் ‘மாறிவிட்டது ‘ என்றும் கூறுகிறது.

இது இந்திய பாரம்பரியத்துக்கு அவமானம் தெரிவிப்பது போலத்தோன்றினால், அது ஒன்றும் மலேசியாவில் இருக்கும் 18 லட்சம் இந்திய வம்சாவளி மலேசியர்களுக்கு புதிதல்ல. மலாய் மக்களுக்கு வேலைகளில் கொடுக்கப்படும் அரசாங்க முன்னுரிமைகளும், மலாய் மக்களாலும், சீனர்களாலும் கட்டுப்படுத்தப்படும் அரசியல் அமைப்பில் இந்திய வம்சாவளியினர் மூன்றாம் தரக்குடிமக்களாகவே உணர்கிறார்கள். இது சமூகத்தில் தனக்குக் கிடைத்த இடம் பற்றி மகிழ்ச்சி இல்லை. ஆனால் அதை உரக்கத் தெரிவிப்பதும் இல்லை. கோலாலம்பூரில் இருக்கும் ஒரு இந்திய வம்சாவளி வியாபாரப்பெண்மணி ‘எனக்கும் என் குழந்தைகளுக்கும் இந்த நாட்டில் என்ன எதிர்காலம் இருக்கிறது என்பது தெரியவில்லை ‘ என்று கூறுகிறார். ‘இன்னும் கொஞ்சம் வருடங்கள் பார்க்கப்போகிறேன். அதற்குள் நிலைமை முன்னேறாவிட்டால், நான் ஐரோப்பாவுக்குப் போய்விடலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன் ‘ என்றும் கூறுகிறார்.

மலேசியாவில் இனம் பெரிய பிரிவைத் தோற்றுவித்திருக்கிறது. 1969இல் நடந்த இனக்கலவரங்களுக்குப் பிறகு இது இன்னும் அதிகரித்திருக்கிறது. கடந்த 25 வருடங்களாக பிரதமராக இருந்து வரும் மஹாதீர் முகம்மது மலாய் மக்களை பொருளாதார ரீதியில் முன்னேற்ற வெகுவாக உழைத்துவருகிறார். இவர்கள் மலேசியாவின் 2.2 கோடி மக்களில் 55 சதவீதத்தினர். இவர்களுக்கு வியாபார வாய்ப்புக்களை உருவாக்கித் தர பல ஆக்கப்பூர்வமான வேலைகளைச் செய்து வந்திருக்கிறார். இதனால், இரண்டாம் பெரிய இனக்குழுவான சீனர்களே, அவர்களுக்கு அரசியலிலும் வியாபாரத்திலும் இருக்கும் இறுக்கமான பிடியை இழக்கவேண்டும். ஆனால், இந்தியர்களே உண்மையான தோல்வியை அடையக்கூடியவர்கள் போல இருக்கிறார்கள். பெரும்பாலான இந்தியர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இங்கிருக்கும் ரப்பர் தோட்டங்களிலும் சுரங்கங்களிலும் வேலை செய்வதற்கென்று தமிழகத்திலிருந்தும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலிருந்தும் தருவிக்கப்பட்டவர்கள். இவர்கள் இன்னும் சமூகத்தின் அடித்தட்டு வர்க்கத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள். ‘வறுமைச்சுழலிலிருந்து தப்பிக்க, இந்தியர்களிடம் அரசியல் வலிமையோ, பொருளாதார வலிமையோ இல்லை ‘ என்று கூறுகிறார் செல்வகுமரன் ராமச்சந்திரன். இவர் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார திட்டத்தில் வேலைசெய்யும் இந்திய மலேசியர். ‘இவர்களது பிரச்னைகள் முற்றுப்புள்ளி பெற்று, தீர்க்கப்படாமல் இருந்தால், இவர்கள் எதிர்காலத்திலும் அடித்தட்டு வர்க்கமாகவே இருப்பார்கள் ‘ என்றும் கூறுகிறார்.

ஏற்கெனவே, மலேசிய நாட்டின் நிறுவன சொத்துக்களில் மிகக்குறைந்த அளவே இந்தியர்களிடம் இருக்கிறது. சீனர்களிடம் 38.5 சதவீதமும், 19.4 சதவீதம் மலேசியர்களிடமும் இருக்கும் நிறுவனச்சொத்து, இந்தியர்களிடம் 1.5 சதவீதமே இருக்கிறது. தற்கொலையும் இந்திய சமூகத்திலேயே மிகவும் அதிகம். வன்முறைக் குற்றங்களும் இந்திய சமூகத்திலேயே மிகவும் அதிகம். 1994இல் நடந்த 377 கொலைகளில் 128 கொலைகள் இந்தியர்கள் செய்தது. தலைநகரத்தின் வசிக்கும் இந்தியர்களில் சுமார் 15 சதவீதத்தினர் தெருக்களில் வசிக்கிறார்கள். தேசீய பல்கலைக்கழகத்தில் அரசியல் பேராசிரியராக இருக்கும் பி. ராமசாமி , ‘உடனே ஏதேனும் நடக்கவில்லை என்றால், ஏதாவது திடாரென்று வெடிக்கத்தான் போகிறது ‘ என்று கூறுகிறார்.

இந்தியர்களில் முக்கிய பிரச்னை எண்ணிக்கை சார்ந்தது. மலேசியாவில் சுமார் 8 சதவீதமே இருக்கும் இவர்களால், நாட்டின் மலாய் சார்பு வியாபார முறைகளையோ வேலைவாய்ப்பு கொள்கைகளையோ மாற்ற இயலாது. ஏன் புஜாங் பள்ளத்தாக்கில் காட்டப்பட்ட அந்த மலாய் இனவெறியைக்கூட எதிர்த்து குரல் கொடுக்க இயலாது. சீன சமூகத்தில் ஏராளமான அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். இந்திய சமூகத்தின் அரசியல், மலாய் இந்திய காங்கிரஸ் கட்சியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 20 வருடங்களுக்கு மேல் இதன் தலைவராக இருக்கும் எஸ். சாமி வேலு, மஹாதீர் அவர்களது மந்திரிசபையில் இருக்கும் ஒரே இந்தியர்.

அரசாங்கம் இந்திய சமூகத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டுமென்றால் அது சாமிவேலு அவர்கள் மூலமாகவே செய்கிறது. இந்திய பெற்றோர்களும், இந்தியக்குழந்தைகளும், அரசாங்கத்தின் புதிய திட்டமான மாணவர்களுக்கு கடனுதவி பற்றி சாமிவேலு விளக்குவதை கேட்க உட்கார்ந்திருந்தார்கள். பிரதமரது பெருந்தன்மையாலும் கல்வி அமைச்சரின் பெருந்தன்மையாலும், 5300 டாலருக்கு குறைவாக வருமானம் பெறும் குடும்பங்கள் இந்த கடனுதவியைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கிறார். கூட்டத்தில் உட்கார்ந்திருந்த ஒரு இளம் இந்தியப்பெண் தனது தந்தை இதைவிட அதிகமாக சம்பாதிப்பதாகவும் இவளுக்கு கடனுதவி கிடைக்குமா என்பது பற்றியும் கேட்டாள். ‘கவலைப்படாதே ‘ என்று சாமிவேலு கூறுகிறார். ‘கூட்டம் முடிந்ததும் என்னை வந்து பார். நான் ஆகவேண்டியதைப் பார்க்கிறேன் ‘ என்று கூறுகிறார். மந்திரியின் பெருந்தன்மையைப் பாராட்டி 500 பேர் இருக்கும் கூட்டம் கரவொலி எழுப்புகிறது. ஒரு மூத்த இந்திய பத்திரிக்கையாளர் ‘எங்களுக்கு வேண்டியதெல்லாம், எம்ஐசி (மலேசிய இந்திய காங்கிரஸ் ) வழியாகத்தான் வரும். அப்படித்தான் இந்த அமைப்பு வேலை செய்கிறது ‘ என்று கூறுகிறார்.

இந்தியர்கள் செழிப்படைந்த துறைகள் மருத்துவமும், சட்டமுமே. இந்தத் துறைகளின் அமைப்புக்களில் இந்தியப்பெயர்கள் வரிசையாக வருகின்றன. இந்தத் துறைகளில் இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் மலேசிய பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் கீழ் இருந்தபோது, பிரிட்டனுக்கு வேலைசெய்தவர்கள். இருப்பினும், இன்றைய மலேசிய இந்தியர், இன்று ஒரு மருத்துவராகவோ, வழக்குறைஞராகவோ ஆவது கடினம். பிராந்திய பல்கலைக்கழகங்களிலும், வெளிநாட்டுப்பல்கலைக்கழகங்களிலும் இன ரீதியான இட ஒதுக்கீடு மலாய் மக்களுக்கே வழங்கப்படுகிறது. ஒரு வேளை பட்டப்படிப்பு முடித்துவிட்டாலும், பாரபட்சம் அடிக்கடி நடக்கிறது. அரசாங்க அனுமதி வழங்கப்பட்ட மருத்துவர் வரிசையில் இந்திய மருத்துவர்களைப் பார்க்கமுடியாது என்று இந்திய மருத்துவர்கள் குற்றம் சொல்கிறார்கள். இதுவே தனியார் நிறுவனங்களிலும் நடக்கிறது. ‘அமெரிக்கர்கள் இந்த நாட்டை ஆக்கிரமித்தால், ஒரு வேளை இந்த எங்கள் தேசத்தில், எங்களுக்கு சரிசமமாக வேலை செய்யும் வாய்ப்புக்கிடைத்தாலும் கிடைக்கலாம் ‘ என்று ஒரு இந்திய டாக்டர் வந்திருந்த அமெரிக்கரிடம் கூறுகிறார்.

இதுவரை இந்தியர்கள் தங்களது விதியை தாங்களே நொந்துகொண்டு அந்த விதியை ஒப்புக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கங்கு சில சலசலப்பும் கேட்டுக்கொண்டிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் அக்டோபரில், கோலாலம்பூரிலிருந்து 150 கிமீ தொலைவில் உள்ள காம்பர் நகரத்தில், ஐந்து மலாய் ஆட்கள் ஒரு இரவன்று கொலை செய்யப்பட்டார்கள். எரிந்த இந்த உடல்கள் ஒரு லாரியின் பின்னே கிடந்தன. போலீஸ் 13 மாடு கொட்டாரக்காரர்களை கைது செய்தது. மாட்டுக்கொட்டாரத்தினர் தங்களது பசுக்களை இந்த மலாய்காரர்கள் திருடிக்கொண்டிருந்தார்கள் என்று போலீஸிடம் புகார் செய்திருந்தார்கள். போலீஸ் இரண்டு வருடங்களாக ஒன்றும் செய்யவில்லை. இந்த கொலைகள் நடந்த பின்னர், அங்கு மாடு திருடுவது நடக்கவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் இந்திய சமூகத்தில் வீரர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். ‘8 சதவீத மலேசியர்களை அந்நியர்களாக நடத்திக்கொண்டு மலேசியா வாழ முடியாது ‘ என்று எச்சரிக்கிறார் முக்கிய வியாபாரியான ஆர் வி நவரத்னம். ‘மலேசிய ஒற்றுமையின் பலம் அதில் இருக்கும் பலவீனமான கண்ணியைக் கொண்டு தான் இருக்க முடியும்.. அதாவது மலேசிய இந்திய சமூகமே அந்த பலவீனமான கண்ணி ‘ என்றும் கூறுகிறார்.

http://www.time.com/time/asia/features/ontheroad/malaysia.dilemma.html

Series Navigation

அந்தோனி ஸ்பேத்

அந்தோனி ஸ்பேத்