மலிவு ஆன வாசிப்பு

This entry is part [part not set] of 26 in the series 20050923_Issue

தேவமைந்தன்


நுகர்வோர் பண்பாடு தலைவிரித்துக்கொண்டு [மகிழ்ச்சியாகத்தான்] ஆடிக்கொண்டிருக்கிற காலகட்டத்தில், நாம் ‘வாழ்க்கை ‘ என்னும் விசித்திரமானதும் முன்னுக்குப்பின் முரணானதுமான ஒன்றை வாழ்ந்து கொண்டு ‘இருக்கிறோம். ‘

இந்த ‘கன்ஸ்யூமர் கலாச்சாரம் ‘ அகடவிகடத்தனமாக வெறுத்துப்போய், பொறியாளர் ஒருவர் தன் குடும்பத்துடன், உலக வரைபடத்திலேயே இடம்பெறாத ஹுந்துராஸ் காடு ஒன்றினுள் புகுந்து வாழ்ந்து, அங்கும் ‘மனித லட்சணம் ‘ விடாமல், தான் கனவிய உலகம் ஒன்றை [கம்பன் பானியில் ?] அமைக்க முற்படுகிறாராம். அந்த அரிய முயற்சியின் விளைவுகள் குறித்து ‘The Mosquito Coast ‘ என்று ஓர் ஆங்கிலப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது விவரம் எனக்குத் தெரிய வந்தது, நண்பர் ஜே.கே. அவர்களின் ‘ ‘சிலகுறிப்புகள் ‘ ‘ எனும் வலைப்பூ வழித்தான்.

நாமெல்லாம் அப்படிப்போய்க் குடிபெயர முடியுமா ? அதனால் நாம் வாழும் ‘அன்றாட ‘த்துக்கே கனவுலகத்தைக் கொண்டுவந்து விடுகிறார்கள் சிலர்… ஊடக விளம்பரங்கள் பற்பலவற்றைப் ‘ ‘படித்தும், பார்த்தும், பக்கம்நின்று கேட்டும் ‘…ஏன் மனப்பாடம் செய்து பலரிடம் ஒப்பித்தும் மனமகிழ்கின்ற பிரகிருதிகள் பற்பலர் வாழ்கின்ற பிரகிருதியில்தான் நாமும் ஒண்டுக்குடித்தனம் செய்கிறோம்..

‘ ‘தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்! ‘ ‘ என்பது, மிகுந்த ஆற்றலுடன் பொருந்திப் போகும் இடம் ஒன்றிருக்கிறது. அதுதான் எங்கள் ஊரில் ஞாயிறுதோறும் கூடுகிற அங்காடி. பழங்காலத்துக் கிராமங்களில் ஒவ்வொரு கிராமத்துக்கு ஒரு கிழமையாகக் கூடுமே… அதை நவீனமயமாக்கியதன் விபரீத வடிவம்.

‘சண்டே மார்க்கெட் ‘ ‘ என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த அங்காடியில், திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை முடிய, வெளி அங்காடியில் அதிகக் காசு[அதிகத் தரம் ?] கொடுத்து வாங்கவேண்டியவற்றை மிகக் குறைவான விலையில் சிக்கனமான நம் தாய்க்குலமும் தந்தைக்குலமும் வாங்கிக் கொள்கிறது. வேறு இடங்களில் துணிந்து ‘தெண்டச் ‘ செலவுகள் செய்ய இது அவர்களுக்கு உதவுகிறது.

நமக்கு ஆர்வம் மிகுந்த புத்தக உலகம், இங்கு சிறுசிறு கண்டங்களே போல் ஆங்காங்கு விரித்துவைக்கப்படுகிறது. பேராசிரியர்களான நண்பர்கள் சிலர், புத்தகங்கள் பலவற்றை ‘free surfing ‘/இலவசமாக மேயும் இடங்களுள் இதுவும் ஒன்று. இந்த இரண்டாவது வினைவடிவத்தை[ ‘இலவசமாக மேய்தல் ‘] ஒருவரிடம் சொல்ல, ஏடாகூடமாகப் போய்விட்டது. அவருக்குக் கோபம் வந்து கடைசியில், ‘உம்ம அம்மா அப்பா உமக்கு வச்ச பேர் சரிதான் ‘னு நிரூபிச்சிட்டாங்க! ‘ ‘ என்று ‘குத்த ‘லாகக் கூறிச் சினந்தணிந்தார். நல்லவேளை! ‘எனக்கு அந்தப் பேரை வச்சும் நான் ஒன்னும் இப்படியெல்லாம் மேயறதில்லையே! ‘ ‘ என்று வந்ததை அடக்கிக் கொண்டு விட்டேன். அந்த நாள், ‘இந்தநாள் இனியநாள் ‘ ‘ ஆனது.

மேலே நான் சொ ன்ன பேராசிரிய நண்பர்களுக்கு விதிவிலக்காக நாயகர் என்றொரு நண்பர் இருக்கிறார். பிரஞ்சுப் பேராசிரியராகத் தான் இருந்தாலும், தமிழ்ப் புத்தகங்களின்மேல் அப்படி ஒரு ‘அபாரப் பிரியம் ‘ அவருக்கு! அவர்மூலம்தான் ஞாயிறு அங்காடியில் கிடைக்கும் புத்தகங்கள் தொடர்பான பல நெளிவுசுளிவுகளை நான் அறிவேன்.

பாருங்கள்! அயல்நாட்டில் வெளியிடப் பெறும் ‘பளபள ‘ அட்டைகளுடன் கூடிய தரமான – முற்போக்கான தமிழ்ப் புத்தகங்கள்கூட, கொஞ்சமும் கசங்காமல், நலுங்காமல், ஓரம் நெளியாமல், உள்ளே கைவைத்து விலை திருத்தப்படாமல், ‘ஸ்டிக்கர் ‘ ஒட்டப்படாமல், எவ்வளவு விலை அவற்றுள் அச்சிடப்பட்டிருந்தாலும் எல்லாம் ஒரே விலைக்கு, அதுவும் பத்தே ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.

ஹாரி பாட்டர் நாவல்களை ஐம்பது ரூபாய்க்கு விற்கிறார்கள் என்று வாடகை நூலக உரிமை நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். சும்மா இராமல் ‘ அதெல்லாம் Pirated Copies-ங்க.. ‘ என்று இழுத்தேன். ‘ ‘ விரும்பி வாசிக்கிறவங்களுக்கு ‘சீப் ‘பாக் கெடைக்குதா ‘ங்கிறதுதான் முக்கியமே தவிர, என்ன ‘எடிஷன் ‘ என்ன ‘காப்பி ‘ங்கறதா முக்கியம் ? ‘ ‘ என்று அன்பாக முறைத்தார்.

தூரன் உருவாக்கிய குழந்தைகள் கலைக் களஞ்சியம் முதல் பலவகையான கலைக் களஞ்சியங்களும் நம்ப முடியாத, ஆகக் குறைந்த விலையில் விற்கப்படுகின்றனவாம். இன்னொரு வேடிக்கை. அரசு நூலகங்களின் அசல் முத்திரைகளோடும் கூடிய ‘அசத்தலான ‘ புத்தகங்களும் மிக மலிவாக விற்கப் படுகின்றனவாம். தி.ஜா. ‘வின் ‘சிவப்பு ரிக்ஷா ‘ மாசு மறு படியாமல் பத்து ரூபாய்க்குக் கிடைத்திருக்கிறதாம்.

குறிப்பாக கவிதை நூல்கள், கொஞ்சமும் புரட்டப் படாமல், நலியாமல் நோகாமல், ‘அன்புடன் ‘ என்று அந்தந்த ஆசிரியர் ‘கனகம்பீர ‘மாகப் போட்டுக் கொடுத்த கையெழுத்துகளுடன் கிடைக்கின்றனவாம். புத்தம் புதிய கவிதைப் புத்தகமாயினும் வஞ்சகமில்லாமல் ‘எல்லாம் அஞ்சு ரூபா! ‘ ‘ என்ற சிறப்புச் சலுகையுடன் விற்கப் படுகின்றனவாம்.

இதெல்லாம் பார்த்தால், கேள்விப்பட்டால் என்ன தோன்ற வேண்டும் நமக்கு ? வலையெழுத்துக்களையும் மின்னூல்களையும் இப்படியெல்லாம் ஞாயிற்றுக்கிழமை அங்காடிகளில் போட்டு மிக மலிவாக விற்றுவிட முடியாது என்றுதானே ? வலையெழுதுவதோடு நின்றுவிடாமல் அச்சுப் புத்தகங்களாகவும் வெளியிடப்பட்டுள்ள அத்தகைய அண்மை வெளியீடுகள் சிலவும் தமிழகத் தலைநகரிலிருந்து எங்கள் ஊர் ‘சண்டே மார்க்கட் ‘டுக்கு வந்திருக்கின்றனவாம். ‘உங்களுக்கு வேண்டுமா ? ‘ என்று கேட்டார், இதில் பழுத்த அனுபவம் பெற்ற உறவினர் ஒருவர். என்ன சொல்வேன்.

‘ ‘யார், எப்படிப் போனால் எனக்கென்ன ? ‘ ‘ என்ற கருதுகோளை மையமாக வைத்த கன்ஸ்யூமர் கலாச்சாரம் என்னும் நுகர்வோர் பண்பாடு – எத்தனைப்பேர் வயிற்றில், இன்னும் எத்தனை எத்தனை வழி-வகை-துறைகளில் எங்கெல்லாம் எப்படியெல்லாம் அடித்துக்கொண்டிருக்கிறதோ ?

pasu2tamil@yahoo.com

Series Navigation